இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (ஆ)

முதல் வாசகம்: தொடக்க நூல் 22,1-2.9-18
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,31-34
நற்செய்தி: மாற்கு 9,2-10


மனித நர பலி: ஆபிரகாமிற்கு ஈசாக்கு அவருடைய நூறாவது வயதிலே பிறந்தவர். பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில்தான் ஈசாக்கு பிறந்தார். முதல் ஏற்பாட்டில் ஈசாக்கு சற்று வித்தியாசமானவராக காட்டப்படுகிறார். அமைதியான சுபாவமும், ஒரு மணம் மற்றுமே செய்தவராகவும், நேர்மையான மனிதராகவும் பார்க்ப்படுகிறார். ஆபிரகாமிற்கு வந்த சோதனைகளில், ஈசாக்கை கடவுள் பலியிடக் கேட்டது, மிகவும் பெரிய சோதனையாக இருந்திருக்கும். பிள்ளைகளை பலியிடுவது ஆபிரகாமுடைய காலத்தில் ஒரு வழிபாட்டுச் சடங்காக இருந்திருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மொலெக் என்ற ஒரு தெய்வத்தை மனித நரபலியின் கடவுளாக விவிலிய மற்றும் விவிலியமல்லாத மத்திய கிழக்கு இலக்கியங்களின் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த தெய்வத்தை அவர்கள் இஸ்ராயேல் மற்றும் கானானிய தெய்வமாக கருதுகின்றனர். விவிலியத்தில் சில இடங்களில் மொலெக் நேரடியாகவே காட்டப்படுகிறது (காண்க லேவி 18,21: 20,2-5: 1அரசர் 11,7: 2அரசர் 23,10: எரேமியா 32,35). இந்த தெய்வத்தை பாதாள உலகத்தின் தெய்வம் என்றும் அடையாளப்படுத்துகின்றனர். மொலெக் என்ற எபிரேயச் சொல் 'மலக' என்ற அடிச் சொல்லை மையமாகக் கொண்டுள்ளது. இதிலிருந்து அரசன், அரசி, அரசாட்சி போன்ற சொற்கள் உருவாகின்றன. இதனை விட இந்த தெய்வத்திற்கு கார்த்தேசிய (தற்போதைய துனிசியா) தொடர்பும் இருந்ததகாவும் வாதிடப்படுகிறது.

இஸ்ராயேல் சட்டங்களும் கலாச்சாரமும் மனித பலியை வெறுத்து அறுவருத்தனர், அது அவர்களின் முதிர்ந்த கலாச்சார வளர்ச்சியைக் காட்டுகிறது. இணைச்சட்ட வரலாறு, மனித பலியிடுதலை மிகவும் பாரதூரமான குற்றமாகக் காட்டுகிறது, அதேவேளை முற்காலத்தில் இஸ்ராயேல் தந்தையர்கள் புரிந்த குற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறது (காண்க இ.ச 12,31). இஸ்ராயேலர்களின் சடங்கு முறைகள் மற்றும் விசுவாசம் தனிக் கடவுள் விசுவாசமாக வளர்வதற்கு முன்னர், மொலெக் தெய்வத்திற்கும் இஸ்ராயேல் கடவுளுக்கும் சில சடங்கு ரீதியான தொடர்புகளை மக்கள் கொண்டிருந்தனர் என்ற வாதத்தையும் ஒரு சில ஆய்வாளர்கள் காட்டுகின்றனர். இதனை இஸ்ராயேலின் கடவுள் அனுமதித்தாரா என்பதற்கு விவிலியம் சாட்சியம் சொல்லவில்லை, ஆனால் சில நிகழ்வுகளை விவிலியம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இதற்கு நல்ல உதாரணமாக நீதித்தலைவர், இப்தா மற்றும் அவர் புதல்வி போன்றோரின் வாழ்வை காட்டலாம் (காண்க நீதித் தலைவர்கள் 11,34-40).

மொலெக் தெய்வ வழிபாடு இஸ்ராயேலர்களின் வழிபாடா அல்லது சில இஸ்ராயேலர்களின் வழிபாடா என்ற கேள்வி பல கடினமான ஆய்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இஸ்ராயேலின் சில அரசர்கள் மொலெக்கிற்கு வழிபாடு செய்திருக்கிறார்கள், பல அரசர்கள் இந்த வழிபாட்டை அழிக்க பல முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள். எருசலேமிற்கு அருகில் இருந்த ஹின்னோம் பள்ளத்தாக்கில் மொலெக் தெய்வத்திற்கு வழிபாடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

இணைச்சட்ட ஆசிரியர்கள், முக்கியமான குரு மரபு ஆசிரியர்கள் மொலெக் வழிபாட்டு முறையை இஸ்ராயேல் தொடர்பிலிருந்து முழுமையாக அகற்றிவிட்டார்கள். இதனை அவர்கள் பிறதெய்வ மற்றும் அருவருக்கத்தக்க வழிபாடாகவே காண்கின்றார்கள். பபிலோனிய அடிமைத்தனத்தின் பின்னர் வந்த தொகுப்பாசியர்கள் மொலெக் தெய்வ வழிபாட்டை இஸ்ராயேலுக்கு எதிரான வழிபாடாகவே காண்கின்றார்கள்.

மொலெக் தெய்வத்திற்கு எப்படி மனிதர்கள் பலியிடப்பட்டார்கள் என்பது தெளிவாக விவிலியத்தில் சொல்லப்படவில்லை. சில வேளைகளில் அவர்கள் குழந்தைகளாக இருந்தார்கள், முக்கியமாக தலைச்சான் பிள்ளைகளாக இருந்தார்கள், சில வேளைகளில் அவர்கள் பெரியவர்களாகவும் இருந்தார்கள் எனலாம். அதேவேளை குழந்தைகளை பலியிடாமல், அவர்களை நெருப்பை கடந்துசெல்லச் செய்யும் ஒரு சடங்காக மட்டுமே இது இருந்தது என்ற ஒரு வாதமும் இருக்கிறது.

முதல் வாசகம்
தொடக்க நூல் 22,1-2.9-18

ஈசாக்கைப் பலியிட ஆபிரகாமுக்குக் கட்டளை

1இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் 'இதோ! அடியேன்' என்றார். 2அவர், 'உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்' என்றார்.

9ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். 10ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். 11அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று 'ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் 'இதோ! அடியேன்' என்றார். 12அவர், 'பையன்மேல் கை வைக்காதே அவனுக்கு எதுவும் செய்யாதே உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்' என்றார். 13அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். 14எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு 'யாவேயிரே' என்று பெயரிட்டார். ஆதலால்தான் 'மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்' என்று இன்றுவரை வழங்கி வருகிறது. 15ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, 16'ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். 17ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். 18மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்' என்றார்.


வ.1: ஆசிரியர் இந்த வரி மூலமாக முந்திய அதிகாரத்தை வேறு நிகழ்வாகக் காட்டுகிறார். முந்தின பகுதியில் ஆபிரகாம் அபிமெலக் என்ற அரசரோடு உடன்படிக்கை ஒன்றை செய்கிறார். விவிலியத்தில் அதுவும், முதல் ஏற்பாட்டில் கடவுள் நேரடியாகவே மனிதர்களை சோதிப்பதை காணலாம். இந்த வரியில் கடவுள் ஆபிரகாமை சோதிக்கிறார், ஆபிரகாமும் அதற்கு உடண்படுகிறார். הָאֱלֹהִ֔ים נִסָּה אֶת־אַבְרָהָ֑ם ஹ'எலோஹிம் நிஸ்ஸாஹ் 'எத்-'அவ்ராஹாம்- கடவுள் ஆபிரகாமை சோதித்தார். אַבְרָהָם וַיֹּאמֶר הִנֵּֽנִי׃ 'அவ்ராஹாம் வாய்யோ'மெர் ஹின்னினி- இதே இருக்கிறேன் என்றார் ஆபிரகாம்.

வ.2: கடவுள் ஈசாக்கை, ஆபிரகாம் மிகவும் அன்பு செய்கிற ஒரே மகன் என தெரிந்து வைத்திருக்கிறார். ஈசாக்கிற்கு முன்னர் இஸ்மாயில் என்ற இன்னொரு மகனும் ஆபிரகாமிற்கு இருந்தார், அவரை ஆபிரகாம் அன்பு செய்யவில்லை என்பதை இந்த வரியில் ஆசிரியர் காட்டுகிறார் என்பது போல தேன்றுகிறது. நாம் அதிகமாக விரும்புவதைத்தான் கடவுள் காணிக்கையாக கேட்கிறார் என்ற வாதம் இக்கால ஆன்மீகத்திலும் சமய நம்பிக்கையிலும் இருப்பதை உணரலாம்.

மோரியா நிலத்திற்கு செல்லச் சொல்லி கேட்கிறார் ஆண்டவர். மோரியா எங்கே இருந்தது என்பது பற்றி சரியாக ஆய்வுகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை, சிலர் இதனை எருசலேம் தேவாலயம் பிற்காலத்தில் கட்டப்ட்ட சீயோன் மலை என காண்கின்றனர். מֹּרִיָּה மோரியாஹ்.

வவ.3-8: இந்த வரிகள் மோரியாவை நோக்கிய ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பயணத்தை குறிப்பிடுகின்றன. ஆபிரகாம் தன்வேலையாட்கள் இருவர், மற்றும் கழுதை, விறகுகளுடன் பயனமாகிறார். மலையில் மேல் ஏறுகின்றபோது ஆபிரகாம் ஈசாக்குடன் மட்டும் தனியாக ஏறுகிறார். ஈசாக்கு விறகை தன்தலையில் சுமக்கிறார், ஆபிரகாம் நெருப்பை சுமக்கிறார். இது புதிய ஏறபாட்டில் இயேசு தன் சிலுவையை சுமப்பதை நினைவூட்டுவதாக சில ஆய்வாளர்கள் காண்கிறார்கள். ஈசாக்கு பலி மிருகத்தை காணாமல், மிருகம் எங்கே என்று கேட்க, அதனை கடவுள் மலையில் பார்த்துக்கொள்வார் என்ற விடையை ஆபிரகாம் கொடுக்கிறார். இந்த விடை முதல் ஏற்பாட்டில் முக்கியமான வரிகளில் ஒன்றாக இன்னமும் பார்க்கப்படுகிறது (אֱלֹהִ֞ים יִרְאֶה־לּ֥וֹ 'எலோஹிம் யிர்'எஹ்-லோ, கடவுள் அதனை பார்த்துக்கொள்வார்). பயணம் தொடர்கிறது.

வ.9: ஆபிரகாமின் காலத்தில் இஸ்ராயேலர்கள் என்ற பெயரை அவர் மக்கள் பெற்றிருக்கவில்லை. இவர்கள் நாடோடி மக்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆபிரகாம் மோரியா மலையில் கற்களினால் பலிப்பீடம் ஒன்றை செய்கிறார், இதனை எபிரேய விவிலியம் (מִּזְבֵּ֔חַ) மிட்ஸ்பெஹா என்று அழைக்கிறது. உடனடியாக ஈசாக்கை அவர் கட்டி பீடத்தின் மேல் அடுக்கப்பட்டிருந்த விறகுகளின் மேல் வைக்கிறார். ஈசாக்கு பலிமிருகமாக மாறுகிறார், இதனை ஈசாக்கு எப்படி எடுத்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது. இங்கே ஈசாக்கு பலவந்தமாகவே கட்டிவைக்கப்டுகிறார் என்பதையே ஆசிரியர் காட்டுகிறார். பிள்ளைகள் மேல் முதல் ஏற்பாட்டுக் காலத்து தந்தையர்கள், முழு சுதந்திரம் கொண்டிருந்தார்கள் என்பதையும் இந்த வரி காட்டுகிறது.

இந்த வரியை பார்க்கின்றபோது, மனிதர்களை பலிகொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் சாதாரணமாக இருந்திருக்கிறது என்பது போல தோன்றுகிறது.

வ.10: ஆபிரகாம் ஈசாக்கை வெட்ட தன் கத்தியை எடுக்கிறார். இந்த வரிமட்டும், ஆபிரகாம் தன் மகனை பலியிடுவதில் எந்த விதமான சலனத்தையும் காட்டவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதேவேளை கடவுள் தன் மகனை நரபலியிலிருந்து காப்பாற்றுவார் என்றும் அவர் எதிர்பார்த்தாகவும் தெரியவில்லை. அவருடைய விசுவாசம் முழுமையான விசுவாசமாகவே தெரிகிறது.

வ.11: வாசகர்கள் எதிர்பார்த்த படி ஆண்டவரின் தூதர் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைக்கிறார் (מַלְאַ֤ךְ יְהוָה֙ מִן־הַשָּׁמַ֔יִם மல்'அக் அதோனாய் மில்-ஹஷாமாயிம் - வாத்திலிருந்து கடவுளின் தூதர்). இதற்கு முன்னுள்ள பகுதிகளில் கடவுள் தாமே ஆபிரகாமுடன் நேரடியாக பேச, இந்த இடத்தில் கடவுளின் தூதர் அவரோடு பேசுகிறார். முதல் ஏற்பாட்டில் கடவுளின் தூதர் என்பவர் சில இடங்களில் கடவுளையே குறிக்கிறார் என்ற வாதமும் இருக்கிறது. அல்லது இது முதல் ஐந்து நூல்களில் காண்படும் நான்கு பாரம்பரியங்களின் (யாவே, எலோகிம், குரு, இணைச்சட்டம்) உட்புகுத்தலாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

வானதூதர் வழியாக வந்த கடவுளின் குரலைக் கேட்ட ஆபிரகாம் தன்னை அவர் அடியேன் என்கிறார் (הִנֵּנִי ஹின்னேனி-இதே இருக்கிறேன்).

வ.12: வழமையாக மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுவார்கள், இங்கே கடவுள் ஆபிரகாமில் தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். முதலாவதாக பையன் மேல் கைவைக்க வேண்டாம் என கட்டளை கொடுக்கப்படுகிறது (אַל־תִּשְׁלַח יָֽדְךָ֙ 'அல்-திஷ்லாஹ் யாத்கா, உன் கையை வைக்காதே). நரபலிகள் சாதாரணமாக இருந்த அக்காலத்தில் இஸ்ராயேலின் உன்மைக் கடவுள் இந்த பிழையான வழக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற செய்தியும் இங்கே மறைமுகமாக கொடுக்கப்படுகிறது.

கடவுள், ஆபிரகாம் என்னும் இந்த அடியவர், தனக்கு அஞ்சுபவர் என்பதை அறிந்து கொள்ளகிறார். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது முதல் ஏற்பாட்டில் நம்பிக்கையை வெளிப்படுத்த பயன்படும் ஒரு முக்கியமான சொல் (כִּֽי־יְרֵא אֱלֹהִים֙ אַ֔תָּה கி-யெரெ' 'எலோஹிம் 'அத்தாஹ்- நீ கடவுளுக்கு அஞ்சுகிறவன்).

வ.13: ஆபிரகாம் தன் கண்களை உயர்த்திப்பார்க்கிறார். இதிலிருந்து அவர் இவ்வளவு நேரமும் தன் கண்களை உயர்த்திப் பார்க்காமல் இருந்திருக்கிறார் என்பது போல தெரிகிறது. இதனால் முட்செடிகளில் தன் கொம்புகளால் மாட்டிக்கொண்ட ஆட்டுக்கிடாய் ஒன்று தென்படுகிறது. இதனை எபிரேய விவிலியம் 'அயில் (אַיִל) என்று சொல்கிறது. இது எப்படி இங்கே வந்தது என்பது சொல்லப்படவில்லை, ஒருவேளை அதனை கடவுள் தாமே அனுப்பியிருக்கலாம், அல்லது மந்தையில் இருந்து சிதறிவந்திருக்கலாம் அல்லது காட்டு விலங்காக இருந்திருக்கலாம். எப்படியாயினும் ஈசாக்கு காப்பாற்றப்பட, கிடாய் அவருக்கு பதிலாக பலியாகிறது.

வ.14: கடவுள் ஈசாக்கை காப்பாற்றிய படியால் மோரியா மலையின் இந்த இடம் 'அதோனாய் யிரே' (יְהוָ֣ה ׀ יִרְאֶה கடவுள் பார்த்துக்கொள்வார்) என்ற பெயரைப் பெறுகிறது. இந்த இடமும் அதிலே ஆபிரகாம் பெற்ற அனுபவமும் பிற்கால இஸ்ராயேல் மக்களுக்கு வரலாறாகிறது. முக்கியமான சந்தர்ப்பங்களில் கடவுள் பார்த்துக்கொள்வார், அல்லது நாம் எதிர்பாராத விதமாக கடவுள் வாழ்வின் ஓட்டத்தை மாற்றுவார் என்பதையும் இந்த இடம் அவர்களுக்கு காலம் காலமாக நினைவூட்டுகிறது.

வ.15: ஆண்டவருடைய தூதர் மீண்டும் ஆபிரகாமை அழைக்கிறார். தொடர்ந்து இங்கே பேசுகிறவர் ஆண்டவரின் தூதர் என்பது காட்டப்படுகிறது.

வ.16: ஆண்டவர் தன்மீது ஆணையிட்டுக் கூறுகிறார். ஆண்டவரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்பதால் அவர் அவர்மீதான் அணையிடுகிறார். மனிதர்கள் ஆண்டவர் மீது அணையிடுவது லேவியர் சட்டத்தில் குற்றமாக கருதப்பட்டது, இருப்பினும் அந்த கட்டளை மனிதர்களுக்கு மட்டுமே.

தன் ஒரே மகனை பலியடத் தயங்காமல் இருந்தது, ஆண்டவருக்கு ஏற்புடையதாகிறது. இது ஆபிரகாமின் முழு வாழ்வையுமே மாற்றுகிறது.

வ.17: கடவுள் ஆபிராகமிற்கு கொடுத்த ஆசீர்வாதம் விவரிக்கப்படுகிறது. ஆண்டவரின் ஆசீர்வாதம் உண்மையான ஆசீர்வாதம் என்பதைக் காட்ட, உண்மையாககே நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்ற எபிரேய வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன. இரண்டு முறை வினைச்சொற்கள் எபிரேய மொழியில் ஒரே வசனத்தில் பாவிக்கப்படுவது, அதன் உண்மைத் தன்மையை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் ஆசீர்வாதத்தால் ஆபிரகாமின் வழிமரபு (זַרְעֲךָ֙ ட்ஸர்'அகா-உன் வழிமரபு), வானத்து விண்மீன்களைப் பேலவும் (כְּכוֹכְבֵי הַשָּׁמַ֔יִם கெகோக்வே ஹஷாமாயிம்), கடற்கரை மணலைப் போலவும் (כַח֕וֹל עַל־שְׂפַת காஹோல் 'அல்-செபாத்) எண்ணமுடியாததாகிறது.

கடற்கரை மணலையும், வானத்து விண்மீன்களையும் எண்ண முடியாது என்பதால் இந்த உருவகங்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம், அல்லது இவை அக்கால மக்களுக்கு வேறு அடையாளங்களாக இருந்திருக்கலாம். விண்மீன்களை தெய்வ மக்களுக்கு ஒப்பிடும் வழக்கம் பல மதங்களில் இருந்திருக்கிறது.

அடுத்ததாக ஆபிரகாமின் விழமரபினர் தங்கள் எதிரிகளின் நகர் வாயில்களை கைப்பற்றுவார்கள் என்பது சொல்லப்படுகிறது. நகர் வாயில்கள் (שַׁעַר ஷ'அர்-வாயில்) என்பது நகரின் கட்டுப்பாட்டைக் குறிக்கும், நகர் வாயில்கள் யார் வசம் இருக்கின்றனவோ, அவர்கள் வசம்தான் அந்த நகரின் அனைத்து சொத்துக்களும் இருக்கின்றது என்பது பொருள்.

வ.18: ஆபிரகாமின் கீழ்ப்படிவு, அவர் சந்ததியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது. இஸ்ராயேல் மக்கள் தங்களை கடவுளுடைய சொந்த மக்கள் என இறுதிவரையும் நம்புகிறார்கள். அதற்கான வரலாற்று பின்புலத்தில் இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆபிரகாமின் செவிமடுத்தல், அவர் சந்தியையை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறது. இந்த வரியில் மற்ற இனத்தார் இரண்டாம் தர குடிகள் என்று சொல்லப்படவில்லை, மாறாக அவர்களின் ஆசீராக இஸ்ராயேல் மக்கள் மாறப்போகிறார்கள் என்பதையே சொல்கிறது, அதாவது இஸ்ராயேலர்கள் பணியாளர்களாகிறார்கள். (הִתְבָּרֲכוּ ஹித்பொராகூ-அவர்கள் ஆசீர்வதிக்கிறவர்கள் ஆவார்கள்).

வ.19: இந்த நிகழ்விற்கு பின்னர் ஆபிரகாம் தன்வேலையாட்களுடன் தன் இடமான பெயர்செபாவிற்கு திரும்பிவிடுகிறார்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 115

சாவினின்று தப்பியவர் பாடியது

1அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.

2அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.

3சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன் பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன் துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.

4நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‛ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.

5ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.

6எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.

7‛என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்; ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்'.

8என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

9உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10‛மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.

11‛எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.

12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

14இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.

16ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;

18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;

19உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா!



இந்த 116வது திருப்பாடல் ஐந்தாவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தனி மனித புகழ்சிப் பாடல் என சில ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஒன்றை பின்புலமாக காட்டுகிறார் ஆசிரியர். இதற்கு காரணமாக மனிதர்களின் ஏமாற்றுத்தனத்தையும், தன்னுடைய வெகுளிதனத்தையும் அவர் சாடுகிறார். இப்படியான சூழ்நிலையில் செபம் உதவிக்கு வருகிறது, கடவுள் அவர் குரலைக் கேட்கிறார், இந்த கடவுள் அருள் மிக்கவர், இரக்கமும், உண்மையுமுள்ளவர் என்று பாடல் தொடர்ந்து முன்னேருகிறது. எபிரேய கவிநடையான 'படி அடுக்கு' முறையில் இந்த பாடல், அமைக்கப்பட்டுள்ளது.

அ1. துன்ப நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ.1-2)

ஆ1. செபத்தினால் துன்பங்களை சந்தித்தல் (வவ.3-4)

இ1. கடவுளில் முழுமையாக தங்கியிருத்தல் (வவ. 5-7)

ஈ1. நம்பிக்கை அனைத்தையும் புதியதாக்கிறது (வவ. 8-11)

இ2. கடவுள் துன்பங்களுக்கு விடையளிக்கிறார். (வவ.12-14)

ஆ2. கடவுள் துன்பங்களை அகற்றுகிறார் (வவ.15-16)

அ2. மீட்பு நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ. 17-19)

வ.1: அல்லேலூயா என்ற புகழ்ச்சி வார்த்தையில் இந்த திருப்பாடல் தொடங்குகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்). இந்த புகழ்ச்சி சொல் எபிரேய விவிலியத்தில் 115வது திருப்பாடலின் இறுதியான சொல்லாக இருக்கிறது. 116வது திருப்பாடலின் முதலாவது சொல்லாக இல்லை. ஆசிரியர், தான் ஏன் கடவுள் மீது அன்புகூருகிறார் (אָהַבְתִּי 'ஆஹவ்தி- அன்புகூறுகிறேன்) என்பதற்க்கு, ஆண்டவர் தன் குரலைக் கேட்டதை காரணமாகச் சொல்கிறார். ஆண்டவர் ஒருவரின் குரலைக் கேட்கிறார் என்பது, ஒருவருக்கு துன்பத்திலும் மன ஆறுதலைக் கொடுக்கிறது. இதனை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்துகிறார்.

வ.2: முதலாவது வரியில் சொன்ன அதே அர்த்தம் வேறு சொற்பிரயோகங்களில் இந்த வரியிலும் திருப்பிக்கூரப்படுகிறது. மன்றாடிய நாளில் ஆண்டவர் தனக்கு செவிசாய்த்ததாகச் சொல்கிறார். בְיָמַי אֶקרָֽא׃ வெயாமய் 'எக்ரா'- நான் கூப்பிடும் நாட்களில். இந்த வரியின் இரண்டாவது பிரிவை, 'நான் வாழுகின்ற வரை, தேவையில் ஆண்டவரை உதவிக்காக கூப்பிடுவேன்' என்று சில ஆங்கில விவிலியங்கள் மொழிபெயர்க்கின்றன.

வ.3: தன்னுடை துன்பத்தின் நிலையை அடையாளங்களில் அவர் உருவகிக்கின்றார். சாவின் கயிறுகள் தன்னை பிணித்துக்கொண்டன என்கிறார். இதனை சாவின் கண்ணிகள் என்னை சூழ்ந்து கொண்டன என்று எபிரேய பாடம் தருகிறது אֲפָפ֤וּנִי ׀ חֶבְלֵי־מָ֗וֶת 'அபாபூனி ஹெவ்லே மோவெத். மேலும் இதனை வேறு சொற்களில், பாதாளத்தின் துன்பங்கள் தன்னை பற்றிக்கொண்டன என்கிறார். பாதாளம் (שְׁאוֹל ஷெ'ஓல்), இங்கே இவருக்கு மரண அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

இப்படியான அனுபவங்கள் தனக்கு துன்பத்தையும் துயரத்தையுமே தருகிறது என்கிறார். צָרָ֖ה וְיָגוֹן אֶמְצָא׃ ட்சாராஹ் வெயாகோன் 'எம்ட்சா'- துன்பத்தையும் துயரத்தையும் நான் கண்டுகொள்கிறேன்.

வ.4: ஆசிரியர் தான் ஆண்டவரை தொழுததாகச் சொல்கிறார், இதனை எபிரேய விவிலியம், בְשֵׁם־יְהוָה אֶקְרָא (பெஷெம்-அதோனாய் 'எக்ரா'), நான் ஆண்டவரின் பெயரில் அழைத்தேன் என்று வாசிக்கிறது.

இதனை அந்த வரியின் இரண்டாவது பிரிவு, 'என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன்' என்று மீள சொல்கிறது.

வ.5: ஆண்டவரின் கெஞ்சி மன்றாடுவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். கடவுள் அருளும் இரக்கமும் உள்ளவராக இருப்பதுதான் அதற்கான காரணம் என்கிறார். חַנּ֣וּן יְהוָֹ֣ה וְצַדִּ֑יק ஹனூன் அதோனாய் வெட்சாதிக். ஆண்டவருடைய அருளும் நீதியும் இன்னொரு சொல்லின் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ஆண்டவர் இரக்கம் உள்ளவராக பாடப்படுகிறார்.

வ.6: ஆண்டவர் எளிய மனத்தோரை பாதுக்கிறவர் (פְּתָאיִם பெதா'யிம்- எளியோர்), தன்னையும், தான் தாழ்த்தப்பட்ட போது (דַּלּוֹתִי தல்லோதி- நான் தாழ்த்தப்பட்டேன்) பாதுகாக்கிறார் என்கிறார். அதாவது தான் எளியமனத்தவர் இதனால்தான் ஆண்டவரின் பாதுகாப்பு தனக்கு கிடைக்கிறது என்கிறார். வாசகர்களும் எளிய மனத்தோராய் ஆண்டவரின் பாதுகாப்பை பெறமுடியும் என்பது இவர் வாதம்.

வ.7: தன் நெஞ்சை அமைதி கொள்ளச் சொல்கிறார். இந்த இடத்தில் தன் நெஞ்சை இரண்டாவது ஆளாக வர்ணித்து அதற்கு தான் முதலாவது ஆளாக கட்டளை கொடுக்கிறார். பல மொழிகளின் இலக்கியங்கள் இப்படியான வழிமுறையை பின்பற்றுகின்றன. எபிரேய மொழி இதனை (שׁוּבִי נַפְשִׁי) ஷுவி நப்ஷி - என் ஆன்மாவே திரும்பு என்று காட்டுகிறது. அதாவது தன் ஆன்மா, இதனை உயிர் அல்லது சுயம் என்றும் மொழி பெயர்க்கலாம்: இப்படியான அலையும் ஆன்மாவை மீண்டும் அமைதிக்கு திருப்ப கட்டளை கொடுக்கிறார். இதற்கு காரணமாக, ஆணடவர் அதற்கு நன்மை செய்தார் என்று பாடுகிறார். நன்மை செய்ததை, ஆசிரியர் இறந்த காலத்தில் குறிப்பிடுகிறார், ஆக ஆண்டவரின் நன்மைத்தனம் வெறும் எதிர்காலம் அல்ல என்பது புலப்படுகிறது.

வ.8: மூன்று விதமான ஆண்டவரின் நன்மைத்தனங்கள் நினைவுகூறப்படுகின்றன, அதாவது:

அ. அவர் உயிர் சாவினின்று விடுவிக்கப்படுகிறது (חִלַּצְתָּ נַפְשִׁי ஹில்லாட்ஸ்தா நப்ஷி)

ஆ. அவர் கண் கலங்காமல் பாதுகாக்கப்படுகிறது (אֶת־עֵינִי מִן־דִּמְעָה 'எத்-'எனே மின்-திம்'அஹ்).

இ. அவர் கால் இடறாதபடி காக்கப்படுகிறது (אֶת־רַגְלִ֥י מִדֶּֽחִי 'எத்-ரக்லி மித்தெஹி).

வ.9: இந்த வசனம் மிகவும் இனிமையான வசனம். இஸ்ராயேலர்கள் தங்கள் நாட்டை உயிர்வாழ்வேர் நாடு என்று அழைப்பார்கள் (בְּאַרְצ֗וֹת הַחַיִּים பெ'அர்டஸொத் ஹஹய்யிம்). இவர்கள் இரண்டாவது வாழ்வு அல்லது மரணத்தின் பின் வாழ்வு என்ற சிந்தனையை கொண்டிருக்காத படியால், வாழ்வோரின் நாடே இவர்களின் இல்க்காக இருக்கிறதை இந்த வரியில் காணலாம். அதுவும் இந்த வாழ்வோர் நாட்டில், தான் ஆண்டவரின் திருமுன் வாழ்ந்திடுவதாகச் சொல்கிறார். இதனை ஆண்டவர் முன் நடந்திடுவேன் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. இரண்டும் ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது (אֶתְהַלֵּךְ לִפְנֵי יְהוָ֑ה 'எத்ஹல்லெக் லிப்னே அதோனாய்).

வ.10: இஸ்ராயேல் புலம்பல் பாடல்கள் கூட நம்பிக்கையை மய்யமாக கொண்ட பாடல்களே. தமிழ்க் கலாச்சாரத்தைப் போல, இஸ்ராயேல் கலாச்சாரத்திலும், புலம்பல் என்பது உண்மையில் நீதிக்கான ஒரு வேண்டலே. இந்த வரியில் தான் மிகவும் துன்புறுகிறதாக சொன்னாலும் (אֲנִ֗י עָנִיתִי 'அனி 'அநிதி- நான் துன்புற்றாலும்), அவர் நம்பிக்கையோடு இருந்ததாகச் சொல்கிறார்.

வ.11: இந்த வரியில் எந்த மனிதரையும் நம்பலாகாது என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பாடுகிறார். இது அவர் மனிதர்களால் வெறுக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற பின்புலத்தைக் காட்டுகிறது எனவும் எடுக்கலாம்.

இங்கே இவர் மனிதர்களை சபிக்கிறார் என்பதைவிட, மனிதர்களிலும் கடவுளை அதிகமான நம்புகிறார் என்ற சிந்தனைதான் மேலோங்கி இருக்கிறது எனலாம். இங்கே எழுவாய்ப் பொருள், மனிதர் மீதான கோபமல்ல, மாறாக கடவுள் மீதான ஆழமான விசுவாசம். எந்த மனிதரையும், என்று சொல்லி அனைத்து மனிதர்களையும் உள்வாங்குகிறார் போல தோன்றுகிறது. எபிரேய மூல பாடம் அனைத்து மனிதர்களையும், பொய்யர்கள் என்கிறது (כָּל־הָאָדָם כֹּזֵב கோல்-ஹா'ஆதாம் கோட்செவ்).

வ.12: முக்கியமான ஒரு கேள்வியை அனைத்து வாசகர்களிடமும் கேட்கிறார். ஆனால் கேள்வியை அவர் தன்னிடமே கேட்பது போல அமைக்கிறார். ஆண்டவர் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எப்படி ஒருவரினால், பிரதிபலன் செய்ய முடியும் என்பது அவர் கேள்வி. இதற்கு விடையாக, மனிதர்களினால் எந்த விதமான கைமாறையும் கடவுளுக்கு செய்ய முடியாது என்பது விடையாக வரும்.

வ.13: மீட்பின் கிண்ணம் என்ற சொல் இங்கே எழுவாய்ப் பொருளாக வருகிறது, כּוֹס־יְשׁוּע֥וֹת אֶשָּׂ֑א கோஸ்-யெசூ'ஓத் 'எஸ்ஸெ' (மீட்பின் கிண்ணத்தை உயர்த்துவேன்). இந்த மீட்பின் கிண்ணத்தைக் கொண்டு ஆண்டவரின் திருப்பெயரை தொழுவதாகச் சொல்கிறார். இந்த வரி புதிய ஏற்பாட்டில், நற்கருணைக் கிண்ணத்திற்கு ஒப்பிட்படுகிறது. இருப்பினும் இந்த இடத்தில் இது திரவ பலிக்கான கிண்ணத்தையே குறிக்கிறது எனலாம். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், ஆண்டவருக்கு மிருக பலி, தானிய பலி, மற்றும் திரவப் பலிகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டன. திரவ பலி என்பது எண்ணெய் மற்றும் இரசத்தைக் குறிக்கும்.

வ.14: இந்த வரியுடன் ஒப்பிடுகின்றபோது, முதல் வரி காணிக்கையை குறிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆண்டவருக்கு பொருத்தனைகளை தான் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார் (נְדָרַי לַיהוָה நெதாரய் லஅதோனாய்-ஆண்டவருக்கு பொருத்தனைகள்). பல விதமான பொருத்தனைகள் வழக்கிலிருந்திருக்கின்றன. உழைப்பில் பத்தில் ஒன்றைக் கொடுத்தல், நகர்களை கடவுளுக்கு அர்ப்பணித்தல், தலைச்சான் உயிரிணங்களை கடவுளுக்கு கொடுத்தல், செபங்களை பொருத்தனையாக் கொடுத்தல், அத்தோடு தலைமுடியையும் பொருத்தனையாகக் கொடுத்தலும் பிற்காலத்தில் வழக்கிலிருந்திருக்கின்றன.

இவர் என்ன பொருத்தனை செய்வார் என்பது இந்த வரியில் சொல்லப்படவில்லை, ஆனால் அதனை அவர் ஆண்டவர் மக்கள் முன்னிலையில் செய்வதாகச் சொல்கிறார் (כָל־עַמּֽוֹ கோல்-'அம்மோ, அனைத்து அவர் மக்கள்).

வ.15: இந்த வரியும் இன்னும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வழக்கமாக மரணத்தை இஸ்ராயேலர்கள் போற்றுவது கிடையாது, முக்கியமாக முதல் தேவாலயத்தின் காலத்தில். மரணத்தை அவர்கள் கடவுளின தண்டனை அல்லது ஒருவகையான துன்பமாகவே பார்த்தார்கள். அதுவும் சிறு பாராயத்தில் மரணம், அல்லது நல்லவர்களின் மரணம் போன்றவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவர்கள் மரணத்தின் பின் வாழ்வையும் முதல் தேவாலயத்தின் காலத்தில் நம்பவில்லை.

இந்த வரியில், ஆண்டவருடய அன்பர்களின் மரணம் அவர் பார்வையில் மதிப்புக்குரியது என்கிறார் ஆசிரியர். יָקָר בְּעֵינֵ֣י יְהוָ֑ה הַ֝מָּ֗וְתָה לַחֲסִידָֽיו׃ யாகார் பெ'எனே அதோனாய், ஹம்மாவெதாஹ் லஹசிதாய்வ். கடவுளுடைய கண்களில்ல ஒப்பற்றது, அவர் அன்பர்களின் சாவு.

வ.16: தன்னுடைய அடையாளத்தை பல ஒத்த கருத்து வரிகள் தெளிவு படுத்துகிறார். தன்னை ஆண்டவரின் ஊழியன் என்கிறார் (אֲֽנִי־עַבְדְּךָ 'அனி-'அவ்தேகா- நான் உம் ஊழியன்). இந்த வரி மீண்டும் இன்னொருமுறை அதே வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. தமிழ் விவிலியம் ஊழியன், பணியாளன் என்ற ஒத்த கருத்துச் சொற்களைப் பாவித்தாலும். எபிரேயம் ஒரே சொல்லை இரண்டு முறைபாவிக்கிறது (עַבְדְּךָ 'அவ்தேகா), இப்படியாக எபிரேயத்தில் முக்கியமான வரிகள் அமைக்கப்படுகின்றன. இறுதியாக தன்னை ஆண்டவரின் அடியாளின் மகன் என்றும் சொல்கிறார் (בֶּן־אֲמָתֶךָ பென்-'அமாதெகா- உம் அடியாளின் மகன்). இதுவும் ஆண்டவரின் பணியாளனை குறிக்கும் மிக முக்கியமான வார்த்தை பிரயோகம்.

வவ.17-18: இறுதியாக தான் கடவுளுக்கு என்னனென்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக விளங்கப்படுத்தகிறார். ஆண்டவருக்கு நன்றிப் பலி செலுத்தி (זֶבַח תּוֹדָה ட்செவாஹ் தோதாஹ்- நன்றிப் பலி), அவர் பெயரைத் தொழுவதாகச் சொல்கிறார். நன்றிப்பலி பலி வகைகளில் ஒன்று. அத்தோடு மக்கள் முன்னிலையில் ஆண்டவருக்கு பொருத்தனைகள் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். இந்த வாக்குறுதியை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

வ.19: ஆண்டவருக்கு அவர் செய்யவிருக்கின்ற பொருத்தனைகளை எங்கே செய்யப்போகிறார் என்பது விவரிக்கப்படுகிறது. அதனை அவர் ஆண்டவரின் இல்லத்தின் முற்றத்தில் செய்யவிருக்கிறார். அது எருசலேம் தேவாலயம் என்ற அடுத்த வரி விளங்கப்படுத்துகிறது. இந்த வரி மூலமாக இந்த திருப்பாடல் இரண்டாம் தேவாலயத்தின் காலப் பாடல் என எடுக்கலாம், போல தோன்றுகிறது. இறுதியாக இந்த திருப்பாடல் அல்லேலூயா என்ற புகழ்சசி சொல்லுடன் நிறைவேறுகிறது (הַֽלְלוּ־יָֽהּ ஹல்லூ-யாஹ், ஆண்டவரை புகழுங்கள்).



இரண்டாம் வாசகம்
உரோமையர் 8,31-34 கடவுளின் அன்பு

31இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? 32தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? 33கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. 34அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!



உரோயைர் திருமுகத்தின் எட்டாவது அதிகாரம், தூய ஆவி அருளும் வாழ்வைப் பற்றி விவரிக்கின்ற வேளை, வசனங்கள் 31-34, ஆண்டவரின் அன்பை பற்றி அழகாக விவரிக்கின்றது. ஏற்கனவே வரப்போகும் மாட்சியைப் பற்றி விலாவாரியாக விவரித்தவர் (காண்க: ஆண்டின் பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு (அ) 16,07,2017), இந்த பகுதியில் அதனை நினைத்து பயம் கொள்ள வேண்டாம் என்று திடப்படுத்துகிறார்.

வ.31: ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் முக்கியமான உரோமை கிறிஸ்தவர்கள், தங்களை துன்புறுத்துகிறவர்களின் பலத்தை கண்டு பயம் கொண்டிருந்திருக்கலாம். இந்த பயம் தேவையற்ற பயம் என்பது போல இந்த வரி அமைந்துள்ளது. ஏனெனில் கடவுள் கிறிஸ்தவர்கள் பக்கம் இருக்கிறார், இதனால் அவர்கள் எதனையும் பற்றி அச்சம் கொள்வது தேவையற்றதாகிறது. θεὸς ὑπὲρ ἡμῶν, τίς καθ᾿ ἡμῶν: தியோஸ் ஹுபெர் ஹேமோன், டிஸ் காத் ஹேமோன்? கடவுள் நம் பக்கம், யார் நமக் கெதிர்?).

வ.32: இதற்கு உதாரணமாக கடவுள் தன் சொந்த மகனை அனுப்பியதை (ἰδίου υἱοῦ இதூ ஹுய்ஊ- சொந்த மகன்) நினைவுகூர்கிறார் பவுல். அதாவது, சொந்த மகனென்று கூட பாராமல், இயேசுவை அனுப்பிய கடவுள், அவரோடு சேர்த்து அனைத்து வல்லமைகளையும் அனுப்பியுள்ளார். ஆக அச்சம் கொள்வது சரியல்ல என்பது பவுலுடைய வாதம்.

வ.33: கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தன. பவுலுடைய காலத்திலும் அவை இருந்தன. பிற்காலத்தில் இன்னும் பலம் பெற்றன. சில யூதர்கள் இவர்களை பிரிவினை வாதிகளாக பார்த்தார்கள். சில உரோமையர்கள் இவர்களை அடிப்படைவாதிகாளாக பார்த்தார்கள். இதனை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் என்கிறார் பவுல், ஏனெனில் கடவுள் இவர்களை குற்றமற்றவர்கள் என்கிறார், இந்த சாட்சியம் ஒன்றோ போதும் என்கிறார் பவுல். τίς ἐγκαλέσει κατὰ ἐκλεκτῶν θεοῦ: டிஸ் எக்காலெசெய் காடா எக்லெக்டோன் தியூ- யார் குற்றம் சாட்ட முடியும்? கடவுளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக?).

வ.34: கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டது உண்மைதான். இருப்பினும் அவைகள் ஒரு பொருட்டல்ல என்பது சொல்லப்படுகிறது. கிறிஸ்துவின் மக்களுக்கு யாரும் உண்மையில் தண்டனை அளிக்க முடியாது, அப்படி அளிப்பது உண்மையில் தண்டனை அல்ல என்பதும் அவர் வாதம் (τίς ὁ ⸀κατακρινῶν; டிஸ் ஹொ காடாகிறினோன்- யார் தீர்பளிக்க முடியும்?).

இதற்கான வாதம் கிறிஸ்து அத்தோடு அவர் யார் என்ற விசுவாசப் பிரமானமும் சொல்லப்படுகிறது. இந்த கிறிஸ்து, இறந்து (ὁ ἀποθανών ஹொ அதொதானோன்- இறந்த அவர்) உயிருடன் எழுப்பப்பட்டு (ἐγερθείς எகெர்தெய்ஸ்-உயிர்;த்த அவர்), தற்போது கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கிறார் (ἐστιν ἐν δεξιᾷ τοῦ θεοῦ எஸ்டின் என் தெக்ட்சியா டூ தியூ- கடவுளின் வலப் பக்கம் இருக்கிறார்), அத்தோடு அவர் பரிந்து பேசுகிறவராகவும் இருக்கிறார் (ἐντυγχάνει ὑπὲρ ἡμῶν என்டுக்கானெய் ஹுபெர் ஹேமோன்- எமக்காக பரிந்து பேசுகிறார்).


நற்செய்தி வாசகம்
மாற்கு 9,2-10

இயேசு தோற்றம் மாறுதல்

(மத் 17:1-13 லூக் 9:28-36)

2ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். 3அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. 4அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். 5பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்றார். 6தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். 7அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவNர் இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது.✠ 8உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. 9அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், 'மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். 10அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.


மாற்கு நற்செய்தி விளக்கம், கடந்த வாரத் தொடர்ச்சி:

மாற்கு நற்செய்தியின் நோக்கம்:

மாற்கு ஒன்றைவிட பல நோக்கங்களைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அ. புறவினத்தவரும் நற்செய்தியை அறிந்திருக்க மாற்கு விரும்பினார்.- உரோமை ஒரு புறிவின நகர், பல வணிக மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக, அங்கே அதிகமான யூத மக்களும் இருந்தார்கள். ஐரோப்பாவில் உரோமை மாநகரில்தான் யூதர்களுடைய மிக பழமையான செபக்கூடம் ஒன்று இருக்கிறது. பவுலுடைய திருமுகத்தின் படி பெருமளவிலான யூத கிறிஸ்தவர்களும், யூதரல்லாத கிறிஸ்தவர்களும் உரோமைய திருச்சபையில் அங்கத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கிடையே சிலவேளைகளில் உட்பூசல்களும் இருந்தன. இப்படியான கலவன் திருச்சபைக்கு, யூத வார்த்தை பிரயோகங்களை, மற்றவர்களும் புரியக்கூடிய விதத்தில் எழுதவேண்டிய தேவை மாற்குவிற்கு இருந்தது. அதனை இந்த நற்செய்தியில் காணலாம். இதனால்தான் மாற்கு அதிகமாக, மத்தேயுவைப் போல முதல் ஏற்பாட்டு இறைவார்த்தைகளை அதிகமான பாவிக்கவில்லை எனலாம்.

மாற்கு ஒரு மறைபரப்பு நோக்கத்தோடே தன் நற்செய்தியை எழுதியிருக்கிறார். மற்றைய நற்செய்திகளைப் போலவே, மாற்குவும், போதிக்கும் இலக்கையும், இயேசுவைப் பற்றி மேலதிக தரவுகளைத் தரும் இலக்கையும் கொண்டிருந்திருக்கிறார் எனலாம். மாற்கு தன்னுடைய மறைபரப்பு நோக்கத்தை மய்யப்படுத்தியதால்தான் வார்த்தைகளை சுருக்கியிருக்கார் அத்தோடு இடைச்செருகல்களை தவிர்த்திருக்கிறார் எனலாம். வாசகர்களுக்கு தற்போது உடனடியாக எது தேவையோ அதனை மட்டுமே அவர் தந்திருக்கிறார். இருப்பினும் அவர் தன்னுடைய யூத அடையாளத்தை கைவிட்டார் என்று சொல்வதற்கில்லை. சிலர் மத்தேயுவைவிட மாற்குதான் தன்னுடைய யூத பின்புலத்திற்கு பிரமாணிக்கமாய் உள்ளார் என்றும் வாதிடுகின்றனர். சொல்ல வந்ததை மட்டும் சொல்வதன் மூலம் தன் வாசகர்களை தெளிவாகவே வைத்திருக்க மாற்கு விரும்புகிறார் எனலாம். (அடுத்த வாரம் தொடரும்..).

இயேசுவின் உருமாற்றம் சமநோக்கு நற்செய்திகள் மூன்றிலும் விளக்கப்படுத்தப்படுகிறது. இது இயேசுவுடைய வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. மூன்று நற்செய்தியாளர்களும் இதனை விவரிக்கின்றனர் என்ற படியாலும், இதன் முக்கியத்துவம் தெரிகிறது. இந்த மூவருள் மாற்குவே மூலமாக இருக்கவேண்டும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. இயேசுவின் உருமாற்றம், அவருடைய தெய்வீக சாயலை அவர் சீடர்களுக்கு காட்டியது, அந்த வெளிப்பாடு அவர்களுக்கு தேவையாக இருந்தது, அக்கால துன்புற்ற கிறிஸ்தவர்களுக்கும் அது தேவையாக இருந்தது.

வ.2: வழக்கம் போல தன்னுடைய மும்மூர்த்திகளை அழைத்துக் கொண்டு ஆண்டவர் ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்கிறார், அவர்கள் பேதுரு, யோவான் மற்றும் அவர் சகோதரர் யாக்கோபு. மாற்கு, யாக்கோபையும் யோவானையும் சகோதரர்கள் என்று இந்த இடத்தில் சொல்லவில்லை, மற்றய சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இவர்கள் சகோதரர்கள் என கருதலாம். இவர்களை அழைத்துக்கொண்டு அவர் உயர்ந்த மலைக்கு தனிமையில் செல்கிறார். மாற்கு நற்செய்தியின் மிக முக்கியமான பண்பான இரகசியம் இங்கேயும் தாக்கம் செலுத்துகிறது. உடனடியாக அவர் அவர்கள் முன் தோற்றம் மாறினார் (μετεμορφώθη ἔμπροσθεν αὐτῶν மெடெமொர்போதே எம்ப்ரொஸ்தென் அவுடோன்). பெயர் தெரியாத மலை, உயரமான இடம் போன்றவை புனிதத்துவத்தையும், தெய்வீகத்தையும் குறிக்கலாம்.

முதலாம் நூற்றாண்டு யூதர்கள், நீதிமான்கள் ஆண்டவரின் பிரசன்னத்தில் தோற்றம் மாறுகிறார்கள் என்று நம்பினார்கள். இந்த தோற்றம் மாறுதல், அவர்கள் ஆண்டவருடைய வல்லமையில் பங்கெடுக்கிறார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. மோசே சீனாய் மலையில் பிரகாசமான தோற்றத்தை பெற்றதும் இந்த பின்புலத்திலேயே (காண்க வி.ப 34). இங்கே பாவிக்கப்பட்டுள்ள கிரேக்க சொல் (μεταμορφόω மெடாமொர்பொயோ), உரு மாறுதல், அல்லது அடையாளம் மாறுதல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

வ.3: அவருடைய ஆடைகள் மிக மிக வெண்மையாக இருந்தன. உலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவிற்கு அது வெண்மையாக இருந்திருக்கிறது (στίλβοντα λευκὰ λίαν ஸ்டில்பொன்டா லூகா லியான்- வெள்ளை வெளேரென மின்னியது). இதன் மூலாக இயேசுவின் வெண்மைக்கு எந்த சலவைக் காரரும் காரணம் அல்ல என்பதை காட்டுகிறார் மாற்கு. இதனை வைத்து பார்க்கின்றபோது, அக்காலத்தில் ஆடை வெளுக்கிறவர்கள் பலர் மிக முக்கியமான வேலைகளை செய்திருக்கிறார்கள் என்பதும், பலர் தங்களுடைய ஆடைகளை வெண்மையாக்குவதில் கவனம் செலுத்தினார்கள் என்பதும் தெரிகிறது.

வ.4: இப்போது எலியாவும் மோசேயும் அங்கு தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள். மோசேயும் எலியாவும் தங்களுக்குள் அல்ல, இயேசுவோடு தொடர்சியாக உரையாடுகிறார்கள். இதனைக் குறிக்க, இறந்தகால வினைஎச்சம் பாவிக்கப்பட்டுள்ளது, (ἦσαν συλλαλοῦντες ஏசான் சுல்லாலூன்டெஸ் - உரையாடிக்கொண்டிருந்தார்கள்).

பழங்கார நம்பிக்கையின் படி இங்கே எலியா இறைவாக்கையும், மோசே சட்டங்களையும் நினைவூட்டுகின்றனர். அதாவது, இயேசுவே இறைவாக்கினதும், சட்டங்களினதும் மய்யமாக இருக்கிறார் என்பதை மாற்கு காட்டுகிறார் எனலாம். அல்லது இறுதிநாட்களில் மோசேயும், எலியாவும் வருவார்கள் என்பதையும் இங்கே நினைவுகூரவேண்டும். இந்த இருவரும் அவர்களுடைய இறுதி நாட்களில் அசாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள். எலியா நெருப்பு குதிரைத்தேரில் எடுத்துக்கொள்ளப்பட்டார், மோசே இறந்தும் அவர் உடலை இஸ்ராயேலர்கள் காணவில்லை. இதனால் அவர்கள் இறக்காமல் வாழ்கிறார்கள் என்றும் சிலர் நம்பினர். இந்த இருவருடைய பிரசன்னமும், இங்கே ஏதோ ஒரு செய்தியை ஆழமாக காட்டுகிறது. அதனை மாற்குவின் வாசகர்கள் புரிந்திருப்பார்கள் என எடுக்கலாம்.

வ.5: பேதுரு வழமைபோல வித்தியாசமாக யோசிக்கிறார். தன் ஆண்டவரை அவர் போதகர் என்று இங்கே அழைக்கிறார் (ῥαββί ராப்பி). மலையில் இருப்பதுதான் நல்லது என்கிறார். அதாவது மலைக்கு கீழே இன்னொரு உலகம் இருக்கிறது, அது சாதாரண உலகம் அது வேண்டாம் என்பது போல இருக்கிறது அவருடைய வாதம். இந்த வாதம் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுடைய ஆதங்கத்தையும் குறித்திருக்கலாம். அத்தோடு மூன்று கூடாரங்களையும் அமைப்போம் என்கிறார். அக்கூடாரங்கள், இயேசுவிற்கும், எலியாவிற்கும், மோசேக்கும் கொடுக்கப்படுகிறது. தங்களை விட்டுவிட்டார்.

கூடாரம் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஓர் அடையாள அனுபவம். சிலர் எருசலேம் தேவாலயத்தைவிட, பாலைவனத்தில் இருந்த சந்திப்புக் கூடாரத்தில்தான் கடவுள் உண்மையாக இருந்தார் என்ற நம்புகின்றனர். σκηνή ஸ்கேனே- கூடாரம்.

வ.6: தாம் சொல்வது என்னவென்று அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள் என்கிறார் மாற்கு. இந்த வசனத்திற்கு முன், பேதுருதான் ஆண்டவருக்கு ஆலோசனை சொன்னர் என்று சொல்லிய மாற்கு இந்த வரியில் அனைவருமே பேசினார்கள் என்பது போல சொல்கிறார். ஆக அனைவரும் வித்தியாசமாக பேசுகிறார்கள், இது பேதுருவின் வார்த்தை மட்டுமல்ல என்பது புரிகிறது.

வ.7: இது நடந்து கொண்டிருக்கவே, ஒரு மேகம் வர அந்த மேகத்தில் குரல் ஒன்று கேட்கிறது. மேகம் (νεφέλη நெபேலே) கடவுளுடைய பிரசன்னத்தை குறிக்கும் மிக முக்கியமான ஒரு அடையாளம். விடுதலைப் பயண நூலில் மேகத் தூணில்தான் கடவுள் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தினார். இறுதிக் காலத்தில் மேகத்தூணில்தான் மனுமகனும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை யோவான் நற்செய்தியிலும், தன் திருவெளிப்பாட்டிலும் காட்டுகிறார்.

இந்த மேகத்தில் குரல் கேட்கிறது: οὗτός ἐστιν ὁ υἱός μου ὁ ἀγαπητός ஹுடொஸ் எஸ்டின் ஹொ ஹுய்யோஸ் மூ ஹொ அகாபேடொஸ்- இவர் விரும்பப்படுகின்ற என் அன்பு மகனாக இருக்கிறார். சில படிவங்களில் 'இவருக்க செவிசாயுங்கள்' (εν ω ευδοκησα) என்றும் மாற்கு நற்செய்தியில் இருக்கிறது. இது மற்றைய நற்செய்திகளின் தாக்கமாக இருந்திருக்கலாம். பாலைவனத்தில் யோவான் உரைத்த குரலைப்போலல்லாது, இது கடவுளின் குரலாகவே இருக்கிறது. இந்த குரல் இயேசுவை உண்மை மகனாகவும், மெசியாவாகவும் காட்டுகிறது.

வ.8: இது கடவுளின் குரல்தான் என்பதை இந்த வரி காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள், அவர்களால் யாரையும் பார்க்க முடியவில்லை. அங்கே இயேசு மட்டும்தான் இருந்தார். இதனால், இயேசுதான் அனைத்தின் மய்யம், அவர் ஒருவர்தான் இருக்கிறார். செய்தியும் அவரைப் பற்றித்தான் என்பதும் அழகாக காட்டப்படுகிறது. குரலுக்கு சொந்தக்காரர் கடவுள் என்பதும் புலப்படுகிறது.

வ.9: இயேசுவின் கட்டளை கொடுக்கப்படுகிறது. அவர்கள் மலையில் இருந்து இறங்கும்போது, இந்த கட்டளை கொடுக்கப்படுகிறது. முதலாவது கட்டளை அவர்கள் மலையில் இருந்து இறங்கவேண்டும். இரண்டாவது, ஆண்டவர், இறந்து உயிர்க்கும் வரை அவர்கள் கண்டதை யாருக்கும் சொல்லக்கூடாது.

மாற்கு நற்செய்தி ஒருவருடைய தனித்துவமான தேடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசு யார் என்பதை ஒருவர் தானாக கண்டுகொள்ள வேண்டும். அத்தோடு ஆண்டவருடைய தெய்வீகம் எவ்வளவு முக்கியமோ, அதனைப் போலவே அவருடைய மரணம் உயிர்ப்பும் முக்கியமானவை. முதலில் மரணம் உயிர்ப்பு, பின்னர் தெய்வீக வெளிப்பாடு, என்பது இங்கே புலப்படுத்தப்படுகிறது. யாருக்கும் சொல்லவேண்டாம் என்பது ஒரு முக்கியமான செய்தி.

ஆண்டவர் மலையில் இருக்கிறார், அவர் பார்த்துக்கொள்வார்.

ஆண்டவர் பலியைவிட நம்பிக்கையையே எதிர்பார்க்கிறார்.

மலையில் இருக்கும் ஆண்டவர் இறங்கிவரச் சொல்கிறார்.

பாடுகள் மரணம், இல்லாத உருமாற்றம் இல்லை.

ஆண்டவர் கூடாரத்தை விட, மலைக்கு கீழ் உள்ள

சாதாரண வாழ்வையே விரும்புகிறார்.

அதாவது ஆராதனையை விட,

பணிவாழ்வை விரும்புகிறார் போல.

அன்பு ஆண்டவரே கண்களை உயர்த்தி பார்க்க வரம் தாரும், ஆமென்.

மனிதர்களுடைய வக்கிர பேராசையால் மடிந்து கொண்டிருக்கும் மழலைகளுக்கு

(முக்கியமாக மத்திய கிழக்கில்)

சமர்ப்பணம்.