இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் நான்காம் வாரம் (ஆ)

முதலாம் வாசகம்: இணைச் சட்டம் 18,15-20
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 7,32-35
நற்செய்தி: மாற்கு 1,21-28


முதல் வாசகம்
இணைச் சட்டம் 18,15-20

இறைவாக்கினரை அனுப்புவதற்கான உறுதிமொழி

14ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை. 15கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. 16ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, 'நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக' என்று விண்ணப்பித்தபோது, 17ஆண்டவர் என்னைநோக்கி, 'அவர்கள் சொன்னதெல்லாம் சரி' என்றார். 18உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். 19என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். 20ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.


தோறா அல்லது சட்ட நூல்களில் ஐந்தாவது புத்தகமாக கருதப்படும் இந்த நூலை மோசேதான் எழுதினார் என்று பாரம்பரியமாக கருதப்படுகிறது. இணைச்சட்டம் என்ற பெயர் கிரேக்க சொல்லில் இருந்து எடுக்கப்படுகிறது (காண்க இ.ச 17,18 δευτερονόμιον தியுடெரொநொமியொன்). இதனை எபிரேயத்தில், பிரதி என்று ஆரம்ப காலத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (מִשְׁנֵה மிஷ்னெஹ்- பிரதி). எபிரேய மொழியில் இணைச்சட்டம் 'אֵלֶּה הַדְּבָרִים' ('எல்லெஹ் ஹத்வாரிம்- வார்த்தைகள் இவையே) என்று அழைக்கப்டுகிறது. இதுதான் இந்த புத்தகத்தின் முதலாவது சொல், இந்த முறையில்தான் அதிகமாக எபிரேய விவிலிய புத்தகங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனை இரண்டாவது சட்டம் என அழைப்பது, இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு மிகச் சரியாக பொருந்தவில்லை என்ற வாதமும் இரு;கிறது.

கடவுள் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறுவதை இந்த புத்தகம் காட்டுகிறது. எகிப்தில் வளர்ந்த இஸ்ராயேல் இனம், பாரவோன்களின் துன்புறுத்தலை சந்திக்கிறது. இதனைக் கண்ட கடவுள் அவர்களை மோசே தலைமையில் மீட்டெடுக்கிறார். அடுத்த கட்டமாக அவர்களை கடவுள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு கொண்டு வருகிறார், இருப்பினும் அவர்கள் பாலை நிலத்தில் கடவுளை விட்டு அகன்று செல்கின்றார்கள். கடவுள் மனம் நொந்து, இவர்கள் அல்ல, அடுத்த தலைமுறைதான் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்லும் என காட்டுகிறார். இதனால் இவர்கள் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் சுற்றித்திரிய வேண்டிவந்தது. இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் மோசே உரையாற்றுகிறார், அவரும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு போகமுடியாதவராக இருந்தார். மோசே தன்னுடைய உரையில் மக்களை எச்சரிக்கிறார், கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்தால் மட்டுமே வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்ல முடியும் என படிப்பிக்கிறார்.

இந்த புத்தகத்தின் ஆசிரியரையும், எழுதப்பட்ட காலத்தையும் இலகுவாக கணிக்க முடியாது. அதிகமான மோசேயுடைய உரைகள் இந்த புத்தகத்தில் இருந்தாலும், அதனை இன்னொருவரே தொகுத்திருக்க வேண்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது. அத்தோடு இங்கே மோசே 'அவர்' என்று படர்கையிலே சொல்லப்படுவதும், இதுவும் அதற்கான காரணமாக இருக்கலாம் (காண்க இ.ச 1,1). அதேவேளை இந்த புத்தகம் மோசேயுடைய இறப்பையும் பதிவு செய்கிறது (காண்க இ.ச 34). மோசேக்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு பலமான வாதம் இருக்கிறது. இந்த காலத்தில்தான் இணைச்சட்டம் என்ற நூல் ஒன்று, யூதேயாவில் யோசியா அரசர் காலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுவும் அதற்கான காரணமாக இருந்திருக்கலாம் (காண்க 2அரசர் 22,8). இந்த கருதுகோல் கருத்தில் எடுக்கப்பட்டால், இணைச்சட்டத்தின் ஆசிரியராக மோசே இருக்கமாட்டார், மாறாக அவர் பெயர் இந்த புத்தகத்திற்கு வலுச்சேர்க்கவும், அதிகாரம் கொடுக்கவும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனை விட இணைச் சட்டம் பபிலோனிய அடிமைத்தனத்தின் போது அல்லது அதற்கு பின்னர் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதமும், பிரதி வாதமும் இருக்கின்றன.

இணைச்சட்டத்தின் பதினெட்டாவது அதிகாரம், இறைவாக்கினர்களை அனுப்புவது சம்மந்தமான வரிகளையும் கொண்டுள்ளது. இந்த வரிகளும் பிற்காலத்தில் இஸ்ராயேல் நாட்டில் இருந்த நிலைமை ஒன்றை காட்டுவது போலவே உள்ளது.

வ.14: இணைச்சட்ட நூல், வேற்றின மக்கள் மற்றும் அவர்களது பழக்க வழக்கங்கள் மட்டில் சற்று எச்சரிக்கையாகவே இருக்கிறது. இணைச்சட்ட ஆசிரியர் வேற்றினத்தவர்க்கு எதிரான அடிப்படைவாதி என்று இதன் மூலம் எடு;க்க முடியாது என நினைக்கிறேன், மாறாக அவர் தன்னுடைய மக்கள் வேற்றின மக்களின் பழக்கவழக்கங்களில் தொலைந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் என்பது புரிகிறது.

வேற்றின மக்களை ஏன் மோசே துரத்தவேண்டும் என்பதற்கு கடவுள் காரணம் சொல்வது போல, ஆசிரியர் வசனங்களை அமைக்கிறார். வேற்றின மக்கள், குறிசொல்பவர்களுக்கும் (מְעֹנְנִים மெ'ஓன்னிம்- குறிசொல்கிறவர்கள்), நாள் பார்க்கிறவர்களுக்கும் (קֹסְמִים கோஸ்மிம்- சகுனம் பர்க்கிறவர்கள்), செவிகொடு;க்கிறார்களாம். சகுனம் பார்க்கிறவர்களும், குறிசொல்கிறவர்களும் இஸ்ராயேல் தலைவர்களால், காலம் காலமாக தங்கள் விசுவாசத்திற்கு எதிரானவர்களாகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள் (கிறிஸ்தவமும், சில மதங்களும் இவர்களை இப்படியே பார்க்கின்றன, அதிகமானவேளைகளில் இது அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் வன்முறையாகவும் மாறியிருக்கிறது). அன்றைய மத்திய கிழக்கு உலகத்தில், இந்த செயற்பாடுகள் மதத்திற்கு எதிரான அவவிசுவாச செயற்பாடுகளாக பார்க்கப்படவில்லை, மாறாக இவை அரசவையிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட, தொழில் ரீதியான அறிவியலாக இருந்திருக்கிறது. இவர்கள் வானவியலையும், காலநிலையையும், புராதண அடையாள மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு ஊதியமும் சன்மானமும் வழங்கப்பட்டது. கனவுகளுக்கு அர்த்தம் சொல்லவதும் இப்படியான அறிவியலில் ஒன்றே, முதல் ஏற்பாட்டு யாக்கோபு மகன் யோசேப்பு இதில் சிறப்பு பெற்றவர். சாலமோன் மன்னர்கூட இந்த அறிவை பெற்றவர். இவர்களை ஞானிகள் என்ற விவிலியம் அல்லாத மத்திய கிழக்கு இலக்கியங்கள் அழைக்கின்றன.

அதேவேளை சாதாரண மக்கள் மத்தியில் சில பிரசித்தி பெற்ற முறைகளான, பறவைகள்-விலங்குகளை எரித்து சகுனம் பார்த்தல், இறந்தவர்களுடன் பேசுதல், இன்னும் பயங்கரமாக தலைச்சான் பிள்ளைகளை பலிகொடுத்து தெய்வங்களை திருப்திப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் வழக்கிலிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை இஸ்ராயேல் விசுவாச தத்துவம் மூடநம்பிக்கையாக பார்த்தது (மூட நம்பிக்கைகள் வெறுக்கப்படவேண்டியவையே - நம் நாட்டிலும் சில ஆன்மீக தலைவர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, மூட நம்பிக்கையை வளர்ப்பதை என்னவென்று சொல்ல).

இஸ்ராயேல் மக்கள் தனி இனமாக வாழத் தொடங்கியபோது, மேற்சொன்ன அறிவியலை அதிகமான வேளைகளில் பிழையாகவும், ஆபத்தானதாகவும் கருதினார்கள். இதனை அவர்கள் செய்வினை மற்றும் சூனியம் என எண்ணினார்கள். விஞ்ஞான ரீதியான இந்த தொழிலை செய்யாதவர்கள் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். இந்த செயற்பாடுகள், தங்கள் ஒரே கடவுள் வழிபாட்டிற்கு ஆபத்தாக இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதனால் இந்த அறிவியலும், சாதாரண பில்லி சூனியமாக பார்க்கப்பட்டு, வெறுக்கப்பட்டது. புறவினத்தவர்கள் இந்த செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால் புறவினத்தவர்கள் மட்டில் அவதானமாக இருக்கும் படி மோசே (வாசகர்க்கு) அறிவுறுத்தல் கொடுக்கிறார். இந்த குறிசொல்லும் மற்றும் நாள்பார்க்கும் செயற்பாடுகளை கடவுள் வெறுக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. לֹא כֵ֔ן נָתַן לְךָ יְהוָה אֱלֹהֶיךָ׃ லோ' கென் நாதன் லெக் அதோனாய் 'எலோஹெகா- ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர், இதை உனக்கு அனுமதிக்கவில்லை. (காண்க இ.ச 7,25-26).

வ.15: மோசே தன்னைப்போல் இறைவாக்கினர் ஒருவர் தோன்றுவார் என்பதை நினைவூட்டுகிறார். இந்த வரியின்மேல் பல ஆய்வுகள் நடந்திருக்கிறது. இந்த வரியை கிறிஸ்தவர்கள் இயேசுவிற்கு அர்ப்பணிக்கின்றனர். சில யூதர்கள் இந்த வரியை வரவிருந்த மெசியாவிற்கு அர்பணிக்கின்றனர். இந்த வரிக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.

அ. மோசே இணையில்லா கடவுளின் இறைவாக்கினராக இருந்தார்.

ஆ. இந்த இணையில்லா இறைவாக்கினரும் இறந்துதான் ஆக வேண்டும்.

இ. கடவுள் இவரைப்போல இன்னொரு இறைவாக்கினரைத் தருவார்.

ஈ. இறைவாக்கினர்கள் தாங்களாக வருதில்லை, அவர்கள் கடவுளால் அனுப்பப்படுகிறார்கள்.

உ. இஸ்ராயேலர் பொய் இறைவாக்கினர்கள் மட்டில் கவனமாக இருக்க வேண்டியவர்கள்.

மோசேயின் கருத்துப் படி, வரவிருக்கும் இறைவாக்கினர் இஸ்ராயேல் இனத்திலே தோன்றுவார். அவருக்கு மக்கள் செவிகொடுக்க வேண்டும். இது கட்டளையாக கொடுக்கப்படுகிறது. נָבִיא מִקִּרְבְּךָ מֵאַחֶיךָ כָּמֹ֔נִי יָקִים לְךָ יְהוָה אֱלֹהֶ֑יךָ நாபி' மிக்கிர்பெகா மெ'அஹெகா காமோனி யாகிம் லெகா அதோனாய் எலோஹெகா: இறைவாக்கினர் உன்நடுவிலிருந்து, உன்சகோதரரிடமிருந்து, என்னைப்போல் ஒருவரை உன்கடவுளாகிய ஆண்டவர் தோன்றச் செய்வார். אֵלָיו תִּשְׁמָעֽוּן׃ 'எலாய்வ் திஷ்மா'வுன்- அவருக்கு (அவனுக்கு) செவிகொடு.

வவ.16-17: இந்த வரி, வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஒரு முறை கடவுள் தன்குரலை ஒரேபில், அனைத்து இஸ்ராயேல் மக்களுக்கும் வெளிப்படுத்த முயன்றவேளை, மக்கள் அதனை விரும்பவில்லை. கடவுளுடைய குரல் தூய்மையாக இருந்தபடியாலும், மக்கள் அசுத்தமாக இருந்த படியாலும், கடவுளுடைய பரிசுத்தமான குரல் தங்களை அழித்துவிடும் என அவர்கள் அஞ்சினார்கள்.

அதற்கு பதிலாக மக்கள் மோசேயை, கடவுளின் குரலைக் கேட்கச் சொல்கிறார்கள், பின்னர் அதனை தாங்கள் அதனை மோசேயிடமிருந்து கேட்பதாகச் சொல்கிறார்கள். கடவுளும் இதனை ஆமோதித்திருக்கிறார். இதன்மூலமாக கடவுளின் தூய்மை மிக முக்கியமானது, அதனை மக்கள் பேணிக்காக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி வலியுறுத்தப்படுகுpறது.

வ.18: மோசே ஏற்கனவோ சொன்னத்தைப்போல, கடவுளும் சொல்கிறார். மோசேயைப் போல் இன்னொரு இறைவாக்கினரை, அதுவும் இஸ்ராயேல் இனத்திலிருந்து உதிக்கச் செய்வார் என்பதையும், அவர் கொண்டிருப்பது கடவுளுடைய வார்த்தைதான் என்பதையும், அவருக்கு அனைவரும் செவிகொடுக்க வேண்டும் என்பதையும், கடவுளே சொல்வதாக இந்த வரி அமைந்திருக்கிறது.

மோசே இஸ்ராயேல் இனத்திலே நிவர்த்தி செய்யப்படமுடியாத ஒரு தலைவர். இவருக்கு அனைவரும் செவிசாய்த்தனர். மோசேக்கு எதிரான கிளர்ச்சி கடவுளுக்கு எதிரான கிளர்ச்சியாகவே பார்கக்ப்பட்டது. இதனால்தான் ஆரோனும், அவர் சகோதரி மிரியமும் தண்டிக்கப்பட்டார்கள். இப்போது மோசே இறந்ததன் பின்னர், எழவிருக்கும் இறைவாக்கினருக்கும், மக்கள் அதே கீழ்ப்படிவையும், விசுவாசத்தையும் காட்டவேண்டும் என்பதை ஆசிரியர் அழகாக வர்ணிக்கிறார். (נָבִיא אָקִים לָהֶם מִקֶּרֶב אֲחֵיהֶם כָּמוֹךָ நாபி' 'ஆகிம் லாஹெம் மிக்ரெவ் 'அஹெஹெம் காமோகா- இறைவாக்கினனை உதிக்கச் செய்வேன், உன் சகோதரர்கள் மத்தியில், உன்னைப்போல)

வ.19: இந்த இறைவாக்கினர் கடவுள் பெயரால் சொல்பவற்றை செவிகொடாதவரை, தானும் வெறுப்பதாகக் கடவுள் சொல்கிறார். வெறுப்பேன் என்பதைக் காட்ட, அவரிடம் விசாரனை வைக்கப்படும் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (אָנֹכִי אֶדְרֹשׁ מֵעִמּֽוֹ׃ 'ஆனோகி 'எத்ரோஷ் மெ' 'இம்மோ- நான் அவனை விசாரனைசெய்வேன்).

ஆரம்ப காலம் முதலே, திருச்சபை தந்தையர்கள், இந்த இறைவாக்கினரை இயேசுவுடன் ஒப்பிடுகின்றனர். பேதுரு தன்னுடைய முதலாவது உரையில் மேலே உள்ள முதல் மூன்று வரிகளையும் கவனமாக கையாள்கிறார். அவர் கூற்றுப்படி இந்த இறைவாக்கினர், மெசியாவாகிய இயேசு. (காண்க தி.பணி 3,22-23).

வ.20: இந்த வரி சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த இடத்திலே குறிப்பிடப்படுகின்ற இறைவாக்கனர், வேறு ஒரு இறைவாக்கினராக இருக்க வேண்டும். தமிழ் விவிலியம் 'ஒரு இறைவாக்கினர்' என்று சரியாக மொழிபெயர்க்கிறது, (הַנָּבִיא ஹநாவி'- ஒரு இறைவாக்கினர்). மேற்சொன்ன விசேட இறைவாக்கினரை வேறுபடுத்த இந்த 'ஒரு இறைவாக்கினர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த இறைவாக்கினருக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. இவர் ஆண்டவரின் வாக்குகளை பறைசாற்றாமல், தன்னுடைய சொந்த கருத்துக்களை அவர் முன்வைத்தால், அவர் தண்டிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. சொந்த கருத்துக்களை குறிக்க, 'அவன் வேறு தெய்வங்களின் பெயரால் பேசினால்' (בְּשֵׁם אֱלֹהִים אֲחֵרִים பெஷெம் 'எலோஹிம் 'அஹெரிம்), என்று சொல்லப்படுகிறது. இந்த வரி, இறைவாக்கினர் அல்ல மாறாக அவர் இறைவாக்குரைக்கும் கடவுள்தான் முக்கியமானவர் என்பதைக் காட்டுகிறது. வேறு தெய்வங்களுக்காக பேசும் இறைவாகினருக்கான தண்டனை பயங்கரமாக இருக்கிறது. அவர் சாவார் என்கிறார் கடவுளாகிய ஆண்டவர் (וּמֵת הַנָּבִיא הַהוּא׃ வுமெத் ஹநாவி' ஹஹு').

வவ.21: ஆண்டவருடைய இறைவாக்கினர் அல்லாததை எவ்வாறு அறிவது என்பதை மோசே கேட்காமலே ஆண்டவர் விளக்குகிறார். இது பல இஸ்ராயேலர்களுடைய கேள்வியை பிரதிபலிக்கிறது. இறைவாக்கினர்கள் உரைப்பது நடைபெறாமல் போனால் அவர்கள் பொய் இறைவாக்கினர்கள் என்பது ஆண்டவரின் விடை. இப்படியான இறைவாக்கினர்களுக்கு மக்கள் அஞ்சவேண்டியதில்லை என்பது செய்தி.

இஸ்ராயேலின் வரலாற்றில் பல பொய் இறைவாக்கினர்க்ள தோன்றி, தலைவர்களையும் மக்களையும் குழப்பியிருக்கிறார்கள். இந்த பின்புலத்தில் இந்த வரி முக்கியத்துவம் பெறுகிறது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 95

புகழ்ச்சிப் பாடல்

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.
3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன் மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.
6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'.
11எனவே, நான் சினமுற்று, ‛நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.


கடவுளை பாறை (צוּר ட்சூர்) என்று விழிக்கும் இந்த திருப்பாடல் மிக முக்கியமான புகழ்ச்சிப் பாடல்களில் ஒன்று. மீட்பின் மகிழ்ச்சியான நற்செய்தி என்றும் இதனை ஆய்வாளர்கள் பெயரிடுகின்றனர். கடவுளுக்கு, பாறை, அரசர், படைத்தவர், உருவாக்கியவர், ஆயன், அத்தோடு கீழ்ப்படிவு கொடுக்கப்படவேண்டியவர், என்ற பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பாடலில் சில இடங்களில் பல கடவுள் வழிபாடுகளை நினைவூட்டுகிற சொற்பதங்கள் காணப்பட்டாலும், இவை ஒரு கடவுள் வழிபாட்டை மையப்படுத்தவே பாவிக்கப்பட்டுள்ளன என்றே எடுக்க வேண்டும். அத்தோடு கடவுளுக்கு பாவிக்கப்படும் சொற்கள் (எலோகிம் אֱלֹהִים) வேற்று தெய்வங்களுக்கு (אֱלִילִ֑ים எலிலிம் தி.பா 96,5) பாவிக்கப்படவில்லை அல்லது தவிர்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அதற்க்கு பதிலாக வேறு சொற் பதம் பாவிக்கப்பட்டுள்ளது.

தொண்ணூற்றைந்தாவது திருப்பாடல் காரண-காரிய வடிவத்தில், அத்தோடு அதிகமான கவி அடிகள் திருப்பிக்கூறுதல் என்ற எபிரேய கவி நயத்தில் அமைந்துள்ளது, இவ்வாறு:

அ1. (வவ.1-2). மகிழ்வுடன் ஆராதிக்க ஒரு அழைப்பு

ஆ1. (வவ.3-5) ஆண்டவருடைய மாட்சியை பற்றிய விளக்கம்

அ2. (வ.6). வணக்கத்துடன் ஆராதிக்க ஒரு அழைப்பு

ஆ2. (வ.7அ,ஆ,இ) எமது சலுகைகளைப் பற்றிய விளக்கம்

அ3. (7ஈ). பணிவிற்க்கான ஒரு அழைப்பு

ஆ3. (வவ.8-11). அதனுடைய முக்கியமான விளைவுகளைப் பற்றிய விளக்கம்

வவ.1-2: நம் மீட்பின் பாறை (צ֣וּר יִשְׁעֵֽנוּ ட்சூர் யிஷ்'எனூ) என்று ஆண்டவரை விழிப்பது இஸ்ராயேல் கவி வரிகளின் முக்கியமான ஒரு சொற்றொடர். பாலை நிலத்தில் அசையாமல் இருக்கும் கடினமான பாறைகள் கடவுளின் பலத்தையும் மாட்ச்சியையும் மக்களுக்கு நினைவூட்டின. பாறைகளைப்போலவே கடவுளும் அவர் பலத்தை பொறுத்த மட்டில், அசையாதவர் அல்லது அசைக்கமுடியாதவர் என்ற கருத்தை கொண்டுவருகின்றது.

'அவர் திருமுன் செல்வோம்' என்பதற்கு 'அவர் முகத்தின் முன் செல்வோம்' (פָנָיו பானாவ்- அவர் முகங்கள்) என்ற வரிகள் எபிரேயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வ.3: முதல் இரண்டு வரிகளுக்கான காரணங்கள் இந்த வரியில் விளக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் பெரிய இறைவன் என்பதும் (גָּדוֹל יְהוָה காதோல் அதோனாய்), தெய்வங்கள் எல்லாவற்றிக்கும் மோலான பேரரசர் (עַל־כָּל־אֱלֹהִים 'அல்-கோல்- 'எலோஹிம்) என்பதும் இதற்கான காரணங்கள். கடவுளை அரசராகவும், தெய்வங்களை அரசர்களாகவும், பார்க்கின்ற சிந்தனைகள் இந்த காலத்தில் வழக்கிலிருந்தன. இஸ்ராயேல் இறைவாக்கினர்களுக்கு கடவுளை அரசராக காட்டவேண்டிய தேவையிருந்தது. கடவுள்தான் இஸ்ராயேலருக்கு என்றும் அரசர், மனிதர்கள் அவர்களின்; அரசராக இருக்க முடியாது, என்ற சிந்தனையை இது நினைவூட்டுகிறது (ஒப்பிடுக 1சாமு 8:7).

வவ.4-5: கடவுளுடைய படைப்பாற்றல்கள் விவரிக்கப்படுகின்றன. ஆழிகள் (מֶחְקְרֵי־אָרֶץ மெஹ்கெரெ-'ஆரெட்ஸ்- பூவுலகின் ஆழ்பகுதிகள்), மலைகளின் கொடுமுடிகள் (תוֹעֲפוֹת הָרִים தோ'அபோத் ஹாரிம்- மலைகளின் உச்சிகள்), கடல் (הַיָּם ஹய்யாம்- தண்ணீர்), உலர்ந்த தரை (יַבֶּשֶׁת யாப்பேஷெத்-உலர்தரை) போன்றவை கடவுளாலே படைக்கப்பட்டன என்னும் போது கடவுளின் மாட்சிமை வெளிப்படுத்தப்படுகிறது. எந்த ஒரு அரசனாலும் அல்லது வேறு தெய்வங்களாலும் இவை அனைத்தையும் படைத்திருக்க முடியாது என்ற வாதத்தை ஆசிரியர் சொல்லாமல் சொல்லுகிறார்.

வ.6: இப்படியாக ஆண்டவர் வணக்கத்துக்குரியவராக இருக்கின்ற படியால் அவரை வணங்க ஆசிரியர் அழைப்பு விடுகிறார். முழந்தாள் படியிட்டு வணங்குதலை, அதிகமான வேளைகளில் எபிரேய மொழி வணக்க அடையாளமாக குறிக்கிறது (נִשְׁתַּחֲוֶה நிஷ்த்தாஹவெஹ் வணங்குவோமாக). வணங்குதலும் முழந்தாள் படியிடுதலும் ஒத்த கருத்துச் சொற்களில் பாவிக்கப்பட்டுள்ளன.

கடவுள்தான் மக்களை உருவாக்கியவர் என்ற தொடக்க நூல் விசுவாசக் கோட்பாடும் இங்கே நினைவூட்டப்படுகிறது (יְהוָה עֹשֵׂנוּ அதோனாய் 'ஓஸ்செனூ- நம்மை செய்தவர்).

வ.7: இந்த வரி வித்தியாசமாக கடவுளின் மக்கள் முதலில் யார் என்றும், கடவுள் யார் என்றும் விளங்கப்படுத்தி, பின்னர் கடவுளுக்கு செவிசாய்க்க ஒரு அழைப்பை விடுக்கிறது. ஆடும் ஆயனும் என்ற உருவகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் தெரிந்த மற்றும் அந்நியோன்யமான உருவகங்கள்.

அ. அவர் மேய்சலின் மக்கள் (עַם מַרְעִיתוֹ 'அம் மர்'இதோ).

ஆ. அவர் கைகளின் ஆடுகள் (צֹאן יָדוֹ ட்சோ'ன் யாதோ).

வவ.8-10: பணியாதவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை வரலாற்றின் பாடத்திலிருந்து விளக்க முயல்கிறார் ஆசிரியர். மெரிபாவிலும் மாசாவிலும் இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு செய்த காட்டிக்கொடுப்புக்கள் முக்கியமான படிப்பினைகளாக இஸ்ராயேல் பிள்ளைகளால் தங்கள் மறையறிவின் போது நினைவுகூறப்பட்டது.

அ. மெரிபா (מְרִיבָה மெரிவாஹ்) என்றால் கலவரம் என்று பொருள். இது இரண்டு வித்தியாமான நிகழ்வுகளாக விவிலியத்தில் பதியப்பட்டுள்ளது (ஆராய்க வி.ப 17,1-7 மற்றும் எண் 20,1-13 அத்தோடு தி.பா 81,7: 106,32). இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தண்ணீரைப் பற்றிய முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

ஆ. மாசா (מַסָּה மாஸ்சாஹ்) என்பது சோதித்தலைக் குறிக்கிறது. மெரிபாவைப்போல இதுவும் இஸ்ராயேலரின் முணுமுணுப்பையும், முறைப்பாடையும் பதிவு செய்த நிகழ்வு. இதுவும் கடவுளுக்கெதிரான ஒரு குற்றச் செயலாக இஸ்ராயேலரிடையே கணிக்கப்பட்டது (காண்க வி.ப 17,1-7: இ.ச 6,16: 9,22: 33,8).

கடவுளை சோதித்தால், மனிதருக்கு கிடைக்கும் விளைவு என்ன என்பதை இங்கே காணலாம். கடவுளை சோதித்ததை கடவுளுக்கு வெறுப்பூட்டியதாக ஆசிரியர் காண்கிறார். சோதித்ததும், வெறுப்பூட்டியதும், கடவுளிடம் இருந்து மனிதருக்கு தூரத்தை அதிகமாக்கியது என்கிறார் ஆசிரியர். அத்தோடு கடவுளின் மக்கள் என்ற புதிய பெயரை பெற்றுக்கொள்கின்றனர்.

அ. அலைகின்ற இதயத்தை கொண்ட மக்கள் (עַם תֹּעֵי לֵבָב הֵם 'அம் தோ'எ லெவாவ் ஹெம்) ஆ. அவர்கள் கடவுளின் பாதையை அறியாத மக்கள் (הֵ֗ם לֹא־יָדְעוּ דְרָכָי ஹெம் லோ'-யாத் 'வூ தெராகாய்)

வ.11: இறுதியாக இந்த மக்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது, அதாவது அவர்கள் பாலைநிலத்திலே மடிந்தார்கள், அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு நுழைய முடியாமல் போனார்கள். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இங்கே ஒரு புதிய உருவகம் கொடுக்கப்படுகிறது அதாவது அது 'இளைப்பாற்றின் இடமாக' (מְנוּחָתִי மெநூஹாதி - என் இளைப்பாறுதல்) பார்க்கப்படுகிறது. இஸ்ராயேல் மக்களை மந்தைகளாக பார்க்கும் ஆசிரியர், மந்தைகளுக்கு இளைப்பாறும் இடம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கானானை இளைப்பாறும் இடமாக காண்கின்றார். எகிப்பதில் இருந்து வந்த இஸ்ராயேல் மக்களில் அதிகமானவர்கள் பாலைநிலத்திலே மடிந்தார்கள், அதற்கான காரணத்தை இந்த திருப்பாடல் காட்டுகிறது.



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 7,32-35

1கொரிந்தியர் 7,32-35 32நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். 33ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். 34இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். 35உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

இன்றைய இரண்டாம் வாசகம், கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதலாவது திருமுகத்திலிருந்து எடுக்கப்படுகிறது. ஏற்கனவே திருமணத்தின் இவ்வுலக தன்மையைப் பற்றி பறைசாற்றுகின்ற கொரிந்தியர் திருமுகம் இன்னும் சில படிப்பினைகளை இந்த வரியில் தருகின்றது. திருமணம் என்பது ஓர் உடன்படிக்கை மற்றும் கடமை, திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பவுலுடைய சிந்தனைப்படி திருமணம் ஆகாதவர்கள், கடவுளுக்கு அதிகமான நேரத்தை கொடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்.

சில தொல்பொருளியல் ஆய்வுகளின் படி, இந்த திருமுகம் எழுதப்பட்ட காலத்தில் கொரிந்து நகரில் பஞ்சம் மற்றும் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கலாம். இதனை கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கான அடையாளமாக கருதியிருக்கலாம், இதனால் திருமணம் மற்றும் குடும்பம் பற்றிய இவ்வுலக கட்டுப்பாடுகளை அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.

வ.32: தன் மக்கள் கவலையில்லாமல் இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய முதலாவது நோக்கம் என்கிறார் பவுல் (Θέλω δὲ ὑμᾶς ἀμερίμνους εἶναι. தெலோ தெ ஹுமாஸ் அமெரிம்நூஸ் எய்னாய்- நீங்கள் சங்கடம் இல்லாமல் இருப்தை விரும்புகின்றேன்). மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார் என்பது பவுலுடைய சிந்தனை. திருமணமாகாத நிலை ஒருவருக்கு பல சுதந்திர நிலையைக் கொண்டுவருகிறது, இப்படியான ஒருவர் கிறிஸ்துவின் சீடராக இருந்தால், அவருக்கு கடவுள் பற்றியதை பற்றி சிந்திக்க அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது என்கிறார்.

திருமணமாகதவருடைய சிந்தனையும், எப்படி கடவுளுக்கு உகந்தவற்றை செய்யலாம் என்பதாக இருக்கிறது என்றும் மேலதிகமாக சொல்கிறார் பவுல் (πῶς ἀρέσῃ τῷ κυρίῳ போஸ் அரெசே டோ கூரியோ- எப்படி கடவுளுக்கு திருப்திப்படுவது).

வ.33: மணமாகாதவரைப் பற்றி பேசியவர், இந்த வரியில் மணமானவரைப் பற்றி பேசுகிறார். பவுல் திருமணமானவாராக இருந்து, பின்னர் தனிமனிதராகி இருக்கவேண்டும். இந்த வரிகள் அவருடைய அனுபவத்தைப் போல இருக்கிறது. திருமணமானவர் (γαμήσας காமேசாஸ்) உலகைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்கிறார் (τοῦ κόσμου டூ கொஸ்மூ- உலகைச் சார்ந்த). திருமணம் உலகில் வாழச் சொல்கிறது. இந்த உலகில் திருமணமானவர்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன. தன்னுடைய மனைவியை அவர் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும், தன் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். உறவுகளை பேண வேண்டும். பவுல் இவற்றை எதிர் மறையாக சொல்லவில்லை மாறாக சாதாரண கடமையாகவே சொல்கிறார்.

திருமணமாகி தன்குடும்பத்தை பற்றி சிந்திக்கமால் இருக்கிறவர் நல்ல கணவராக இருக்க முடியாது, இப்படியான நிலையை பவுல் ஆதரிக்கவில்லை. பவுலுடைய எழுவாய்ப் பொருள், கடவுள் பற்றிய சிந்தனை. அவர் திருமணத்தை வெறுத்தார் என்று சொல்வதற்கில்லை.

வ.34: இந்த வரியில் பெண்களை பற்றி பேசுகிறார் பவுல். மணமாகாத பெண்களும் (ἡ γυνὴ ἡ ἄγαμος ஹே குனே ஹே அகாமொஸ்), கன்னிப் பெண்களும் (ἡ παρθένος ஹே பார்தெனொஸ்), ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயவராகின்றனர் என்கிறார்.

இந்த சொற்பிரயோகங்கள் சற்று வித்தியாசமானவையாக இருக்கின்றன. மணமாகாத பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது கேள்வியாக எழலாம். இங்கே மணமாகாத பெண்கள் என்போர் கைம்பெண்களை குறிக்கிறது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பார்தெனொஸ் என்பவர்கள் இளம் பெண்களைக் குறிக்கலாம். அதேவேளை இந்த இரண்டு சொற்களும் (அகாமொஸ், பார்தெனொஸ்) மணமாகாத இளம் பெண்களையே குறிக்கிறது என்ற வாதமும் இருக்கிறது.

அவர்கள் உள்ளத்திலும் உடலிலும் தூய்மையாக இருக்கிறார் என்பது (ἁγία καὶ τῷ σώματι καὶ τῷ πνεύματι· ஹகியா காய் டோ சோமாடி காய் டோ புனூமாடி), திருமணமானவர்களை தூய்மையற்றவர்கள் என்று பவுல் கருதினாரா என்று சிந்திக்க வைக்கிறது. திருமணத்தை யூத மதமோ அல்லது, கிரேக்க-உரோமைய மதங்களோ தூய்மையற்றது என கருதவில்லை. திருமணமாகாமல் கன்னியாக இருப்பதையும் இந்த மதங்கள் வரவேற்கவில்லை. இந்த சிந்தனைகளை ஆரம்ப கால திருச்சபை, தன்னுடைய சொந்த சிந்தனையில் இருந்தே பெற்றிருக்க வேண்டும். தூய்மை என்பதை இந்த பின்புலத்தில் நோக்கினால், அது அக்கறை என்ற அர்த்த்தையே கொடுக்கிறது.

இவர்களைப் போலல்லாது, மணமானவர்கள் நிச்சயமாக உலக காரியங்களில் அக்கறை கொள்ளவேண்டும், அத்தோடு தன் கணவரையும் திருப்பதிப்படுத்த வேண்டும். அக்கால திருமணங்கள் பெண்களை வீட்டிற்குள் கட்டிப்போட்டதையும் இந்த வேளையில் நினைவுகூற வேண்டும். இதனை பவுல் பிழை என்று சொல்லவில்லை, மாறாக இந்த நிதர்சனத்தையே அவர் கிறிஸ்தவ மக்களுக்கு சொல்கிறார். பவுல் துறவற வாழ்வை முன்னிலைப்படுத்தினாரா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர். இதற்கான நேர்முகமான விடைகள் குறைவாகவே உள்ளன. இக்காலத்தில் திருமணம் முடிக்காத துறவற வாழ்வு பிரசித்தி பெற்று இருந்ததற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

வ.35: தன்னுடைய வியாக்கியானங்களின் காரணத்தை இந்த வரியில் சரியாக முன்வைக்கிறார் பவுல். தன் மக்களை கட்டுப்படுத்துவது தன்னுடைய நோக்கம் அல்ல என்கிறார் (οὐχ ἵνα βρόχον ὑμῖν ἐπιβάλω ஊக் ஹினா புரொகொன் ஹுமின் எபிபாலோ- கரங்களைவைத்து உங்களை கட்டுப்படுத்த அல்ல).

தன் வாசகர்களின் நலன்களுக்காகவே இவற்றை சொல்வதாகச் சொல்கிறார் (ὑμῶν °αὐτῶν σύμφορον λέγω ஹுமோன் அவுடோன் சும்பொரொன் லெகோ- உங்களுடைய சொந்த நலனுக்காகவே சொல்கிறேன்). அந்த நலன் என்னவென்பதை திருப்பிச் சொல்கிறார், அதாவது தன் மக்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பதே அந்த நோக்கம் என்பது சொல்லப்படுகிறது. முழு மனதை, பிளவுபடாத மனம் என்று கிரேக்க மொழி காட்டுகிறது (ἀπερισπάστως அபெரிஸ்பாஸ்டோஸ்).


நற்செய்தி வாசகம்
மாற்கு 1,21-28

தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்தல்

(லூக் 4:31-37)

21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். 22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். 23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். 24அவரைப் பிடித்திருந்த ஆவி, 'நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று கத்தியது. 25'வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ' என்று இயேசு அதனை அதட்டினார். 26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. 27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, 'இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். 28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.


மாற்கு நற்செய்தி அறிமுகம், கடந்த வாரத் தொடாச்சி:

மாற்கு நற்செய்தி எப்போது எழுதப்பட்டதென்பது ஒரு முக்கியமான கேள்வி. அனைத்து நற்செய்திகளுக்கும் முன்னர் மாற்கு நற்செய்தி எழுதப்பட்டதென்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஏறக்குறைய கி.பி 60-70 ஆண்டுகளில் இந்த நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த காலப்பகுதியில்தான் பேதுருவும் பவுலும் மறைசாட்சிகளாக மரித்திருந்தார்கள் (கிபி. 64). அத்தோடு உரோமைய இராணுவத்தால் எருசலேம் தேவாலயம் அழிக்கப்டுவதற்கு முன் (கி.பி 70) மாற்கு நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். இயேசு எருசலேம் தேவாலயம் நிச்சயமாக அழிவுறும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கு மாற்கு நற்செய்தி நல்ல உதாரணமாகலாம்.

யோவான் மாற்கு என்பவர்தான், மாற்கு நற்செய்தியை எழுதினார் என்பதற்கு பல அகச் சான்றுகள் கிடைக்கின்றன (காண்க தி.ப 12,12). இருப்பினும் மாற்கு நற்செய்தியில் இதற்கான சான்றுகளை நேரடியாக காணமுடியாது. மாற்கு நற்செய்தி என்ற தலைப்பும் (ΚΑΤΑ ΜΑΡΚΟΝ காடா மார்கொன்- மாற்குவின் படி), நற்செய்தியில் இருந்திருக்கவில்லை. ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருந்திருக்காது, அவர்கள் இதனை மாற்குதான் எழுதினார் என்பதை அப்படியே நம்பினார்கள், அல்லது அவர்களுக்கு தெரிந்திருந்தது. யோவான் மாற்கு அக்காலத்தில் பேதுரு-பவுல் போன்றவர்களைப் போல பிரசித்தி பெற்றவராக இருக்கவில்லை, இப்படியாக பிரசித்தியில்லாதவரை தேவையின்றி இந்த புத்தகத்திற்கு ஆசிரியராக அவர் முன்மொழிந்திருக்க மாட்டார்கள், ஆக இவர்தான் இதன் உண்மைய ஆசிரியராக இருந்திருக்கலாம். யோவான் மாற்கு பவுலிற்கும் பேதுருவிற்கும் உதவியாளராக இருந்திருக்கிறார் (காண்க கொலோ 4,10).

யோவான் மாற்கு ஒரு எருசலேம் வாசியாக இருந்த படியால், அவருக்கு இயேசுவின் பல சீடர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர் சிறுவனாக இயேசுவை பின்பற்றிய அனுபவத்தைவிட, அவரை பின்பற்றிய மூத்த சீடர்களின் வாக்குமூலம், இவருக்கு உதவியாக இருந்திருக்கும். ஆரம்ப கால திருச்சபை இயேசுவின் தாய் மரியாவில் வீட்டில் அடிக்கடி கூடியதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கின்றன, மாற்குவும் அவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம்.

தீய ஆவி பற்றிய அறிவும், பயமும் அக்காலத்தில் சற்று அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். பேயோட்டுதலை அக்கால மத தலைவர்கள் தொழில்களாகவே செய்திருக்கிறார்கள். அதிகமான வேளைகளில் மனநோய்களும், குணமாக்க முடியாத உடல் நோய்களும் கூட, பேயின் செயல்களாகவே கருதப்பட்டன. இயேசுகூட சில வேளைகளில் பேய்களை வெளிப்படையாகவே விரட்டுகிறார்.

வ.21: இயேசு தன் சீடர்களை அழைத்தன் பின்னர், யோர்தான் பகுதியிலிருந்து கப்பர்நாகும் பகுதிக்கு வருகிறார். இதுதான் இயேசுவின் சொந்த நகராக இருந்தது. இந்த பகுதியில் இருந்துதான் இயேசுவின் அதிகமான சீடர்கள் வந்தார்கள். இது கலிலேயாவை மிக ஒட்டிய பகுதி. இங்கே ஒரு முக்கியமான செபக்கூடமும் இருந்திருக்கிறது (Καφαρναούμ காபார்னாஊம்). கலிலேயா, கடல் மட்டத்திலிருந்து 200 மீற்றர் தாழ்வான பகுதி, அத்தோடு இதுதான் இயேசுவின் முக்கியமான பணித்தளமும் கூட.

கப்பர்நாகுமில் இயேசு ஓய்வுநாட்களில் செபக்கூடம் சென்று கற்பிக்கிறார். இதனை அவர் பல முறைசெய்திருக்க வேண்டும். இதனை முடிவற்ற இறந்த கால வினைச்சொல்லில் மாற்கு காட்டுகிறார் (ἐδίδασκεν எதிதாஸ்கென்-கற்பித்துவந்தார்).

வ.22: இயேசுவின் போதனைகள் கப்பர்நாகும் வாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. இங்கே ஆச்சரியம் என்பது நம்பிக்கையோடு வரவேண்டியதில்லை. அதிகமான வேளையில், புதிய ஏற்பாட்டில் இந்த ஆச்சரியம் என்ற சொல் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது (ἐκπλήσσω எக்பிலேஸ்சோ). நேர்முகமாகவும் பார்க்கப்படலாம். இயேசு செபக்கூடத்தில் தொடர்ச்சியாக கற்பிக்கிறார் என்றால், மற்றய யூத மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர் என எடுக்கலாம். இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. அவர் மறைநூல் அறிஞர்களைப் போல பேசவில்லை (οὐχ ὡς οἱ γραμματεῖς ஊக் ஹோஸ் ஹொய் கிராம்மாடெய்ஸ்), அத்தோடு அவர் அதிகாரத்தோடு பேசினார் (ὡς ἐξουσίαν ἔχων ஹோஸ் எக்ட்சூசியான் எகோன்). மறைநூல் அறிஞர்கள் என்பவர்கள், விவிலியத்தை பிரதி செய்கிறவர்களையும், அதிலே புலமை பெற்றிருந்தவர்களையும் குறிக்கிறார்கள். இவர்கள் மறையுரையாற்றுகின்றபோது பல சான்றுகளை கொடுத்தே மறையுரைத்தார்கள். ஆனால் இயேசு யாருடைய சான்றுகளையும் தங்கியிராது தன்னுடைய சொந்த உதாரண கதைகளைக் கொண்டே விவிலியத்தை விளக்கியது, மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கலாம். இயேசு யாருடைய அதிகாரத்தையும் உதவிக்கு எடுக்காமல், தன்னுடைய அதிகாரத்தை மட்டுமே பாவிக்கிறார் (மறைநூல் அறிஞர்கள் அதிகமான மோசேயின் அதிகாரத்தையே உதாரணத்திற்கு எடுத்தனர்).

வ.23: தொழுகைக் கூடத்தில் பேய்பிடித்தவர் இருந்ததாகச் சொல்கிறார் மாற்கு. தீய ஆவி பிடித்தவர் ஏற்கனவே தொழுகைக் கூடத்திற்கு வந்திருக்கிறார். தீய ஆவி பிடித்தவர்களை யூதர்கள் தொழுகைக் கூடத்திற்கு கொண்டு வந்தனர், அல்லது அவர்கள் தாங்களாகவே வந்தார்கள் என்பது போலத் தெரிகிறது (ἄνθρωπος ἐν πνεύματι ἀκαθάρτῳ அந்த்ரோபொஸ் என் புனூமாடி அகாதார்டோ- அசுத்த அவிபிடித்த மனிதன்).

வ.24: தீய ஆவி விசுவாச அறிக்கை செய்கிறது. இந்த தீய ஆவியின் கத்துதல், மாற்கு நற்செய்தியின் சுருக்கத்தை சொல்கிறது. தீய ஆவி இயேசுவை நசரேத்தூர் இயேசு (Ἰησοῦ Ναζαρηνέ இயேசூ நாட்சாரெனெ- நசரேத்து இயேசுவே) என்று சொல்கிறது. இதன் மூலம் இயேசுவின் மனித அடையாளங்களை பேய் அறிந்திருக்கிறது, ஆக இயேசு உண்மையான மனிதராக இருந்தார். இயேசு என்பவர் ஒரு மாயை அல்ல என்பதை பேயின் வாய் மூலமாக மாற்கு காட்டுகிறார்.

இரண்டாவதாக பேய் இயேசுவை கடவுளுக்கு அர்ப்பணமானவர் என அறிக்கையிடுகிறது (ὁ ἅγιος τοῦ θεοῦ. ஹகியோஸ் டூ தியூ- கடவுளின் தூயவர்). இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை மனிதருக்கு அப்பாற்பட்ட ஒரு சக்கி அறிந்திருக்கிறது, ஆக இயேசு உண்மையிலே கடவுள் என்பதை இது காட்டுகிறது.

இறுதியாக பேய், தங்களை அழிக்கவே இயேசு வந்தார் என்பதையும் காட்டுகிறது (ἦλθες ἀπολέσαι ἡμᾶς; எல்தெஸ் அபொலெசாய் ஹேமாஸ்- எங்களை அழிக்கவா வந்தீர்?). அத்தோடு தனக்கு இயேசு யார் என்பது தெரியும் என்றும் சொல்கிறது (οἶδά ஒய்தா-எனக்கு தெரியும்). மெசியாவின் வருகை சாத்தான்களை அழிக்கும் என்பதை யூதர்கள் நம்பினார்கள். ஆக பேய் கத்துவதிலிருந்து மெசியாவின் வருகை வந்துவிட்டது என்பதை காட்டுகிறார் மாற்கு. இந்த தீய ஆவியின் விசுவாச அறிக்கை, இயேசுவை விசுவசிக்காதவர்களுக்கு எச்சரிக்கை போல இருக்கிறது. பேய்க்கே தெரிந்திருக்கிறது, உங்களுக்கு தெரியவில்லையே என்பது போல உள்ளது. அசுத்தமானது, தூய்மையானவரைக் கண்டுகொள்கிறது.

வ.25: இயேசு பேயை அதட்டுகிறார். வாயை மூடச் சொல்கிறார், அத்தோடு வெளியே போகச் சொல்கிறார் (φιμώθητι καὶ ἔξελθε பிமோதேடி காய் எட்செல்தே- அமைதிகார் வெளியேறு). இந்த செயற்பாடுகளை சாதாரண மனிதர்களால் செய்ய முடியாது. இந்த கட்டளைச் சொற்கள் இயேசுவை கடவுள் என காட்டுகின்றன. கடவுளால் மட்டுமே பேயை அதட்ட முடியும்.

வ.26: தீய ஆவி சாதாரணமாக வெளியேறாமல், தான் பிடித்திருந்தவருக்கு பெரும் வலிப்பை உருவாக்கிய பின்னரே வெளியேறுகிறது. இதன் மூலமாக சாத்தான் ஆண்டவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டாலும், தான் உண்மையாகவே சாத்தான் என்பதை வாசகர்களுக்கு காட்டியே செல்கிறது. வலிப்பு கூச்சல் போன்றவை தீய ஆவியின் செயற்பாடுகளைக் குறிக்கின்றன. இருந்தும் அது வெளியேறுகிறது (ἐξῆλθεν ἐξ αὐτοῦ எக்சேல்தென் எக்ஸ் அவுடூ-அவரிடமிருந்து வெளியேறியது.).

வ.27: இதனை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் திகைப்பை பதிவு செய்கிறார் மாற்கு. அவர்கள் திகைத்து, இது என்ன புதிய அதிகார போதனையாகவும், தீய ஆவிகளும் இயேசுவிற்கு கீழ்ப்படிகின்றனவே என்று வியக்கின்றனர். இயேசுவின் அதிகார போதனை அவரை மனிதர்க்கு உயர்ந்த இடத்தில் வைக்கிறது. தீய ஆவியின் வெளியேற்றம், இயேசுவின தூய்மையைக் காட்டுகிறது.

இந்த இடத்திலும் இவர்களின் ஆச்சரியம் (θαμβέω தாம்பெயோ), இவர்களின் பலவீனமாகவே காட்டப்படுகிறது. இவர்கள் விசுவாசம் கொள்ளாமல், ஆச்சரியம் மட்டுமே கொள்கிறார்கள்.

வ.28: இயேசுவைப் பற்றிய செய்தி கலிலேயா முழுவதும் பரவுகின்றது. இயேசுவின் செய்தி பரவ பேய்களும் காரணமாக இருக்கின்றன. பேய்களுக்கு நன்றி.

இந்த வரிகள் மூலமாக, இயேசு உண்மையாகவே அதிசயமானவர் என்பதை மாற்கு காட்டுகிறார். அவரைப் பற்றிய செய்தி வதந்தி அல்ல என்பதும் காட்டப்படுகிறது.

பேய்கள் காலத்தை கடந்தவை.

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி, இவைகள் ஆண்டவரை காட்டுகின்றன.

அனைத்து மனநோய்களும், பேய்களாக இருக்கவேண்டிய தேவையில்லை,

அனைத்து மனநோய்களையும், பேய் என சொல்பவருக்கு

பேய்பிடித்திருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

பேய்களை விரட்டலாம், ஆணடவரின் துணையோடு,

ஆனால் பேய் போல நடிப்பவர்களை விரட்டுவது கடினம்.

அதிகமான பேய்கள், மனத்துள்ளே இருக்கின்றன.

அசுத்தமான உள்ளத்தில் ஆண்டவருக்கு இடம் இல்லை.

சுத்தமான இடத்தில் பேய்க்கு இடம் இல்லை.

ஆண்டவரின் மக்களை பேய்கள் பிடிப்பதில்லை,

பேய்களை சாட்டி வாழ்கிறவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள்.

அன்பு ஆண்டவரே,

உம்மை கடவுளின் தூயவராகக் கண்டு விசுவசிக்க அருள் தாரும், ஆமென்.