இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் (அ)

முதலாம் வாசகம்: நீதிமொழிகள் 31,10-13.19-20.30-31
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 128
இரண்டாம் வாசகம்: 1தெசலோனியர் 5,1-6
நற்செய்தி: மத்தேயு 25,14-30<


மனைவி
(இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்,
இல்லவள் மாணாக் கடை? குறள் 53).
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன?
அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
வானகத்திலே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்று எபிரேயர்கள் நம்பினார்கள். ஆதாம் ஏவாளின் கதை இதனைத்தான் இஸ்ராயேருக்கு சொல்லிக் கொடுத்தது. கணவனில் இருந்து மனைவி உருவாக்கப்பட்டது, அவர்களுடைய நிறைவையும் அன்புறவையும் காட்டுகிறது, இதனைத்தான் இயேசு புதிய ஏற்பாட்டில் ஆழப்படுத்துகிறார் (காண்க தொ.நூல் 2,24: மத்தேயு 19,4-6). மனைவியரை, நல்ல இஸ்ராயேல் ஆண்மகன் தன்னுடைய தாய்க்கு நிகராக கருதினார் (காண்க தொ.நூல் 24,66). ரெபேக்காவின் வருகை ஈசாக்கிற்கு தன் தாயின் அன்பைக் கொடுத்தது என்கிறார் தொடக்க நூல் ஆசிரியர். பெண்ணை ஆண்டவர் ஆணின் விலாவில் இருந்து படைத்தார் என்று தொடக்க நூல் ஆசிரியர் காட்டுவததை நிச்சயமாக ஆழமாக நோக்கவேண்டு;ம். அத்தோடு ஆணையும் பெண்ணையும் குறிக்கும் எபிரேய வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டுள்ளது என்பதையும் அவதானிக்க வேண்டும் (אישׁ இஷ்- ஆண், மனிதன்: אִשָּׁה இஷாஹ்- பெண், மனைவி)

ஒற்றைத் திருமணம்தான் விவிலியத்தின் ஒழுக்க இலக்கு, இருப்பினும் பல இடங்களில் பலதார திருமணங்கள் குறிப்பிடப்படுகின்றன (காண்க தொ.நூ 4,19). ஈசாக்கு, யோசேப்பு, மோசே, போன்றவர்கள் ஒற்றை திருமணத்தை செய்தவர்கள் என்று விவிலியம் காட்டுகிறது. கடவுள் தொடக்க நூலில் ஆதாமிற்கு ஒரு ஏவாளைத்தான் படைத்ததாக இரண்டு பாரம்பரியங்களிலும் ஆசிரியர் காட்டுகிறார், இது, ஆசிரியர் ஒரு தாரத்தைத்தான் முன்னிறுத்துகிறார் என்று எடுக்கலாம். மோசேயுடைய சட்டங்கள் ஒரு தாரத்தை வலியுறுத்தினாலும், பலதாரத்தை அது தடைசெய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. ஒரு ஆண் பல தாரத்தை கொண்டிருந்தாலும், ஒரு தாரம் பல ஆண்களை கொண்டிருக்க விவிலியத்தின் ஆரம்ப கால நூல்கள் அனுமதித்ததாக தெரியவில்லை.

மனைவியுடைய உரிமைகள் (காண்க வி.ப 21,10) மற்றும் அவருடைய கடமைகள் (காண்க நீதி 31,10-31: 1திமோ 5,14) இந்த புத்தகங்களில் அழகாக காட்டப்பட்டுள்ளன. ஆண்களுக்கு பெண்களை விவாகரத்து கொடுக்க இணைச் சட்டம் அதிகாரம் கொடுத்தாலும் (காண்க இ.ச 22,13-21) பெண்களுக்கு தங்கள் கணவர்களை விவாகரத்து செய்ய அனுமதி தரவில்லை.

இயேசு ஆண்டவர், இந்த ஆண் ஆதிக்கத்திற்கு ஆணியடிக்கிறார். விவாகரத்தை முதல் முதலில் முழுமையாக விவாகரத்து செய்தவர் ஆண்டவர் (காண்க மத் 19,3-9). விவாகரத்தை ஆண்டவர் தீமையாக காண்கிறார், விவாகரத்து மூலமாக ஆண்களும் பெண்களும் விபச்சாரம் செய்கிறார்கள் என்கிறார். திருமணம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது, இதனை பிரிக்க எந்த மனிதருக்கும் அதிகாரம் இல்லை என சொல்லி, பிழையான உறவுகளின் பொருட்டு மட்டும் கணவன் மனைவியை பிரியலாம் என்கிறார். இந்த தவறான உறவை விபச்சாரம் என்று மொழி பெயர்த்தாலும், உண்மையில் இது இயற்கைக்கு எதிரான உறவைக் குறிக்கிறது என்று சில கிரேக்க மொழியியலாளர்கள் கருதிகின்றனர். ஆக இது இயற்கைக்கு எதிரான உறவாக இருந்தால், அங்கே திருமணம் இல்லை, எனவே அங்கே விவாகரத்தும் இல்லை.

புதிய ஏற்பாடு, முக்கியமாக பவுலுடைய திருமுகங்கள், கணவன் மனைவி உறவை, உடன்படிக்கையாக கண்டு இருவருக்கும் பாரிய பொறுப்புக்கள் உள்ளன என காட்டுகிறது. அத்தோடு இந்த உறவை, திருச்சபைக்கும் இயேசு ஆண்டவருக்குமான உறவு எனக்காட்டுகிறார் (காண்க 1கொரிந் 7,2-5: எபேசி 5,22-33: கொலோ 3,18.19: 1பேதுரு 3,1-7). பவுல் இந்த படிப்பினைகளை எழுதியபோது, அக்காலம், இன்னமும் பெண்களை இரண்டாம் தரமாகவும், அல்லது ஆண்களின் உடமைகளாகவும் கருதியது. இப்படியான காலத்தில், பவுலின் கருத்துக்கள் நிச்சயமாக இறைவார்தையாக மட்டும்தான் அமையமுடியும். இக்காலத்தில் இருந்துகொண்டு பவுலுடைய கருத்துக்களை சூழலியலின் வெளியில் வாசித்தால், அது நிச்சயமாக அவருக்கு எதிரான தவறாகத்தான் இருக்கும்.

பெண்களை ஆண்களுக்கு இரண்டாமானவர்கள் என்று இயேசு எங்கும் சொல்லவில்லை, அவர் ஆண்மையையும், பெண்மையையும் இவ்வுலகத்தின் தேவைகள் என்றுதான் சொல்கிறார். கடவுளே சொல்லாத இடத்தில், ஆண்கள் பெண்களை இரண்டாம் தரம் என்று சொல்ல எந்த ஆண்களுக்கும் உரிமையில்லை, ஏனெனில் அவர்களும் சரிநிகர் ஆண்டவரின் சாயலே. விவிலியத்தில் சில இடங்களில் பெண்ககுளுக்கு எதிராக சொல்லப்பவது போல தோன்றுவது, அதிகமான வேளைகளில் அபிப்பிராயங்கள் என்று எடுக்கலாம், அத்தோடு அந்த அபிப்பிராயங்களை அந்தந்த சூழலியலில் வாசிக்க வேண்டும்.

வாசிக்க சீராக் 26. காண்க சீராக் 26,1-3: 1துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன். அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும். 2பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான். 3நல்ல மனைவியை ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள்.

முதல் வாசகம்
நீதிமொழிகள் 31,10-13.19-20.30-31

10திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். 11அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். 12அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். 13கம்பளிஇ சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

19இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். 20எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

30எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். 31அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.


நீதிமொழிகள் புத்தகம் 31அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பழைய தமிழ் விவிலியம் இதனை பழமொழி ஆகமம் என அழைத்தது. புதிய பெயரைவிட பழைய பெயர் சற்று குறிப்பிடக்கூடியது போல தோன்றுகிறது. பழமொழி என்பது ஒருவகை இலக்கியம், இந்த இலக்கியங்கள் இஸ்ராயேலருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. மொசபத்தேமியா, எகிப்து, கிரேக்கம், மற்றும் திராவிடம் போன்றவற்றிலும் இவ்வகை இலக்கியங்கள் புழக்கத்திலிருந்தன். கத்தோலிக்க விவிலியம் ஞான நூல்கள் என்ற ஒரு பிரிவைக் கொண்டிருக்கிறது. இந்த ஞான நூல்களில், நீதிமொழிகள் புத்தகமும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

மனித வாழ்வின் ஒழுக்கங்களைப் பற்றி இந்த புத்தகம் அதிகமாக பேசுகிறது. மனித வாழ்வை மூன்று முக்கியமான அங்கங்களில் இது நோக்குகிறது. ஒரு சாதாரண மனிதனின் குடும்ப வாழ்வின் நியதிகளை முதலில் காட்டுகிறது. இரண்டாவதாக அரசனும் அவர் ஆட்சியும் எப்படியிருக்க வேண்டும் என்று காட்டுகிறது. மூன்றாவதாக இறையியல் கருத்துக்களையும் வித்தியாசமான முறையில் வாசகர்களுக்கு கொண்டுவருகிறது.

இந்த புத்தகம் யாருக்கு எழுதப்பட்டது என்ற கேள்வியும் நிச்சயமாக வாசகர்களுக்கு எழும். சிலர் இதனை, ஒவ்வொரு சாதாரண இஸ்ராயேல் குடிமகனுக்கும் வாழ்க்கையை மையமாக கொண்டு எழுதப்பட்டது என்கின்றனர். இதனை இஸ்ராயேலின் பெரியவர்கள் எழுதினார்கள் என்று இந்த வாதம் பரிந்துரைக்கிறது. சிலர் இந்த புத்தகம் அரச மைந்தர்களை இலக்காக கொண்டு அரச பாடசாலையில் எழுதப்பட்டது என்கின்றனர். இதனை புலமை பெற்ற ஆசிரியர்கள் எழுதினார்கள் என்றும், இதற்கு பின்னர் அரசர்களுடைய பங்களிப்பு இருக்கிறது என்றும் வாதிடுகின்றனர்.

இதனை விட இன்னும் சிலர், இந்த புத்தகம் அக்காலத்தில் எழுந்த இறையியல் கேள்விகளுக்கும், ஆன்மீக வறுமைக்கும் பதிலளிக்கும் விதமாக இறையியல் நோக்கத்தோடு எழுதப்பட்டது என்கின்றனர். எப்போது இந்த புத்தகம் எழுதப்பட்டது என்பதற்கு சரியான விடை கிடையாது. இந்த புத்தகத்தின் சில பகுதிகள் சாலமோனின் காலத்திற்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். சில பகுதிகள் அரசர்கள் காலத்திலும், அடிமைவாழ்வு காலத்திலும் எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியத்துவத்திற்கு சாலமோனின் பெயரைக் கொடுப்பது, இந்த புத்தகத்திற்கு அதிகாரத்தையும், விளம்பரத்தையும் கொடுக்கும் ஒரு முயற்சி எனவும் கருதலாம்.

நீதிமொழி புத்தகம், ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் அப்படியே சந்திக்க தூண்டுகிறது. வாழ்வியலின் சாதாரண சவால்கள்தான் இங்கே தலைப்புக்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. அறிவு என்பது நம்முடைய அனுபவம் மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக அது மற்றவருடைய அனுபவத்திலும் தங்கியுள்ளது என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. இஸ்ராயேலின் ஞானிகள் மற்றவர்களுடைய அனுபவத்திலிருந்து வாசகர்களுக்கு கற்பிக்க முயல்கிறார்கள். கடவுளிடமிருந்துதான் ஞானம் தொடங்குகிறது எனினும், ஞானம் மனிதருடைய சாதாரண வாழ்வில் தன்னுடைய தாக்கத்தை செலுத்துகிறது. சமய நம்பிக்கையும் ஒழுக்க வாழ்வும் ஒத்துப்போக வேண்டும் என்பதும் நீதிமொழிகள் புத்தகத்தின் இன்னுமொரு படிப்பினை.

10 தொடக்கம் 31 வரையான இந்த வரிகள் மனைவியின் பெருமையை பறைசாற்றுகின்றன, அத்தோடு இந்த வரிகள் எபிரேய அரிச்சுவட்டை பின்பற்றி அரிச்சுவடி வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன (א அலெப் תּ தௌ, இருபத்தோரு எழுத்துக்கள்).

வ.10: பவளம், மனிதர்கள் விரும்பித் தேடும் ஒரு பொக்கிசம். ஒருவர் பலவிதமான துன்பங்களை அனுபவித்து பவளத்தை தேடுவது, இந்த பவளம் நிச்சயமாக தன்னுடைய வாழ்வை மாற்றும் என்ற நம்பிக்கையில்தான்;. எபிரேய விவிலியம் பவளத்திற்கு 'விலையுயர்ந்த அணிகலன்' என்றே சொல்கிறது (מִפְּנִינִים מִכְרָהּ׃ மிபெனினிம் மிகெராஹ்). இந்த விலையுயர்ந்த அணிகலன்களைவிட திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாள் அரிதானவர் என்கிறார் ஆசிரியர் (אֵשֶׁת־חַיִל 'எஷெத்-ஹாயில்: ஒழுக்கமுள்ள மனைவி). விவிலியத்தில் காலத்தை கடந்த கதாநாயகி ரூத்தும் இதே சொல்லால்தான் அழைக்கப்படுகிறார் (காணக் ரூத் 3,11 כִּי אֵשֶׁת חַיִל אָֽתְּ கி 'எஷெத் ஹயில் 'எத்).

வ.11: இந்த மனையாள் தன் கணவரின் நம்பிக்கையை வெல்கிறாள், இந்த மனையாளினால் அவர் கணவருக்கு நலமும் வளமும் பெருகும் என்கிறார் ஆசிரியர்.

இவளிடம் அவள் கணவன் தன் இதயத்தின் முழுமையையும் வைக்கிறார் என்று எபிரேய விவிலியம் மொழி பெயர்க்கிறது. இந்த மனைவியால் எந்த வளமும் குறைவுபடாது என்று எபிரேய விவிலியம் மொழி பெயர்க்கின்றது (וְשָׁלָל לֹא יֶחְסָר வெஷாலால் லோ' யெஹ்சார்). இங்கே வளத்தை குறிக்க ஷலால் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது போரில் பெறும் கொள்ளைப் பொருளைக் குறிக்கும். ஆக நல்ல மனைவியின் வருகை எந்தவிதமான வறுமையையும் ஏற்படுத்தாது என்பதை அழகாக சொல்கிறார் ஆசிரியர்.

வ.12: கணவனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மை செய்தலும், தீமை நினையாமலும் இருப்பது, மனைவியின் உச்சக்கட்ட நன்மைத்தனமாக பார்க்கப்படுகிறது.

மனைவி என்பவரில், வீடும் அதனைச் சார்ந்த இயக்கங்களும் அமைவததால் அவருடைய சிந்தனைகளில் அந்த வீட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. இவர் நன்மை நினைத்தால் அங்கே நன்மையும், அவர் தீமை நினைத்தால் அங்கே தீமையும் குடிகொள்ளும் என்பதை ஆசிரியர் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார். வ.13: கம்பளி மற்றும் சணல் ஆகியவை அக்காலத்திலே ஆடைகள் மற்றும் இதர போர்வைகளை நெய்ய பயன்பட்ட மூலப்பொருட்களாகும். இதனை பெண்களே சாதாரணமாக செய்தனர். இவர்கள் இந்த மூலப்பொருட்களை தேடிச் சேர்த்தனர். பெண்களின் கெட்டித்தனத்தில் அவர்கள் சேர்க்கும் அளவும் வேறுபட்டது.

நல்ல மனையாள் தன் கணவரின் உதவியில் அல்லது பிள்ளைகளில் நம்பியிருக்காமல், அவரே அவற்றை தேடிச் சேர்க்கிறார், அத்தோடு தன்னுடைய கைகளைக் கொண்டே அவற்றை விருப்பத்தோடு அனைத்து வேலைகளையும் செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறார். வேலை செய்வது வேறு, அந்த வேலைகளை தன்னுடைய கைகளால் மகிழ்வோடு செய்வது வேறு. இந்த வித்தியாசத்தைத்தான் ஆசிரியர் காட்டுகிறார். இந்த வரியை 'தன் கைகளால் மகிழ்ச்சியோடு செய்கிறார்' என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது (וַתַּעַשׂ בְּחֵפֶץ כַּפֶּיהָ வதா'அஸ் பெஹெபெட்ஸ் காபெஹா).

வவ.14-18: இந்த வரிகளை இன்றைய முதலாவது வாசகம் விட்டுவிடுகின்றது. இந்த வரிகளிலும், மனைவியின் மேன்மை அழகாக விவரிக்கப்படுகின்றன. (14) ஆசிரியர் மனைவியை ஒரு வணிக கப்பலுக்கு ஒப்பிடுகிறார். முன்னைய நாட்களில் அதிகமான வியாபாரங்களும் அத்தியாவசிய பொருட்களும் வணிக கப்பல்கள் மூலமே நடுநிலப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. (15) வைகறையில் துயில் எழும் இந்த உத்தமி வீட்டு வேலைகளைச் செய்கிறார். இது சாதாரணமாக பெண்களின் வேலைகளாக இருந்தாலும், அதனுடைய முக்கியத்துவத்தை மறக்காமல் குறிப்பிடுகிறார். (நம் வீட்டில், அன்னையர், மனைவியர், சகோதரிகள் இந்த வேலைகளைத்தான் ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்கிறபடியால் ஏனோ அவை தெரியாமலே போய்விடுகிறது). (16) நிலத்தை வாங்குவது இக்காலத்தைப் போல அக்காலத்திலும் மிக முக்கியமான ஒரு விடயமாக கருதப்பட்டது. சில வேளைகளில் வாங்கப்பட்ட நிலம் வளத்தை கொண்டுவரும், சில வேளைகளில் புதிதாக வாங்கப்பட்ட நிலம், ஏற்கனவே இருக்கும் சொத்துக்களை ஏப்பம்விட்டுவிடும்.

இதனால்தான் நம் கதாநாயகி நிலம் வாங்கும்போது மிகவும் அவதானமாக இருக்கிறார் என்று எடு;க்கலாம். (17) சோம்பேறித்தனம் ஒரு தீய நடத்தையாக கருதப்பட்ட அக்காலத்தில் சுறுசுறுப்பு நல்ல விழுமியமாக கருதப்பட்டது. சுறுசுறுப்பாக இருக்கிறவர்கள் எதிர்நோக்குடன் செயல்படுகிறவர்கள் என நம்பப்பட்டார்கள். (18) நல்ல மனையாளின் இன்னொரு பண்பு நம்பிக்கை, அவர் தன் விளைச்சல் அதாவது முயற்சி திருவினையாக்கும் என நம்புகிறார். இவர் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு அணையாது என்கிறார் நீதிமொழிகளின் ஆசிரியர்.

விளக்கு அணையாது என்பதற்கு எபிரேயத்தில் பல அர்த்தங்கள் கொடுக்கப்படலாம். தமிழ் கலாச்சார நம்பிக்கையில் இது ஆசீர்வாதம் அல்லது பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கலாம். எபிரேயத்தில் விளக்கு அணையாது என்பது, இரவிலும் இவர் வேலை செய்தவண்ணம் இருக்கிறார் என்ற அர்தத்தையும் கொடுக்கும் (לֹֽא־יִכְבֶּה בַלַּיְלָ נֵרָהּ׃ லோ'-யிக்வெஹ் வாலாய்லா நெராஹ்- இரவிலும் விளக்கு அணைக்கப்படாது).

வ.19: இராட்டினம் மற்றும் நூல் இழைகளை எப்படி இவர் கையாளுகிறார் என்பது சொல்லப்படுகிறது. இராட்டினத்தைப் பயன்படுத்தி நூல் இழைக்கப்படுவது இஸ்ராயேலிலும் புழக்கத்திலிருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

வ.20: இங்கே சொல்லப்படுகின்ற எளியவரும் (עָנִי 'அனி) வறியவரும் (אֶבְיֽוֹן'எவ்யோன்) இஸ்ரேயலாராக இருந்திருக்கலாம். எளியோர்களையும் வறியவர்களை உபசரிப்பது இஸ்ராயேலருக்கு புண்ணியமாக கருதப்பட்டது, இருப்பினும் அனைவரும் அதனை பின்பற்றவில்லை. இந்த புண்ணியங்களை பின்பற்றுவதன் வாயிலாக இவர் மோசேயின் சட்டத்தை பின்பற்றும் உண்மை இஸ்ராயேல் மகளாகிறார்.

வவ.21-29: குளிர்கால கம்பளிகளையும், தேவையான போர்வைகள், தான் உடுத்த பட்டாடைகள், போன்றவற்றை இவரே செய்வதாக ஆசிரியர் இவரைக் காட்டுகிறார். இந்த புத்தகத்தின் ஆசிரியர் உண்மையிலே ஒரு ஞானியாக இருந்திருக்க வேண்டும். ஒரு ஞானியால்தான் சாதாரண பெண்ணின் கடமையின் முக்கியத்துவத்தை அழகாக காணமுடியும்.

(வ23) ஆணின் வளர்ச்சியின் பின் ஒரு பெண் நிச்சயமாக இருக்கிறார் என்பதற்கு ஒப்ப, இவருடைய அழகான வீட்டு நிர்வாகத்தால், இவர் கணவர் ஊர் பெரியவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மக்கள் மன்றம் என்பது இங்கே நகர வாயிலைக் குறிக்கிறது. அங்கேதான் பெரியவர்கள் கூடி மக்களுக்கு ஆலோசனைகளும், தீர்ப்புக்களும் வழங்கினர்.

(25) பெண்களுக்கு உண்மையான அணிகலன்கள் என்ன என்பதை இந்த வரியில் காட்டுகிறார் ஆசிரியர். இந்த குலவிளக்கு, ஆற்றலையும் பெருமையையும் அணிகலன்களாக அணிந்திருக்கிறார் என்பது, ஆசிரியருக்கு தன் மனைவிமேல் அல்லது பெண்கள் மேல் இருந்த மதிப்பைக் காட்டுகிறது (עֹז־וְהָדָר לְבוּשָׁהּ 'ஓட்ஸ்-யெஹாதார் லெவூஷாஹ்: ஆற்றலும் மரியாதையும் அவள் ஆடையாக). ஆற்றலும் மரியாதையும் இருக்கின்றபடியால் எதிர்காலத்தை இவர் பயமின்றி ஆட்கொள்கிறார். (வவ 26-27) ஞானத்தோடு பேசி, அன்போடு அறிவுரை கூறுகின்ற இவர், சோம்பியிருக்க மாட்டார். சோம்பல் நல்ல மனையாளிற்கு உகந்தது அல்ல என்பது மீண்டும் ஒருமுறை இங்கே காட்டப்படுகிறது. (வ.28) கணவரிடமும் பிள்ளைகளிடம் நல்ல பெயர் எடுப்பது என்பது அக்கால ஆண்ணாதிக்க சமுதாயத்தில் இலகுவாக இருந்திருக்காது, இருந்தும் இவர் நல்ல பெயர் எடுக்கிறார். (வ29) திறமை வாய்ந்த பெண்கள் இருந்தும் தன் மனைவிதான் சிறந்தவர் என்று கணவர் வாழ்த்துகிறார். கணவரின் வாழ்த்து நிச்சயமாக இந்த குடும்ப விளக்கிற்கு உந்து சக்தியாக இருந்திருக்கும்.

வ.30: பெண்களுக்கு எழிலும் அழகும் மிகவும் முக்கியமானவை. இயற்கையாகவே பெண்கள் எழிலாகவும், அழகாகவும் இருப்பார்கள். அத்தோடு இவற்றின் முக்கியத்துவம் இவர்களுக்குத்தான் நன்கு தெரியும். இந்த இரண்டும் ஏமாற்றும் மற்றும் அற்றுப்போகும் என்கிறார் ஆசிரியர் (שֶׁקֶר הַחֵן וְהֶבֶל הַיֹּפִי אִשָּׁה ஷெகெர் ஹஹென் வெஹெவெல் ஹயோபி 'இஷ்ஷாஹ்: பெண்ணின் எழில் ஏமாற்றும், அழகு வீனாகும்.). இவற்றைவிட ஆண்டவரிடம் அச்சம் கொள்ளும் பெண்ணே புகழத்தக்கவள் என்படுகிறார். ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதல் என்பது, இவர் ஆண்டவரை அனைத்திற்கும் மேலாக வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

வ.31: இந்த பெண்ணை வாசகர்கள் புகழவேண்டும் என்றும், அவர் உழைப்பை மக்கள் மன்றம் பாராட்ட வேண்டும் என்ற சிந்தனையையும் முன்வைக்கிறார், ஆசிரியர். இந்த இடத்திலும் மக்கள் மன்றம் என்பதை 'நகர் வாயிற் கதவடிகள்' என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார் (בַשְּׁעָרִ֣ים வெஷ்'ஆரிம்- கதவுகள்). அரசர்கள் காலத்திற்கு முன்பு ஊர்த்தலைவர்கள் நகர்புற வாயிலிலே இருந்துதான் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முயன்றார்கள். அரசர்கள் காலத்திலும் இந்த நடைமுறை இருந்திருக்கிறது. தாவீது மன்னனின் மகன் அப்சலோம், மக்களை தன் பக்கம் இழுக்க இந்த இடத்தில்தான் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க முன்வந்தான்.

ஆக இவர் கணவரை மக்கள் முன்னிலையில் உயர்வாக்குவதில் இவரும் பங்களிப்பு செய்கிறார் என்பது புலப்படுகிறது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 128

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!

2உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!

3உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.

4ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.

5ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!

6நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!



இந்த திருப்பாடல் இஸ்ராயேல் மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது, இந்த பாடலை அவர்கள் தங்கள் திருமண விழாக்களிலே பாடினார்கள். குடும்பத்திற்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் எவ்வளவு முக்கியமானது அல்லது ஆண்டவரிலே குடும்பங்கள் தங்கியிருக்கின்றன என்பதை இந்த திருப்பாடல் நினைவூட்டுகிறது. தனி வாழ்விலும், நிகழ்கால வாழ்விலும் ஆண்டவர் இருக்கவேண்டும், ஆண்டவருடைய பிரசன்னம் ஒருவருடைய வாழ்வை வித்தியாசமானதாக்குகிறது என்பதை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார்.

இந்த பாடலின் முன்னுரை, இதனை சீயோன் மலையேறு பாடல் என வர்ணிக்கிறது (שִׁיר הַמַּעֲלוֹת ஷிர் ஹம்ம'லோத்- ஏறுகின்றபோது பாடல்). இதனைவிட இந்தப் பாடலை ஞான பாடல்களில் ஒன்று என்றும் சில ஆசிரியர்கள் வர்ணிக்கின்றனர். இப்படியான ஞான பாடல்கள் பல, திருப்பாடல்கள் புத்தகத்தில் காணப்படுகின்றன.

வ.1: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என முன்மொழியப்படுகின்றனர். ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது, எபிரேய சிந்தனையில் பார்க்கப்பட வேண்டும். ஆண்டவருக்கு அஞ்சுதல், என்பது அவரில் நிபந்தனையற்ற நம்பிக்கை வைத்தலைக் குறிக்கிறது. ஆண்டவருடைய இருப்பை அறியாதவர்கள் அவர் மேல் மரியாதையை அல்லது விவிலிய வார்த்தையில், அவர் மேல் அச்சம் இல்லாதவர்களாக இருப்பர். இந்த உலகின் அதிகமான தீமைகளுக்கு காரணம், ஆண்டவர் மேல் நம்பிக்கை அல்லது அச்சம் இல்லாததே, என்று இன்று சமூகவியலாளர்கள் காண்கின்றனர். ஒரு குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகள்கூட தமது பெற்றோர் முன் சில வேலைகளை செய்ய தயங்குவர். இதனை அவர் மரியாதை கலந்த அச்சம் என்று எடுக்கிறார்கள். இப்படியான ஒருவகை அச்சம்தான் தெய்வ பயம். இங்கே ஆண்டவர் ஒருவரை தண்டிப்பார் என்பதைவிட, அவர் ஆண்டவர் மேல் அதிகமான அன்பை வைத்திருப்பதால், ஆண்டவரை புண்படுத்த விருப்பாமல் இருப்பார், இதனைத்தான் விவிலியம் தெய்வ பயம், அல்லது ஆண்டவர் மேல் அச்சம் என்று விளக்குகின்றது. இத்தகையோர் பேறுபெற்றோர் என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (אַשְׁרֵי כָּל־יְרֵ֣א יְהוָ֑ה 'அஷ்ரே கோல்-யெரெ' அதோனாய், பேறுபெற்றவர் அவர்கள் அனைவரும் ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள்).

ஏற்கனவே நாம் விளக்கியதை இந்த வரியின் இரண்டாவது பிரிவு விளக்குகின்றது. இந்த பிரிவில் ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் என்ன செய்வார்கள் என்பது சொல்லப்படுகிறது (הַהֹלֵךְ בִּדְרָכָיו׃ ஹஹோலெக் பித்ராகாவ்- அவர் அவரின் பாதையில் நடப்பவர்). இங்கே ஆண்டவருடைய பாதைகள் என்பது ஆண்டவருடைய சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைக் காட்டுகிறது.

வ.2: சாதாரணமாக நாம் நம் உழைப்பின் பயன் அனைத்தையும் உண்பது கிடையாது. நாம் இன்று உண்பதும் நம்முடைய உழைப்பு கிடையாது. நம் முன்னோரின் கடினமாக உழைப்பைத்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஒருவர் தம் உழைப்பின் பயனை அனுபவித்தால், அவர் நி;ச்சயமாக நிறைவடைவார் (יְגִ֣יעַ כַּ֭פֶּיךָ כִּ֣י תֹאכֵ֑ל யெகி'அ காபெகா கி தோ'கால்- உம் கையின் உழைப்பை உண்பீர்). போராட்டங்களும், போர்களும், அன்னியர்களின் படையெடுப்புக்களும் நிறைந்த அக்கால வாழ்வில் ஒருவர் தன் நிலத்தில் தான் உழைத்து உருவாக்கியதை, உண்பது சந்தேகமானதாகவே இருந்தது. இப்படியான வேளையில்தான் திருப்பாடல் ஆசிரியர் 'உம் உழைப்பின் பயனை நீரே உண்பீர்' என்கிறார். இது நற்பேறுக்கும் நலத்திற்கும் ஒப்பிடப்படுகிறது (אַשְׁרֶ֗יךָ וְט֣וֹב לָֽךְ׃ 'அஷ்ரேகா வெதோவ் லெகா- ஆசீர்வாதமும் நன்மைத்தனமும் உமக்கு).

வ.3: இந்த வரி மனையாளைப் பற்றிப் பேசுகிறது. இந்த வரியின் காரணமாகத்தான் இந்த திருப்பாடலை திருமண திருப்பாடல் என அழைத்தனர். ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவரின் துணைவியர், அவர் இல்லத்தில் கனிதரும் திராட்சை செடிக்கு ஒப்பிடப்படுகிறார் (אֶשְׁתְּךָ֤ ׀ כְּגֶ֥פֶן פֹּרִיָּה֮ 'எஷ்தெகா கெகெபென் போரியாஹ்- உம் மனைவி கனிதரும் திராட்சை போல்). திராட்சை மரம், இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் ஒன்றாக கலந்த செடி, இதற்கு பல அர்த்தங்களும் அடையாளங்களும் கொடுக்கப்படுகின்றன. இஸ்ராயேல் இனமும் பல வேளைகளில் திராட்சை செடியாகவும், கடவுள் அதன் உரிமையாளராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னை திராட்சை செடியாகவும், மக்களை அதன் கிளையாகவும், கடவுளை தோட்ட உரிமையாளராகவும் வர்ணிக்கிறார் (காண்க திராட்சைச் செடி: ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு 08.10.2017.)

கனிதரும் திராட்சை செடி தன் உரிமையாளருக்கு செல்வத்தை கொண்டுவரும், அதேபோல நல் மனையாள் தன் கணவருக்கு மக்கட் செல்வத்தை கொண்டுவருவார் என்பது இங்கே உருவகிக்கப்படுகிறது. இரண்டாவதாக, ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் மனிதரின் பிள்ளைகள் ஒலிவ கண்டுகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். இந்த ஒலிவ கண்டுகள் இவரை சுற்றியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது (זֵיתִים ட்செதிம்- ஒலிவ மரங்கள்). ஒலிவ மரங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் பிரசித்தமானது, இந்த மரங்களை அதிகமாக இடங்களில் இவர்கள் வளர்தார்க்ள. இந்த பகுதியில் காணப்பட்ட காலநிலை காரணமாக இந்த மரங்கள் தென் ஐரோப்பிய நாடுகளைப் போல இங்கேயும் அதிகமாக வளர்ந்தன். ஒலிவ மரங்கள் பல நூறு ஆண்டுகள் வாழக்கூடியவை. இதன் இலைகள், பட்டைகள், கிளைகள், பழங்கள், விதைகள் மற்றும் அதன் எண்ணெய் என்று அனைத்தும் பயன்படக்கூடியவை. இதனை அவர்களின் 'பனை மரம்' என்றுகூட அழைக்கலாம். ஆண்டவர் இயேசுவுடைய வாழ்விலும், ஒலிவ மரம் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இயேசு கெத்சமெனியில் ஒரு ஒலிவ மரத்தின் அடியில்தான் செபித்தார். முதல் ஏற்பாட்டில், முக்கியமாக இறைவாக்கினர்கள் ஒலிவ மரத்தை இஸ்ராயேலுக்கு ஒரு அடையாளமாக பயன்படுத்துகின்றனர்.

பிள்ளைகள் ஒலிவ கண்டுகள் போல் இருப்பார்கள் என்பது, பிள்ளைகளின் வளமையான நிலையைக் காட்டுகிறது.

வ.4: மேற்குறிப்பிட்ட வியாக்கியானங்களை இந்த வரி மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. அதாவது ஆண்டவருக்கு அஞ்சுகின்ற ஆடவர்கள் இப்படியான மகிழ்வை பெறுவார்கள் என்கிறார் (גָּבֶר יְרֵא יְהוָה׃ காவெர் யெரெ' அதேனாய்). இதிலிருந்து இந்த பாடலின் பாடுபொருள், ஆண்டவருக்கு அஞ்சும் மனிதர் என்பது அழகாக தெரிவிக்கப்படுகிறது.

வ.5: இந்த பாடலின் மிகவும் அழகான வரி. ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!, (יְבָרֶכְךָ יְהוָה מִצִּיּוֹן யெவாரெக்கா அதோனாய் மிட்ஸ்சியோன்) உம் வாழ்நாள் எல்லாம் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக (וּרְאֵה בְּטוּב יְרוּשָׁלִָ֑ם כֹּ֝ל יְמֵי חַיֶּיךָ׃ வுரெ'எஹ் பெதோவ் யெரூஷாலாயிம் யெமெ ஹய்யெகா). இந்த இரண்டு ஆசீர்வாதங்களைத்தான் ஒரு இறையன்புள்ள இஸ்ராயேலர் விரும்பினார். இவற்றை கடவுள் தருவார் என்பது நிச்சயமாக இவருக்கு நிறைவளிக்கும். ஆண்டவரின் மலை சீயோன், அங்குதான் அவர் மண்ணுலக உறைவிடமான எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல நூறு யூதர்கள் திருப்பயணமாக சீயோன் மலையை நோக்கி வந்தார்கள். தேவாலயம் இடிக்கப்பட்டதன் பின்னர் கூட, இன்னும் சீயோன் மலைதான் ஆண்டவரின் உண்மையான உறைவிடமாக அனுபவிக்கப்படுகிறது.

எருசலேமின் நல் வாழ்வு என்பது, ஒவ்வொரு இஸ்ராயேல் மகன் மற்றும் மகளுடைய கனவு. எருசலேமிற்காக இன்று இத்தனை போர்கள் நடக்கிறது என்றால், அதற்கு காரணம் இந்த நம்பிக்கைதான் (இது சரியா தவறா என்று தெரியவில்லை). எருசலேமில் வாழ்வு என்பதை விட, எருசலேமின் வாழ்வு என்பது இஸ்ராயேலருக்கு மகிவும் முக்கியமானதாக அமைகிறது.

வ.6: இந்த இறுதியான ஆசீர், இதனை பெறுபவருக்கு அவருடைய மரணத்தின் பின்னும் ஆசீர் அளிப்பது போல உள்ளது. நல்ல மனிதர்களுக்கு மட்டும்தான் நிறைவான வாழ்வு கிடைக்கும் என்று இஸ்ராயேலர்கள் நம்பினார்கள். ஒருவர் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்கிறார் என்றால், அவர் நீடிய காலம் ஆயுளோடு வாழ்கிறார் என்று பொருள் (בָנִים לְבָנֶיךָ பானிம் லெவானெகா- உமது பிள்ளைகளின் பிள்ளைகள்).

இறுதியாக இஸ்ராயேலுக்கு நலம் உண்டாவதாக என்று இந்த திருப்பாடலை நிறைவு செய்கிறார். அதிகமான ஈழத்தமிழர்கள் தமிழீழ மலர்வை விரும்புவதைப் போல, இஸ்ராயேலர்கள் அனைவரும், எருசலேமிற்கு நலம் உண்டாகவேண்டும் என்று விரும்பினார்கள். பிற்காலத்தில் இது மக்களுக்கான ஆசீர்வாதமாகவே மாறியது.

שָׁל֗וֹם עַל־יִשְׂרָאֵֽל ஷாலோம் 'அல்-யிஷ்ரா'எல்.



இரண்டாம் வாசகம்
1தெசலோனியர் 5,1-6

1சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. 2ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். 3'எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது. 4ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல் ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. 5நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. 6ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

தெசலோனியர் திருமுகம் காலத்தால் மிகவும் முந்தியது. இது எழுதப்பட்ட காலத்தில், ஆண்டவரின் வருகை மிகவும் அருகில் இருக்கிறது என்று பவுலே நம்பினார். இதனால்தான் இதிலே இறுதிகாலத்தைப் பற்றிய அதிகமான நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பல அறிவுரைகளை சொல்லிய பவுல், இந்த இறுதியான அதிகாரத்தில் வேறு சில முக்கியமான தரவுகளை முன்வைக்கிறார். ஏற்கனவே சொன்னபடியால், சில தரவுகளை தன் மக்கள் எற்கனவே நன்கு அறிந்திருக்கிறார்கள் என எடுக்கிறார்.

வ.1: சகோதர சகோதரிகளே, என்ற தமிழ் மொழிபெயர்ப்பு மிகவும் சரியானது. கிரேக்க மொழியின் ἀδελφοί (அதெல்பொய்) என்ற சொல், உரிமைக் குடிமக்கள் அனைவரையும் குறிக்கும். இதற்குள் ஆண்களும் பெண்களும் உள்வாங்கப்படுவர். காலங்களையும் நேரங்களையும் குறித்து தெசலோனிக்கருக்கு அறிவிக்க தேவையில்லை என்கிறார். இங்கே இரண்டு வகையான சொற்கள் பாவிக்கப்படுகின்றன.

அ. குரோனோஸ் (χρόνος): இது சாதாரண காலத்தை அல்லது கால கணிப்பைக் குறிக்கும். இதற்குள் காலம், நேரம், மாதம், ஆண்டு போன்றவை அடங்கும். உ-ம்: இயேசு பிறந்த காலத்தை வரலாற்று ரீதியில் சிலர் கி.பி 0 அல்லது கி.பி 3 என்று கணிக்கின்றனர்.

ஆ. கைரோஸ் (καιρός): இது தகுந்த காலத்தைக் குறிக்கும். இது மனிதர்களின் நாட்கள் மற்றும் காலக் குறிப்பினுள் அடங்காது. இதனை கடவுளே தீர்மானிக்கிறார். இது எந்த காலத்திலும் நடைபெறலாம். சாதாரண காலம் மனிதரின் அளவுகளுக்கு உட்பட்டே கணிக்கப்படுகிறது, ஆனால் தக்க காலம் என்பது அதனை தாண்டியதாக அமைகிறது. உ-ம்: இயேசுவின் பிறப்பு தக்க காலம் எனப்படுகிறது. அதாவது இயேசுவின் பிறப்புத்தான் காலத்திற்கு அர்த்தம் கொடுக்கிறது எனலாம்.

பவுல் இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, மனிதரின் நேர அளவோ அல்லது கடவுள் தரும் தகுந்த காலமோ, எதுவாயினும் அது தெசலோனிக்கருக்கு தெரிந்திருக்கிறது என்கிறார். வ.2: பவுல் தெசலோனிக்கருக்கு நல்ல ஒரு உதாரணம் கொடுக்கிறார். திருடர்கள் உரோமையர்களுடைய காலத்தில் இரவில்தான் வருகிறார்கள் என்பது தெரிகிறது (ஈழத்திலும், விசேடமாக யாழ்ப்பாணத்திலும் இப்போது திருடர்களின் கைவரிசை தொடங்கிவிட்டது, இவர்களும் இரவில்தான் வருகிறார்கள், இரவின் இருள் மக்கள்). κλέπτης ἐν νυκτὶ οὕτως ἔρχεται கிலேப்டேஸ் என் நுக்டி ஹுடோஸ் எர்கேடாய் - திருடன் இரவில் வருவது போல். திருடர்கள் பலவிதமான நோக்கங்களுக்காக இரவை தெரிவு செய்திருப்பார்கள். இரவில் மக்கள் சோர்வாக இருப்பார்கள், காவலர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள். இரவில் மற்றவர்கள் இன்னொருவருக்கு உதவி செய்ய வரமாட்டார்கள். இருள் சூழ்ந்திருப்பதன் காரணமாக, தாங்கள் ஒழிந்து கொள்வதற்கு இரவே தகுதியாக இருக்கிறது. இப்படியாக இரவு திருடர்களுடைய தக்க காலமாக, கைரோஸாக இருக்கிறது எனலாம்.

இதனைப் போலவே ஆண்டவருடைய வருகையும் இருக்கும் என்கிறார் பவுல் (ἡμέρα κυρίου ஹேமெரா கூரியு_ - ஆண்டவரின் நாள்). அதாவது ஆண்டவரின் நாள் பயங்கரமாக இருக்கும் என்பதற்கு இந்த உருவகத்தை பவுல் பயன்படுத்தியிருக்கலாம்.

வ.3: எங்கும் அமைதி - ஆபத்தில்லை என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் போது என்ற உருவகத்தை பயன்படுத்துகிறார் பவுல் (εἰρήνη καὶ ἀσφάλεια எய்ரேனே காய் அஸ்பாலெய்யா - அமைதியும் பாதுகாப்பும்). அமைதி மற்றும் பாதுகாப்பை உரோமையர் கால கிரேக்கர்களே பிழையாக விளங்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. போர் இல்லாத காலத்தையும் நாட்டில் வெளிப்படையாக வன்முறை அல்லது கிளர்ச்சி இல்லாத காலத்தையும் மக்கள் சாதாரணமாக அமைதி என நினைக்கிறார்கள் (இன்று வடக்கில் அமைதியிருக்கிறது என்று தமிழர்களும் சிங்களவர்களும் நினைப்பது போல). இது உண்மையான அமைதியோ அல்லது பாதுகாப்போ கிடையாது. உண்மையான அமைதி ஆண்டவர் தருவது, அங்கே வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோற்றவர்கள் கிடையாது. அது உண்மையில், நீதியில் கட்டப்பட்ட சகோதரத்தவம்.

இரண்டாவதாக பேறுகால வேதனையடைய ஒரு பெண்ணின் உதாரணத்தையும் பவுல் பயன்படுத்துகிறார். கருவுற்றிருப்பவருக்கு எப்போது பிரசவ வேதனை வரும் என்பதை இன்று துல்லியமாக மருத்துவர்களால் கணிக்க முடியும் (இருந்தும் சிலவேளைகளில் அது முன் பின் வரும்), அக்காலத்தில் அவ்வாறு இருந்திருக்காது. ஒன்பதாவது மாதத்தில் அந்த வேதனை எப்போதும் வரலாம் என்று அவர்கள் நம்பியிருந்திருக்கலாம்.

இந்த இரண்டு உதாரணங்களைப் போல, ஆண்டவரின் வருகை திடீரென வரும், யாரும் அதற்கு தப்ப முடியாது என்கிறார் பவுல்.

வ.4: இந்த வரியில் கிறிஸ்தவர்களின் மகத்துவத்தை காட்டுகிறார் பவுல். தெசலோனிக்கர் இருளின் மக்கள் அல்ல என்கிறார் (οὐκ ἐστὲ ἐν σκότει ஊக் எஸ்டெ என் ஸ்கோடெய்- நீங்கள் இருளில் இல்லை). திருடனைப் போல அந்த நாள் இவர்களுக்கு வராது என்கிறார். ஆண்டவருடைய நாள் அறிவிலிகளுக்குத்தான் திருடனைப் போல தெரியாமல் வரும் அதேவேளை தெசலோனிக்கர், எற்கனவே நன்கு புரிந்தவர்களாக இருக்கின்ற படியால் அவர்கள் அதற்கு பயம் கொள்ளத் தேவையில்லை என்றாகிறது.

இருளில் மக்கள் தடுமாறுவார்கள், பயத்தில் இருப்பார்கள். அவர்களுடைய அசைவை இருளின் சக்தி மட்டுப்படுத்தும். ஒளியின் மக்கள் சுந்திரமாக இருப்பார்கள். அவர்களுடைய அசைவு சற்று விசாலமானதாக இருக்கும். அவர்கள் பாதுகாப்பாகவும் இருப்பார்கள்.

வ.5: இந்த வரி ஒளியைப் பற்றி விவரிக்கிறது. இந்த வரியில், தன் மக்களை ஒளியின் மக்கள் என பவுல் அழகாக அழைக்கிறார் (γὰρ ὑμεῖς υἱοὶ φωτός ἐστε καὶ υἱοὶ ἡμέρας. கார் ஹுமெய்ஸ் ஹுய்யோய் போடொஸ் எஸ்டே காய் ஹுய்யோய் ஹெமெராஸ் - ஆக நீங்கள் ஒளியின் மகன்களாக இருக்கிறீர்கள், அத்தோடு நாளின் மக்களாகவும் இருக்கிறீர்கள்).

இதனையே எதிர்மறையிலும் சொல்கிறார், நீங்கள் இருளில் நடப்பவர்கள் இல்லை என்கிறார் (Οὐκ ἐσμὲν νυκτὸς οὐδὲ σκότους· ஊக் எஸ்மென் நுக்டொஸ் ஊதெ ஸ்கொடூஸ்).

ஒளி, கடவுளைக் குறிக்கும் மிகவும் பிரசித்தபெற்ற ஒரு அடையாளம். முதல் ஏற்பாட்டிலும் ஒளி கடவுளைக் குறிக்கும் அடையாளமாக இருக்கிறது. விவிலியத்தைவிட கிரேக்க இலக்கியங்களிலும் ஒளியின் கடவுள், பெரிய கடவுளாக கருதப்படுகிறார். ஆக ஒளியின் மக்கள் கடவுளின் மக்களாகவும், இருளின் மக்கள் தீமையின் மக்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

வ.6: இந்த வரி இரண்டாம் வாசகத்திற்கான விளக்கத்தைக் கொண்டுவருகிறது. பவுல் தன் மக்களை ஒளியின் மக்கள் எனக் கூறி, இதனால் அவர்கள் மற்றவர்களைப்போலல்லாது, விழிப்போடும் அறிவுத்தெளிவோடும் இருக்க வேண்டும் என்கிறார். விழிப்பும் அறிவுத் தெளிவும் இங்கே தெசலோனிக்கரின் நம்பிக்கையையும் உறுதியையும் குறிக்கலாம். மற்றவர்கள் இறப்பையும், ஆண்டவரின் வருகையைப் பற்றிய பிழையான புரிதல்களைக் கொண்டிருக்கின்ற போது, இவர்கள் அதனைவிடுத்து சரியான புரிதல்களை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 25,14-30

தாலந்து உவமை (லூக் 19:11 - 27) 14'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். 15அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். 17அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். 18ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். 19நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். 20ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். 21அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். 22இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, 'ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். 23அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்' என்றார். 24ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். 25உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். 26அதற்கு அவருடைய தலைவர், 'சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? 27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். 28'எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். 29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். 30பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

தாலந்து உவமை சிறிய வயதிலிருந்தே அனைத்து கிறிஸ்தவ பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்கப்படுகின்ற மிகவும் பாரம்பரியமான உவமை. இந்த உவமை லூக்கா நற்செய்தியில் (காண்க லூக் 19,11-27) வேறுவிதமாக சொல்லப்படுகிறது. மாற்குவும் நெடுந்தொலைவு பயணம் செய்யும் வீட்டு உரிமையாளரைப் பற்றி பேசுகிறார் (காண்க மாற்கு 13,34). ஆக இதிலிருந்து மத்தேயுவும் லூக்காவும், மாற்கு தவிர்ந்த வேறு பொதுவான மூலத்திலிருந்து இந்த பகுதியை பெற்றிருக்க வேண்டும். இதனை கியூ மூலம் என ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர் (Q- Quelle) மத்தேயுவின் 25ம் அதிகாரத்தை இறுதிக்கால நிகழ்வுகளை விளக்கும் பகுதியாகவே முக்கியமான ஆய்வாளர்கள் காண்கின்றார்கள். ஏற்கனவே இவர் 24ம் அதிகாரத்தில் குறிப்பிட்ட (காண்க 24,45-51), பயணம் செய்யும் வீட்டு உரிமையாளரை இங்கேயும் நினைவிற்கு கொண்டுவருகிறார். இந்த பகுதியிலும், தொலைதூரம் செல்லல், நீண்ட நாட்கள் வெளியில் இருத்தல், திரும்பி வருதல், பரிசும் தண்டனையும் வழங்கல் என்ற தலைப்புக்கள் கொடுக்கப்படுகின்றன.

விவிலியத்திற்கு வெளியே, ஏற்றுக்கொள்ளப்படாத புதிய ஏற்பாட்டு கால நூலான 'நசரேயரின் நற்செய்தி' என்ற நூலிலும், இந்த பத்து தாலந்து உவமை காட்டப்பட்டுள்ளது. அங்கே ஒருவர் தன்னுடைய தாலந்தை பயன்படுத்துகிறார், இன்னொருவர் அதனை ஒழித்துவைக்கிறார், மூன்றாமவர் அதனை தீய வழியில் செலவழிக்கிறார். முதலாமவர் பாராட்டப்படுகிறார், இரண்டாமவர் எச்சரிக்கப்படுகிறார், மூன்றாமவர் சிறையில் அடைபடுகிறார். இப்படியாக இந்த தாலந்து உவமை அக்காலத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது.

வ.14: இந்த பகுதியிலும் இயேசு விண்ணரசை பற்றித்தான் பேசுகிறார் என்பதை தொடக்கத்திலேயே தெளிவாக கூறுகிறார் மத்தேயு. இது மத்தேயுவின் ஒரு அடையாளம். மத்தேயு ஒரு நல்ல ஆசான் என்பதற்கு இது நல்ல உதாரணம். சொல்ல வருவதை தொடக்கத்திலேயே அவர் தெளிவாக சொல்லிவிடுவார். மற்றைய நற்செய்தியாளர்களைப் போலல்லாது 'விண்ணரசிற்கு,' வானகங்களின் அரசு என்ற சொல்லை மத்தேயு பயன்படுத்துவார். இந்த வரி மத்தேயு நற்செய்தியில் 14ம் வரியில் இல்லை. தெளிவிற்காக தமிழ் விவிலியம் இதனை இங்கேயும் பயன்படு;த்துகிறது.

வீட்டு முதலாளி நெடும் பயணம் செய்கிறவர் போல காட்டப்படுகிறார். இவர் தன் உடைமைகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கிறார். பணியாளர்களுக்கு δοῦλος (தூலொஸ்) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அடிமை என்ற அர்த்தமும் உண்டு. உரோமையர் காலத்தில் அடிமைகளே அதிகமாக வீட்டுப் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களை நம்பி பெரிய பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டன.

வ.15: அவரவர் தகுதிக்கு ஏற்ப தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன (ταλάντον தாலான்டொன்). தாலாந்து என்பது உரோமையர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒருவகை காசு. ஒரு தாலந்து 6000 தெனாரியத்திற்கு சமன். ஒரு தெனாரியம்தான் ஒரு நாள் கூலி (இலங்கையில் 1500 ரூபாய்கள் என எடுக்கலாம்). ஆக 6000 நாட்களுக்கான சம்பளம்தான் ஒரு தாலாந்து. இது ஏற்க்குறைய 18 ஆண்டுகளுக்கான சம்பளம் (நம்நாட்டு கணக்கில்). இப்படியான பெரிய தொகையைத்தான் இந்த வீட்டு உரிமையாளர் அடிமைகளிடம் ஒப்படைக்கிறார். இந்த பணத்திற்கு அவர் பல நூறு அடிமைகளை வாங்க முடியும். இந்த தாலந்து என்ற கிரேக்கச் சொல்லிருந்துதான் (talent) டலென்ற் என்ற ஆங்கிலச் சொல் வருகிறது, இது கடவுள் ஒருவருக்கு கொடுக்கும் திறமைகளைக் குறிக்கிறது. இந்த பகுதியில் திறமைகள் என்பதைவிட, காசைப் பற்றியே மத்தேயு குறிப்பிடுகிறார் என எடுக்கவேண்டும்.

முதலாவது நபருக்கு 5 தாலந்துகளைக் கொடுக்கிறார் (5x6000x1500 LKR), இரண்டாம் நபருக்கு இரண்டு தாலந்தும் (2x6000x1500 LKR) அத்தோடு மூன்றாம் நபருக்கு ஒரு தாலந்தும் வீதமாகக் கொடுக்கிறார் (1x6000x1500 LKR). இந்த மிகப் பெரிய தொகைகளைக் கொடுத்துவிட்ட அந்த உரிமையாளர் தொலை பயணம் போகிறார். எங்கே போகிறார் என குறிப்பிடவில்லை. தொலை பயணத்தை இவர்கள் தவறாக கணித்திருக்கலாம். ஒருவேளை இவர் திரும்ப மாட்டார் என்றுகூட நினைத்திருக்கலாம்.

வ.16: ஐந்து தாலந்து பெற்றவர் வணிகம் செய்து இன்னும் ஐந்து தாலந்தை பெருக்குகிறார். இவருக்கு வணிகம் செய்வது அவ்வளவு கடினமாக இருந்திருக்காது. ஏனெனில் இவர் கையில் பல ஆண்டுகளுக்கான ஊதியம் இருந்தது.

என்ன விதமான வாணிகம் செய்தார் என்பது புலப்படவில்லை. ஒரு வேளை பெரிய வகை வியாபாரமாக இருந்திருக்கலாம்.

வ.17: அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவரும் இரண்டு தாலந்தை ஈட்டுகின்றார். இதுவும் அருக்கு பெரிய தொiயாகவே இருந்திருக்கும். இவரும் என்ன வகையான தொழில் செய்து இதனை ஈட்டினார் என்று சொல்லப்படவில்லை. அந்த தொழிலைப் பற்றிய அறிவு மத்தேயுவிற்கோ இயேசுவிற்கோ தெரியவேண்டிய தேவையும் இல்லை.

வ.18: ஒரு தாலந்து பெற்றவர் அதனை நிலத்தினுள் புதைத்து வைக்கிறார். தாலந்தை அவர் மீண்டும் நிலக்கீழ் பொக்கிசமாக மாற்றுகிறார் எனலாம். ἔκρυψεν எக்ருபென் - ஒழித்துவைத்தார். இந்த வரியில் பணத்தை குறிக்க வெள்ளி என்ற சொல் பயன்படுகிறது. இதிலிருந்து தாலந்து என்ற பணவகையும் ஒருவகையான வெள்ளி நாணயம் என்பது புலப்படுகிறது. ἀργύριον அர்குரியோன் - வெள்ளி.

வ.19: நெடுங்காலத்திற்கு பின்னர் தலைவர் திரும்புகிறார், பணியாளர்களிடம் கணக்கு கேட்கிறார். இதிலிருந்து எவ்வளவு தொலைவு சென்றாலும், தலைவர் திரும்புவார் என்பதும், அனைவரும் என்றோ ஒருநாள் கணக்கு கொடுக்கவேண்டியர்கள் என்பதும் புலப்படுகிறது.

வ.20: ஐந்து தாலந்து பெற்றவர் முதலில் பெறுகிறார். இன்னொரு ஐந்து தாலந்துகளை ஈட்டிக் கொண்டு வந்துள்ளார். இவர் தன் தலைவரை (κύριε கூரியே) என்றே அழைக்கிறார்.

வ.21: தலைவருடைய மகிழ்ச்சியான வார்த்தைகளை இந்த வரி தாங்கியுள்ளது. அவர் இந்த ஊழியரை நன்று நன்று நம்பிக்கை;க்கு உரியவர் என பாராட்டுகிறார். இதற்கு δοῦλε ἀγαθὲ καὶ πιστέ- (தூலெ அகாதே காய் பிஸ்டெ) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அன்பான பணியாளரே, நம்பிக்கைக்குரியவரே என்ற அர்த்தம் உண்டு.

சிறிய பொறுப்புக்களில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தபடியால் பெரிய பொறுப்பிற்கு தலைவர் ஆகிறார். ஐந்து தாலந்தை இவர் சிறிய பொறுப்பு என்று சொல்வதன் மூலம், இந்த கதையின் கதாநாயகர் ஒரு பெரிய அரசராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதேவேளை இவரை பெரிய பொறுப்பில் அமர்த்துவது, அவர் தலைவருக்கு மகிழ்வை தருகிறது என்பதும் சொல்லப்படுகிறது (χαρά காரா- மகிழ்வு). வ.22: இரண்டு தாலந்து பெற்றவரும் இன்னொரு இரண்டு தாலந்துகளைக் கொண்டு வருகிறார். இவரும் எப்படி இந்த மேலதிக இரண்டு தாலந்துகளை ஈட்டினார் என்பது சொல்லப்படவில்லை. இவரும் வணிகம் செய்திருக்கலாம். இவரும் தன் முதலாளியை ஆண்டவரே (κύριε கூரியே) என்றுதான் அழைக்கிறார்.

வ.23: ஐந்து தாலந்தை பெருக்கியவருக்கு சொல்லப்பட்ட அதே வாழ்த்தே இவருக்கும் சொல்லப்படுகிறது. இவரும் தலைவரின் மகிழ்வில் பங்கெடுக்கிறார் அத்தோடு பெரிய பொறுப்புக்களுக்கு தலைவராகிறார். இவரும் நம்பிக்கைக்கு உரிய நல்ல பணியாளரே (δοῦλε ἀγαθὲ καὶ πιστέ தூலே அகாதெ காய் பிஸ்டெ) என்றழைக்கப்படுகிறார்.

வ.24: ஒரு தாலந்து பெற்றவர் வித்தியாசமாக பேசுகிறார். இவரும் தன் தலைவரை ஆண்டவரே என்றுதான் விழிக்கிறார். அத்தோடு அவர் தன் தலைவரை, கடின உள்ளத்தினர் மற்றும், விதைக்காத இடத்தில் அறுத்து, தூவாத இடத்தில் விளைச்சலை சேர்க்கும் கொடுங்கோலனாக பார்க்கிறார், அதனை தன் தலைவரிடமே சொல்லிவிடுகிறார். (θερίζων ὅπου οὐκ ἔσπειρας καὶ συνάγων ⸀ὅθεν οὐ διεσκόρπισας தெரிட்சோன் ஹொபூ ஊக் எஸ்பெய்ராஸ் காய் சுனாகோன் ஹொதென் ஊ தியெஸ்கொர்பிசாஸ்- விதைகாத இடத்தில் அறுக்கின்றீர், தூவாத இடத்தில் சேர்க்கின்றீர்).

வ.25: தன்னுடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்ததை ஒப்புக்கொள்கிறார், அதற்கு காரணம் தன் தலைவர்மீது பயம் என்றும் சொல்கிறார். மேற்பார்வையில் இவர் செய்தது பிழை என்பதுபோல தெரியவில்லை. இவர் தன் தலைவரின் பணத்தை களவெடுக்கவுமில்லை, தொலைக்கவுமில்லை மாறாக பத்திரமாக ஒழித்துத்தான் வைக்கிறார்.

ஆனால், இவர் தலைவர் இவருக்கு இந்த பணத்தை கொடுத்தது, ஒழித்து வைக்கவல்ல மாறாக அதனை பெருக்கவே என்பது நினைவுகூறப்படவேண்டும். பாதுகாக்க வேண்டும் என்றால் அதனை தானே செய்திருப்பார் எனலாம்.

வ.26: தலைவரின் கோபத்தில் காரணம் தெரிகிறது. தலைவர் இவரை சோம்பேறியே, பொல்லாதவனே என்கிறார். கிரேக்க மொழி இந்த சொற்களை சற்று கடுமையாகவே காட்டுகிறது, πονηρὲ δοῦλε καὶ ὀκνηρέ, பொனேரெ தூலே காய் ஒக்நேரெ- அசுத்தமான சோம்பேறி அடிமையே!

தன்னைப் பற்றி இந்த பணியாளர் சொன்ன வார்த்தைகளை மீண்டும் இவருக்கே சொல்லிக் காட்டுகிறார். ஆக இவர் இந்த வார்த்தைகளை விரும்பவில்லை என்பது புலப்படுகிறது.

வ.27: தான் தன் பணத்தை வட்டியோடு பெறவில்லை என்பதனை கோபமாக கேட்கிறார். வட்டிக் கடையை குறிக்க கிரேக்க விவிலியம் வங்கி (τραπεζίτης ட்ராபெட்சிடேஸ்- வங்கிக்காரர்) என்ற சொல்லை பயன்படுத்துகின்றது.

உரோமையர் உலகத்தில் இப்படியான வியாபாரங்கள் அதிகமாகவே இருந்தன. இதன் மூலம் உரோமை தன் செல்வத்தை பெருக்கிக் கொண்டது.

வவ.28-29: தலைவர் தன் மற்றய பணியாளர்களுக்கு கட்டளை கொடுக்கிறார். இவருடைய ஒரு தாலந்தும் பறிக்கப்பட்டு பத்து தாலந்து உடையவருக்கு கொடுக்கப்படுகிறது. இப்போது பத்துத் தாலந்து உடையவர் பதினொரு தாலந்து உடையவர் ஆகிறார்.

உள்ளவருக்கு கொடுக்கப்படுகிறது, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படுகிறது. (இன்று பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆக, இல்லாதவர்கள் இருப்பதையும் இழக்கிறார்கள், இதனை கடவுளே நியாயப்படுத்துவது போல மேலோட்டமாக தெரிகிறது). இந்த வரிகளை அவதானமாக சூழலியலில் வாசிக்க வேண்டும். இவருக்கு ஏற்கனவே சொல்லப்பட்டதன் பேரில்தான், இப்போது தண்டனை கொடுக்கப்படுகிறது.

வ.30: ஒரு தாலந்தை மறைத்து வைத்தவர் பயனற்ற பணியாளர் ஆகிறார் (ἀχρεῖον δοῦλον அக்ரெய்யோன் தூலொன்), இருளினுள் தள்ளப்படுகிறார் (σκότος ஸ்கொடொஸ் - இருள்) அங்கே அழுகையையும், அங்கலாய்ப்பையும் அவர் சந்திக்கிறார் (ὁ κλαυθμὸς καὶ ὁ βρυγμὸς τῶν ὀδόντων. ஹொ கிலாவ்த்மொஸ் காய் ஹொ புருக்மொஸ் டோன் ஹொதொன்டோன்).

இது சிறைச்சாலை அனுபவத்தைக் குறிக்கும் சொற்கள். சிறைச்சாலையின் துன்பங்கள் அழுகையை வருவிக்கும், அத்தோடு தாங்கமுடியாத வேதனைகள் பற்கடிப்பை உண்டாக்கும். ஆரம்ப கால திருச்சபை தந்தையர்கள் இந்த வரியைக் கொண்டே நரகத்தை வர்ணித்தனர்.

மனைவி: மனைவிதான் கடவுள் கணவனுக்கு கொடுத்த மிகப் பெரிய நட்பு,
எவற்றாலும் நிறைவடையாத ஆதாம், ஏவாளாலே நிறைவடைந்தான்.
மனைவி வீட்டு வேலைக்காரியல்ல, அவள் வீட்டுக்காரி.
மனைவியின் கண்ணீருக்கு கணவன் காரணமானால்,
அவன் கணவனே கிடையாது.
மனைவியை இன்னொரு தாயாக பார்க்கமுடியாதவன்,
ஆண் வர்க்கத்தின் இழுக்கு,
கிறிஸ்தவத்தில் மனைவி, திருச்சபை,
திருச்சபைக்கெதிரான குற்றம், கடவுளுக்கெதிரானது!
மனைவிக்கு மட்டுமே சட்டம் போட
எந்த கணவருக்கும் கடவுள் உரிமைகொடுக்கவில்லை.
தாலந்து:
தாலந்து என்பது நம் வாழ்க்கை,
பலருக்கு கிடைக்காத வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நம் வாழ்வு, நம்முடையது, அதனை மற்றவருடையதுடன்
ஒப்பிட்டால், துன்பம் மட்டுமே மிஞ்சும்.
நம் வாழ்விற்கு நாம்தான் தலைவர்களும், அரசர்களும்.
இந்த வாழ்க்கையை பெருக்கவும் முடியும்,
ஒழித்து வைக்கவும் முடியும்.
பெருக்கினால் ஒரு தீர்வு,
ஒழித்துதவைத்தால் இன்னொரு தீர்வு, கடவுளிடமிருந்து.
தவறவிடப்பட்ட சந்தர்ப்பம்,
தவறவிடப்பட்டதே!
அன்பு ஆண்டவரே,
வாய்ப்புக்களை உணர்ந்து பயன்படுத்த
உதவி செய்யும். ஆமென்
ஒவ்வொரு நாளும் குடும்ப வன்முறையால் துன்புறும்
ஆண்டவரின் ஊழியர்களான, மனைவியருக்கு சமர்ப்பணம்!!!