இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் வாரம் (ஆ)

லேவியர் 13,1-2.44-46

திருப்பாடல்: திருப்பாடல் 32,1-2.5.11

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 10,31-11,1

நற்செய்தி: மாற்கு 1,40-45


தொழுநோய் (Leprocy, צָרַעַת ட்சார'அத், λέπρα லெப்ரா)

தொழுநோய் மிகவும் ஆபத்தானதும், பல நாட்கள் நீடிக்கக்கூடியதுமான ஒரு நோய். இந்த நோய் ஒரு தொற்றுநோய் அல்ல என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் இந்த நோய் உடலின் தோலைத் தாக்குகிறது, பின்னர் சவ்வுகளையும் மற்றும் நரம்புகளையும் தாக்கும். இன்றைய மருத்துவ உலகம் இதனை ஹன்சன் நோய் என்றழைக்கிறது. நுண்ணுயிர் பக்ரீரியாவான லெப்ரோ (Mycobacterium laprae) சேர்ந்து விடுவதால் இந்த நோய் உருவாகிறது என்று முதன்முதலில் நோர்வே நாட்டு மருத்துவர், வைத்தியர் ஹன்சன் இதனை கண்டுபிடித்தார் (G. A. H. Hansen (1841–1912))..

விவிலியம் சொல்லும் தொழுநோயும், ஹன்சன் வியாதியும் ஒன்றல்ல என்றும் நம்பப்படுகிறது. லேவியர் புத்தகத்தின் 13-14 அதிகாரங்கள் தொழுநோய் பற்றிய சட்டங்களை அதிகமாக முன்வைக்கின்றன. விவிலியம் அதிகமான தோல் வியாதிகளை தொழுநோய் என்றே கருதியது. விவிலியத்தின் கருத்துப்படி வீட்டுச்சுவர்கள்கூட தொழுநோயால் பாதிக்கப்படலாம் (காண்க லேவியர் 14,34-57).

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாவிகளாகவும், நகரினுள் வாழ தகுதியில்லாதவர்களாகவும் பார்க்கப்பட்டார்கள். இந்த நோய் பரவும் என்றும், இது கடவுள் கொடுத்த தண்டனை என்றும், சமய தலைவர்கள் கருதியதாலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நகருக்கு அல்லது கூடாரங்களுக்கு வெளியே அனுப்பப்பட்டார்கள். விவிலியத்தைவிட கும்ரான் நூல்களும் தொழுநோயாளர்களுக்கு எதிராக பல தூய்மை சட்டங்களை முன்வைக்கிறது.

சாதாரண மக்களை மட்டுமன்றி, இந்த நோய் பல முக்கிய தலைவர்களையும் தாக்கியிருக்கிறது. இதில் சிலர் நகருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள், அவர்களில் ஆரோன்-மோசேயின் சகோதரி மிரியம் (எண்ணிக்கை 12,10), உசியா அரசர் (2குறிப்பேடுகள் 26,16-21) மற்றும் சிரிய நாட்டு தளபதி நாமான் (2அரசர்கள்5) போன்றவர்கள் முக்கியமானவர்கள். ஆரம்ப திருச்சபையின் புதிய படிப்பினைகள் யூதர்களின் தொழுநோய் பற்றிய சட்டங்களை ஆதரிக்கவில்லை, இதற்கு உதாரணமாக இயேசு தொழுநோயாளர்களுடன் உறவாடுவதைக் காணலாம் (காண்க மாற்கு 1,41: மத்தேயு 10,8).

ஆறுவிதமான வெளியடையாளங்களால் தொழுநோய் விவிலியத்தில் அடையாளம் காணப்படுகிறது அவை:

அ.வெளிக்காரணங்கள் எதும் இன்றி இந்த நோய் வரலாம்:

ஆ.இந்த நோய் மறைந்து மீண்டும் தோன்றலாம்:

இ. இந்த நோய் தோலில் பொக்களங்களை உருவாக்கும்:

ஈ. இது தலையின் தோலையும், கன்னங்களையும் தாக்கும்:

உ. இந்த நோய் வெண்மை நிறத்தில் புண்களை உருவாக்கும்:

ஊ. இந்த நோய் தலையின் முன்-பின் பக்கத்தில் வீங்கங்களை உருவாக்கும்.

இந்த நோய் ஒருவரில் மெதுவாக உருவாகி அவருடைய தோலை அரிக்கும், பின்னர் அவருடைய எலும்மையும் அரிக்கும், இதனால் சில அங்கங்களை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பார்கள். முக்கியமாக அவர்கள் தங்கள் கை கால் விரல்களை இழப்பார்கள். உலர் வலய நாடுகளையும், மத்திய கிழக்கு பாலைவன நாடுகளையும் இந்த நோய் அக்காலத்தில் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும். ஈழத்திலும் இந்த நோய் ஒரு காலத்தில் தீர்க்கமுடியா நோயாக இருந்திருக்கிறது. தற்போது ஈழத்திரு நாடு தொழுநோயை கட்டுப்படுத்திய ஆசிய நாடுகளில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி.

இயேசு ஆண்டவருடைய காலத்திலும், தொழுநோயாளர்கள் நகரிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் தலைகளை வெறுமையாய் தெரியவிட்டார்கள். தங்கள் தாடைளை மறைத்துக்கொண்டார்கள். கிழிந்துபோன தூசிபடிந்த ஆடைகளை அணிய கட்டாயப்படுத்தப்பட்டார்கள். வெளியில் செல்லும் போது அசுத்தம் அசுத்தம் என்று சத்தமிட்டார்கள். சமய தலைவர்ளும் மக்களும் இந்த நோயாளர்களை கடவுளால் தண்டிக்கப்பட்ட ஆன்மீக பாவிகள் என்றே கருதினார்கள் (இந்த நோய் அவர்களை தாக்கும்வரை). இந்த நோய் தொற்றாத நோயக இருந்தாலும், சமய தலைவர்களின் போதனைகளாலும், பிழையான நம்பிக்கைகளாலும், மக்கள் இந்நோயாளர்களை, நோயைப்போலவே வெறுத்தார்கள். அக்காலத்தில் தொழுநோயாளர்கள் அதிகமான துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்ததை மானிடவியல் வரலாற்றிலும் காணலாம். பெல்ஜிய மறைபணியாளர் அருட் தந்தை டேமியன் (Damien De Veuster 1840-1889) தொழுநோயாளுருக்கு செய்த பணியின் காரணமாக அவர்களின் பாதுகாவலராக திருச்சபையால் மதிக்கப்டுகிறார். இவர் ஹைதியில் இந்த நோயாளர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து பின்னர் இந்த நோயாலே இறந்துபோனார்.

முதல் வாசகம்
லேவியர் 13,1-2.44-46

தொழுநோய்பற்றிய சட்டங்கள்

1ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது; 2'ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.

44அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது. 45தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, 'தீட்டு, தீட்டு', என குரலெழுப்ப வேண்டும். 46 நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.



லேவியர் புத்தகம், தோறா புத்தகத்தில் சட்டங்களைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான புத்தகம். குருக்களையும், குருத்துவ வாழ்க்கை முறையையும் இந்த புத்தகம் மையப்படுத்துவதனால், இது மிகவும் பிற்காலத்திற்குரிய புத்தகம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எபிரேய விவிலியம் இந்த புத்தகத்தை வய்யிக்ரா' (וַיִּקְרָא அவர் அழைத்தார்) என்று அழைக்கிறது. இது இந்த புத்தகத்தின் தொடக்கச் சொற்கள். இவ்வாறுதான் எபிரேய விவிலியம் புத்தகங்களை பெயரிடுகின்றது. லேவியர் என்ற பெயர் கிரேக்க மூலத்திலிருந்து வருகிறது (Λευίτης லெயுடேஸ்- குரு). அனைத்து லேவியர் வம்ச மக்களும் குருக்களாக இருந்தார்களா என்ற வாதம் ஒன்றும் இருக்கிறது. அத்தோடு இந்த புத்தகம் குருக்களை மட்டும் மையப்படுத்தாமல், சாதாரண மக்களின் வாழ்கை முறையான: சமூக, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றியும் பேசுகிறதால், இதனை பொதுநிலையினர்க்கான புத்தகம் என்றுதான் எடுக்க வேண்டும் என்ற பிரதிவாதமும் இருக்கிறது.

இந்த புத்தகத்தை மோசேதான் எழுதினார் என்று பாரம்பரிய நம்பிக்கை இருந்தாலும், மோசேதான் இதனை எழுதினார் என்ற பலமான அக சான்றுகள் இல்லை, இருப்பினும் மோசே இந்த புத்தகத்திலும் மிக முக்கியமான நபர். இதனை மோசேக்கு அர்ப்பணிப்பதில் எந்த சிக்கலும் இருந்திருக்க முடியாது. இந்த புத்தகம் மிக நேர்த்தியாக ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதனால், இதனை புலமைபெற்ற ஆசிரியர் ஒருவர் தொகுத்திருக்க வேண்டும். பல காலமாக குருக்கள்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் என்று நம்பப்பட்டு வந்தது, அதுவும் இது இரண்டாம் தேவாலயம் அல்லது, இடப்பெயர்விற்கு பிற்பட்ட காலத்தது புத்தகம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விவிலிய பாரம்பரியங்களான குரு மரபிலே இந்த புத்தகம் பார்க்கப்படுகிறது (யாவே, எலோகிம், குரு, இணைச்சட்டம் போன்றவை நான்கு விவிலிய பாரம்பரியங்கள்- இந்த பாரம்பரியங்களில் முதல் ஐந்து நூட்கள் எழுதப்பட்டன என நம்பப்பட்டது).

இருப்பினும் இந்த புத்தகம் மிகவும் புராதன காலத்து தரவுகளைக் கொண்டுள்ளது எனவும், தொகுப்பாசிரியரின் காலம், புத்தகத்தின் காலமாக இருக்க வேண்டிய தேவையில்லை என்ற கருத்து இப்போது பலமடைந்து வருகிறது. அத்தோடு குருக்களின் ஆசிரியத்துவம் என்ற கருதுகோலும் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. வழிபாட்டு மற்றும் சடங்கு, அத்தோடு தூய்மை அடையாள சட்டங்கள், மோசேயின் காலத்திற்கு முன்பே, மத்திய கிழக்கு உலகில் மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன, ஆக இதனை இடப்பெயர்விற்கு பிற்பட்ட கால புத்தகம் என்று இன்னமும் கருத முடியாது என்ற வாதம் இப்போது வளர்ந்து வருகிறது. லேவியர் சட்டங்கள், புராதன இறைவாக்கினர் புத்தகங்களிலும், அத்தோடு பிற்கால சட்டங்கள் லேவியர் புத்தகத்துடன் ஒத்துப்போகாமையும் இதற்கான முக்கியமான காரணங்கள். இதனால், லேவியர் புத்தகம் காலத்தால் மிகவும் முந்தியது, எனினும் இதனை மோசே எழுதினார் என்பதற்கான ஆதாரங்கள் மிக குறைவாகவே உள்ளன.

வ.1: இந்த வரி மோசேக்கும் ஆரோனுக்கும் சமனான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசுகிறார் (יְדַבֵּר יְהוָה אֶל־מֹשֶׁה וְאֶֽל־אַהֲרֹן வெதபெர் அதோனாய் ''எல்-மோஷெஹ் வெ'எல்-''அஹரோன்- ஆண்டவர் உரைத்தது, மோசேக்கும் ஆரோனுக்கும்).

வ.2: தொழுநோய் காணப்பட்ட ஒருவர் குருக்களிடம் கொண்டுவரப்பட பணிக்கப்படுகிறார். தொழுநோயை இந்த வரி இப்படி விவரிக்கிறது: தடிப்பு, சொறி சிரங்கு, வெண்படலம் போன்றவை. இவை தொழுநோய்கான வெளியடையாளங்களாக இருந்திருக்கிறது. ஒருவர் தொழுநோய்கான ஐயத்தை கொண்டிருந்தாலே, அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்பதை இந்த வரி காட்டுகிறது. அந்த நாட்களில் தொற்று நோய்கள் பாளையத்திலும், நகரினிலும் பரவாமல் இருக்க மக்கள் மிகவும் அவதானமாக இருந்திருக்கிறார்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது.

தொழுநோய்க்கான அறிகுறி உடையவர்கள், குருக்கள் அல்லது ஆரோனின் புதல்வர்களிடம் கொண்டுவரப்படுகிறார்கள். ஆரோனுடைய புதல்வர்கள் குருக்களாக இருந்தபடியால், இந்த சொற்கள் ஒருமைத் தன்மையை காட்டவே பாவிக்கப்படுகின்றன எனலாம்.

வவ.3-43: இந்த நீண்ட வரிகள் தொழுநோயின் அடையாளங்கள், அறிகுறிகள், மற்றும் பின்விளைவுகளை விவரிக்கின்றது. ஒருவர் தொழுநோயாளராக இருந்தால் அவரை மக்கள் எப்படி அணுகவேண்டும், அல்லது சமய தலைவர்கள் அவர்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற சட்டங்களும் இங்கே காட்டப்படுகிறது.

லேவியர் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் தொழுநோயைப் பற்றிய சரியான அறிவு இல்லாமல் இருந்திருக்கலாம், அத்தோடு அக்கால பிழையான நம்பிக்கைகள், சமய அறிவுகள் போன்றவையும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. மற்றவர்களை இந்த நோயிலிருந்து பாதுகாக்கவே பல சட்டங்கள் இயற்றப்பட்டன என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

வவ.3-4: தொழுநோயாளர்களுக்கான முதல்கட்ட விசாரனை

வவ.5-8: ஏழு நாட்கள் குரு இவர்களை அடைத்து வைத்து சோதிக்கிறார். ஏழு நாட்களில் நோய் நீங்கினால் அவர் தீட்டற்றவர், இல்லாவிடில் அவர் தொழுநோயாளி என குரு அறிக்கையிடுவார்.

வவ.9-17: தொழுநோய்க்கான தோலின் அடையாளங்களும், தொழுநோயினால் ஏற்படும் புண்ணின் தன்மையும் காட்டப்படுகிறது. தொழுநோய் மாறுவதற்கான வாய்ப்பும் இங்கே காட்டப்படுகிறது.

வவ.18-28: தொழுநோயைவிட வேறு காரணங்களாலும் உடலின் தோலில் மாற்றங்கள் ஏற்படலாம், ஆகவே பிழையாக ஒருவரை தொழுநோய் என்று தீர்ப்;பிட்டுவிடக்கூடாது என்பதற்கான இன்னும் பல சட்டங்கள் இந்த வரியில் விவாதிக்கப்பட்டுள்ளன.

வவ.29-39: ஆணுக்கோ பெண்ணுக்கோ தொழு நோய் ஏற்படலாம், அது உடலின் எப்பகுதியிலும் ஏற்படலாம். இவர்கள் அனைவரும் ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு சோதிக்கப்படுகிறார்கள். தொழுநோய் ஒருவரை தாக்கவில்லை என்றால், அவர் பகிரங்கமாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் சட்டங்கள் குறிப்பாய் இருக்கின்றன.

வவ.40-43: ஒருவருக்கு தலையில் வழுக்கை ஏற்படுவது இயற்கை. வழுக்கையைக் கொண்டு ஒருவரை தொழுநோயாளி என தீர்ப்பிடக்கூடாது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. இருப்பினும் தொழுநோய் காரணமாகவும் தலையில் முடி உதிர்ந்து போகலாம் என்பதையும் இந்த வரிகள் காட்டுகின்றன. குரு ஒருவரை சோதித்து பின்னர்தான் சரியான முடிவிற்கு வரவேண்டும் என்பதும் காட்டப்படுகிறது.

வ.44: ஒருவருடைய தலையில் தொழுநோய் அடையாளங்கள் காத்திரமாக இருந்தால் குரு அவரை தீட்டுடையவர் என அறிவிக்கிறார், அதனையும் அவர் இரண்டு தடவைகள் அறிவிக்கிறார், (הוּא טָמֵא ה֑וּא טַמֵּא ஹு' தம்மெ' ஹு' தம்மெ'- அவர் அசுத்தமானவர், அவர் அசுத்தமானவர்).

வ.45: தொழுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன நடக்கும் என்பது காட்டப்படுகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடையணிந்து, தலை வராமல், மேலுதட்டை மறைத்துக்கொண்டு தீட்டு தீட்டு என்று கத்த வேண்டும்.

இப்படியான செயற்பாடுகள் மிகவும் துன்பமான அனுபவத்தை இவர்களுக்கு கொடுத்திருக்கும். இருப்பினும் மருத்துவம் நவீனமயமாகாமல் இருந்த காலத்தில், மற்றவர்களை ஆபத்திலிருந்து காக்க இப்படியான கடுமையான சட்டங்களை கையாளவேண்டியிருந்தது. இன்றைய நவீன உலகத்தில் பல கண்டுபிடிப்புக்கள் இருந்தும், விஞ்ஞான அறிவு பலமாக வளர்ந்திருந்தும், சில பிழையான பயங்கள், அல்லது மதசார்ந்த மூடநம்பிக்கைகள், நோயாளர்களுக்கு இன்னும் துன்பத்தைத்தான் கொடுக்கின்றன. உதாரணமாக எயிட்ஸ் நோய் ஒரு தொற்றுநோய் அல்ல, இருப்பினும் எயிட்ஸ் நோயால் பாதிப்படைந்தவர்களை சமுதாயம் பிழையாகவும், பயத்தோடுமே நோக்குகின்றன.

வ.46: இந்நோய் குணமடைவதற்கான வாய்ப்புக்கள் அந்நாட்களிலேயே இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த வரி காட்டுகிறது. தொழுநோய் உள்ள காலம்வரை ஒருவர் பாளையத்திற்கு வெளியே இருக்கக் கேட்கப்படுகிறார். இது அவருடைய நோய் மாறுவதற்கு வாய்ப்பை கொடுக்கிறது, அத்தோடு மற்றவர்களுக்கு இது தொற்றாமல் இருக்கவும் சந்தர்ப்பம் கொடுக்கிறது.

அதிகமான நோயாளர்கள் பாளையத்திற்கு வெளியில் இருந்து, தனிமையிலும், வறுமையிலும் மடிந்து போனார்கள் என்ற துன்பமான உண்மை வரலாற்றில் காணக்கிடக்கின்றது. இப்படியாக பாளையத்திற்கு வெளியில் இருந்தவர்களில் சிலர் வழிப்பறிக் கொள்ளையர்களாகவும் மாறினார்கள். சமுதாயத்திலிருந்து ஓதுக்கிவைக்கப்பட்டிருந்த காரணத்தினால் இவர்கள் சமுதாயத்தை வெறுத்திருக்கலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 32,1-2.5.11

பாவ அறிக்கையும் மன்னிப்பும் (தாவீதின் அறப்பாடல்) 1எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர்.

2ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்.

3என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின.

4ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா)

5‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். (சேலா)

6ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது.

7நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா)

8நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.

9கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!

10பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல் ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்.

11நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.



வ.0: பல திருப்பாடல்களைப் போல இந்த திருப்பாடலும் தாவீதிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தனிமனித புகழ்ச்சிப்பாடல் அத்தோடு பாவமன்னிப்பு பாடல் என்று விவிலியம் காட்டுகிறது.

வ.1: யார் பேறுபெற்றவர் என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. குற்றம் செய்யாதவர்கள் உலகத்தில் இல்லை, அத்தோடு பாவம் புரியாதவர்களும் உலகத்தில் இல்லை. ஆனால் யாருடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டதோ அல்லது யாருடைய பாவங்கள் மன்னிக்கப்ட்டதோ அவர்கள்தான் பேறுபெற்றோர் என்கிறார் ஆசிரியர்.

இங்கே பாவங்களை மன்னித்தலையும், மறைத்தலையும் அநீதியாக ஆசிரியர் கருதவில்லை, மாறாக, அதை ஒரு பாவியை புனிதராக்கும் வாய்ப்பாக பார்க்கிறார்.

வ.2: முதலாவது வசனம் சொன்ன செய்தியை இந்த வரியும் ஒத்த கருத்து வரிகளில் மீள சொல்கிறது. இந்த வரி, ஆண்டவர் யாருடைய தீச்செயலை எண்ணவில்லையோ அவரும் பேறுபெற்றவர் என காட்டப்படுகிறார் (לֹא יַחְשֹׁ֬ב יְהוָה לוֹ עָוֹ֑ן லோ' யஹ்ஷோவ் அதோனாய் லோ 'ஆயோன்- ஆண்டவர் அவர் பாவங்களை கணக்கிடவில்லை). ஆண்டவர் ஒருவருடைய தீச்செயலை எண்ணவில்லை என்றால் அந்த மனிதர் திருந்திவிட்டார் அல்லது அந்த நபர் தன் தீச் செயல்களிலிருந்து விலகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.

இப்படியாக ஒருவர் தன்னுடைய தீச்செயல்களிலிருந்து விலகிவிட்டார் என்றால், அவருடைய மனதில் வஞ்சம் இல்லை என்பது பொருள். மனதில் வஞ்சம் இல்லை என்பதை அவர் உள்ளத்தில்-அல்லது ஆன்மாவில் வஞ்சம் இல்லை என எபிரேய விவிலியம் காட்டுகிறது (וְאֵין בְּרוּחוֹ רְמִיָּה׃ வெ'யென் பெரூஹோ ரெமிய்யாஹ்).

வ.3: ஒருவர் பாவத்தை அறிக்கையிடாமல் மனம்வருத்தி பயன் இல்லை என்ற கிறிஸ்தவ மனப்பான்மையை ஒத்து இந்த வரி காட்டப்படுகிறது. தன்னுடைய துன்பத்தை எலும்புகள் கழன்று போவதற்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர். இது மனரீதியான துன்பம் என்பதையும் தாண்டி, உடல் ரீதியான துன்பத்தையும் கொடுக்கிறது.

பாவத்தை அறிக்கையிடாமல் இருப்பதை அமைதியாக இருத்தல் என்று எபிரேய விவிலியம் வார்த்தைப் படுத்துகிறது (כִּי־הֶחֱרַשְׁתִּי בָּלוּ கி-ஹெஹெராஷ்தி பாலூ).

வ.4: தான் பாவியாக இருக்கும் வரை, கடவுளுடைய தண்டிக்கும் கரம் தனக்கு எதிராக இருக்கும் என்று அறிக்கையிடுகிறார். ஆண்டவருடைய கரம் ஒருவருக்கு எதிராக இருந்தால் அவர் எந்த செயலிலும் வெற்றிபெறமாட்டார் என்ற உண்மை இங்கே காட்டப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர் கோடை கால வறட்சிக்கு ஒப்பிடுகிறார். இஸ்ராயேல் போன்ற வரண்ட பிரதேச நாடுகளுக்கு வெப்பம் மிகவே கடுமையாக இருக்கும். இதனை அவர் தன் துன்பத்திற்கு உதாரணமாக எடுக்கிறார் (בְּחַרְבֹנֵי קַיִץ பெஹர்வோநே காயிட்ஸ்- வெயிலின் வறட்சியில்).

வ.5: தன் பாவத்தை அறிக்கையிட முயற்சி செய்கிறார். திருப்பிக்கூறுதல் முறையில் தன் பாவத்தை ஆண்டவரிடம் தான் சொன்னதாகச் சொல்கிறார் ஆசிரியர். பாவமும் (חַטָּאתִי ஹத்தா'டி- என்பாவம்), தீச்செயலும் (עֲוֹנִי 'அயோனி-என் தீச்செயல்) ஒத்த கருத்துச் சொற்களில் காட்டப்பட்டுள்ளன. அதேபோல வெளிப்படுத்தலையும் (לֹֽא־כִסִּיתִי லோ'-கிஸ்ஸாதி, நான் மறைக்கவில்லை), அறிக்கையிடுதலையும் (אָמַ֗רְתִּי 'ஆமர்த்தி-நான் சொன்னேன்) ஒத்த கருத்துச் சொற்களாக மீண்டும் பார்க்கிறார் ஆசிரியர்.

மனிதர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டால் கடவுள் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறார் என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது.

வ.6: தான் செய்ததை உதாரணமாகக் கொண்டு, மற்றவர்களையும் அதனை செய்யச் சொல்கிறார். ஆண்டவரின் மக்களை தமிழ் விவிலியம் 'அன்பர்' என அழைக்கிறது, இதற்கு எபிரேய விவிலியம் ஹசித் (חָסִ֨יד) என்ற சொல்லை பாவிக்கிறது.

அன்பர்களின் செபம் உறுதியாக இருந்தால், பெரு வெள்ளம் தொடர்ந்து வந்தாலும் அது அவர்களை ஒன்றும் செய்யாது என்பதை அறிக்கையிடுகிறார்.

வ.7: ஆண்டவரே என் புகலிடம் என்பது முதல் ஏற்பாட்டு விவிலியம் அடிக்கடி காட்டும் ஒரு விசுவாச வார்த்தைப் பிரயோகம் (אַתָּה ׀ סֵתֶר לִי מִצַּר 'அத்தாஹ்-செதெர் லி மிட்ஸார்-துன்பத்தில் நீர் என் புகலிடம்).

ஆண்டவரை அரசராக வர்ணித்து, ஆண்டவரை சுற்றி கேட்கும் ஆரவார பேரோலி தனக்கு உறுதுணையாக இருப்பதாக சொல்கிறார்.

வ.8: இந்த வரியில் ஆண்டவரே பேசுகிறார். முதல் வரியில் சொல்லப்பட்ட ஆரவார பேரோலிதான் இதனை சொல்கிறது எனவும் எடுக்கலாம். ஆண்டவர் மூன்று முக்கியவிடங்களை சொல்கிறார். இவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது.

அ. ஆண்டவர் அறிவு புகட்டுவார் (אַשְׂכִּֽילְךָ֨ 'அஸ்க்கில்தா-உனக்கு அறிவு புகட்டுவேன்). ஆ. நடக்க வேண்டிய வழியைக் காட்டுவார் (אוֹרְךָ בְּדֶרֶךְ 'ஓரேகா பெதாரெக்- வழியைக் காட்டுவேன்).

இ. ஆண்டவர் கண்ணோக்கி அறிவுரை கூறுவார் (אִיעֲצָה עָלֶ֣יךָ עֵינִי׃ 'இ'அட்சாஹ் 'அலெகா 'எனி- என் கண்களின் மேல் உனக்கு அறிவுரைசொல்வேன்).

ஆண்டவரே இந்த முயற்சிகளை எடுப்பதனால், இனி துன்பம் இல்லை என்பது சொல்லப்படுகிறது.

வ.9: குதிரையையும் (סוּס சுஸ்- குதிரை), கோவேறு கழுதையையும் (פֶרֶד֮ பெரெத்-கோவேறு கழுதை) அறிவிலிகளான விலங்குளாக காண்கிறார் ஆசிரியர். அவை கடடிவாளத்தினால் மட்டுமே இயங்குகின்றன. ஆண்டவரின் பிள்ளைகள் தாங்களாகவே கடவுளுடைய வார்த்தையைக் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். விலங்குகளுக்கு சுய அறிவு குறைவாக இருக்கிறது என்ற ஒரு எண்ணம் அக்காலத்திலே இருந்திருக்கிறது என்பதை இந்த வரி காட்டுகிறது எனலாம்.

வ.10: பொல்லாருக்கு துன்பம் வரும், நல்லாருக்கு ஆசி வரும், இது ஒரு விவிலிய ஞானம். நல்லாருக்கு துன்பம் வருகின்றபோது சிக்கல் ஏற்படும். இந்த சிக்கலை விவிலிய ஞான நூல்கள் பல விதத்தில் தீர்க்க முயற்சி செய்தாலும், சரியான விடையை விவிலியம் நேரடியாக தருவதாக இல்லை எனலாம்.

நல்லாரை ஆண்டவரின் பேரன்பு சூழ்ந்து நிற்கும் என்பது மிக நம்பிக்கை செறிந்த வார்த்தைகள்.

வ.11: நீதிமான்களும் (צַדִּיקִים ட்சாதிகிம்), நேரிய உள்ளத்தோரும் (יִשְׁרֵי־לֵב யிஸ்ரே-லெவ்) ஒத்த கருத்துச்சொற்களில் காட்டப்படுகிறார்கள். இவர்களின் மகிழ்ச்சியாக இருப்பது கடவுள் ஒருவரே என்பது காட்டப்படுகிறது.



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 10,31-11,1

31அதற்கு நான் சொல்வது நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். 32யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். 33நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். 1நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

கொரிந்தியர் முதலாவது திருமுகத்தின் பத்தாம் அதிகாரம் சில நடைமுறை சிக்கல்களை அலசுகின்றது. சிலைவழிபாடு இஸ்ராயேல் மக்களுக்கு காலம் காலமாக ஒரு பெரும் ஆன்மீக நெருக்கடியாகவே இருந்திருக்கிறது. இந்த சிலைவழிபாட்டை பற்றி பல விதமான தகவல்களை விவிலியத்தில் கண்டுகொள்ளலாம். சிலர் நேரடியாகவே சிலை வழிபாட்டை பின்பற்றினர், சிலர் மனதால் சிலைவழிபாட்டை முன்நிறுத்தினர். பவுல் சிலைவழிபாட்டை புறவினத்தவரின் செயற்பாடாக மட்டும் பார்க்காமல், தன் யூத முன்னோர்களும் இந்த செயற்பாட்டை செய்தனர் என குற்றம் சுமத்துகிறார். முக்கியமாக அவர்கள் சீனாய் பாலைவனத்தில் இந்த செயற்பாட்டை செய்தனர் என்பது அவர் குற்றச் சாட்டு. சிலைவழிபாட்டைப் போன்று பரத்தமையையும் பவுல் சாடுகிறார். பரத்தமையை இரண்டு விதமாக நோக்கலாம். உண்மைக் கடவுளில் நம்பிக்கை குன்றி பிற தெய்வங்களை வணங்குதலையையும் விவிலியம் பரத்தமை என்று காண்கிறது. அதேவேளை மனைவி அல்லாதவரோடு உறவு வைத்தலையும் விவிலியம் பரத்தமை அல்லது விபச்சாரம் என்று காண்கிறது.

விபச்சாரம் முதல் ஏற்பாட்டுக் காலத்தில் பல இடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொழிலாக இருந்திருக்கிறது. ஐரோப்பிய மற்றும் பல மத்திய கிழக்க பிரதேசங்களில் இந்த தொழில், விவிலிய காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது. பவுல் உடல் ரீதியான பரத்தமையையும், உள ரீதியான பரத்தமையையும் ஒரு நல்ல யூதனாக எதிர்க்கிறார். பரத்தமை குடும்பத்திற்கும் இனத்திற்கும் மிக ஆபத்தானது என்பதை அவர் நிச்சயமாக ஒரு பரிசேயனாக காண்கிறார். ஆன்மீக பரத்தமை கடவுளை சோதிப்பதற்கு சமன், ஆக இந்த பரத்தமை பல விளைவுகளை கொண்டு வரும் என எச்சரிக்கிறார்.

இதே பரத்தமையும், சிலை வழிபாடும் கிரேக்க உலகத்தில் மலிந்து காணப்பட்டது. ஆரம்ப திருச்சபைக்கு இவை மிக முக்கியமான சவாலாக இருந்திருக்கின்றன. பவுல் கிறிஸ்துவின் சீடனாக இதனை மிக ஆபத்தான நிலையாக பார்க்கிறார். ஒரே அப்பத்தையும் ஒரே பானத்தையும் பருகும் கிறிஸ்தவர்கள் இந்த பாவத்தை செய்யலாகாது என்று எச்சரிக்கிறார். வழமையாக பவுல் இஸ்ராயேலருடைய சடங்குகளை சாடுவது கிடையாது, ஆனால் இந்த அதிகாரத்தில் அதனையும் சாடுகிறார், விலங்கு பலிகள் பேய்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்கிறார் (1கொரி10,18-21). பவுலுக்கு நன்றிசொல்ல வேண்டும், விலங்குகளுக்கு சார்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த திருத்தூதர் பேசியிருக்கிறார்.

இப்படியாக சொன்னவர், கிறிஸ்தவர்கள் எல்லாவற்றிலும், செயல்-எண்ணம், கடவுளை மாட்சிப்படுத்த வேண்டியவர்கள் என்ற முடிவிற்கு வருகிறார். தனிமனித சுதந்திரத்தை பொறுப்புடன் பாவிக்கக் கேட்கிறார் பவுல். அதேவேளையில் இறைச்சி உண்பதையோ அல்லது, இறைச்சி உண்பவர்களின் விருந்துகளையோ கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. சிலைகளுக்கு படைக்கப்பட்டவற்றை உண்ணும் போது இடத்தையும், மனட்சாட்சியத்தையும் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.

வ.31: இது பவுலுடைய மிக முக்கியமான வாதம், கொரிந்தியர் திருமுகத்தின் அழகான வரிகளில் இதுவும் ஒன்று. எதைச் சொன்னாலும், செய்தாலும் அதனை ஒருவர் கடவுளின் மாட்சிக்காகவே செய்ய வேண்டும் (πάντα εἰς δόξαν θεοῦ °ποιεῖτε. பன்டா எய்ஸ் தொட்சான் தியூ பொய்யெய்டே). இந்த செயற்பாட்டிற்குள் அனைத்தும் அடங்கிறது, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், விருந்தோம்பல், நம்பிக்கை போன்றவை (ஒப்பிடுக கொலோ 3,17: 1பேதுரு 4,11).

வ.32: உண்மையான கிறிஸ்தவ வாழ்வு யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வாழ்வு. கிறிஸ்தவர்களை யாருக்கும் இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்கிறார். அது யூதர்களாகவோ, கிரேக்கர்களாகவோ அல்லது சொந்த திருச்சபையாகவோ இருக்கலாம் என்கிறார். இதிலிருந்து யாருக்கும் இடைஞ்சலாக இருக்கும் வாழ்வு கிறிஸ்தவ சாட்சியம் இல்லை என்பது தெளிவாகிறது.

வ.33: இந்த வரியில் பவுல், தன்னுடைய சொந்த சாட்சியத்தைக் காட்டுகிறார். தான் யாருக்கும் இடைஞ்சல் இல்லாதவர் என்பதை காட்டுகிறார். ஒருவர் தனக்கு உவந்ததை மட்டும் தேடுகின்ற போது அவர் சுயநலவாதியாகிறார், இது பலருக்கு இடைஞ்சலாக இருக்கும். பலருக்கு உரியதை தேடுகிறபோது அவர் பொதுநலவாதியாகிறார், இது ஆண்டவருக்கு உகந்த வாழ்கை என்பது பவுலுடைய வாதம். இந்த பயன்தரும் வாழ்கை அவர் அனைவரும் மீட்படையும் வாழ்வு என்று கிரேக்க விவிலியம் காட்டுகிறது (ἵνα σωθῶσιν. ஹினா சோதோசின்- இதனால் அவர்கள் மீட்படைவார்களாக).

வ.1: இப்படியாக அனைவருக்கும் மீட்பளிகக்கூடிய வாழ்வு, இயேசுவைப் போன்ற வாழ்வு என்ற ஒரே வரியில் விளக்கம் கொடுத்துவிட்டார் பவுல். கிறிஸ்துவைப் போன்ற வாழ்வு என்ற சிந்தனை பவுலுடைய திருமுகத்தில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. இந்த கிறிஸ்து போன்ற வாழ்வை முதலில் தான் வாழ்வதாகவும், இதனால்தான் அதனை மற்றவரிடம் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார் பவுல் (μιμηταί μου γίνεσθε καθὼς κἀγὼ Χριστοῦ. மிமேடாய் மூ கினெஸ்தெ காதோஸ் காகோ கிறிஸ்டூ- என்னைப்போன்று கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக இருங்கள்).


நற்செய்தி வாசகம்
மாற்கு 1,40-45

தொழுநோயாளர் நலமடைதல் (மத் 8:1-4 லூக் 5:12-16) 40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். 41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்றார். 42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். 43-44பிறகு அவரிடம், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். 45ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

மாற்கு நற்செய்தி முன்னுரை தொடர்ச்சி:

மாற்கு நற்செய்திக்கும் தூய பேதுருவிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மாற்கு பேதுருவின் பயண மற்றும் பணித்தோழராக இருந்த படியாலும், மாற்கு; நேரடியாக இயேசுவை அறியாதவாரக இருந்தபடியாலும், பல தரவுகளை பேதுருவிடம் இருந்து பெற்றிருக்கலாம் (காணக் 1பேதுரு 5,13). அதேவேளை பேதுரு தான் இறப்பதற்கு முன் இயேசுவைப் பற்றிய அறிவை விட்டுசெல்ல வேண்டும் என்பதை விரும்பினார் (காண்க 2பேதுரு 1,15), இதனால் தன் நண்பர் மாற்குவை அதற்கு பயன்படுத்தியிருக்கலாம். திருச்சபை தந்தையர்கள் பலர் மாற்கு நற்செய்தியை பேதுருவின் விசுவாச அறிக்கையாகவே பார்த்தனர், அதற்கான பல உதாரணங்களும் இந்த நற்செய்தியில் இல்லாமல் இல்லை. பேதுருவின் தவறுகளை கடினமான வார்த்தைகளில் மாற்கு நற்செய்தி தருகிறது. மத்தேயு, லூக்கா யோவான் போன்றவர்கள் பேதுருவின் மட்டில் மரியாதையுள்ளவர்களாகவே வார்த்தைகளை அமைக்கிறார்கள். இதனாலும், பேதுருவின் கை மாற்கு நற்செய்தியின் பின்னால் இருக்கிறது என்ற வாதம் வலுப்பெறுகிறது.

பேதுருதான் மாற்கு நற்செய்தியின் மூலம் என்றால், உரோமைதான் மாற்கு நற்செய்தியின் உருவாகும் இடமாக இருந்திருக்கும். பேதுரு உரோமையில் கி.பி. 64 மறைசாட்சியம் அடைந்தார். அதிகமான பாரம்பரியங்கள் மாற்கு நற்செய்தியின் இடமாக உரோமையை அல்லது இத்தாலியின் ஒரு இடத்தையே பரிந்துரைக்கின்றனர். இதேவேளை மாற்கு நற்செய்தியின் இடமாக கிரேக்க அலெக்சாந்திரியாவையும் சிலர் முன்மொழிகின்றனர்.

மாற்கு, நற்செய்தியின் முதலாவது அதிகாரத்திலேயே இயேசுவின் பொதுப்பணி பற்றிய தரவுகளை தர தொடங்கிவிட்டார். இந்த அதிகாரத்தின் இறுதி பகுதியின் இயேசு ஒரு தொழுநோயாளரை குணப்படுத்திய நிகழ்வை பதிகிறார்.

வ.40: ஒரு தொழுநோயாளர் இயேசுவை தேடி வருகிறார். அவர் முன்னால் முழந்தாள் படியிடுகிறார். இயேசு விரும்பினால் தன்னை குணமாக்க முடியும் என்று விசுவாச அறிக்கை செய்கிறார்.

அ. இந்த தொழுநோயளர் இயேசுவிடம் வருகிறார், ἔρχεται πρὸς αὐτὸν λεπρὸς எர்கேடாய் புரொஸ் அவுடொன் லெப்ரொஸ். சாதாரணமாக இவர்களை, மக்கள் நகரிற்குள் அனுமதிப்பதில்லை, இவர் இயேசுவிடம் வருகிறார், அதாவது இயேசுவைத் தேடி ஊருக்குள்ளேயே வந்துவிடுகிறார். ஆண்டவரைத் தேடி போவதால் எதனையும் பற்றி இவர் கவலைப்படுவதாக தெரியவில்லை.

ஆ. இயேசு விரும்பினால் தான் நலமடைவேன் என்று விசுவாச அறிக்கையிடுகிறார். இயேசுவை நம்புபவர் மீட்படைவர் என்பது மாற்கு நற்செய்தியின் சுருக்கம். பல நலமான மக்கள் இதனை செய்யாதபோது நோயாளி என்பவர் அதனை செய்து அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறுகிறார். இதனால் இவர் நோய் உள்ளத்தில் இல்லை என்பதை மாற்கு காட்டுகிறார் (ἐὰν θέλῃς δύνασαί με καθαρίσαι. ஏயான் தெலேஸ் துனாசாய் மே காதாரிசாய்- நீர் விரும்பினால், என்னை சுத்தப்படுத்த முடியும்).

இ. இவர் இயேசுவின் முன்னால் முழந்தாள் படியிடுகிறார். முழந்தால் படியிடுவதன் வாயிலாக இயேசுவை இவர் கடவுளாகவும், அரசராகவும் ஏற்றுக்கொள்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த செயற்பாடும், இயேசுவை மதிக்காமல் அவருக்கு எதிராக கலகம் செய்யும் அதிகார வர்க்கத்திற்கு ஒரு சவாலாக காட்டப்படுகிறது (γονυπετῶν கொனூபெடோன்-முழந்தாள்படியிட்டு).

வ.41: இயேசுவின் செயற்பாடுகள் மிக சுருக்கமாக ஆனால் பிரியமான வார்த்தைகளால் நெய்யப்பட்டுள்ளது.

அ. இயேசு, அவர் மீது பரிவு கொள்கிறார் (σπλαγχνισθεὶς ஸ்பிலாக்கிநிஸ்தெய்ஸ்-பரிவுகொண்டு). பரிவு கொள்ளுதல் இதயத்தின் பண்பாகவும், இறைவனின் குணமாகவும் பார்க்கப்படுகிறது. அனைவரும் இவரை தீண்டுள்ளவராகவும், பயத்தோடும் பார்க்க, ஆண்டவர் இவரை பரிவுடன் பார்க்கிறார். மாற்கு இயேசுவை யார் என்று காட்டுகிறார்.

ஆ. இயேசு தன் கையை நீட்டி அவரைத் தொடுகிறார். இயேசு தொடுகின்ற கடவுள். சாதாரணமாக மனிதர்கள் கடவுளைத் தொட முயற்சிப்பர். நற்கருணையை நாம் தொட முயல்வதும், மற்ற சமய சகோதரர்கள் திருச் சிலைகளை தொடுவதும், இந்த நோக்கத்தில்தான். ஆனால் இந்த கடவுள் வித்தியாசமாக தன் கையை நீட்டி நோயாளியை தொடுகிறார். இங்கே முயற்சி எடுப்பவராக ஆண்டவர் காட்டப்படுகிறார் (ἐκτείνας τὴν χεῖρα αὐτοῦ ἥψατο எக்டெய்நாஸ் டேன் கெய்ரா அவுடூ ஹேப்சாடொ - தன் கையை நீட்டி அவரைத் தொட்டார்).

இ. ஆண்டவர் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். சாதாரண மனிதர்கள் தொழுநோயாளர்களை தீண்டப்படாதவர்களாகவும், நகருக்கு வெளியில் இருக்க வேண்டியவர்களாகவும் கருதும்வேளை, ஆண்டவர் அவர் குணமடைய வேண்டும் என்பதை தான் விரும்புவதாக சொல்வது, மிகவும் இதமாக இருக்கிறது (θέλω καθαρίσθητι தெலோ காதாரிஸ்தேடி- நீர் நலமடைந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்). ஆண்டவரின் விருப்பம் மனிதரின் நிறைவான வாழ்வு என்பது இங்கு தெளிவாகிறது.

வ.42: தொழுநோய் ஆண்டவருக்கு கட்டுப்பட்டது, இதனால் உடனடியாக அவரை விட்டு விலகுகிறது (εὐθὺς ἀπῆλθεν ἀπ᾿ αὐτοῦ ἡ λέπρα, எவுதுஸ் அபேல்தென் அப் அவுடூ ஹே லெப்ரா- உடனடியாக தொழுநோய் அவரை விட்டு அகன்றது). தொழுநோய்தான் அவர் துன்பத்திற்கு காரணமாதலால் அவர் உடனேயே நலமடைகிறார்.

அவர் நலமடைந்தார் என்பதை கிரேக்க விவிலியம் அவர் 'நலமடையப்பட்டார்' என்று செயற்பாட்டு வினையில் தருகிறது. இதன் மூலம் கடவுள்தான் இவருக்கு நலம் கொடுத்தார் என்பது தெளிவாக சொல்லப்படுகிறது (ἐκαθαρίσθη எகாதாரிஸ்தே). வவ.43-44: மாற்கு நற்செய்தியில் ஆண்டவர் பல வேளைகளில தன்னுடைய செயற்பாடுகளையும், குணப்படுத்தலையும் மற்றவர்களுக்கு வெளிப்படையாக சொல்ல வேண்டாம் என்று கட்டளையிடுவார். இதனை மாற்குவின் இரகசியம் என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். ஒருவர் தன் கடவுளை, தானே காணவேண்டும் என்பது இப்படி விரும்பப்படுகிறது.

அ. இயேசுவின் முதலாவது கட்டளை- குண்படுத்தலை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்கிறார், அத்தோடு கவனமாக இரும் என்றும் சொல்கிறார். இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். இயேசுவின் மேல் இருந்த கோபம், குணம் பெற்றவர் மேல் வரக்கூடாது என்பதற்காக இப்படி சொல்லியிருக்கலாம். அல்லது மக்கள் தாங்களாகவே இயேசுவிடம் வரவேண்டும், அதிசயங்கள் அவர்களை தன்னிடம் கொண்டுவரக்கூடாது என்பதற்காகவும் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

ஆ. லேவியர் சட்டங்களின் படி தொழுநோயாளர் ஒருவர் குணமடைந்தால் அவர் குருவாலே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். குருவின் அறிக்கைதான் ஒருவர் மீளவும் சமுதாயத்தில் உள்வாங்க முக்கியமான சாட்சியமாக அமைகிறது. இயேசுவின் இந்த வார்த்தைகள், அவர் லேவியர் சட்டங்களை அறிந்திருந்தார் என்பதையும், நடைமுறை சாத்தியமான வழியை அவர் விரும்பினார் என்பதையும் காட்டுகிறது. இயேசு மோசேயின் சட்டங்களை எதிர்க்கவில்லை என்பதையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

அதேவேளை லேவியர் சட்டங்கள் இயேசுவின் காலத்திலும், நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதையும் இந்த வரி காட்டுகிறது. ஒருவர் நலமடைந்தால், செலுத்தும் காணிக்கை அவருடைய குணமாதலின் அடையாளமாக அன்று இருந்திருக்கிறது. இயேசு அவரை உடனடியாக அனுப்பிவிடுகிறார்.

வ.45: குணமடைந்தார் வித்தியாசமாக செயற்படுகிறார். அவர் சென்று எங்கும் இந்த செய்தியை அறிவித்துவருகிறார். இவருடைய அறிவிப்பால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய் செல்ல முடியாமல் போகிறது. வெளியிலேயே அவர் தங்கவேண்டியும் வருகிறது, ஆனால் மக்கள் அவரிடம் வர தொடங்குகிறார்கள். இயேசு இதனை எதிர்பார்த்துதான், யாருக்கும் குணமடைந்த செய்தியை சொல்லவேண்டாம் என்றிருக்கிறார். குணமடைந்தவரும், அனைவரும் இயேசுவிடம் வரவேண்டும் என்று எதிர்பார்த்துதான் இந்த செய்தியை ஆண்டவரின் கட்டளையையும் மீறி சொல்லிவிடுகிறார் எனலாம்.

தொழுநோய் மட்டுமல்ல, அதிகமான கொடிய நோய்கள்,

தொற்றாத நோய்கள்.

நோய்களை வெறுக்கலாம், நோயாளிகளை அல்ல,

நாமும் ஒருநாள் நோயாளிகளாகலாம்.

உடலில் உள்ள நோய்கள் குணமடையும்,

உள்ளதில் உள்ள நோயும் குணமடையவேண்டும்.

ஆண்டவர் தன் மக்கள் குணமடையவேண்டும் என விரும்புகிறார்.

தன்கையை நீட்டி தொடவும் ஆயத்தமாய் இருக்கிறார்,

இதனால் நாம் அவரிடம் எழுந்து வரவேண்டும்,

அது ஒன்றே போதும்.

ஆண்டவரே உம் கையை நீட்டி என்னை தொடும், ஆமென்