இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (ஆ)

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 20,1-17
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 18
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,22-25
நற்செய்தி: யோவான் 2,13-25


பத்துக்கட்டளைகள்:

விவிலியத்தில் வருகின்ற படிப்பினைகளில், முதல் ஏற்பாட்டில் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வரும் கட்டளைகள், பத்துக்கட்டளைகள். யூதர்களாலும் சரி, கிறிஸ்தவர்களானாலும் சரி, தங்களுடைய பிள்ளைகள் அவற்றை சரியாக கற்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதிகமான ஆரம்ப கால மறைக்கல்வி படிப்பினைகள், இந்த பத்துக்கட்டளைகளுக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுக்கின்றன.

இந்த பத்துக்கட்டளைகளை கடவுள் சீனாய் மலையுச்சியில் மோசேக்கு கொடுத்ததாக விவிலியம் பாரம்பரியமாக காட்டுகிறது. விவிலியம் பத்துக் கட்டளைகளை இரண்டு தடவைகள் காட்சிப்படுத்துகிறது (ஒப்பிட வி.ப 20,1-17: இ.ச 5,6-21). இணைச்சட்டப்படி மோசே இந்த கட்டளைகளைஒரேப் மலையுச்சியில் கொடுக்கிறார். இரண்டு காட்சியிலும், இவை எகிப்பதில் இருந்து விடுதலை பெற்று புதிய வாழ்விற்குள் நுழையும் முன் கொடுக்கப்படுகின்றன. இந்த சட்டங்கள், இஸ்ராயேல் மக்களுக்கு புதிய அடையாளத்தைக் கொடுக்கின்றன.

கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவைக் காட்டுவதாகவே இந்த சட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ராயேல் மக்கள் சாதாரண மக்கள் கூட்டமல்ல, மாறாக அவர்கள் கடவுளின் மக்கள், இதனால் இந்த கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவர்களுடைய முக்கியமான தேவை என்பதும் காட்டப்படுகிறது. இந்த சட்டங்கள் அவர்களின் மனித சுந்திரத்தை பறிக்கும் செயலாக காட்டாமல், அதனை இறைவன்-மக்களுக்கிடையிலான ஆழமான உறவின் அடையாளமாகவும், முழு மனித சுதந்திரத்துடன் செய்யப்படுகின்ற கீழ்படிவாகவுமே காட்டப்படுகின்றன. இந்த கட்டளைகளை பத்துக்கட்டளைகள் என்றோ, அல்லது அதற்கு எந்தவிதமான இலக்க அடையாளங்களையோ மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள். ஆனால் வி.ப 34,28: இ.ச 4,13: 10,4 இல் இவை பத்துக்கட்டளைகள் என்ற பெயரைப் பெறுகின்றன எனலாம், இவை எபிரேயத்தில் 'அசெரெத் ஹத்வாரிம்' (עֲשֶׂרֶת הַדְּבָרִֽים) என்று அழைக்கப்படுகின்றன.கத்தோலிக்கரும், சீர்திருத்த சபையினரும், ஒரிஜின், அலெக்சாந்திரியா கிளமந்து மற்றும் அகுஸ்தினாருடைய பரிவுகளை பின்பற்றுகின்றனர். இதனால், வேறு தெய்வங்களை வழிபடுதலும், விக்கிரகங்களைச் செய்தலும் ஒரு சட்டமாகவும், மற்றவருடைய பொருட்களை களவாடுவதும், பிறர் மனையை வஞ்சிப்பதும், இரண்டு சட்டங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. இராபினிக்க மற்றும் சில பிரிவினை சபைகள் இந்த பிரிவுகளை சற்று வித்தியாசமாகக் கொண்டுள்ளனர்.

இந்த கட்டளைகள் உள்ளார்ந்த ஓழுங்கு முறைகளை பின்பற்றுவது போல தெரியவில்லை, இருப்பினும், முதலில் இந்த கட்டளைகள் கடவுள் பற்றி பேசுகின்றன, பின்னர் மனிதர்களின் உறைவைப் பற்றி பேசுகின்றன. இந்த சட்டங்களின் உள்ளடக்கங்கள் இஸ்ராயேலுக்கு தனித்துவமானவை என்று சொல்வதற்கில்லை, மாறாக அவற்றை பத்து பிரிவுகளாக கொண்டள்ளது, அவை மலையில் கொடுக்கப்பட்டது, அவற்றிக்கு ஒரு தெய்வீக பின்புலத்தைக் கொடுத்தது போன்றவை விசேட அடையாளத்தைக் கொடுக்கிறது எனலாம். இப்படியான பல சட்டங்கள் ஏற்கனவே மத்திய கிழக்கு இலக்கியங்களிலும், புராணக் கதைகளிலும் கிடைக்கப்பெறுகின்றன. ஆயினும் சில முக்கியமான தனித்துவங்கள் இஸ்ராயேலின் சட்டங்களை வித்தியாசமாகக் காட்டுகின்றன. இஸ்ராயேலின் பத்துக் கட்டளைகளில், கடவுளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இல்லை, இங்கே சட்டங்கள் பல தெய்வங்களை நியாய்படுத்தவில்லை, இந்த சட்டங்கள் ஒரே கடவுளுக்கு எல்லையற்ற கீழ்படிவை எதிர்பார்க்கின்றன, அத்தோடு ஓய்வு நாளைப் பற்றிய சட்டம் இஸ்ராயேல் கடவுளின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

பத்துக்கட்டளைகளில் உள்ள சக மனிதர்கள் பற்றிய கட்டளைகள், அக்கால மத்திய கிழக்கு சட்டங்களை ஒத்திருக்கின்றன. மனிதர்கள் குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் அவர்கள் பல சவால்களை சந்தித்திருப்பார்கள். குழு மற்றும் சகோதரத்துவ வாழ்வை மேம்படுத்த, சகமனிதர்கள் மட்டிலான மரியாதை, பிறர் உடமைகள், மற்றும் திருமணம் பற்றிய கட்டளைகள் முக்கியமானவையாக அமைந்தன. மத்திய கிழக்கின் சட்டங்களில், தவறுசெய்பவர்களுக்hன தண்டனைகளும் சேர்த்தே அமைக்கப்பட்டிருந்தன, ஆனால் பத்துக் கட்டளைகளில் அந்த தண்டனை கொடுக்கும் பொறுப்பு கடவுளிடமே விடப்படுகிறது.

பெற்றோர் மட்டிலான கட்டளைகள் மிகவும் விசேடமானது. பெற்றோருக்கெதிரான குற்றங்கள் அவர்களை நாட்டிலிருந்தே துரத்திவிடும் என்ற சிந்தனை மிகவும் தனித்துவமானது (காண்க வி.ப 20,12). கொலை செய்வதை பாரதூரமான குற்றமாக விவிலியம் பார்க்கிறது, இதனை கடவுளுக்கெதிரான குற்றமாகவே பார்க்கிறது. அதேவேளை மரண தண்டனையும் முதல் ஏற்பாட்டு சட்டங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன. பாலியல் உறவுகள் பற்றிய கட்டளைகளும் தொடர்ச்சியாக வளர்வதை முதல் ஏற்பாட்டில் காணலாம். விபச்சாரத்தை கடவுள் மனிதருக்கிடையலான குற்றமாக பார்ப்பதும், இஸ்ராயேல் சட்டங்களின் தனித்தும். திருட்டு, மற்றும் கொள்ளையடித்தல் போன்ற குற்றங்கள், ஒரு சமுதாயத்தின் ஒழுங்கை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால், அவற்றைப் பற்றியும் பல சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்தன.

கடவுள்தான் அனைத்iயும் இயக்குபவர், அனைத்தும் அவர் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும், அனைவரிடமிருந்து கடவுள் நிரந்தரமான பணிவை எதிர்பார்க்கிறார் என்பதையும் பத்துக் கட்டளைகள் காட்டுகின்றன. சட்டங்கள் கடவுள் மனித உறவிற்கு மட்டுமல்ல மாறாக மனிதர் சக மனிதரிடம் கொள்ளும் உறவிற்கும் முக்கியம் என்பதை காட்டுகின்றன. ஒவ்வொரு சட்டத்திற்கும் பின்னால் பின்புலங்கள் இருக்கின்றன. இந்த பின்புலங்களை ஆய்வு செய்வது, சட்டத்தை நல்ல வித்தில் பின்பற்ற அல்லது சரிசெய்ய உதவி செய்யும்.

முதல் வாசகம்
விடுதலைப் பயணம் 20,1-17

கடவுள் தந்த கட்டளைகள்

(இச 5:1-21)

1கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: 2நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். 3என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. 4மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 5நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். 6மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். 7உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். 8ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. 9ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். 10ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். 11ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். 12உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. 13கொலை செய்யாதே. 14விபசாரம் செய்யாதே. 15களவு செய்யாதே. 16பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. 17பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.


வ1. இதன் ஆசிரியர் மோசேயாக இருக்க வாய்ப்பில்லை, ஆனால் இதன் சாரம்சம் மோசேயின் வாயிலிருந்து வந்திருக்கலாம். அத்தோடு இந்த பகுதிகள் மோசேக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. விவிலியத்தில் மோசேயைத் தவிர வேறு எவரும் இதன் அர்ப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதிலிலும் கேள்விகள் இருக்க முடியாது என நினைக்கி;ன்றேன். ஆசிரியர் மோசேயின் உதடுகளில் பேசுகிறார்.

இவர்கள் கடவுள் அருளிய வார்த்தைகள் என்பதன் மூலம் (יְדַבֵּר אֱלֹהִים யெதபாரெம் 'எலோஹிம்- கடவுளின் வார்த்தைகள்), இவை மனித வார்த்தைகள் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

வ.2: தான் யாரென்பதை கடவுள் மோசேக்கு தெளிவுபடுத்துகிறார். இந்த செய்தி மோசேக்கு மட்டுமல்ல மாறாக இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும், அத்தோடு அனைத்து கடவுளின் மக்களுக்கும் பொருந்தும். אָֽנֹכִי֙ יְהוָה אֱלֹהֶ֔יךָ 'அனோகி அதோனாய் 'எலோஹெகா- நான் உன் கடவுளாகிய ஆண்டவர். எகிப்பதிலிருந்து அவர்களை வெளிக்கொணர்ந்தவர் என்ற பெயரை அவர் தனக்கு வைக்கிறார், הוֹצֵאתִיךָ מֵאֶרֶץ מִצְרַיִם ஹோட்செ'திகா மி'எரெட்ஸ் மிட்ஸ்ராயிம் - எகிப்து நிலத்திலிருந்து உன்னை வெளிக்கொணர்ந்தவர். கடவுள் எகிப்திற்கு முக்கியமான பெயர் ஒன்றை வைக்கிறார், בֵּית עֲבָדִים பேத் 'அவாதிம்- அடிமைகளின் வீடு. இங்கே அடிமைகள் என்பது இஸ்ராயேல் மக்களைக் குறிக்கிறது, எகிப்தியரை அல்ல.

வ.3: கடவுள் முதலாவது கட்டளையைக் கொடுக்கிறார். தன்னைத் தவிர வேறு தெய்வங்கள் இருக்கக்கூடாது எனக் கட்டளை கொடுக்கப்படுகிறது. வேறு தெய்வங்கள் என்பது (אֱלֹהִים אֲחֵרִים) 'எலோஹிம் 'அஹெரிம், என்ற சொற்களில் சொல்லப்படுகிறது. இது யாரைக் குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை. வேறு தெய்வங்கள் என்பது பொய்த் தெய்வங்களையோ அல்லது, மனிதர்களையோ, அல்லது செயற்பாடுகளையோ என்பதில் பல கேள்விகள் எழுகின்றன. இந்த காலத்தில் இஸ்ராயேலரை சுற்றி வேறு தெய்வங்களும் வழிபடப்பட்டன என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

வ.4: சிலைகளையோ (פֶסֶל பெசெல்), ஓவியங்களையோ (תְּמוּנָה தெமுனாஹ்-பாவனைகள்) உருவாக்க வேண்டாம் என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. இங்கே கூறப்படுகின்ற சிலைகள் மரத்தால் செய்யப்பட்டு வழிபாடுகள் மற்றும் பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்ட விக்கிரகங்களைக் குறிக்கும். இவை திருச்சூருபங்களையோ அல்லது ஒவியற் சிற்பங்களையோ குறிக்கின்றன என எடுக்கமுடியாது.

இங்கே சொல்லப்பட்ட சிலைகளும், ஓவியங்களும் பொய்த் தெய்வங்களின் உருவங்கள், அவை அக்காலத்தில், இஸ்ராயேலுக்கு வெளியில் வழிபாட்டில் இருந்தவை. இந்த தெய்வங்கள் யார் எனவும் கடவுள் சொல்கிறார். இவை விண்வெளி (בַּשָּׁמַיִם பஷாமயிம்-விண்ணில்), மண்ணுலகு (בָּאָרֶץ பா'ஆரெட்ஸ்- மண்ணில்), பூமிக்கடி நீர்த்திரள் (בַּמַּיִם பமாயிம்-நீரில்) போன்வற்றோடு தொடர்பு பட்டவை.

வ.5: இந்த சிலைகள் அல்லது ஓவியங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும், தெய்வங்களுக்கு வழிபாடோ (תִשְׁתַּחְוֶה திஷ்தாஹ்வெஹ்-வழிபடு) அல்லது பணிவிடையோ (תָעָבְד தா'ஆவெத்- பணிவிடைசெய்) செய்ய வேண்டாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு செயற்பாடுகளும் கடவுளாகிய ஆண்டவருக்கு மட்டுமே உரியது என்பதுதான் இங்கே மூலமான செய்தி. மாறாக அதனை மேற்குறிப்பிட்டவைகளுக்கு செய்வதை தான் சகிக்க மாட்டேன் என்கிறார் ஆண்டவர். இந்த சகியா தன்மையை எபிரேயம் יְהוָה אֱלֹהֶיךָ אֵ֣ל קַנָּא (அதோனாய் 'எலோஹெகா 'ஏல் கன்னா') என்று குறிப்பிடுகிறது. இதனை 'நான் பொறாமையுடைய உன் கட்வுள்' என்றுதான் நேரடியாக மொழிபெயர்க்க வேண்டும்.

இது ஒரு முக்கியமான வார்த்தைப் பிரயோகம். இந்த வார்த்தை பிரயோகம் மூலமாக, கடவுள் தான் தன்னுடைய மாட்சிமையை பொய்த் தெய்வங்களுக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறார். மக்கள் கடவுளுக்குரிய மாட்சியை பொய்த் தெய்வங்களுக்கு கொடுத்தால், அதன் விளைவை அவர்கள் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் சுமப்பார்கள் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். அதிகமான இந்த பகுதிகள் பபிலோனிய அடிமைத்தனத்திற்கு பின்னால் எழுதப்பட்டவை. ஏன் கடவுள் அடிமை வாழ்விற்குள் பாவம் செய்யாத இஸ்ராயேலின் பிள்ளளைகளை ஒப்புவித்தார் என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிப்பது போல இந்த பகுதி அமைந்துள்ளது.

வ.6: ஐந்தாவது வரியில் எச்சரித்த கடவுள், இந்த வரியில் ஆசி வார்த்தைகள் சொல்கிறார். தண்டனை செய்கிறவர்கள், மூன்று அல்லது நான்கு தலைமுறைக்குத்தான் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் கடவுள் மீது அன்பு கூர்ந்து கட்டளைகளை கடைப்பிடிக்கிறவர்கள் ஆயிரம் தலைமுறைகளுக்கு (לַאֲלָפִים ல'அலாபிம்- ஆயிரங்களுக்கு) கடவுளின் பேரன்பை பெறுகிறார்கள். இதன் வாயிலாக இஸ்ராயேலின் கடவுள் அன்பு காட்டுவதில் எல்லையில்லாதவர் என்பதும், தண்டிப்பதில் குறைவானவர் என்பதும் காட்டப்படுகிறது.

வ.7: இரண்டாவது கட்டளை கொடுக்கப்படுகிறது. ஆண்டவருடைய பெயரை வீணாக அனுசரிக்க வேண்டாம் என்பது சொல்லப்படுகிறது. இதனை எபிரேய விவிலியம் אֶת־שֵׁם־יְהוָה אֱלֹהֶיךָ לַשָּׁוְא ('எத்-ஷெம்-அதோனாய் 'எலோஹெகா லாஷ்ஷாவ்) என்று சொல்கிறது. இதன் அர்த்தமாக, 'உன் கடவுளாக ஆண்டவரின் பெயரை வீணுக்கு கொண்டுசெல்லாதே' என்று வரும். இங்கே வீண் என்பது ஷெவா என்ற சொல்லில் காட்டப்படுகிறது.

கடவுளுடைய பெயர் கடவுளுக்கு சமன். இது இஸ்ராயேலரின் நம்பிக்கை. கடவுளுக்கு உருவம் இல்லை என்பதால், அவருடைய பெயரை கடவுளுடைய அடையாளமாக இஸ்ராயேலர்கள் கண்டார்கள். இதனால்தான் அவருடைய புனிதமான பெயரை (יְהוָה யாவே) அவர் சொல்லாமல், 'அதோனாய்' (என் தலைவர்) என்று சொன்னார்கள். சில கிறிஸ்தவ சீர்திருத்த சபைகள் இந்த பெயரை யெஹோவா என்று சொல்கிறார்கள். கடவுளுடைய பெயர் அதிபரிசுத்தமாக இருப்பதால், அதனை வீணாக்குவது கடவுளுடைய மாட்சிக்கு எதிரான குற்றமாக பார்க்கப்படும். இதனால்தான் அப்படிச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

வ.8: ஓய்வு நாள் மிக முக்கியமான கடவுளின் நாள். இந்த நாள் பணியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் முக்கியமான நாள் (שַּׁבָּת ஷபாத்). கடவுள் ஓய்வு நாளில் ஓய்ந்திருக்கிறார். அந்த நாளை அவர் புனிதப்படுத்தியிருக்கிறார். இதனால் இது முக்கியமாகிறது. ஓய்வுநாளைக் குறிக்கும் இந்த எபிரேயச் சொல் (שַּׁבָּת ஷபாத்), 'ஓய்வு' என்ற வினைச் சொல்லில் இருந்து வருகிறது. இந்த நாளுடைய முக்கியத்துவத்தின் பின்புலத்தை பற்றி பல வாதங்கள் இருக்கின்றன. பபிலோனியாவில்தான் ஓய்வு நாளைப்பற்றிய கட்டளை பிறந்தது என்று ஒரு வாதம் இருக்கிறது.

பபிலோனியர்கள் தங்கள் ஓய்வு நாளில் களியாட்டங்களில், மற்றும் சிலைவழிபாடுகளில் ஈடுபட்டனர், இதனை இஸ்ராயேலர் பின்பற்றாமல் இருக்கவே இந்த சட்டம் உருவானது என்று வாதிடுகின்றனர். இதற்கான வாய்ப்புக்கள் சற்று மிகையாகவே உள்ளன.

(பபிலோனியாவில் நடந்தது இன்று அதிகமான கிறிஸ்தவ உலகில் நடைபெறுகின்றன. அதாவது முக்கியமான வழிபாட்டு நாட்களில் விடுமுறை கொடுக்கப்படுகிறது, ஆனால் அந்த விடுமுறை களியாட்டங்களுக்கே செலவிடப்படுகிறது. ஞாயிறு திருப்பலியை விட, ஞாயிறு விருந்துகளும், விளையாட்டுப் போட்டிகளும், இரவுக்களியாட்டங்களும் முக்கியம் பெறுவது, இதனைத்தான் குறிக்கிறது).

ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருக்கச் சொல்கிறார் கடவுள். யூதர்கள் ஓய்வு நாளை சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு ஞாயிறு முதலாவது நாள்.

வ.9: ஓய்வு நாள் எந்த விதத்திலும் உழைப்பிற்கு எதிரானதல்ல என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆறுநாட்கள் உழைக்க வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. இந்த வரியில் உழைப்பை பற்றி சொல்லப்படுவது, விடுதலைப் பயண நூல் ஆசிரியர் உழைப்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை காட்டுகிறது. அத்தோடு உழைத்து அனைத்து வேலையையும் செய்யச் சொல்லப்படுகிறது (כָּל־מְלַאכְתֶּֽךָ கோல்-மெல'கெதெகா- உன்னுடைய அனைத்து வேலைகளையும்).

வவ.10-11: மீண்டும் ஒருமுறை ஓய்வு நாளைப் பற்றி அறிவித்தல்கள் கொடுக்கப்படுகின்றன. ஏழாம் நாளாகிய ஓய்வுநாள் கடவுளின் ஓய்வு நாள் எனக் காட்டப்படுகிறது (שַׁבָּת ׀ לַיהוָה ஷபாத் லஅதோனாய்). இதன் வாயிலாக அதன் புனிதத்தன்மைக்கு இன்னொருமுறை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த ஓய்வு நாளில் இஸ்ராயேல் குடிமகனும், அவர் பிள்ளைகளும், அடிமைகளும், கால்நடைகளும், நகரினுள் இருக்கும் அன்னியரும் வேலை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர். இஸ்ராயேல் மக்கள் சகோதரத்துவத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள், இருப்பினும் இஸ்ராயேல் அல்லாதவர்களை வெளியில் வைத்தே பார்த்தார்கள். ஆனால் அவர்கள் இஸ்ராயேல் அல்லாதவர்களுக்கு அநியாயம் செய்தார்கள் அல்லது ஏமாற்றினார்கள் என்றில்லை. அவர்களையும் தங்களுடைய உலகமாகவே கருதினார்கள் என்பதற்கு இந்த வரி ஒரு நல்ல சான்று.

ஓய்வு நாள் (ஷபாத்) மக்களுக்கு கடவுளுடைய வேலையில் ஈடுபட ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. கடவுளுடைய படைத்தல் வேலையில் அவர்கள் பங்காளிகளாகிறார்கள். இந்த நாளில் அவர்கள் வெளி வேலைகளை விட்டு, செபத்திலும் தபத்திலும் பங்கெடுக்கிறார்கள். ஆரம்ப கால திருச்சபை தந்தையர்கள் அனைத்து நாட்களையும் புனிதமான நாடகளாக கருதியபடியால், சபாத்தை மட்டும் மையப்படுத்தவில்லை. சபாத்தின் முக்கியத்துவத்தை ஞாயிறு எடுத்துக்கொண்டது. ஆண்டவர் உயிர்த்த நாளாக ஞாயிறு இருப்பதனால், அந்த நாள் மிக முக்கியமான நாளாக மாற்றம் அடைந்தது.

வ.12: தந்தையையும் தாயையும் மதித்து நடத்தல், அக்கால சமூகத்தால் மிகவும் விரும்பப்பட்டது. எபிரேய விவிலியம் 'மதித்துநட' 'கவெத்' (כַּבֵּד கணம்செய்) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது தந்தையும் தாயும் பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். அவர்கள் மரியாதையில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய இடத்தை, அதாவது பிள்ளைகள், தங்களைவிட பெற்றோருக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்க வேண்டும் என்பதையும், அவர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. 'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்ற தமிழ் பழமொழியுடன் இதனை ஒத்து நோக்கலாம். இந்த கட்டளை தனிமனிதருக்கான கட்டளை என்பதைவிட, இது ஒரு சமூகம் சார்ந்த கட்டளை என்பது தெளிவாக தெரிகிறது. தாயையும், தந்தையையும் மதித்து நடத்தல் மூலம், ஒருவர் தனக்கு கடவுள் கொடுத்த நாட்டை உரிமையாக்கிக் கொள்கிறார். ஆக நாடு இல்லாமல் இருப்பதற்கும், பெற்றோருக்கெதிரான குற்றங்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பது புரிகிறது (காண்க எசேக் 22,7.15).

வ.13: கொலை செய்யாதே என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. கொலைக்கு எபிரேயம் 'ராட்ஸ்சஹ்' (רָצַח) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இது கொலை செய்தல், மரணத்தை ஏற்படுத்துதல், விபத்தை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்குதல், நீதிக்கு புறம்பாக கொலைசெய்தல், போன்றவை உள்ளடக்கப்படுகிறது.

உயிர் கடவுளின் உன்னதமான கொடை அதற்கு சகல மரியாதையும் கொடுக்கப்படவேண்டும். உயிரை உருவாக்குவதும், அதனை காப்பதும் கடவுளுடைய பணியாக இருக்கிறது, அத்தோடு உயிர் கடவுளுடையதாக இருக்கிறது. இரத்தத்தில் உயிர் இருக்கிறது என்பதால்தான், இஸ்ராயேலர்கள் இரத்தத்தை உண்பது கிடையாது. ஆக கொலை செய்பவர் ஆண்டவருடைய அதிகாரத்தில் கைவைக்கிறார் என்று பொருள் படுகிறது.

வ.14: விபச்சாரம், எபிரேய வழக்கப்படி மற்றவருடைய திருமண உறவு மற்றும் உரிமைக்கு எதிரான பாவமாக பார்க்கப்படுகிறது. விபச்சாரத்திற்கு லேவியர் சட்டப்படி மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. இருப்பினும் விபச்சாரத்திற்கும், பாலியல் தவறான உறவுகளுக்கும் வித்தியாசம் காட்டப்படுகிறது. பிறர் மனைவியை கவர்தல் விபச்சாரமாக பார்க்கப்படும் அதேவேளை திருமணமாகாத பெண்ணுடன் உறவு வைத்தல் தண்டிக்கப்பட்டது அல்லது அவரை திருமணம் செய்ய கேட்கப்பட்டது. அதற்கு அந்த பெண்ணின் தந்தை உடன்பட வேண்டும். இரண்டும் பாவமாக கருதப்பட்டாலும், இரண்டாவதற்கு மரண தண்டனை கொடுக்கப்படவில்லை.

இஸ்ராயேலருடைய இந்த சட்டம் பல மத்திய கிழக்கு நாடுகளுடைய சட்டங்களை ஒத்திருக்கிறது. ஆரம்ப கால உலகத்திலே காசுக்கு பாலியல் உறவு வைக்கும் தொழில் மிகவும் அறியப்பட்ட தொழிலாக இருந்திருக்கிறது. இஸ்ராயேலர்கள் இந்த தொழிலையும் வெறுத்தார்கள், தங்கள் பிள்ளைகள் இதிலே ஈடுபடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். இதனால்தான் பல சட்டங்கள் விபச்சாரத்திற்கு எதிராக இயற்றப்பட்டன. לֹא תּנְאָף׃ லோ' தின்'ஆப்- விபச்சாரம் செய்யாதே.

வ.15: களவு, மற்றவருடைய சொத்துக்கு எதிரான பாவமாக பார்க்கப்பட்டது. இஸ்ராயேல் சமுகத்திலே சொத்து ஆண்டவருடைய ஆசீராகவும், அவருயை கடின உழைப்பின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது. இதனை இன்னொருவர் வன்முறையாகவோ அல்லது கபடமாகவோ அபகரிப்பது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்பட்டது. לֹא תּגְנֹב׃ லோ திக்னோவ்- களவு செய்யாதே.

வ.16: சாட்சியம் ஒருவருக்கு கடவுளோடு உள்ள உறவை காட்டுகிறது. பொய் சாட்சியம் கடவுளுடைய பெயருக்கு எதிரான பாவமாக கருதப்பட்டது. இதனை எபிரேய விவிலியம் 'பொய்யான சாட்சியத்திற்கு பதிலளிக்காதே' என்றுதான் எபிரேய விவிலியம் காட்டுகிறது (לֹא־תַעֲנֶה லோ'-த'அனெஹ்- பதிலளிக்காதே).

வ.17: விடுதலைப் பயணநூலிலே இது இறுதியான கட்டளை. இதனை கிறிஸ்தவம் பல இலக்கங்களில் காண்கிறது. பிறர் வீடு, பிறர் மனைவி, பிறருடைய அடிமை, அடிமைப் பெண், மாடு, கழுதை, அல்லது பிறருடைய ஏதும் உடமையை கவர்வது பாவமாக காட்டப்படுகிறது. ஏற்கனவே இந்த குற்றங்களை வேறு வரிகளில் கடவுள் சொல்லியிருக்கிறார். அதனைத்தான் இங்கு மீண்டும் இன்னொருமுறை திருப்பச் சொல்கிறார். இதன் மூலம், இந்த குற்றங்களின் தார்ப்பரியம் புரிகிறது.

பிறருடைய உடமைகள், அவருக்கு கடவுள் கொடுத்தது என நம்பப்பட்டது. அதனை கவருதல், கடவுளுக்கு எதிரான பாவம். இந்த உலக்கத்தில் அடிமை வியாபாரம், ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்த படியால் அதனை ஒரு பாவமாக விவிலியம் இந்த இடத்தில் காட்டவில்லை.



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 1,22-25

22யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். 23ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. 24ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். 25ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

பவுல் இதனை தன்னுடைய ஆதங்கமாகவும், அனுபவமாகவும் கொடுக்கிறார். யூத மற்றும் கிரேக்க உலகத்தின் பார்வையையும், கிறிஸ்தவத்தின் பார்வையையும் ஒப்பிட்டுப்பார்க்கிறார்.

வ.22: யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். யூதர்கள் வழமையாக அரும் அடையாளங்களை எதிர்பார்க்கிறவர்கள் அல்ல. புதிய ஏற்பாட்டுக் காலத்தில், அவர்கள் அந்த எதிர்பார்ப்பில் வளர்ந்திருக்க வேண்டும். இந்த அரும் அடையாளங்களைக் குறிக்க σημεῖον செமெய்யோன் என்ற வார்த்தை பயன்படுகிறது. இது புதுமை என்பதைவிட சற்று மேலதிகமாக இருக்கிறது.

மெய்யறிவை நாடுவது கிரேக்கர்களுக்கு கைவந்த கலை. மெய்யறிவு (σοφία சோபியா) என்பது அவர்களுடைய அடிப்படை இலக்கியமாக இருந்தது. சோக்கிரடிஸ், அரிஸ்டோட்டில், பிளடோ போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். இன்று உலகம் பயன்படுத்தும் அதிகமான மெய்யறிவு வாதங்களின் பிதாப்பிதாக்களாக கிரேக்கர்களே இருந்திருக்கிறார்கள்.

வ.33: அரும் அடையாளங்களையும், மெய்யறிவையும் பவுல் பிழையான தேடல் என்று சொல்லவில்லை, மாறாக இவற்றைவிட இன்னும் மிக முக்கியமான ஒன்றை கிறிஸ்துவின் சீடர்கள் தேடுகிறார்கள் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார். பவுல் ஒரு யூதர், கிரேக்க கல்வி கற்றவர் என்பதை இங்கே நினைவு கூற வேண்டும்.

தாங்கள் சிலுiவியில் அறையப்பட்ட கிறிஸ்துவை போதிப்பதாகச் சொல்கிறார், Χριστὸν ἐσταυρωμένον கிறிஸ்டொன் எஸ்டாவுரோமெனோன். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து என்பது இங்கே ஒரு இறையியல் வாதத்தின் தலைப்பாக பார்க்கப்பட வேண்டும். சிலுவையில் மரிப்பது உரோமைய உலக்தில் அதி அவமானமான தண்டனை. இதனால்தான் சிலுவை மரணம் யூதருக்கு தடைக்கல் என்கிறார் (σκάνδαλον ஸ்கான்தாலொன்). தடைக்கல் என்பது ஆண்டவருடயை செய்திக்கு எதிரான செயல். தடைக்கல்லைக் கொண்டு கடவுள் நல்ல செய்தியை தரமாட்டார் என்பது யூத போதனை. உரோமையருக்கு சிலுவை மரணம், நகைப்பான ஒரு மடமை. அவர்கள் இதனை உரோமையர்கள் அல்லாதவர்களுக்கே கொடுத்தார்கள். மற்றவர்கள் குற்றம் செய்தபோது அதனை அவர்கள் பயங்கரவாதம் என்றார்கள் (நம்முடைய ஈழத்தைப் போல). போராடுபவர்களையும், உரோhமைய அரசை எதிர்பவர்களையும் அவர்கள் மடையர்கள் என நினைத்தார்கள். இவர்கள் பார்வையில் இயேசுவிம் அப்படியே. μωρία மோரியா-மடமை.

வ.24: ஆனால் அழைக்கப்பட்டவர்களுக்கு (κλητός கிளேடொஸ், அழைக்கப்பட்டவர்), அவர்கள் கிரேக்கர்களாக இருக்கலாம், அல்லது யூதர்களாக இருக்கலாம், அவர்களுக்கு கிறிஸ்து பிழையான அடையாளமும் அல்ல, மடமையும் அல்ல. அவர் அவர்களுக்கு கடவுளின் வல்லமையும் (δύναμις துனாமிஸ்-வல்லமை), ஞானமுமாக (σοφία சோபியா-ஞானம்) இருக்கிறது. இந்த இரண்டும் விவிலியத்தின் படி கடவுளுடைய பலன்கள் அல்லது விசேடமான கொடைகள். இதனைத்தான் கிறிஸ்து கொண்டுவருகிறார். இந்த கொடைகளால்தான் அவர்கள் அழைக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

வ.25: கடவுளுடைய ஞானத்திற்கும் வல்லமைக்கும், மனித ஞானம்-வல்லமைக்கும் எப்போதுமே ஒரு இழுபறி இருந்துகொண்டே இருக்கும். இன்றும் இருக்கிறது. சிலவேளைகளில் கடவுளுடைய ஞானத்தை இந்த உலகம் மடமை என்றே கருதும். உதாரணமாக கன்னத்தில் அடிவாங்குதல், மனித ஞானத்தின் படி மடமை, ஆனால் கடவுளுக்கு அதுதான் பலசாலியின் முடிவு. கடவுள் வலுவென்று கருதுவதை உலகம் வலுவின்மை என்று கருதுகின்றது, இந்த வலுவின்மை உண்மையில் வலு என்பதை பவுல் அழகாகக் காட்டுகிறார்.


நற்செய்தி வாசகம்
யோவான் 2,13-25:

கோவிலைத் தூய்மைப்படுத்துதல் (மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46) 13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; 14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; 15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். 16அவர் புறா விற்பவர்களிடம், 'இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார். 17அப்போது அவருடைய சீடர்கள். 'உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். 18யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?' என்று கேட்டார்கள். 19இயேசு மறுமொழியாக அவர்களிடம், 'இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்' என்றார். 20அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?' என்று கேட்டார்கள். 21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். 22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர். இயேசு அனைவரையும் அறிபவர் 23பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். 24ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும். 25மனிதரைப்பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

கோவிலைத் தூய்மையாக்கும் இந்த பகுதி நான்கு நற்செய்திகளிலும் தரப்படுகின்றன. இதனால் யோவான் மற்ற நற்செய்திளர்களுடன் சேர்ந்து ஒரு பொதுவான மூலத்திலும் இருந்து தரவுகளைப் பெற்றிருக்கிறார் என்பது புலப்படுகிறது. கோவில் (எருசலேம் தேவாலயம்), இஸ்ராயேலருக்கு மிக முக்கியமான தேசிய அடையாளங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. நல்லூர் கந்தன் ஆலயத்தையும், மடுமாதா ஆலயத்தையும் உதாரணத்திற்கு எடுத்து நோக்கலாம். இயேசுவுடைய காலத்தில் பாவனையில் இருந்தது இரண்டாவது தேவாலயம், அதனை நெகேமியா மற்றம் எஸ்ரா காலத்தவர்கள் பபிலோனியாவிலிருந்து திரும்பிய பின்னர் கட்டினர் (கி.மு 400கள்). இயேசுவுடைய காலத்தில் பெரிய ஏரோது இதனை பெருப்பித்து புதுப்பித்தார். எருசலேம் தேவாலயம், எருசலேமில் ஆன்மீக தலைமைப் பீடமாக இருந்தது, அதேவேளை அங்கே அரசியலும், பொருளாதாரமும் கூடவே நடைபெற்றன. உரோமையர்கள் எருசலேம் ஆலயத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டே இருந்தார்கள். எருசலேம் தேவாலயத்தின் ஒரு வாயிலுக்கு முன் அவர்கள் தங்கள் கோட்டை ஒன்றை கட்டி பல இராணுவ வீரர்களை அங்கே நிறுத்தியிருந்தார்கள். தலைமைக் குருக்கள், அவர்கள் மக்கபேயர்களின் வழிமரபான சதுசேயர்களாக இருந்தவர்கள், இந்த கோவிலின் அதிகாரத்தை தங்கள் கைகளில் வைக்க பெரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதனை உரோமையர்கள் போட்ட எலும்புத் துண்டு என போராளிகள் கருதினார்கள். பரிசேயர்கள் சதுசேயர்களை வெறுத்தாலும், தேவாலயத்தை வெறுக்கவில்லை, ஏனெனில் அங்கே உயிருள்ள ஆண்டவர் இருந்தார் என நம்பினார்கள். சாதாரண யூத மகன்-மகள் எருசலேம் தேவாலயத்தை தன்னுயிரிலும் மேலாக கருதினர். இயேசுவும் அப்படியே. இந்த தேவாலயத்திலே வியாபாரம் நடைபெறுகிறது. ἱερόν ஹெய்ரொன்- தேவாலயம்.

வ.13: யூதர்களுடைய பாஸ்கா விழாவிற்கு அனைவரும் எருசலேம் செல்வது வழமை (πάσχα பாஸ்கா). பாஸ்கா இஸ்ராயேலருடைய மிக முக்கியமான விழா. இதனை மோசே எகிப்தில் ஏற்படுத்தினார். இதனை எப்படி கொண்டாட வேண்டும் என்று விடுதலைப் பயண நூல் நுணுக்கமாகக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் பாஸ்கா விழா நான்கு அல்லது மூன்று முறை காட்டப்படுகிறது. இதனால் இயேசு மூன்று முறை இதனை கொண்டாடியிருக்கலாம், ஆக அவர் மூன்ற வருடங்கள் பொதுப்பணியில் இருந்திருக்கலாம். இந்த பகுதியில் வருவது இயேசுவுடைய முதலாவது பாஸ்கா விழாவாக இருக்கலாம். பாலஸ்தீனாவில் இருந்தவர்கள் மட்டுமன்றி, அனைத்து யூதர்களும் பாஸ்காவிற்கு எருசலேம் செல்வது வழக்கம்.

வ.14: இயேசு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்பவர்களைக் காண்கிறார். இதனை லேவியர் சட்டப்படித்தான், யூத வியாபாரிகள் தொடங்கினார்கள். மக்களுடைய தேவைக்குத்தான் தொடங்கினார்கள். பிற்காலத்தில் இந்த ஆன்மீக சட்டங்கள் வியாபாரமாக மாறியது. இதனை இவர்கள் ஆலயத்தின் உட்பகுதியில் செய்யவில்லை, வெளிமுற்றத்திலே செய்தர்கள். உரோயைருடைய நாணயம் ஆலயத்தில் செல்லாது என்பதால் அதனை அவர்கள் யூத செக்கலுக்கு மாற்ற அங்கே பணம் மாற்றுபவர்களை வைத்தார்கள். உரோமைய நாணயத்தை அவர்கள் தீட்டு என கருதியிருக்கலாம் (பணமே தீட்டுத்தான் என நினைக்கிறேன்).

வ.15: இயேசு இவர்களைக் கண்டு என்ன செய்தார் என்பதை யோவான் அடையாளமாகக் காட்டுகிறார். மாற்குவிடமிருந்து யோவான் மிகவே வேறுபடுகிறார். யோவான் நற்செய்தியில் இதுவும் ஒரு அடையாளமே. இயேசு கயிறால் சாட்டை பின்னி, வியாபாரிகளை கோவிலிலிருந்து துரத்தினார், விலங்குகளை விரட்டினார், காசு மாற்றுகிறவர்களையும், அவர்கள் காசையும் அதன் மேசைகளையும் புரட்டுகிறார்.

இதன் வாயிலாக, வியாபாரத்திற்கும், வியாபாரமாக மாறும் விலங்குகளுக்கும், ஆலயத்திலே வியாபாரம் செய்யும் மனித முதலைகளுக்கும், இடம் இல்லை என்பது புலப்படுகிறது. இயேசு யாரையும் அடித்தார் என்று யோவான் சொல்லவில்லை (ἐξέβαλεν எக்ஸெபலென்- துரத்தினார்).

வ.16: இயேசு புறா விற்பவர்களிடம் மட்டுமே பேசுகிறார். புறாக்களை ஏழை மக்கள் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இயேசுவிற்காகவும் சூசையப்பார் இரண்டு புறாக்களைத்தான் காணிக்கையாகக் கொடுத்தார்.

புறாக்களை அவர் விரட்டாமல் எடுத்துச்செல்லச் சொல்கிறார். அவர் ஏழைகளை மதிக்கிறார் எனவும் எடுக்கலாம். தன் தந்தையின் இல்லத்தை சந்தையாக்க வேண்டாம் என்கிறார், தன் தந்தையின் இல்லம் என உரிமையோடு சொல்கிறார் (τὸν οἶκον τοῦ πατρός μου οἶκον ἐμπορίου. டொன் ஒய்கொன் டூ பாட்ரொஸ் மூ ஒய்கொன் எம்பொரியூ- என் தந்தையின் இல்லத்தை வியாபார இல்லமாக).

வ.17: சீடர்கள் மறைநூலை நினைவுகூர்ந்தாக யோவான் சொல்கிறார். இயேசு நினைவுகூர்ந்ததாகச் சொல்லவில்லை. இயேசு யோவான் நற்செய்தியில் யாவும் அறிந்த கடவுள் ஆக அவருக்கு நினைவுகூறவேண்டிய தேவையில்லை. இங்கே திருப்பாடல் 69,9 கோடிடப்படுகிறது. (உமது இல்லத்தின்மீது, எனக்குண்டான ஆர்வம், என்னை எரித்துவிட்டது). அனேகமாக செப்துவாஜின்ற் விவிலியம் இங்கே பாவிக்கப்பட்டிருக்க வேண்டும். (செப்துவாஜின்ற்: ὁ ζῆλος τοῦ οἴκου σου κατέφαγέν με: ஹொ ட்ஸேலொஸ் டூ ஒய்கூ சூ காடெபாகென் மெ. யோவான்: ὁ ζῆλος τοῦ οἴκου σου καταφάγεταί με: ஹொ ட்ஸெலொஸ் டூ ஒய்கூ).

வ.18: யூதர்கள் ஆண்டவரின் செயல்களை எதிர்க்கவில்லை மாறாக அதற்கு அவர்கள், அடையாளம் மட்டுமே கேட்கிறார்கள். இந்த செயற்பாடுகளில் அடையாளங்களை கண்டுகொண்டால் ஒருவேளை அவரை அவர்கள், மெசியாவாக ஏற்றுக்கொள்ள முயற்சித்திருப்பார்கள் எனலாம்.

வ.19: இயேசு வித்தியாசமான அடையாளத்தைக் கொடுக்கிறார். திருக்கோவிலை இடித்தால் மூன்று நாட்களில் கட்டுவதாகச் சொல்கிறார். தான் இடிப்பதாகவும் சொல்லவில்லை, அதனையும் அவர்களையே செய்யச் சொல்கிறார். கோவிலை பற்றிச் சொல்வது அடையாளமாக இருந்திருக்கலாம்.

வ.20: யூதர்கள் இந்த கோவிலின் வரலாற்றை இயேசுவிற்கு சொல்ல முயற்சிக்கிறார்கள். தேவாலயத்தை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது இயேசுவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. நாற்பத்தாறு ஆண்டுகள் எடுத்த கோவிலை எப்படி ஒருவர் மூன்று நாட்களில் மீள கட்டமுடியும் என்பது இவர்கள் வாதம். யூதவரலாற்றாசிரியர் யோசேப்புவின் கருத்துப்படி இந்நாட்கள் எரோதுவின் நாட்களாக இருந்திருக்கலாம். கி.மு 27ம் ஆண்டளவிலேதான் இந்த திருக்கோவில் கட்டட வேலைகள் முடிந்திருக்க வேண்டும்.

வவ.21-22: இயேசு கோவிலைப் பற்றியல்ல மாறாக தன்னுடைய உடலைப் பற்றித்தான் பேசினார் என்பதை சீடர்கள் நினைவுகூர்ந்ததாகச் சொல்கிறார். இதனால் அவர்கள் இயேசுவையும், மறைநூல் வார்த்தையும் நம்பினார்கள். இதனைத்தான் யோவான் தனது வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

இயேசுவின் உடல் எருசலேம் தேவாலயத்தைப் போலல்லாது, கடவுளின் இல்லம் என்பதை யோவான் மறைமுகமாகச் சொல்கிறார். இயேசுவின் உயிர்ப்பு, அவருடைய சொந்த உயிர்ப்பு என்பதையும் தாண்டி அவரை நம்பும் அனைவருக்குமான உயிர்ப்பு என்பதைக் குறிக்கவே இந்த காட்சிகள் ஒரு குழுவில் அமைக்கப்படுகிறது.

சட்டங்கள் மனிதரை நல்வழிப்படுத்தவே.

சட்டங்கள் கடவுளையும் மனிதரையும் மையமாகக் கொண்டே அமைகின்றன.

நல்லதும் நீதியுமான சட்டங்கள் நிச்சயமாக பாதுகாக்கப்படவேண்டும்.

கடவுளின் பெயராலும், அல்லது கடவுளை காக்கவும் வேண்டி

இயற்றப்படும் ஆபத்தான சட்டங்கள், உண்மையில் கடவுளுடையது அல்ல.

ஆண்டவர் இல்லாத ஆலயத்தில்,

விலங்குகளும், வியாபாரமுமே இருக்கும்.

ஆண்டவரின் சாட்டை இன்றும் அதிகமாக தேவைப்படுகிறது.

அன்பு ஆண்டவரே,

சட்டங்களையும், ஆலயத்தையும் கொண்டு உம்மை அறிய உதவி செய்யும்.

ஆமென்.