இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறு

எம்மாவுப் பாதை

திப 2:14,22-28
1பேது 1:17-21
லூக் 24:13-35

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...பிறந்து பாரென இறைவன் பணித்தான்.
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்...அறிந்து பாரென இறைவன் பணித்தான்.
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்...மணந்து பாரென இறைவன் பணித்தான்.
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்...பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்.
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்...முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்.
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்...இறந்து பாரென இறைவன் பணித்தான்.
அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ...ஆண்டவனேநீ ஏனெனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்று அருகு நெருங்கி...அனுபவம் என்பதே நான்தான் என்றான்.
- கவிஞர் கண்ணதாசன்

வரலாறிலிருந்து இறையியலுக்கு பாதை அமைக்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. எம்மாவுப்பாதையில் தொடங்கி நற்கருணையில் நிலைக்கொள்கிறார். இன்றைய நற்செய்தியின் முத்தாய்ப்பாக ‘அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு அறிவித்தார்கள்’ என்று முடிகிறது. இந்த இயேசு அனுபவம்தான் எம்மாவு பாதையின் மையமாக அமைகிறது. இதுதான் திருச்சபைக்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துகிறது. சந்தேகத்தில் ஆரம்பித்து, சாட்சியத்தில் முடிவடைகிறது. இயேசுவை ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழ்க்கையில் எந்த நிலையிலாவது அனுபவிக்க வேண்டும். இயேசுவை அனுபவிக்காத வரை அவரை உலகிற்கு அறிவிக்க முடியாது. இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இருவரும் இறைவார்த்தையிலும் நற்கருணையிலும் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள். தொடக்கத்தில் வாட்டமாயிருந்தவர்கள் இறுதியில் பற்றி எரிகிறார்கள். எருசலேமே வேண்டாம் என்று விலகி ஓடியவர்கள் எருசலேமே கதி என்ற தேடி வருகிறார்கள். இயேசு அனுபவம் அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. ‘எங்களோடு தங்கும்’ என்ற ஏக்கம் அவர்களை ஆண்டவருக்குரியவர்களாக மாற்றுகிறது. நாமும் அந்த ‘இயேசு அனுபவத்தைப் பெற வேண்டும்’ என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கிற சவால்.இன்றைய நற்செய்திலே எம்மாவுப் பாதையில் இயேசுவின் உயிர்ப்பைப் பற்றிய சந்தேகம் இழையோடுகிறது.பின்னர் உரையிலும் உணவிலும் உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொள்கிறார்கள்: மூன்றாவதாக சாட்சிய வாழ்வு வாழ எருசலேம் திரும்புகின்றனர். ஆக ‘சந்தேகம், ஏற்பு, சாட்சியம்’ - இந்த மூன்று கருத்துக்கள்தான் இன்றைய நற்செய்தியின் சிந்தiனைப் பொருளாக அமைகிறது.

சந்தேகம்

சீடர்கள் எருசலேமை விட்டு நீங்கி செல்கிறார்கள். இருவரிடமும் கடுமையான விரக்தி தென்படுகிறது. எதனையோ ஆண்டவரிடம் எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்கள். இஸ்ராயேலை மீட்க, உரோமையரிடம் போராடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக்குருக்களும், ஆட்சியாளர்களும் மரணதண்டனை அளித்துக் கொன்றதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஓராண்டோ, ஈராண்டுகளோ, அல்லது மூன்றாண்டுகளோ.. அவரோடு பழகி உண்டு, உறவாடி அனைத்தும் வீணாகிப் போகினவே என்று விரக்தியோடு தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த இருவரும் உயிர்த்த ஆண்டவரை கண்டுக்கொள்ளாத நம் ஒவ்வொருவருக்கும் உதாரணமாக அமைகிறார்கள். ஏனெனில் இவர்கள் இருவருமே இவர்களைச் சேர்ந்த பெண்களின் உயிர்த்த ஆண்டவர் அனுபவத்தையும், அவர்களோடு இருந்தவர்களின் உயிர்த்த ஆண்டவர் அனுபவத்தையும் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் உயிர்த்த ஆண்டவரை நம்புவதில் தயக்கமும் தடுமாற்றமும் கொண்டிருக்கின்றனர். ஐயம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது.

ஏற்பு

இயேசு அவர்களை நெருங்கி, அவர்களோடு நல்லுறவு கொள்ளுகின்றார். ‘வழி நெடுகிலும் ஒருவர் ஒருவரோடு பேசிக் கொண்டிருப்பது என்ன?’ என்று வினவுகிறார். இங்கேதான் இயேசுவின் பேரன்பைக் கண்டுக்கொள்ள வேண்டும். அவர்களின் சந்தேகத்தைத் தீர்;க்க அவர்களோடு ஒருவராக ஆண்டவர் நடந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே வெற்றுக்கல்லறைப் பற்றியும், மற்றவர்களின் உயிர்ப்பு அனுபவம் பற்றியும் தெரிந்திருக்கிறது: ஆனாலும் ஒரு ஐயம் இவர்களை ஆட்கொண்டிருக்கிறது. இங்கே அந்நியர் ஒருவர் தங்களோடு நடந்து வருகிறார்: அப்படியிருந்தும் அவரைக் கண்டுக்கொள்ள அவர்கள் முன்வரவில்லை. உயிர்த்த ஆண்டவரை கண்டுகொள்ள இரண்டு காரியங்கள் தேவைப்படுகிறது. முதலாவதாக, இயேசுவின் தரப்பில் ஒரு செயல், இரண்டாவதாக, நம்மிடமிருந்து நேர்மறையான அணுகுமுறை.

‘அறிவிலிகளே’ என்று ஆண்டவர் சாடிய உடனே அவர்கள் திகிலடைந்திருப்பார்கள்: ஆனாலும்கூட அவருக்கு திறந்த மனதுடன் செவிசாய்க்கிறார்கள்: ஆர்வம் குன்றாமல் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைக் கேட்கிறார்கள். ‘அவர் தம்மைக்குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் விளக்கினார்’ என்று நற்செய்தி சொல்கிறது. இங்குதான் இயேசு அவர்களின் உள்ளங்களைத் தொடுகிறார். இயேசு அவர்களின் உள்ளங்களைப் பற்றி எரிய செய்துவிட்ட பின்னர், தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதிக்கிறார்: அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கிறார். அவர் வலிந்து தம்மை ஒருபோதும் திணிக்கவில்லை. ‘அதற்கு அப்பால் போகிறவர் போல காட்டிக்கொண்டார்’. இப்போதுதான் இந்த இருவரும் ‘எங்களோடு தங்கும்’ என்று தங்களுடைய ஏற்பைத் தெரிவிக்கின்றனர். இறைவார்த்தை விளக்கம் முடிந்தவுடன் நற்கருணைக் கொண்டாட்டம் தொடங்குகிறது. இறுதி உணவைக் கொண்டாடியபோது செய்தவற்றையெல்லாம் மீண்டும் அவர்களுக்கு செய்து காட்டுகிறார். எல்லோருக்கும் உரிய சகோதரத்துவம் நிறைந்த சமபந்தியில் இயேசுவை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். ஐயம் நீங்கி விசுவாசம் கொள்கின்றனர். அவர்களின் கண்கள் மட்டும்திறக்கவில்லை: அவர்களின் உள்ளமும் திறந்தது.

சாட்சியம்

பற்றி எரிந்து உள்ளம் .. பற்று கொண்ட உள்ளமாகிறது. விழிகள் திறந்ததால் வழிகளும் மாறுகின்றன. கொஞ்ச நேரத்தையும் அவர்கள் வீணடிக்கவில்லை. ‘அந்நேரமே’ அவர்கள் புறப்பட்டு எருசலேம் திரும்பி வருகிறார்கள். கிறிஸ்துவைக் கண்டு கொண்டவர்கள் அவரை அடுத்தவருக்கு அறிவிக்க வேண்டும். இயேசுவை எனக்கு மட்டும் என்று எவரும் பூட்டி வைக்க முடியாது. அவர் எல்லோருக்கும் சொந்தம். தங்கள் கண்கள் திறந்தால் மட்டும் போதாது: அடுத்தவரின் இதயங்களும் திறக்க உதவ வேண்டும். எம்மாவு என்பது தப்பிப் பிழைப்பதற்கானப் பாதை! ஆனால்... எருசலேம் என்பது இரத்தம் சிந்துவதற்கான களம். இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர.. தேவைப்பட்டால் அவருக்காக இரத்தம் சிந்த இந்த எருசலேம் அழைப்பு விடுக்கிறது. உயிருக்கு பயந்து வீட்டிற்கு ஓடுகின்றவர்கள்.. உயிரைப் பணயம் வைத்து உயிர்த்த ஆண்டவரை அறிவிக்க ஓடோடி வருகிறார்கள்.

முன்பும் பின்பும்

உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு முன்பு அவர்கள் முகவாட்டத்தோடு இருந்தார்கள் (24:17): இயேசுவுக்கே இயேசுவைப் பற்றி அறிவிக்கிறார்கள் (24: 20-21). மற்றவர்களின் உயிர்ப்பு அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள் (24:22-24). எருசலேமை விட்டு விலகி ஓடுகிறார்கள் (24:13). ஆனால் கிறிஸ்துவைச் சந்தித்தப் பிறகு, உள்ளம் பற்றி எரிகிறது (24:32): ‘எங்களோடு தங்கும்’ என்று மனம் திறக்கின்றனர். கண்கள் திறந்தன (24:31). எருசலேமை நோக்கி ஓடி வருகிறார்கள் (24:33): தங்கள் அனுபவத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள்: அறிவிக்கிறார்கள் (24:35). இதுதான் எம்மாவுப் பாதை! மனமாற்றத்தின் பாதை! திருச்சபைக்கானப் பாதை! இறைவார்த்தையும் நற்கருணையும் இயேசுவை இன்றும் கண்டுகொள்ள அருட்சாதனங்களாக அமைகின்றன. மண்ணுலகில் தீ மூட்டவே வந்த ஆண்டவர்.. அதனை இங்கே எண்பித்துக் காட்டுகிறார். எல்லா இதயங்களையும் பற்றி எரியச் செய்கிறார். நாமும் அன்றாட வாழ்க்கையில் இயேசுவைக் கண்டு இறை அனுபவத்தைப் பெற முற்பட வேண்டும். இயேசு தம்மை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் முழுமனச் சுதந்திரத்தை நல்குகிறார். நாம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கிறார். நாம் உள்ளங்களைத் திறக்காதவரை.. அவர் நம்மில் குடியேறுவதில்லை. ‘இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்: அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.( திவெ. 3:20). இதுதான் இயேசுவின் பெருந்தன்மை. அவர் யாரையும் வற்புறுத்தி, வன்முறை செய்து தம்முடையவராக்குவதில்லை. அனுபவிக்காதவரை ஆண்டவர் நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவராகவே தோன்றுவார். அவரை அனுபவித்தப் பிறகு.. அனைத்திலும் அனைவரிலும் அவரைக் கண்டுக்கொள்ள முடியும். முகவாட்டம் மறைந்து போகும். ‘சிக்கெனப் பிடித்தேன்’ என்ற ஐக்கியம் மேலிடும். நற்கருணையும் இறைவார்த்தையும் (அதாவது திருப்பலி) இயேசுவைக் கண்டறிய உதவும் அருட்சாதனங்கள். ஐக்கியமானால்...ஐயம் மறைந்து போகும்.

பயணிகள் இருவர் காட்டு வழியில் பயணம் புறப்பட்டனர். ஒருவன் விளக்கு வைத்திருந்தான். மற்றவனிடம் விளக்கு இல்லை.அந்த விளக்கின் வெளிச்சத்தில் இருவரும் நடந்து சென்றனர்.இருவரும் பிரிய வேண்டிய இடம் வந்தது.விளக்கு வைத்திருந்தவன் தன் விளக்கோடு தன் வழியே பிரிந்து சென்றான்.விளக்கில்லாதவனைச் சுற்றி பேரிருள் சூழ்ந்தது. அவன்மேலே நடக்க முடியாமல் திகைத்து நின்றுவிட்டான். குருவே வழிகாட்டி. ஞானப்பாதையில் குரு குறிப்பிட்ட தூரம் வரைதான் வழிகாட்டி நடக்க முடியும்.அதற்கு மேல் சீடன் தனியாகத்தான் போக வேண்டியிருக்கும். நீங்கள் தயாரா?