இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம் (ஆ)

முதல் வாசகம்: 1சாமுவேல் 3:3-10.19
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 40
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 6,13-15.17-20
நற்செய்தி: யோவான் 1,35-42


முதல் வாசகம்
1சாமுவேல் 3:3-10.19

3கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார். 4அப்போது ஆண்டவர், 'சாமுவேல்' என்று அழைத்தார். அதற்கு அவன், 'இதோ! அடியேன் என்று சொல்லி, 5ஏலியிடம் ஓடி, 'இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?' என்று கேட்டான். அதற்கு அவர், 'நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்' என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான். 6ஆண்டவர் மீண்டும் 'சாமுவேல்' என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?' என்று கேட்டான். அவரோ, 'நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்' என்றார். 7சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. 8மூன்றாம் முறையாக ஆண்டவர் 'சாமுவேல்' என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?' என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். 9பின்பு ஏலி சாமுவேலை நோக்கி 'சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று பதில் சொல்' என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். 10அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல், சாமுவேல்' என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், 'பேசும், உம் அடியேன் கேட்கிறேன்' என்று மறு மொழி கூறினான். 19சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.

1,2 சாமுவேல் புத்தகங்கள் வரலாற்று நூல்களில் ஒன்றாகக் கருததப்படுகிறது. வரலாறு என்பது விவிலியத்தில் வித்தியாசமாக நோக்கப்படுகிறது. சாதார நவீன உலக வரலாற்று பார்வை விவிலியத்தின் பார்வையில்லை. விவிலியத்தில் வரலாற்றின் நாயகன் கடவுள்தான் என்பது காட்டப்படுகிறது. 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள், மற்றும் 1,2 குறிப்பபேடு போன்ற புத்தகங்கள் பல விதத்தில் ஒரே நோக்கத்தை நோக்கி செல்கின்றன, இருப்பினும் இவை வராலாற்று துணை காதநாயகர்களை பார்க்கும் விதம் வௌ;வேறாக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில் 1,2 சாமுவேல் புத்தகங்கள் ஒரு அலகாகவே இருந்திருக்கிறது. பழைய கிரேக்க மூல விவிலியம் ஒன்று, 1,2 சாமுவேலையும், 1,2 அரசர்களையும் ஒரே புத்தகமாக கருதி அவற்றை நான்கு பிரிவுகளாக பிரித்து அரசுகள் என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறது. இலத்தின் மொழிபெயர்ப்புக்களும் இதனையே பின்பற்றின. 16ம் நூற்றாண்டில்தான் முதல் முறையாக சாமுவேல் புத்தகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

சாமுவேல் புத்தகத்தை நுணுக்கமாக வாசிப்பதில் ஆய்வாளர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். மிக முக்கியமான சிக்கல், பாட சிக்கல். எபிரேய பாடத்தை பின்பற்றுவதா அல்லது கிரேக்க பாடத்தை பின்பற்றுவதா என்பது அந்த சிக்கல். இரண்டாவது இலகிய வகை சிக்கல். சாமுவேல் புத்தகம் ஒரு நிலையான இலக்கிய வகையை சார்ந்தில்லை. மூன்றாவது வரலாற்று சிக்கல், சாமுவேல் வரலாற்றை பார்க்கும் விதமும், விவிலியம் அல்லாத புத்தகங்கள் இதே வரலாற்றை பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த மூன்றும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படியிருக்கும். இதற்கு நல்ல உதாரணம்: தாவீதும் கோலியாத்தும் கதை. இந்த இடத்தில் எபிரேய பாடம் பெரியதாகவும், கிரேக்க பாடம் சிறியதாகவும் இருக்கிறது. ஆய்வாளர்கள், இங்கே கிரேக்க பாடத்தை மூலமானதாக எடுக்கிறார்கள்.

சாமுவேல் பல வரலாற்று கதாநாயகர்களை முன்வைக்கிறார். இதில் தாவீது ஈடு இணையற்றவர். இருப்பினும் சாமுவேல் புத்தகம் தாவீதை முதன்மைப்படுத்தவில்லை, ஆனால் அவருக்கு ஒரு இனிமையான இடம் கொடுக்கப்படுகிறது.

இந்த புத்தகங்களின் ஆசிரியர் யார் என்பதில் ஒழுங்குமுறையான ஏற்றுக்கொள்ளுதல்கள் இல்லை. சாமுவேல் முதல் புத்தகத்திலே மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும், அவர்தான் இந்த புத்தகங்களின் ஆசிரியராக இருக்க முடியாது என்பது இன்றைய ஆய்வாளர்களின் கருத்து. அதற்கு நல்ல உதாரணம் அவருடைய மரணம் இந்த புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது (காண்க 1சாமு 25,1). இந்த ஆசிரியர் சாலமோனின் காலத்திற்கு பிற்பட்டவராகத்தான் இருந்திருக்க வேண்டும். இவருக்கு பிளவுபட்ட அரசுகளைப் பற்றிய நல்ல அறிவு இருந்திருக்கிறது. சாமுவேல் புத்தகம் நீதிபதிகள் மற்றும் யோசுவா புத்தகங்களின் தொடர்ச்சி என்ற ஒரு வாதமும் பலமான இருக்கிறது. இப்படியாயின், இந்த ஆசிரியர் பபிலோனியர் காலத்தவராக இருந்திருக்க வேண்டும். சாமுவேல் புத்தகங்களின் நோக்கத்தை கண்டுபிடிக்க, யோசுவா-அரசர்கள் புத்தகங்களை ஒருமித்து வாசிக்க வேண்டும் என்பது, இன்றைய தெளிவாக இருக்கிறது. இந்த புத்தகங்கள் கானான் நாட்டை பற்றியதிலிருந்து, பபிலோனிய அடிமைத்தனத்தில் சென்றது வரை வரலாற்றை உள்ளடக்குகின்றது. இது வெற்றி தோல்வி போன்ற அனுபவங்களை கொண்டமைந்துள்ளது. ஆசிரியர் அனைத்திற்கும் பின்னால் ஆண்டவரின் கரம் பலமாக இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறார். அத்தோடு அரத்துவம் இஸ்ராயேல் இனத்திலே ஒரு தோல்வி என்பதைக் காட்டுவதோடு, இந்த அரசத்துவத்திலிருந்துதான் மெசியாத்துவமும் தொடங்குகிறது என்பதையும் காட்டுகிறார். அரசத்துவத்தை எதிர்மறையாக காட்டி, மெசியாத்துவத்தை நேர்முகமாகக் காட்டுகிறார்.

இந்த பெரிய அமைப்பிலே சாமுவேல் புத்தகங்கள், சவுல் மற்றும் தாவீது போன்ற இஸ்ராயேலின் ஒப்பற்ற தலைவர்களின் வரலாற்றை தருகிறது. சவுலுடைய தோல்வி பெரிதாக காட்டப்படும் அதேவேளை, தாவீதை ஆசிரியர் மிக முக்கியமான அரசராக விவரிக்கின்றார். இருப்பினும் தாவீதின் துன்பங்களையும் அவர் பதிவுசெய்ய மறக்கவில்லை. தாவீதுடைய காலத்திலே நடந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் கடவுள் என்பதையும், அதனை தாவீது நன்கு அறிந்திருந்தார், தாழ்ச்சியாக விசுவாசம் கொண்டிருந்தார் என்பதையும் வெளிப்படையாகவே காட்டுகிறார். சாமுவேல் வரலாற்றின் இரண்டு பக்கங்களையும் காட்டுகிறார். இருப்பினும் இரண்டு பக்கங்களிலும், கடவுள்தான் கதாநாயகர் என்பதை மட்டும் தெளிவாகக் காட்டுகிறார். அனைத்து தரவுகளினதும் மிக முக்கியமான செய்தியாக, மனமாற்றம் மற்றும் ஆழமான விசுவாசத்தைக் கேட்கிறார் ஆசிரியர். இஸ்ராயேல் இனம் ஒரு தனித்துவமான இனம், அந்த இனத்தை கடவுள் என்றுமே காப்பார் என்பதும் இந்த வரலாற்றின் இன்னொரு முக்கியமான செய்தி.

வவ.1-2: இந்த புத்தகத்தின் மூன்றாவது அதிகாரம், சாமுவேலுடைய அழைப்பை விவரிக்கின்றது. ஏலியின் புதல்வர்கள் தீயவர்களாக இருந்ததன் காரணமாக (காண்க 1சாமு 2,18-36), இந்த குருத்துவ அழைப்பு சாமுவேலுக்கு வருகிறது. சாமுவேலின் முக்கியத்துவைத்தைக் காட்ட ஏலியின் புதல்வர்களின் தீமையை வெளியில் காட்டுகிறார் ஆசிரியர்.

சிறுவன் சாமுவேல் (נַּעַר שְׁמוּאֵל ந'அர் ஷெமூ'எல்) ஏலியின் பார்வையில் சீலோவில் பணியாற்றுகிறார். இந்த நாட்களில் கடவுளின் வார்த்தையும் காட்சிகளும் அரிதாகவே இருந்தன என்கிறார் ஆசிரியர் இதன் வாயிலாக கடவுள் ஏலியன் மீது திருப்தியில்லாதவராக இருக்கிறார் என்பது காட்டப்படுகிறது. இரண்டாவது வரி, எலியின் பார்வை மங்கிவிட்டதாகவும் சொல்கிறது. இதன் வாயிலாக, இப்போது சாமுவேல் குருவாக அபிசேகம் செய்யப்பட்வேண்டிய நாள் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறார்.

குருக்களுடைய அபிசேகத்திற்கு கடவுளுடைய காட்சி தேவையாக இருக்காது. அவர்கள் குடும்ப பாரம்பரியமாக குருவாகிறார்கள். ஆனால் சாமுவேல் ஒரு சாதாரண குரு அல்ல அவர் ஓர் இறைவாக்கினர் என்பதைக் காட்ட, ஆசிரியர் ஒரு காட்சிக்கு தயார் படுத்துகிறார்.

வ.3: எதிர்மறையாக காட்சிகளைக் காட்டிய ஆசிரியர் இந்த வரியில் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். ஏலிக்குத்தான் வயது போய்விட்டது, ஆண்டவருடைய பிரசன்னத்திற்கு அல்ல என்பது சொல்லப்படுகிறது. கடவுளின் விளக்கு இன்னும் அணையாது இருந்தது என்பது இரண்டு விதமான பொருளைக் கொடுக்கும். இங்கே கடவுளுடைய வார்த்தையும் (דָּבַר தாவர்-வார்த்தை) அவர் காட்சியும் (חָזוֹן ஹாட்சோன்- காட்சி) முக்கியத்துவப் படுத்தப்படுகிறது.

அ. வழிபாடுகள் அங்கே தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆ. கடவுள் அந்த இடத்தில் இன்னும் இருக்கிறார்.

இந்த எரிகின்ற விளக்குகள் (נֵר நெர்-விளக்கு) ஆண்டவரின் பிரசன்னத்தைக் காட்டுகின்றன. இன்று நாம் தேவாலயங்களில் பயன்படுத்தும் அனைத்து விதமான எரியும் விளக்குகளுக்கும், யூதர்கள் பயன்படுத்திய விளக்கிற்கும் தொடர்புள்ளது.

சாமுவேல் ஆண்டவரின் திருத்தலத்தில் படுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆண்டவரின் திருத்தலத்திற்கு (הֵיכַל ஹெகால்-திருத்தளம்) ஹெகால் என்ற சொல் பாவிக்கப்படுகிறது. சீலோவில் ஆண்டவரின் தேவாலயம் இருந்திருக்கவில்லை, அங்கே ஆண்டவரின் சந்திப்புக்கூடாரம் இருந்திருக்கலாம். இந்த கூடாரத்திற்குள் ஆண்டவரின் பேழை இருந்தது (אֲר֥וֹן אֱלֹהִֽים 'அரோன் 'எலோஹிம்). கூடாரத்தில் விளகை அணையவிடாது பாதூக்க வேண்டியது குருக்களுடைய கடமையாக இருந்தது (காண்க லேவி 24,1-4).

ஆண்டவருடைய இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார் என்பது, சாமுவேலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துத்தைக் காட்டுகிறார். விளக்கு அணையாமை, மற்றும் சாமுவேல் படுத்திருந்தது என்பவை, இந்த காட்சி இரவில் நடந்தது என்பதைக் காட்டுகிறது.

வ.4: ஆண்டவர் முதல்முறையாக சாமுவேலை அழைக்கிறார், அதுவும் அவருடைய பெயரைச் சொல்லியே கூப்பிடுகிறார். சாமுவேலும் அதற்கு உடனடியாக பதிலளிக்கிறார். இது இறைவாக்கினர் மற்றும் இறைவாக்கினரை அழைக்கும் காட்சிகளுக்கு பொதுவானது. சாமுவேல் உறக்கத்திலும் தெளிவாக இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது (וַיֹּאמֶר הִנֵּנִי வாய்யோ'மெர் ஹின்னெனி- இதோ இருக்கிறேன் என்றார்).

வ.5: சாமுவேலை சிறுவன் எனக் காட்ட 'அவன்' என்ற படர்க்கை, ஆண்பால், ஒருமை, பாவிக்கப்படுகிறது. எபிரேயத்தில் இந்த வேற்றுமை இல்லை.

சாமுவேல் உடனடியாக செயற்பட்டு தன் தலைவர் தன்னை அழைத்திருக்கலாம் என்று எண்ணுகிறார். இது சாதாரணம். ஏலி வயது முதிர்ந்தவராக இருந்ததாலும், அவருக்கு உதவி தேவைப்படும் என்பதாலும், சாமுவேல் இப்படிச் செய்திருக்கலாம். அத்தோடு இதற்க்கு முன்னர் சாமுவேலை கடவுள் அழைக்கவில்லை என்பதையும் இது காட்டுகிறது. ஆக இதுதான் கடவுள் சாமுவேலை முதல் முறையாக அழைக்கிறார் என்பது புலப்படுகிறது.

சாமுவேலை அழைப்பது ஏலியில்லை என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். அத்தோடு ஏலி சாமுவேலை சென்று படுக்கும் படி சொல்கிறார் (שׁוּב שְׁכָב ஷுவ் ஷெகாவ்- திரும்பிப் போய் தூங்கு). ஒரு வேளை நித்திரை கொள்ளாமல் சாமுவேல் பிதற்றுகிறார் என்று ஏலி எண்ணியிருக்கலாம். இதுவரை காலமும் சீலோவில் கேட்காத கடவுளின் குரல், இப்போது ஒலிப்பது, சாமுவேலின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

வ.6: ஆண்டவர் மீண்டும் சாமுவேலை அழைக்கிறார். இரண்டாவது முறை என்ற எபிரேய விவிலியம் சொல்லவில்லை, மாறாக மீண்டும் என்று சொல்கிறது (וַיֹּסֶף வாய்யோசெப்). ஆண்டவர் சாமுவேல் என்ற பெயரை அழைப்பதும், ஆண்டவர் சாமுவேலைத்தான் அழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. சாமுவேல் என்ற சொல்லிற்கு 'அழைத்தல்' என்ற அர்த்தத்தையும் சில ஆய்வாளர்கள் காட்டுகின்றனர். மீண்டுமாக சாமுவேல் ஏலியிடம்தான் செல்கிறார். இதோ இருக்கிறேன் என்று சொல்கிறார். தன்னை அவர்தான் அழைத்தார் என்பதில் சாமுவேல் தெளிவாக இருக்கிறார். அதனை கேள்வியாக்குகிறார் (כִּי קָרָאתָ לִי கி கரார'தா லி- ஏன் என்னை அழைத்தீர்).

இந்த முறை ஏலி சாமுவேலை 'மகனே' என்று அழைக்கிறார் (בְנִי பெனி- என் மகனே). இதிலிருந்து சாமுவேல் ஏலிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது காட்டப்படுகிறது. மீண்டுமாக படுக்கச் சொல்கிறார்.

வ.7: சாமுவேல் இன்னமும் சிறுவனாகவே இருக்கிறார் என்பதை வேறுவிதத்தில் காட்டுகிறார் ஆசிரியர். அதாவது கடவுளின் வார்த்தை அவருக்கு அறியப்படவில்லை என்கிறார். எபிரேயம் இதனை வேறுவிதமாகக் காட்டுகிறது 'இன்னமும் சாமுவேல் கடவுளின் வார்த்தையை அறியவேண்டியுள்ளது' அத்தோடு அது 'வெளிப்படுத்தப்படவேண்டி உள்ளது' என்று சொல்கிறார்.

வ.8: மூன்றாம் முறையாக கடவுள் சாமுவேலை அழைக்கிறார். மூன்று நிறைவான எண்ணாக எடுக்கப்படலாம். அதாவது ஆண்டவர் சாமுவேலை நிறைவாக அழைக்கிறார் என்பது சொல்லப்படுகிறது (בַּשְּׁלִשִׁית֒ பாஷ்லிஷித்- மூன்றாவது தடவையாக). இந்த முறையும் கடவுள் சாமுவேலைத்தான் அழைக்கிறார் என்பதில் ஆசிரியர் கவனமாக காட்டுகிறார்.

சாமுவேல் ஏலியிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். இந்த முறை ஏலி சாமுவேலின் அழைத்தலைக் கண்டுகொள்கிறார். இதிலிருந்து ஏலிக்கு அனுபவம் இருக்கிறது என்பதும், கடவுள் தான் விரும்புகிறவர்களைத்தான் அழைப்பார் என்பதும் ஏலிக்கு தெரிந்திருக்கிறது என்பதும் சொல்லப்படுகிறது. ஏலியின் புதல்வர்களை கடவுள் அழைக்கவில்லை என்பது இங்கே நினைவுகூறப்படவேண்டும்.

வ.9: இப்போது ஏலி, கடவுள்தான் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை புரிந்து கொள்கிறார். சாமுவேலுக்கு கடவுள்தான் அழைக்கிறார் என்பதைச் சொல்லாமல், மீண்டும் அவர் உன்னை அழைத்தால், 'ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன்' என்று சொல்லச் சொல்கிறார்.

אִם־יִקְרָא 'இம்- யிக்ரா' - அவர் அழைத்தால்

דַּבֵּר יְהוָ֔ה כִּי שֹׁמֵעַ עַבְדֶּךָ தெவெர் அதோனாய் கி ஷோமெ'அ 'அவ்தெகா- பேசும் ஆண்டவரே ஏனெனில் உம் அடியான் கேட்கிறேன்.

வ.10: ஆண்டவரை ஆள் போல காட்சிப் படுத்துகிறார் ஆசிரியர். ஆண்டவர் சாமுவேலை பெயர் சொல்லி அழைக்கிறார். சாமுவேல் பேசும் ஆண்டவரே என்று கேட்டுக்கொள்கிறார். வழமையாக குலமுதுவர்கள், அல்லது அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள், ஆண்டவரின் குரலை கேட்டார்கள் அல்லது அவரது காட்சியைக் கண்டார்கள். இங்கே சாமுவேல் கடவுளின் குரலை நேரடியாகவே கேட்கிறார். இது சாமுவேலின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

ஆண்டவர் சாமுவேலுடன் நேரடியாக பேசுவதன் வாயிலாக ஏலியின் குருத்துவம் முடிவடைந்து விட்டது என்பதையும் காட்டுகிறது. அத்தோடு இஸ்ராயேல் மக்கள் சாமுவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், அவர் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதையும் இந்த காட்சி காட்டுகிறது. வழமையாக மக்கள் ஆண்டவர் முன்வந்து நிற்பார்கள், இங்கே சிறுவன் சாமுவேலின் முன் கடவுள் வந்து நிற்கிறார் (וַיָּבֹא יְהוָה֙ וַיִּתְיַצַּ֔ב வாய்யாவோ' அதோனாய் வாய்யிதெயாட்சாவ்- அவர் வந்து நின்றார்).

வ.19: சாமுவேல் யார் என்பதை இந்த வரி காட்டுகிறது. சாமுவேல் வளர்ந்தார், கடவுள் அவரோடு இருந்தார். சாமுவேலின் வார்த்தை எதையும் கடவுள் நிலத்தில் விழவிடவில்லை என்கிறார் ஆசிரியர். இந்த வரியிலிருந்து சாமுவேல் 'அவன்' என்பதிலிருந்து 'அவர்' என மாற்றம் பெறுகிறார். இந்த நுணுக்கமான மாற்றங்கள் எபிரேய விவிலியத்தில் இல்லை. தமிழ் அவ்வளவு செழுமை.

ஆண்டவர் சாமுவேலுடன் இருந்தார் என்பது, சாமுவேல் கடவுளுக்கு உரியவராகவே வளர்ந்தார் என்பதைக் காட்டுகிறது (וַיהוָה הָיָה עִמּ֔וֹ வாஅதோனாய் ஹாயாஹ் 'இம்மோ- கடவுள் அவரோடு இருந்தார்). சாமுவேலின் வார்த்தை எதையும் கடவுள் தரையில் விழவிடவில்லை என்பது, கடவுள் சாமுவேலின் வார்த்தையை காப்பாற்றினார், அதாவது சாமுவேலுடைய வார்த்தை முக்கியமான வார்த்தையாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. விழுதல் விவிலியத்தில் பலமின்மையைக் குறிக்கும் (לֹֽא־הִפִּיל லோ'-ஹிபில் விழவில்லை).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 40

புகழ்ச்சிப் பாடல்

(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
2அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
3புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;
4ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறு பெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர்.
5ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்; உமக்கு நிகரானவர் எவரும் இலர்;என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே; அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா.
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7எனவே, ‛இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்.
9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.
10உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.
11ஆண்டவர் உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!
உதவிக்காக மன்றாடல்

(திபா 70)

12ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன் என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது.
13ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
14என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்!
15என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!' என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்!
16உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,
‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!'
என்று எப்போதும் சொல்லட்டும்!
17நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.


திருப்பாடல் 38-40 தாவீதுடைய தனிமனித புலம்பல் பாடல் என அறியப்படுகிறது. இந்த நாற்பதாவது திருப்பாடல் புலம்பலுடன் சேர்த்து புகழ்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது. தாவீது இந்த பாடலை எழுதினார் என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை. வ.1 இந்த பாடலை தாவீதிக்கு அர்ப்பணிக்கிறது அல்லது தாவீது எழுதினார் எனக் காட்டுகிறது.

வ.1: לַמְנַצֵּחַ לְדָוִד מִזְמֽוֹר׃ லாம்நாட்செஹ லெதாவித் மிட்ஸ்மோர்- பாடகர் தலைவரால், தாவீதிற்கு, ஒரு திருப்பாடல் (அல்லது- பாடகர் தலைவர்க்கு, தாவீதிற்கு, ஒரு திருப்பாடல்). எபிரேய விவிலியத்தில் 18 வரிகள் இருக்கின்றன. இந்த விளக்கவுரை எபிரேய விவிலியத்தின் எண்களை பின்பற்றுகிறது.

வ.2: ஆண்டவருக்காக பொறுமையாக காத்திருப்பது ஆண்டவருடைய செவிசாய்ப்பை கொண்டு வருகிறது என்று தாவீது சாட்சியம் பகர்கின்றார். பொறுமையாக காத்திருத்தலை, காத்திருத்தல், நான் காத்திருந்தேன் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது (קַוֹּה קִוִּיתִי கவ்வோஹ் கிவ்விதி). இது ஒரு செயலின் தீவிரத்தை காட்ட, எபிரேய மொழி பயன்படுத்தும் ஒரு வினைச் சொல் பாவனை.

இந்த பொறுமையான காத்திருப்பு, கடவுளை தாவீதின் பக்கம் சாயவைக்கிறது, அத்தோடு தாவீதின் உதவிக்குரலுக்கு செவிசாய்க்க வைக்கிறது. שַׁוְעָה ஷவ்'ஆஹ்- உதவிக்கான கூக்குரல்.

வ.3: இந்த வரி இரண்டு ஒத்த கருத்து வரிகளையும், இறுதியான இன்னொரு அர்த்தத்தையும் கொடுக்கிறது. இதனை ஏறுவரிசை வரியடிகள் என்று எடுக்கலாம். இது எபிரேய கவிநடையின் இன்னொரு சிறப்பம்சம்.

அ: அழிவின் குழியிலிருந்து வெளிக்கொணர்ந்தார்- בּוֹר שָׁאוֹן֮ போர் ஷா'ஓன் (இரைச்சலான் பள்ளம்) அ1: சேற்று பள்ளத்திலிருந்து தூக்கியெடுத்தார்- טִּיט הַיָּוֵן தித் ஹய்யாவென் (சேறு நிறைந்த சேறு) ஆ: கற்பாறையின் மேல் கால்லூன்றச் செய்தார்- רַגְלַי כּוֹנֵן אֲשֻׁרָי ராக்லாய் கோனென் 'அஷுராவ் (என் கால்களை உறுதிப்படுத்தினார்)

வ.4: புதியதொரு பாடலை கடவுள் இவரின் நாவிலிருந்து எழச்செய்கிறார். கடவுள் தன்னை புகழும் பாடலை பக்தரின் வாயிலிருந்து எழச்செய்கிறார். இதிலிருந்து அனைத்து செயற்பாடுகளும், கடவுளைச் சார்ந்துதான் இருக்கிறது என்பது புலப்படுகிறது. புதிய பாடல் (שִׁ֥יר חָדָשׁ֮ ஷிர் ஹாதாஷ்: புதிய பாடல்) என்பது ஆண்டவர் செய்த புதிய உதவியை நினைவுகூறுவதாக இருக்கலாம்.

இந்த புதிய பாடல் மற்றவர்களை விசுவாசம் கலந்த அச்சம் கொள்ளச் செய்கிறது. இந்த அச்சம் அவர்களை கடவுளில் நம்பிக்கை வைக்கச் செய்கிறது.

வ.5: பேறுபெற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்த வரி விடையளிக்கிறது. ஆண்டவர் மீது நம்பிக்ககை வைத்தவர்கள்தான் அந்த பேறுபெற்றவர்கள் (אַשְׁרֵי 'அஷ்ரே- பேறுபெற்றவர்).

கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் சிலைகள் மீது நம்பிக்கை வைக்காதவர்கள், அத்தோடு பொய்யானவற்றை சாராதவர்கள் என்றும் சான்று கொடுக்கப்படுகிறார்கள்.

வ.6: கடந்த கால அனுபவங்களை தன்னுடைய பாடலுக்கு எடுக்கிறார் தாவீது. கடவுள் எண்ணிறந்தவற்றை செய்துள்ளார் என்பதை காட்டுகிறார். தாவீது தன்னுடைய காலத்திற்கு முற்பட்ட கடவுளின் செயல்களை கண்டிருக்க மாட்டார், மாறாக அவற்றை கேள்விபட்டிருப்பார், இருப்பினும் அதனை நம்பி உறுதியாக ஏற்றுக்கொள்வது அவருடைய விசுவாசத்தைக் காட்டுகிறது.

கடவுளுக்கு நிகரானவர் எவரும் இல்லை என்கிறார், அதேவேளை ஆண்டவருடைய திட்டங்களும், செயல்களும் தங்களுக்காவே என்றும் ஏற்றுக்கொள்கிறார். இதன் மூலமாக துன்பமான காலங்களும் நல்லதற்காகவே என்ற நம்பிக்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இவற்றை சொன்னால் அவை எண்ணிலடங்காதவை என்பதையும் பாடுகிறார். ஆண்டவருடை செயல்களை மனிதர்கள் சொல்லி முடிக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருக்கிறார். இதனைத்தான் பல விவிலிய ஆசிரியர்களும் முன்வைக்கின்றனர் (காண்க யோவான் 21,25).

வ.7: எருசலேம் தேவாலயம் எரிபலிகளால் நிறைந்து வழிந்தது. லேவியர் புத்தகமும் எப்படியான எரிபலிகளை கடவுளுக்கு செலுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது. எரிபலிகளில் (זֶ֤בַח ட்செவாஹ்) பலவிதமான பலிகள் வழக்கிலிருந்தன. இதனைவிட தானிய பலிகள், திரவப் பலிகள், பாவம் போக்கும் பலிகள், பரிகாரப் பலிகள் என்றெல்லாம் இருந்திருக்கிறது. இருப்பினும் பல முக்கியமான இடங்கள் கடவுள் பலிகள் விருப்பம் கொள்கிறவர் அல்லர் என்பது அழகாகக் காட்டப்படுகிறது. இது இஸ்ராயேலர்கள் மிக முதிர்ச்சியான விசுவாசம்.

பலி வகைகள் இஸ்ராயேலர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. பலிகளில் மற்ற மதங்களின் தாக்கங்கள் இருந்திருக்க வேண்டும் என்பது விவிலிய ஆய்வாளர்கள் சிலருடைய கருத்து. பலிகளை விட கடவுள் விரும்புவது, கீழ்படிவை. இதனைத்தான் கேட்கும் செவிகள் என்று அடையாள முறையில் காட்டுகிறார் ஆசிரியர்.

வ.8: 'இதோ வருகிறேன்' என்பதை திருநூலில் தன்னைப் பற்றி எழுதப்பட்டதாக தாவீது காண்கிறார் (הִנֵּה־בָאתִי ஹின்னேஹ்-வா'தி). திருநூல் என்பதை திருச்சட்டம் என்று அதிகமாக ஆய்வாளர்கள் எடுக்கின்றனர் (בִּמְגִלַּת־סֵ֝֗פֶר பிம்கில்லாத்-செபெர்- சுருள் நூல்). ஆண்டவருக்கு அரசர்கள் எப்போது கீழ்படிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த வரி காட்டுவதாகவும் பலர் இதனைக் காண்கின்றனர் (ஒப்பிடுக இ.ச 17,14-20).

வ.9: கடவுளின் திருவுளம் நிறைவேறுவதில் ஒரு இஸ்ராயேலன் திருப்தியடைய வேண்டும். இதன் ஆசிரியர் தாவீதாக இருந்தால் அவர் இன்னமும் திருப்தியடையவேண்டும். கடவுளின் திருவுளம் என்பது அவருடைய திட்டங்களைக் குறிக்கிறது.

ஆண்டவருடைய திருச்சட்டம், தன்னுடைய உள்ளத்தில் இருப்பதாகச் சொல்கிறார். உள்ளத்தைக் குறிக்க மெ'எஹ் (מֵעֶה) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உள் உறுப்புக்களைக் குறிக்கிறது. உள் உறுப்புக்களில்தான் உணர்வு இருக்கிறது என்று இஸ்ராயேலர் நம்பினர்.

வ.10: தாவீதிற்கு கடவுள் பல நன்மைத்தனங்களைச் செய்துள்ளார். பல வெற்றிகளை தாவீதிற்கு அவர் கொடுத்துள்ளார். இதனை நற்செய்தி என்று தாவீது பாடுகிறார் அத்தோடு அந்த நற்செய்தியை அவர் மாபெரும் சபையில் உரைத்ததாகவும் சொல்கிறார். இந்த மாபெரும் சபை என்பது (בְּקָהָל רָב பெகாஹால் ராவ்), இஸ்ராயேல் சமூகத்தை குறிக்கலாம், அல்லது அரசர்களின் மந்திரி சபையைக் குறிக்கலாம்.

ஆண்டவருடைய நன்மைத்தனத்தை அறிவிக்காமல் இருப்பதும் பாவமாகும், இதனை தாவீது அறிந்திருக்கிறார் இதனால்தான் தான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை என்கிறார் (என்னுடைய இதழ்களை நான் மூடிக்கொள்ளவில்லை שְׂפָתַי לֹא אֶכְלָא ஷெபாதாய் லோ' 'எக்லா').

வ.11: ஏற்கனவே சொல்லப்பட்டதை இந்த வரியும் மீள சொல்கிறது. ஆண்டவர் நீதிக்கு செய்தவற்றை மறைப்பதும் அறிக்கையிடாமலும் இருப்பதும் பின்னுதாரணமாக இருக்கலலாம். இதனால்தான் அதனை ஒளித்து வைக்கவில்லை என்கிறார் ஆசிரியர் (צִדְקָתְךָ ட்சித்காதெகா- உமது நீதி). ஆண்டவருடைய உண்மைத்தன்மையையும் (வாக்கு பிறழாமை (אֱמוּנָתְךָ 'எமூநாதெகா) அறிவித்திருக்கிறதாகச் சொல்கிறார் ஆசிரியர். இப்படியாக ஆண்டவருடைய நீதியையும், வாக்கு பிறழாமையையும் அவருடைய மீட்புடன் தொடர்பு படுத்துகிறார். அத்தோடு இவையனைத்தும் (ஆண்டவருடைய அன்பு மற்றும் உண்மை) மாபெரும் சபைக்கு அறிவிக்கப்ட்டதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

வ.12: இந்த வரி புகழ்ச்சியில்லாமல் வேண்டுதலாக வருகிறது. முந்தின வரிகள் அனைத்தும் புகழ்ச்சியாக வந்து இந்த வரி ஒரு வேண்டுதலாக வருவது, இஸ்ராயேல் கவிநடையின் தனித்துவமான ஒரு அமைப்பு. ஆண்டவருடைய பேரிரக்கத்திற்காக வேண்டுகிறார் ஆசிரியர் (רַחֲמֶיךָ ரஹமெகா- உமது இரக்கம்). அரசரை பாதுகாப்பவை எவை, இது சாதாரண மனிதர்களுக்கும் பொருந்தும். படைகள் அல்ல ஒருவரை பாதுகாப்பவை, உண்மையில் பேரன்பும் உண்மையும் என்கிறார் (חַסְדְּךָ וַאֲמִתְּךָ֗ ஹஸ்தெகா வ'அமிதெகா- உம் பேரன்பும் மற்றும் உம் உண்மையும்).

வ.13: இந்த வரியிலிருந்து இப்பாடலின் வகை மாறுபடுகிறது. இதனை உதவிக்காக மன்றாடும் பாடல் என வகைப்படுத்துகின்றனர். அத்தோடு இந்த திருப்பாடலுக்கு, திருப்பாடல் 70தோடு தொடர்புள்ளதை ஆய்வாளர்கள் காண்கின்றனர். ஏற்கனவே உதவிக்காக மன்றாட தொடங்கிய ஆசிரியர் அதற்கான காரணத்தை விளங்கப்படுத்துகிறார்.

எண்ணிறைந்த தீமைகள் தன்னை சுழ்ந்துகொண்டதாக அச்சம் கொள்கிறார் ஆசிரியர். அதேவேளை தன்னுடைய குற்றங்கள் (עָוֹן 'ஆயோன்) தன் கண்களை மறைத்துவிட்டன என்றும் சொல்கிறார். இந்த துன்பங்கள் தன்னுடைய தலை முடியைவிட அதிகமானவை என்ற உருவகத்தை பாவித்து சொல்லப்படுகிறது. வழமையாக தலை முடிகள் எண்ணப்படமுடியாதவை, இப்படியாக இவர் துன்பம் இருப்பது, உண்மையிலே இவர் படுபயங்கர துன்பத்திலிருப்பதை காட்டுகிறது.

இறுதியாக தன் உள்ளம் தன்னை கைவிட்டதாகவும் சொல்கிறார். உள்ளத்தைக் குறிக்க 'இதயம்' (לִבִּי லெபி- என் இதயம்) என்ற சொல் எபிரேய மூல விவிலியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இதயத்தில்தான் உணர்வுகள் இருந்தன என்பதை இவர்கள் நம்பினார்கள்.

வ.14: ஆண்டவர் ஒருவரை அவருடைய துன்பத்திலிருந்து விடுவிக்க மனமிசைய வேண்டும், அதனை அவர் உடனடியாக செய்ய வேண்டும் என்பது நம் அனைவரினதும் வேண்டுகோள், இதனைத்தான் இந்த ஆசிரியரும் முன்வைக்கிறார். கடவுளை ஓர் ஆள்போல உருவகித்து, தன்னை நோக்கி விரைந்து வருமாறு அழைக்கிறார்.

வ.15: 'சாபம்' எபிரேய செபத்தில் அல்லது பக்திப் பாடல்களில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதனை இந்த வரி காட்டுகிறது. ஆசிரியர் தன் எதிரிகளை சபிக்கிறார். அவர்களை தன் உயிரை பறிக்க தேடுவோர்கள் என்கிறார் (מְבַקְשֵׁי נַפְשִׁי மெவக்ஷெ நப்ஷி- என் உயிரை தேடுவோர்), அத்தோடு அவர்கள் அவமானமும் குழப்பவும் அடையட்டும் என்கிறார். இவர்களை தன்கேட்டில் மகிழ்வோர் என்றும் சொல்கிறார் (יִכָּלְמוּ חֲפֵצֵי யிக்கால்மூ ஹபெட்செ- தாழ்ச்சியில் மகிழ்பவர்கள்).

வ.16: மற்றவர்களை பார்த்து ஏளனமாக சிரித்தல் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இருந்திருக்கிறது, இதனால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆ ஆ என சிரித்தலை எபிரேய விவிலியமும் அவ்வாறே காட்டுகிறது הֶאָ֥ח ׀ הֶאָֽח ஹெ'ஆஹ் ஹெஆகஹ். இவர்கள் அவமானம் அடையவேண்டும், அப்படியடைந்தால் அவர்கள் வெற்றி சிரிப்பு சிரிக்க மாட்டார்கள் என்பது இவர் வாதம்.

வ.17: எதிரிகளைச் சபித்தவர் தன் நண்பர்களை ஆசிக்கிறார். கடவுளைத் தேடுவேர் அவரிலே மகிழ்ந்து களிகூரட்டும் என்கிறார். கடவுளைத் தேடுவோர்களை (מְבַקְשֶׁיךָ மெவாக்ஷெகா), அவரின் மீட்பில் நாட்டம் கொள்வோர் (אֹֽהֲבֵ֗י 'ஓஹவே- அன்புகொள்வோர்) என்று ஒத்த கருத்துச் சொல்லில் காட்டுகிறார்.

இவர்கள் ஆண்டவர் பெரியவர் (יִגְדַּל יְהוָה யிக்தால் அதோனாய்) என்று எப்போதும் சொல்பவர்கள் என்கிறார். ஆண்டவர் பெரியவர் என்று சொல்வது ஒரு புகழ்சி வரி, இது இஸ்ராயேலின் செபங்களில் காணக்கிடைக்கிறது.

வ.18: இறுதியான இந்த வசனம் ஆசிரியரின் தாழ்ச்சியை படம்பிடிக்கிறது. இதன் ஆசிரியர் தாவீதாக இருந்திருந்தால் உண்மையில் அவர் தன்னை அறிந்த உத்தமரே. தன்னை எளிய ஏழை என்கிறார் (אֲנִי ׀ עָנִי וְאֶבְיוֹן֮ 'அனி 'அனி வெ'எவ்யோன்). இருப்பினும் தன் தலைவராகிய ஆண்டவர் தன்னில் அக்கறை கொண்டுள்ளதாக சொல்கிறார். கடவுளுக்கு மூன்று வகையான பெயர்களைக் கொடுக்கிறர், ஆண்டவரை துணைவர் (עֶזְרָתִי 'எட்ஸ்ராதி- என் உதவி), மீட்பர் (מְפַלְטִי மெபல்தி- என்னை விடுவிப்பவர்), மற்றும் கடவுள் (אֱלֹהַי 'எலோஹாய்- என் கடவுள்) என்கிறார்.



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 6,13-20

பரத்தைமையை விட்டு விலகுதல்

12'எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு'; ஆனால் எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. 'எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு'; ஆனால் எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன்.✠ 13'வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு.' இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். 14ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். 15உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது. 16விலை மகளுடன் சேர்கிறவன் அவளோடு ஓருடலாகிறான் என்று தெரியாதா? 'இருவரும் ஒரே உடலாயிருப்பர்' என்று மறைநூலில் சொல்லப்பட்டுள்ளதே!✠ 17ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். 18எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். 19உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. 20கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.


கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இந்த மிக முக்கியமான முதலாவது திரு முகத்திலே பவுல் சில அடிப்படை உறவுச் சிக்கல்களை சரிப்படுத்த முயல்கிறார். கொரிந்து நகர் வாணிப நகரமாக இருந்தபடியால் பலவிதமான துர் நடத்தைகளுக்கும் வாய்ப்பான நகரமாக இருந்தது. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தங்கள் வழக்குகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பவுலுடைய நியாயமான வேண்டுதல். இந்த வழியில் பரத்தமையைப் பற்றி பவுல் சற்று காட்டமாகவே பேசுகிறார். (ஆறாம் அதிகாரத்தின் 12 தொடக்கம் 20வரையான வரிகள் பரத்தமையை பற்றி பேசுகிறது).

வ.12: உரோமைய பேரரசின் முக்கியமான நகரங்கள் உரோமைய மெய்யியலை தங்கள் வாழ்வாக கொண்டிருந்தன. இதில் தனி மனித சுதந்திரம், மற்றும் உடல் இன்பம் போன்றவை முக்கியமான உரிமையாக கருதப்பட்டன (உரிமை குடிமக்களுக்கு மட்டும்). அனைத்தையும் செய்ய அனைவருக்கும் உரிமையிருக்கலாம், ஆனால் எல்லாமே ஏற்புடையதாகாது என்பது பவுலுடைய எபிரேய-கிறிஸ்தவ சிந்தனை. இதனை அவர் ஆழமாக எபிரேய பாரம்பரியத்திலிருந்து கற்றிருப்பார் என நம்பலாம். மனிதர்கள் தங்கள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும், செயற்பாடுகள் மனிதரைக் கட்டுப்படுத்தக்கூடாது, செயற்பாடுகள் மனிதரைக் கட்டுப்படுத்தினால் அதனை அடிமைத்தனம் என்கின்றோம், இதனைத்தான் பவுல் தன்னுடைய வார்த்தைகளில் சொல்கிறார். πάντα μοι ἔξεστιν ἀλλ᾿ οὐκ ἐγὼ ἐξουσιασθήσομαι ὑπό τινος. பான்டா மொய் எட்செஸ்டின் அல் ஊக் எகோ எட்சோசியாஸ்தேசொமாய் ஹுபொ டினொஸ்- அனைத்தும் எனக்கு சட்டபூர்வமானது, ஆனால் எதாலும் நான் கட்டுப்படுத்தப்படமாட்டேன்.

வ.13: வாழத்தான் உண்கிறோம், உண்ண வாழவில்லை என்ற பழமொழியை கேட்டிருக்கின்றோம். உணவையும் உடலையும் வித்தியாசமாக பார்க்கிறார் பவுல். வயிற்றிக்கு உணவு, உணவிற்கு வயிறு இரண்டையுமே எதிர்மறையாக பார்க்கிறார் பவுல்.

இந்த ஒப்பீட்டை பயன்படுத்தி உடலையும் பரத்தைமையையும் பற்றி பேசுகிறார். பாலியல் இச்சையை அக்கால உரோமைய பேரரசின் சிந்தனை தனிமனித சுதந்திரமாக பார்த்தது (இக்கால சிந்தனைகளை வேகமாக இந்த சிந்தனையை நோக்கி செல்கிறது). என் உடல் என் இச்சை ஆக நான் எதையும் எங்கும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யலாம் என்ற காட்டுச் சுதந்திர போதனைகளை சாடுகிறார் பவுல். பவுல் உடலை புனிதமானது என்று கடுமையாக போதிக்கிறார். இதனை கிறிஸ்தவத்தின் பங்களிப்பு என்று பெருமையாகச் சொல்லலாம். உடல் பரத்தமைக்கு அல்ல மாறாக அது கடவுளுக்கு உரியது என்கிறார் (τὸ δὲ σῶμα οὐ τῇ πορνείᾳ ἀλλὰ τῷ κυρίῳ, டொ தெ சோமா ஹு டே பொர்னெய்யா அல்லா டோ கூரியூ). அதேபோல ஆண்டவரும் உடலுக்கே உரியவர் என்று அழகாகச் சொல்கிறார் (καὶ ὁ κύριος τῷ σώματι· காய் ஹொ கூரியொஸ் டோ சோமாடி). இங்கே உடல் என்பது மனித மெய்யை மட்டும் குறிக்கவில்லை மாறாக மனிதர்களின் உடல்-ஆன்மாவைக் குறிக்கிறது. அதாவது மனித வாழ்வைக் குறிக்கிறது.

வ.14: உடல் புனிதமானது என்ற வாதத்திலே பவுல் பயன்படுத்தும் இன்னொரு உத்தி, ஆண்டவருடைய உயிர்ப்பு. ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும் உயிர்த்தார். இதனால் அனைத்து உடல்களும் புனிதமானவை என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடவுள்தான் ஆண்டவர் இயேசுவை உயிர்ப்பித்தார், அதனை அவர் தன் வல்லமையால் செய்தார், ஆக ஆண்டவரின் உயிர்ப்பு என்பது ஒரு உணர்வு அல்லது அனுபவம் அல்ல மாறாக அது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை காட்டுகிறார். இது அக்கால சில பிழையான போதனைகளைச் சாட பயன்பட்டிருக்கலாம். ὁ δὲ θεὸς καὶ τὸν κύριον ἤγειρεν ஹொ தெ தியூஸ் காய் டொன் கூரியோன் எகெய்ரென்- கடவுள் ஆண்டவரை உயிர்த்தெழச் செய்தார்.

வ.15: மனிதர்களை கிறிஸ்துவின் உடல்கள் என காட்டுகிறார். இதனை அவர் ஆன்மீக ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் குறிப்பிடுகிறார் என நம்பலாம். ஆண்டவரில் விசுவாசம் கொள்வதால் ஆன்மீகத்தில் கிறிஸ்தவர்கள், ஆண்டவரின் உடல்களாக மாறுகிறார்கள். ஆண்டவரை உண்பதால் பௌதீக ரீதியாக ஆண்டவரின் உடல்களாக மாறுகிறார்கள்.

பவுலுடைய கேள்வி இன்றைய விசுவாசிகளுக்கும் சாட்டையடியாக அமைகிறது. οὐκ οἴδατε ὅτι τὰ σώματα ὑμῶν μέλη Χριστοῦ ἐστιν; ஊக் ஒய்தாடே ஹொடி டா சோமாடா- உங்களுக்கு தெரியாதா, அதாவது உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புக்களாக இருக்கின்றன என்று? தெரியாததாலேதான் இவ்வளவு சிக்கல்கள் என்பது பவுலுடைய வாதம். கிறிஸ்துவின் உறுப்புக்களை விலைமகளின் உறுப்புக்களாக்குவது பெரிய பாவமும் குற்றமும் என்கிறார் பவுல். πόρνης μέλη பொர்னேஸ் மெலே- விலைமகளின் உறுப்புக்கள்.

வ.16: திருமணத்தில் ஈருடல்கள் ஓருடலாகின்றன என்பது விவிலிய கருத்து, அதனை பவுல் நன்கறிந்திருக்கிறார் (காண்க தொ.நூல் 2,24). இதனை உதாரணத்திற்கு எடுத்து, விலைமகளுடன் உறவு வைக்கிறவர் விலைமகளின் உடலாகி, விலைமகளாகவே மாறிவிடுகிறார் என்று மிகவும் தெளிவாக காட்டுகிறார்.

விபச்சாரம் என்பது உடல் ரீதியான பாவம் என்பதையும் தாண்டி உளம் ரீதியான பாவம் என்ற பவுல் காட்டுகிறார். நீ எதனை செய்கிறாயோ அதாகவே மாறிவிடுகிறாய் என்ற ஒரு தமிழ் பாரம்பரிய பழமொழியை ஒத்திருக்கிறது பவுலுடைய வாதம்.

வ.17: மேற்சொன்னதையே ஆண்டவருடைய உறவிற்கும் ஒப்பிடுகிறார். ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவரோடு உள்ளத்திலும் சேர்ந்திருப்பார் என்கிறார் ὁ δὲ κολλώμενος τῷ κυρίῳ ἓν πνεῦμά ἐστιν. ஹொ தெ கொல்லோமெனொஸ் டோ கூரியூ என் புனுமா எஸ்டின்.

ஆண்டவரோடு உள்ளத்தில் ஒன்றித்திருத்தல் என்பது, பவுலுடைய வாதத்தில் மிகவும் முக்கியமான ஒரு வாதம். இதனை நோக்கியே அவருடைய பல கடிதங்களின் அறிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

வ.18: இவ்வாறு தெளிவு படுத்திய பவுல் பரத்தமையை விட்டுவிடும்படியாக எச்சரிக்கிறார். கொரிந்து நகரில் பரத்தமை ஒரு சாதாரண விடயமாக இருந்ததை உரோமைய ஆய்வாளர்கள் சான்றுகளோடு காட்டுகின்றனர். முதல் ஏற்பாட்டில், பரத்தமை என்பது வேறு கடவுள் வழிபாட்டையும் குறித்தது. இருப்பினும் இங்கே பவுல் பரத்தமை என்ற உடல்ரீதியான பரத்தமையைத்தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Φεύγετε τὴν πορνείαν. பிஊகெடெ டேன் பொர்னெய்யான்- பரத்தமையை விட்டு ஓடுங்கள். மனிதருடைய எப்பாவமும் உடலுக்கு எதிரானது, பரத்தமை சொந்த உடலுக்கே எதிரானது என்று ஒரு படி மேலே சென்று வாதிடுகிறார். சொந்த உடலுக்கு எதிராக பாவம் செய்வது ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

வ.19: மனித உடல்களை தூய ஆவியின் ஆலயங்கள் என்று பவுல் வேறு இடங்களிலும் குறிப்பிடுகிறார் (காண்க 1கொரிந் 3,16: 2கொரிந் 6,16). உடலை கடவுளின் ஆலயம் என்பது நிச்சயமாக பவுலுடைய ஆழமான விசுவாசத்தையும், ஆன்மீக பலத்தையும் காட்டுகிறது.

உடலை இச்சையின் உறைவிடமாகவும், ஆன்மாவிற்கு எதிரானதாகவும், அழியக்கூடடியதாகவும் கண்ட கிரேக்க-உரோமைய உலகில், பவுலுடைய இந்த வாதம் நிச்சயமாக பல தாக்கங்களை உண்டுபண்ணியிருக்கும். τὸ σῶμα⸃ ὑμῶν ναὸς τοῦ ἐν ὑμῖν ⸉ἁγίου πνεύματός டொ சோமா ஹுமோன் நாஓஸ் டூ என் ஹுமின் ஹகியூ புனுமாடொஸ் - உங்கள் உடல் உங்களில் உள்ள தூய ஆவியின் ஆலயம். இதனால் ஒருவரின் உடல் உண்மையில் அவருக்குரியதல்ல மாறாக அது கடவுளுக்குரியது என்பது அவர் முடிவு.

வ.20: கடவுள் மனிதர்களை விலைகொடுத்து வாங்கியுள்ளார் என்பது. இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. கல்வாரியில் இயேசு சிந்திய இரத்தம், கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த விலை, என்பதை பவுல் நினைவூட்டுகிறார். ஆக மனிதர்கள் கடவுளால் வாங்கப்பட்டவர்கள். இதனால் அவர்கள் உடல்களும் கடவுளுக்கே சொந்தம், எனவே அவர்கள் அந்த உடலால் கடவுளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிறார்.


நற்செய்தி வாசகம்
யோவான் 1,35-42

முதல் சீடர்களை அழைத்தல்

35மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். 36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்றார். 37அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். 38இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். 40யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். 41அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். 'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். 42பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.


இயேசு சீடர்களை அழைத்த விதத்தை ஒவ்வொரு நற்செய்தியாளர்களும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். இதன் படி யோவானும் வித்தியாசமான படியில் இதனை நோக்குகிறார். இந்த அழைப்பை யோவான் முதலாவது அதிகாரத்திலே வைத்திருப்பது அதன் முக்கியத்துவத்தை தெளிவு படுத்துகிறது. இயேசு தன்னுடைய திருமுழுக்கின் பின்னர் உடணடியாக தன்னுடைய சீடர்களை தெரிவு செய்கிறார். இயேசுவின் திருமுழுக்கு அவருடைய பணியின் அதிகார பூர்வமான பதவியேற்பு போல காட்டப்படுகிறது, முதல் சீடர்களை அழைத்தது தன்னுடைய படைத்தளபதிகளை ஏற்படுத்துவது போல உள்ளது. யோவானின் ஒவ்வொரு வார்த்தையும் அடையாள பூர்வமாக இருக்கும். அதனுடைய அர்த்தங்களும் பலவிதத்தில் இருக்கும்.

வ.35: இயேசுவிற்கு திருமுழுக்கு கொடுத்த யோவான் மறுநாளும் அந்த யோர்தான் ஆற்றருகில் நின்று கொண்டிருக்கிறார். இதன் மூலமாக தொடர்ந்து மக்கள் அவரிடம் திருமுழுக்கு பெற்றுக்கொண்டுதான் இருந்தார்கள் என்பது தெரிகிறது.

வ.36: இன்றைய நாளும் இயேசுவும் இன்னொரு முறை அந்த பக்கம் வருகிறார். அவர் யோவானைக் கடந்து செல்கிறார். இம் முறை அவர் திருமுழுக்கு பெறவேண்டிய தேவையில்லை. யோவான் அவரை கூர்ந்து பார்த்தல், முதல் ஏற்பாட்டில் மக்கள் கடவுளுடைய பிரசன்னம் போகையில் அவரை கூhர்ந்து பார்ப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது. ἐμβλέψας எம்பிலேப்சாஸ்- கூர்ந்து பார்த்தார்.

உடணடியாக இயேசுவை யோவான் கடவுளின் ஆட்டுக்குட்டி என்கிறார் (ἀμνὸς அம்நோஸ்- செம்மறியாட்டுக் குட்டி). ஆட்டுக்குட்டி என்பது யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான அடையாளம். யோவான் நற்செய்தியும், திருவெளிப்பாடும்தான் இந்த அடையாளத்தை அதிகமாக பயன்படுத்துகிறது. ஆட்டுக்குட்டி கடவுளின் அடையாளமாக இருந்திருக்கலாம். அதனுடைய சாதுவான தன்மையும், அனைவரால் விரும்பப்படுவதும், அதன் தூய்மையும் இதனை அடையாளமாக எடுக்க காரணமாக இருந்திருக்கலாம். யோவான் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டி என்று சொல்லி தான் மெசியா இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்.

வ.37: இரண்டு சீடர்கள் இயேசுவை உடனடியாக பின்தொடர்கின்றனர். இவர்கள் யார் என்று இந்த வரியில் யோவான் சொல்லவில்லை. பின்தொடர்தல் புதிய சீடத்துவத்தை இவர்கள் தெரிந்து கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. யோவான் இவர்களை இயேசுவை பின்பற்றச் சொன்னதாக தெரியவில்லை. இவர்களின் தெரிவு சொந்த தெரிவாகவே தெரிகிறது (ἠκολούθησαν ஏகொலூதேசான்- பின்பற்றினார்கள்). இந்த இருவரும் யார் என்பதை அப்படியே கேள்வியிலே வைக்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

வ.38: இயேசு திரும்பி பார்க்கிறார். இதுவும் முதல் ஏற்பாட்டில் கடவுள் திரும்பி பார்ப்பதை நினைவூட்டுகிறது. இயேசுவிற்கு தனக்கு பின்னர் வருகிறவர்களையும் தெரிந்திருக்கிறது. அவர் கடவுள். இயேசுவின் கேள்வி நோக்கப்பட வேண்டும். அவர் அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்கிறார் (τί ζητεῖτε; டி ட்சேடெய்டெ). இதன் மூலம் இவர்கள் சாதாரணமாக நடக்கிறவர்கள் அல்ல மாறாக எதையோ தேடுகிறார்கள் என்பது இயேசுவிற்கு தெரிந்திருக்கிறது. இயேசுவின் கேள்வி ஒரு முக்கியமான குரு தன் சீடர்களிடம் கேட்பது போல இருக்கிறது. இது ஒரு மெய்யியல் கேள்வி.

இயேசு கேட்ட கேள்வி ஒன்று, அதற்கு விடைதராமல், அந்த இருவரும் இன்னொரு கேள்வியை கேட்கிறார்கள். இதுவும் யோவான் நற்செய்தியின் தனித்துவம். யோவான் நற்செய்தி பல கேள்விகளைக் கொண்டிருக்கும், பல கேள்விகளுக்கு வாசகர்கள் விடையளிக்கக் கூடியதாக இருக்கும். சீடர்களின் இயேசுவை ராபியாக ஏற்றுக்கொள்கிறார்கள் (διδάσκαλε திதாஸ்கலெ- ஆசிரியரே), அத்தோடு அவருடைய இடத்தையும் கேட்கிறார்கள் (ποῦ μένεις; பூ மெனெய்ஸ்-எங்கே வசிக்கிறீர்). இவர்கள் உடனடியாக இயேசுவை ஆசிரியராக ஏற்றுக்கொள்கிறார்கள், அதாவது அவர்கள் இயேசுவின் சீடர்களாக மாறிவிட்டார்கள். அத்தோடு இயேசுவின் இடத்திற்கும் செல்ல ஆயத்தமாகிவிட்டார்கள்.

வ.39: இயேசு விடையளிக்காமல் அவர்களை வந்து பார்க்கச் சொல்கிறார் (ἔρχεσθε καὶ ⸀ὄψεσθε. எர்கெஸ்தெ காய் ஒப்ஸ்எஸ்தெ - வாருங்கள் பாருங்கள்). அவர்களும் சென்று பார்க்கிறார்கள், இவ்வாறு அவர்கள் உண்மையான சீடர்களாக காட்டப்படுகிறார்கள். இயேசுவோடு அவர்கள் தங்கியும் விடுகிறார்கள். அதற்கான காரணம் மாலை என்பது யோவானின் விளக்கம்.

மாலையானதால் அவர்கள் வீட்டிற்கு திரும்புவது அவ்வளவு இலகுவாக இருந்திருக்காது. அல்லது இரவில் கடவுளுடன் தங்கவேண்டும் என்ற இஸ்ராயேலின் பாரம்பரியத்தை யோவான் குறிப்பிடுகிறார் என எடுக்கலாம்.

வ.40: யோவான் சொல்லி இயேசுவை பின்பற்றியவர்கள் யார் என்பதை அவிழ்கிறார் யோவான் நற்செய்தியாளர். அவர் அந்திரேயா. இவர் பன்னிருவருள் ஒருவர் அத்தோடு இவர் சீமோன பேதுருவின் சகோதரர்.

வ.41: இயேசுவை பின்பற்றியவர்கள் முதலில் அவரை ஆசிரியரே என்றுதான் அழைத்தார்கள், இப்போது அவர்கள் இயேசுவை மெசியாவாக அடையாளம் கண்டுவிட்டார்கள். அந்திரேயா மெசியாவை, மெசியாவின் தலைமைச் சீடருக்கு அடையாளம் காட்டுகிறார். மெசியா என்பவர் சொல்லி அறிக்கையிடப்பட வேண்டியவர் என்பதையும் யோவான் காட்டுகிறார். மெசியா என்றால் அபிசேகம் அல்லது திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்பது பொருள். முதல் ஏற்பாட்டில் அரசர்கள் அபிசேகம் செய்யப்பட்டார்கள் (εὑρήκαμεν τὸν Μεσσίαν எவ்ரேகாமென் டொன் மெஸ்சியான்- மெசியாவைக் கண்டுகொண்டோம்) (Μεσσίας மெஸ்சியாஸ்-மெசியா). யோவான் கிரேக்க மொழியில் நற்செய்தியை எழுதிய படியால் மெசியாவின் அர்த்தத்தை எபிரேயம் புரியாதவர்களுக்கு 'கிறிஸ்து' என்று கிரேக்கத்தில் விளங்கப்படுத்துகிறார் (χριστός கிறிஸ்டொஸ்).

வ.42: அந்திரேயாவின் வாக்குமூலம் சீமோனை இயேசுவிடம் அழைத்து வருகிறது. இந்த வித்திலே சீடத்துவம் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்து வரவேண்டும் என்பது போல இருக்கிறது. முதலாவது வரியில் சீமோன் பேதுரு என அழைத்தவர் இப்போது சீமோன் என சுருக்கமாக அழைக்கிறார், அதாவது இனி சீமோன் பழக்கமானவர் என்பது போல இருக்கிறது.

இயேசு சீமோனை கூர்ந்து பார்க்கிறார். இது கடவுளின் பார்வை. இயேசு சீமோனை அவர் தந்தையின் பெயரில் அழைக்கிறார். இது யூதர்களின் மிக முக்கியான முறை. ஒருவர் தன் தந்தையின் குடும்பத்திலேயே அறியப்பட்டார். இனி சீமோன் அவர் தந்தை யோவானின் வாரிசாக இருக்கமுடியாது. அவர் இயேசுவின் சீடராக மாறிவிட்டார். பேதுருவிற்கு பெயர் மாற்றம் நடைபெறுகிறது, அதாவது சீமோன் புதிதாக பிறக்கிறார். இது சீமோனின் புது வாழ்வையும், அவரின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. சீமோனின் புதிய பெயர் 'கேபா' (Κηφᾶς கேபாஸ்). கேபா என்றால் பாறை என்று பொருள். பாறை சீமோனின் தலைமைத்துவத்தையும் அவரிலே திருச்சபை கட்டப்டுவததையும் அடையாளப்படுத்துகிறது.

அழைப்பு அந்தரத்தில் நடைபெறுவதில்லை,

அழைப்பு சாதாரண வாழ்வியலிலே நடைபெறுகிறது.

சாமுவேலினதும், பேதுருவினதும் அழைப்பை,

ஏலியும், அந்திரேயாவும் புரிந்துகொண்டனர்.

அவர்களை கடவுளிடம் கொண்டுவந்தனர்.

விழிப்பாக இருப்பவர்களே கடவுளின அழைப்பை

கேட்கிறார்கள்.

அழைப்பவர் கடவுள்,

உன்னிப்பாக கேட்டால், நாமும் செல்லலாம்,

நம்மவர்களையும் ஆண்டவரிடம் கொண்டுவரலாம்.

அன்பு ஆண்டவரே கேட்கும் செவிகளையும்,

வழிநடத்தும் சிந்தையையும் தாரும், ஆமென்.

Dedicated to all those cherish vocations and promote them.

………………………………………………………………