இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, India



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)






தவக்காலம் 5 ஆம் ஞாயிறு

‘இயேசுவின் நண்பர்களாக’

எசே 37‘12-14
உரோ 8‘8-11
யோவா 11‘1-45

ஏப்ரல் 15,1912 அன்று உலகத்தின் மிகப்பெரிய பயணிகள் சொகுசுக் கப்பலான் ‘டைட்டானிக்’ வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கிக்கொண்டிருந்தது. 1500க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி இறந்துக்கொண்டிருந்தனர். உதவிக்கு வந்த கப்பலால் 700 பேர் காப்பாற்றப்பட்டனர். இருள் சூழ்ந்த மரண வாயிலில் சோகமயமான தருணத்தில் மடிந்துக்கொண்டிருந்த அத்துணை பேரும் ‘இறைவா! உன் அருகே நான்’ என்ற பாடலை இறுதிவரை நீரலைகள் அவர்களை மூழ்கடிக்கும் வரை தைரியமாக இசையுடன் பாடிக்கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாத பயணிகள், கப்பல் தளத்தில் முழுந்தாள்படியிட்டு செபித்துக்கொண்டிருந்தனர். பயமின்றி பலர் அமைதியாக நின்று அந்தப் பாடலோடு ஒன்றித்து மௌனத்தில் லயித்திருந்தனர்.

அந்த உலகப்புகழ்ப்பெற்ற பாடலை எழுதியவள் சாரா ஃப்ளவா; ஆடம்ஸ். ஒரு மாபெரும் நடிகையாக வேண்டும் என்று ஆசித்து அதற்காக கடினமாக உழைத்தாள். தன் கனவை நினைவாக்கினாள். லேடி மேக்பத்தாக நாடகத்தில் நடித்து வாழ்வில் மாபெரும் வெற்றிப் பெற்றாள். சிறந்த நடிகை என்று போற்றப்பட்டாள். ஆனால் இந்த வெற்றி நீடிக்கவில்லை. மூன்று வருடங்களாக படுத்தப் படுக்கை! தன் நேரத்தை பைபிளைப் படிப்பதிலும், புனிதர்களின் வாழ்வை அறிந்துக்கொள்வதிலும் செலவழித்தாள். அருட்தந்தை ஃபாக்ஸ் தனக்கு ஒரு பாடல் எழுதித்தரும்படி அவளைக் கேட்டுக்கொண்டார். தன்னிலையை எண்ணி வருத்தப்பட்டு வேதனையுற்ற அவளுக்கு பழைய ஏற்பாட்டில் யாக்கோபை யாவே ஆசிர்வதித்தல் கொடுக்கப்பட்டது. தன்நோய் மற்றும் விரக்தியோடு யாக்கோபு கதையைப் பொருத்தி சிந்தித்தாள். இருள்- கனவு- விழிப்பு- வெளிச்சம்- வெற்றி போன்றவை அவளுக்கு தெளிவாக தெரிந்தன. அவளது வாழ்வின் இலட்சியத்தின் தோல்வியை ‘உயர்த்தும் சிலுவையாக’ கண்டாள் நோய், தோல்வி, தனிமை, வலி இவற்றை படிக்கட்டுகளாக கண்டாள். மதிய வேளையில் உணர்வுகளுடன் எழுதத்தொடங்கினாள். அதுதான் உலகப் புகழ்ப்பெற்ற பாடல்‘

இறைவா! உன் அருகே நான் உனக்கு மிக அருகே!
அது ஒரு சிலுவையானாலும், என்னை உயர்த்தும்,
எனினும் என்பாடல் மூலம் இறைவா!
உன் அருகே நான், உனக்கு மிக அருகே!

கல்லறை அருகே இது ஓரு காவியம்! மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஒவ்வொரு தொட்டிலும் ‘எப்போது’ என்கிற போது ஒவ்வொரு கல்லறையும் ‘எங்கே?’ என்று பெருமூச்சு விடுகிறதன்றோ? நாம் எல்லோருமே என்றாவது ஒருநாள் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். ‘இறைவா! உன் அருகே! நான் உனக்கு மிக அருகே’ என்ற இந்த மரண விளிம்பு பாடல் எவ்வளவு ஆறுதலைத் தருகிறது. மண்ணில் பிறந்த நமக்கு மரணம் நிச்சயம்! ஆனால் மறுவாழ்வு என்றும் நிரந்தரம் என்ற விசுவாச உணர்வு நம்மை ஆறுதல்படுத்துகிறது. மரணம் நம் வாழ்வின் எதிரியல்ல: ஒரு நண்பன்தான்! நம் வாழ்நாள் சுருங்குகிறது என்ற அறிவுதான் அதை விலைமதிப்பற்றதாக்குகிறது.

கல்லறையில் ஞானம்!

ஒவ்வொரு கொழுந்தும் ஒருநாள் சருகாகவேண்டும் என்பது இயற்கை வகுத்த விதி! ஒவ்வொருவரின் மரண அனுபவம் வாழ்வைக் கொண்டாட கட்டாயப்படுத்தும்! செத்துப் பிழைத்தவர்கள் வாழ்வை செம்மாந்து (அர்த்தமுள்ள விதத்தில்) வாழத் துணிவார்கள்! ஆகையால்தான் லாசர் அனுபவம் நமதாக வேண்டும்! இந்த கல்லறையில் ஞானம் பிறக்கவேண்டும். நான் இறைவனுக்கு அருகில் இருக்கிறேனோ இல்லையோ ஆனால் இறைவன் என் அருகில் இருக்கிறார்: எனக்காக கட்டளையிடுகிறார்: செபிக்கிறார்: கட்டுக்களைத் தளர்த்துகிறார் என்ற நம்பிக்கை தேற்ற வேண்டும். உலகப்புகழ்பெற்ற விடுதலை வீரன் மார்டின் லூதர் கிங் ஜுனியரின் (1929-1968) கல்லறையில் ‘இறுதியில் விடுதலை! இறுதியில் விடுதலை! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! நான் இறுதியாக விடுதலை பெறுகிறேன்’ ’ Free at last, free at last, Thank God Almighty! I’m free at last’ என்று எழுதப்பட்டுள்ளது! ஒவ்வொரு ஊரின் கல்லறைத்தோட்டமும், ஒவ்வொரு உறவினரின் கல்லறையும் நமக்கு வாழ்வை வாழ கற்பிக்கின்றன!

இயேசுவின் உன்னதமான அன்பு

இயேசுவை அன்புச் செய்து அவரை பின்பற்றியக் குடும்பம் இந்த பெத்தானியா குடும்பம்: இயேசுவின் சீடர்களாக நண்பர்களாக விளங்கினார்கள். ‘ஆண்டவரே! உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் என்று இயேசுவுக்கு செய்தி மட்டுமே அனுப்பப்படுகிறது: மாறாக ‘வாருங்கள்’ என்று அழைக்கப்படவில்லை. இயேசு அவர்களை அன்புச் செய்ததால் (5); மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறார் யூதேயாவுக்கு மீண்டும் போவது என்பது ஆபத்தானது: ஏனெனில் அங்கேதான் யூதர்கள் அவரை கல்லால் எறிந்துக்கொள்ள முயன்றனா;. ஆகையால் அங்கிருந்து யோர்தானுக்கு அப்பால் தன் பணியைத் தொடர்கிறார் (10‘40). எனவே சீடர்கள் அவரை தடுத்து நிறுத்தப்பார்க்கிறார்கள்(9). ஆனாலும் சீடர்கள் பயத்தில் அவருடன் பயணிக்க அவர் நட்போடு பெத்தானியாவுக்குச் செல்கிறார். நோயுற்றிருக்கிறான் என்றவுடன் வந்து பார்க்காமல் கல்லறையில் வைத்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து பயனென்ன? என்று லாசரின் சகோதரிகள் அழுது அங்கலாய்க்கிறார்கள். ஆண்டவர் அவர்களைக் கேள்விக் கேட்கவில்லை: விசுவாசமில்லாத மக்கள் என்று திட்டவில்லை. மாறாக அவர்களுக்குச் செவிசாய்க்கிறார். அவர்களோடு அழுகிறார் துக்கத்தில் தோள் கொடுக்கிறார். கண்ணீர் விட்டு அழுதார் உள்ளம் குமுறி நொந்தார். இதுதான் அவருடைய அன்பு. தந்தையால் நாம் வாழ்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட ஆண்டவர், நமக்கு செவிசாய்த்தார் நாம் விடுதலைப் பெற நமக்காக கண்ணிர் சிந்தினார். நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்.

இயேசுவின் நண்பனாக.. லாசார்களாக

நமது நண்பனாக இயேசு இருக்க வேண்டும்: அது விசுவாசத்தால்தான் முடியும். நாம் இயேசுவின் நண்பனாக இருக்க வேண்டும்: நாமும் இயேசுவுக்கு நெருக்கமானவர்களாக நம்முடைய செயல்பாடுகளால் மாற வேண்டும். மார்த்தா-மரியா-லாசார் ஆகியோர் இதனைச் செம்மையாகச் செய்தனார். ஆகையால்தான் இயேசு கண்ணீர் சிந்தினார். எனக்காக அழாதீர்கள் என்று சொன்ன ஆண்டவர் அவர்களுக்காக அழுதார். இதுதான் அவருடைய அப்பழுக்கற்ற அன்பு!

கல்லை அப்புறப்படுத்துங்கள்!

அங்கே கூடியிருந்த அத்துணைப்பேருக்கும் ஒருவிதமான தயக்கம். ‘கல்லை அகற்றி விடுங்கள்’ என்ற அவரது கட்டளை அவர்களை விழிபிதுங்க வைக்கிறது. நான்கு நாள் ஆயிற்றே! நாற்றம் அடிக்குமே’ என்று மார்த்தா மறுப்பு தெரிவித்தாள். நாமும்கூட நம் வாழ்நாளில் பலருக்கு கல்லறைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்! பலர் வாழ்வை இழக்க நாம் காரணிகளாகிறோம். நீ இருந்தும் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை? என்று சொல்லி பிள்ளைகள் பெற்றோரை உதாசீனப்படுத்தும்போது அங்கே கல்லறைதான்! குடி குடியைக் கெடுக்கும்! புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தகுந்தவிதத்தில் எச்சரிக்கப்பட்டாலும் பலர் போதைக்கும் புகைப்பழக்கத்திற்கும் அடிமையாகி தங்களுக்குத் தாங்களே கல்லறைக்கட்டிக்கொள்கிறார்கள்!
கோபத்தால் .. ஆணவத்தால்.. பொறாமையால்.. உதாசீனப்படுத்துவதால்.. அடுத்தவருடைய இருத்தலை பொறுக்காத கொலைவெறியால்..தீவிரவாதத்தால் பயங்கரவாதத்தால்.. போரால்.. உற்சாகம்தராத வார்த்தைகளால்.. கருக்கலைப்பால்.. முதியோர் இல்லத்தால்.. சாதியத்தால்.. நாமும் கல்லறைக் கட்டிக்கொண்டிருக்கிறோம்! நாம் ஆண்டவருக்குப் பணிந்து கிறிஸ்தவ அன்பால் கல்லை அப்புறப்படுத்தலாமா? இயேசுவை நம் வாழ்வில் நாம் அனுமதிக்கும்போது நிச்சயம் அவர் நமக்குப் போதுமான பலம் தந்து கல்லை அப்புறப்படுத்த துணைபுரிந்திடுவார். அப்பழுக்கற்ற அன்பால் உந்தித் தள்ளப்பட்டு, ஆழமான விசுவாசத்தால் தந்தையிடம் முறையிட்டு, உள்ளம் குமுறி, கண்ணீர் சிந்தி, நம்மை விடுவிப்பார். இயேசுவின் நண்பனாக முன்வருவாயா?

கட்டுகளை அவிழ்த்துப் போகவிடுங்கள்!

கட்டுகள் - அடிமைத்தனத்தின் கூறுகள்! விடுதலை! சாவின் அடிமைத்தனத்திலிருந்து நமக்கு விடுதலைத் தரக்கூடியவர் ஆண்டவர் இயேசு மட்டுமே! ‘ சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன். என்று ஆண்டவரை ஆயனாக பாவித்த திருப்பாடலாசியருடைய மனநிலை நமதாகவேண்டும். சாவின் கொடுக்குகளை தம் மரணத்தின் வழியாக தகர்த்தெறிந்து நமக்கு விடுதலைக் கொடுத்தவார் அடிமைத்தனத்தின் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்தவர். நமக்குப் புதுவாழ்வுக் கொடுத்தவர்.

இயேசுவிலேதான் வாழ்வு

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே: என்னிடம் நம்பிக்கைக்கொள்பவர் இறப்பினும் வாழ்வார்’ என்ற ஆண்டவர்மீது நாம் ஆழ்ந்த நம்பிக்கைக் கொள்ளவேண்டும். அவர் கல்லை அப்புறப்படுத்துங்கள் என்று கட்டளைப் பிறப்பித்தபோது’ நாற்றமெடுக்குமே’ என்று மறுத்த மார்த்தாவை கடவுளின் மாட்சியைக் காண விசுவசிக்க அழைக்கிறார். அனைவரும் நம்பும் பொருட்டே (42) இந்த லாசர் உயிர்ப்பெற்றெழச் செய்கிறார். ஏன் சீடர்கள்கூட மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தபோது’ இது நம்புவதற்கு ஒரு வாயப்பாக அமையும் (15) என்று அவர்களையும் தம்முடன் அழைத்துவருகிறார்.

ஆகையால் நாம் இயேசுவின் நண்பர்களாக நம்முடைய விசுவாசத்தால் இருந்து தம் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறெதுவுமில்லை என்று சொன்ன இயேசுவுக்கு நாம் நண்பர்களாக இருக்க முற்படுவோம். நம்முடைய விசுவாசத்தால் நாம் அவரைத் தேடுகிறபோது அவர் அன்பால் நம்மை நோக்கி வருவார். ஆகையால் இத்தவக்காலம் இதற்கான களம் அமைக்கிறது. உலர்ந்த எலும்புகளுக்கு உயிரைக்கொடுத்த கடவுளின் ஆவி, மண்ணிலிருந்து உருவான மனிதனுக்கு உயிர்மூச்சு அளித்த ஆவி நம்மைப் புதுப்படைப்பாக்கி கடவுளுக்குகந்த நண்பர்களாக்குவாராக!