இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)


தவக்காலம் நான்காம் ஞாயிறு

பார்வைப் பெற்றவர்களாக...

1சாமு 16‘1,6,7,10-13
எபே 5‘8-14
யோவா 9‘1-41

புத்தர் காலத்தில் ஒரு சிற்றூரில் வாழ்ந்த பார்வையற்றவன் ‘ஒளி என்று ஒன்றே கிடையவே கிடையவே கிடையாது’ வாதிட்டு வந்தான். ஒளி என்று ஒன்று இருப்பதாக நீங்கள் பொய்சொல்லுகிறீர்கள்: அப்படியொன்று இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள்: அதை நான் தொட்டு பார்க்கிறேன். இல்லையென்றால் சுவைத்துப்பார்க்கிறேன்: இல்லையென்றால் முகர்ந்துப் பார்க்கிறேன். இவையெல்லாம் இல்லையென்றால் பரவாயில்லை: அதிலிருந்து ஒலி எழுப்புங்கள்: அதையாவது கேட்டுப்பார்க்கிறேன்’ என்று கூறிவந்தான். ஒளியைத் தொட்டுப் பார்க்கமுடியாது: சுவைக்க முடியாது: முகர முடியாது: ஏன் அதிலிருந்து ஒலியை எழுப்பமுடியாது’ என்று அவனிடம் ஊரார் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் கூறுவதை அவன் ஏற்க மறுத்தான். ‘ஸ்பரிசத்தாலும், நாவாலும் முக்காலும் காதாலும் ஒன்றை அறிய முடியவில்லை என்றால் அப்படி ஒரு பொருள் இல்லை என்றுதான் அர்த்தம்’ என்று அவன் வாதம் செய்தான். ஒளியைக் கண்ணால்தான் காண முடியும். உனக்கு கண்கள் இல்லை என்று கூட சொல்லிப்பார்த்தார்கள். அவன் அதையும் ஏற்க மறுத்தான். ‘கண் என்று ஒன்றே இல்லை. நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்’ என்றான். தன் ஊர்க்காரர்களை முட்டாள்கள், அறிவிலிகள், மூட நம்பிக்ககைக் காரர்கள் என்றெல்லாம் எள்ளி நகையாடினான். தான் மட்டுமே அறிவாளி என்று நினைத்துக்கொண்டான். ஒருமுறை புத்தர் அவ்வுர் வழியாக பயணம் செய்ய நேர்ந்தது. அந்த ஊர்க்காரர்கள் ‘பார்வையற்வனை’ புத்தரிடம் அழைத்துக்கொண்டுவந்து ‘இவன் ஒளி என்று ஒன்றே இல்லை: நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் இவன் நம்ப மறுக்கிறான்: நீங்களாவது இவனுக்கு நிருபியுங்கள் என்று சொன்னார்கள். புத்தரோ,’ ஒளி உண்டு என்று நான் சொன்னாலும் இவன் நம்ப போவதில்லை.இவனுக்கு அதை நிருபித்துக்காட்டவும் முடியாது. இவனுக்கு இப்போதைக்குத் தேவை பார்வை: பார்வை இருந்தால் ஒளியைப் பற்றி இவன் அனுபவப்புர்வமாக அறிந்துகொள்வான். எனக்குத் தொரிந்த ஒரு மருத்தவர் இருக்கிறார் அவரிடம் இவனைக் கொண்டு செல்லுங்கள். அவர் இவனுக்குப் பார்வைக் கொடுப்பார்’ என்றார். அவர்கள் அவைனை அழைத்துச்சென்றார்கள். ஆறு மாத கால சிகிச்சைக்குப் பிறகு அவனுக்குப் பார்வை வந்து விட்டது. அவன் புத்தரைத் தேடிச்சென்றான். அவர் காலில் விழுந்து வணங்கினான். ‘ஒளியை உங்களால் அறிந்துகொண்டேன்: உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வதென்று தெரியவில்லை என்று கண்ணீர்வடித்தான். புத்தர் நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை: ஒளியை உனக்குக் காட்டியது நானல்ல: உன் கண்’ என்றார். ஆனால் நம்மில் பெரும்பாலோர் கண்ணிருந்தும் இந்த பார்வையற்றவனைப்போல இருக்கிறோம். இன்றைய நற்செய்தி இதற்கு நல்லுதாரணம். இங்கே பார்வைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம். பொதுவாகவே சொல்வதுண்டு- நாம் எதைப் பாh;க்க விரும்புகிறோமோ அதனைப் பார்க்கலாம் (What you want to see you can see). இன்றைய நற்செய்தியில் பார்வைகள் பலவிதமாக பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றன. தொலைநோக்கிப்பார்வையாளர்கள், கண்களை மூடிக்கொண்டே பார்க்கும் பார்வையாளர்கள், பைனாக்குலர் பார்வையாளார்கள், கடிவாள பார்வையாளர்கள், நுண்ணோக்கி பார்வையாளர்கள், இயல்பான பார்வையாளர்கள் என ஆறுவிதமான பார்வையாளர்கள் உள்ளனர். நாம் எப்படிப்பட்ட பார்வையாளர்கள். சிந்திக்கலாமா?

அப்போஸ்தலர்களுடைய பார்வை

பார்வையற்ற மனிதனுடைய நிலைமை இப்படி இருக்கிறதே என்று பார்க்காமல்.. இவன் இப்படிப்பட்ட நிலையை அடைய காரணம் என்ன? இவன் செய்த பாவமா? அல்லது இவனுடைய முன்னோர் செய்த பாவமா? என்று தேவையற்ற விவாதத்திற்கு முன்னெடுத்துச் செல்லுகின்றனர். சமுதாயத்தை மாற்றவேண்டும்: சமூக மாற்றத்திற்கு வித்திடவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிப்போகும் மனிதர்களைப் போன்றவர்கள். இந்த கேள்வியால் விளையக்கூடிய பலன் எதுவுமில்லை என்று அறிந்திருந்தும் அதிலே விடாப்படியாக இருக்கும் மூடர்களைப் போன்றவர்கள். தொலைநோக்கிப் பார்வையாளர்கள் (Telescopic Visionaries). தூரத்து கிரகங்களைப் பார்த்து ஆராய்பவர்கள்: பொருத்தமில்லாததைத் தேடுபவர்கள். நீங்கள் இவர்களுள் ஒருவரா?

அக்கம்பக்கத்தார் பார்வை 1

சமுதாய அக்கறையில்லாத பார்வை. அவரா இவர்? யார் இவர்களைக் கேட்டது. பார்வையற்று சமுதாயத்தில் ஒரு பிச்சைக்காரராகி மானமிழந்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தவர் பார்வைப் பெற்று நம்மோடு நலமோடு இருக்கிறாரே? எப்படி பார்வைப் பெற்றார்? அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை நன்றாக இருக்கிறதே என்று சொல்லி பாராட்டுவதை விட்டுவிட்டு, அவரை இன்னும் பிச்சைக்காரராகத்தான் அடையாளப்படுத்த முற்படுகின்றனர். சாதியம் போன்ற சமுதாய தடைகளைத்தாண்டி ஒரு மனிதர் கல்வியறிவால் முன்னேறினாலும் அவன் ‘அவன்தானே!; என்று ஏளனப்பார்வையைக் கக்கும் மனிதர்களைப் போன்றவர்கள். அவன் பார்வைப் பெற்று சமுதாயத்தின் ஓர் அங்கமாகியுள்ளான் என்று அங்கிகரிக்காமல் புறக்கணிக்கிறநிலையைத்தான் பார்க்கிறோம். இயேசுவையே ‘ இவா; தச்சன் மகன்தானே? இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? என்ற மனிதர்களைப் போன்றவர்கள். இவர்கள் கண்ணை மூடிக்கொண்டே பார்க்க நினைக்கிற கற்பனை வாதிகள்(Imaginary visionaries). நீங்கள் இவர்களுள் ஒருவரா?

அக்கம்பக்கத்தார் பார்வை 2

எப்படி பார்வைக் கிடைத்தது? என்று கேட்டவர்கள் ‘இயேசு’ எனப்படும் மனிதா; சேறு உண்டாக்கி சிலோவாமில் கழுவச்சொன்னார் என்று சொன்னவுடன் இவரைப் பற்றி கவலைப்படாமல், அதற்காக ஆண்டவரைப் புகழாமல், செய்தவர் எங்கே? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இவர் முக்கியமல்ல: மாறாக இந்த நிலைக்கு அவரை ஆளாக்கியவரைத் தேடி தாங்களும் ஏதேனும் ஆதாயம் அடைய வேண்டும் என்ற ஆவல் கொண்ட சுயநலவாதிகள். அருகில் இருக்கிற இவரைப் பற்றி கவலைப்படாமல் தூரத்தில் கடக்கிற இருக்கிறவரைப் பார்த்து ஆதாயம் அடைய முயலும் பைனாக்குலர் பார்வையாளர்கள் (Binocular visionaries). நீங்கள் இவர்களுள் ஒருவரா?

பெற்றரின் பார்வை

பெற்ற பிள்ளைமீது அக்கறை இல்லாதவர்கள். பிறவியிலேயே பார்வையின்றி பிறந்த அவன் சுமையாக இருந்த காரணத்திலோ என்னவோ, அவன் இருந்தா என்ன? இல்லாட்டினா என்ன? அவனுக்கு எப்படி கண் தெரிகிறது? யார் பார்வை அளித்தார்? என்றோ கவலைப்படாமல் எங்களுக்கென்ன? என்ற குருட்டுத்தனம். யார் எக்கேடு கெட்டுப்போனா என்ன? உலை கொதிக்குதா? சோறு வெந்ததா? என்று எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள். கடிவாளம் கட்டிய குதிரைக்கு கண்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பைப் போன்று மறைப்பைக் கொண்டு பயணிக்க நினைப்பவர்கள் (Steed visionaries). பரந்துபட்ட விசாலமான பார்வையில்லாதவர்கள். நீங்கள் இவர்களுள் ஒருவரா?

பரிசேயர்கள் பார்வை

எப்படிப் பார்வைப் பெற்றாய்? என்ற அதே கேள்வியை இவர்களும் கேட்டார்கள். பார்வைப் பெற்றவனோ அதே பதிலை அமுதமாக தந்தான். ஆனால் இவர்கள் சட்டாம் பிள்ளைகளாக, ஓய்வு நாள் கடைபிடிக்கபட்டதா? சட்டத்தைக் கடைபிடிக்காத இயேசு பாவி: ஆகையால் இவன் கடவுளிடமிருந்து வரவில்லை:’ என்று தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனார் இவர்கள் நுண்ணோக்கிப் பார்வையாளர்கள்(Microscopic Visionaries). நீங்கள் இவர்களுள் ஒருவரா? அனுபவம் பெற்றவனின் சாட்சியத்தைவிட அனுபவம் பெறாத பெற்றோரை விசாரணைக்குள்ளாக்கியவர்கள். எதையும் ஒருமுறை நம்பாமல் ஒன்றுக்கு மேற்பட்டமுறை ஆராய்ச்சிக்கு உட்படுத்துபவர்கள். இரண்டவாது முறையாக மீண்டும் பார்வைப் பெற்றவனை விசாரணைக்கு உட்படுத்தியவர்கள். ஏற்கனவே ஒரு பதிலை தயாரித்து வைத்துக்கொண்டு, அதே பதிலை அவனும் சொல்லவேண்டும் என்று எண்ணுபவர்கள். தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள முன்வராதவர்கள். எனவேதான் ‘நீ அந்த ஆளுடைய சீடனாக இரு: நாங்கள் மோயிசனின் சீடனாக இருக்கிறோம்’ என்று வரையறுத்து அடுத்தவரிடமிருந்து வரும் பாடத்தைக் கற்க முன்வராதவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறப்பிலிருந்து பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்கு சொல்லித்தருவது என்று சொல்லி மூடிய பானைக்குள் நீரை நிரப்ப நினைக்கும் மூடர்கள். உண்மையில் இவர்கள் பார்வையற்ற மனிதர்கள். (இயேசுவே சொன்னார்-41): விழிப்பாவையே இல்லாத மனிதர்கள். நீங்கள் இவர்களுள் ஒருவரா?

பார்வைப் பெற்ற மனிதன்

துன்பத்தை தொடக்கத்திலிருந்தே பிறவியிலிருந்தே அனுபவித்தவர். பெற்றோரால் கைவிடப்பட்ட ஆதரவற்றவர். மானமிழந்து பிச்சை எடுத்தவர். ஆனால் இவனுக்குள் ‘தேடல்’ புதைந்திருந்தது. ஆகையால்தான் அடுத்தவரிகளிடமிருந்து வந்த அத்தனைத் தாக்குதல்களையும் தாங்கிக்கொள்ள முடிந்தது. ‘நான் அவனல்ல’ என்று சொல்லி தப்பித்து, சமுதாயத்தில் புதிய மனிதனாக வாழ முற்படாமல், ‘நான் தான் அவன்’ என்று தைரியமாக அறிக்கையிட்டு, நன்றிணர்ச்சியோடு, இயல்பாக வாழ முற்பட்டவர். உமிழ்நீர் சேறோடு குளத்துக்கு சென்றவன் இயேசுவை அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்(12): உடனடியாக சட்டாம்பிள்ளைகளின் விசாரணை: இருப்பினும்கூட ‘அவர் ஒரு இறைவாக்கினன் (17) என்று சான்று பகர்ந்தவன். இயேசுவின் சீடனாக இருப்பதில் பெருமையடைந்தவர் (28). தன்னை அவர் சமுதாயத்திலிருந்து வெளியேற்றினாலும், அவமானப்பட்டாலும், தான் பார்த்திராத அந்த இறைவாக்கினரை, பார்க்க ஆவல்கொண்டு தொடர் தேடலில் ஈடுபட்டார் சந்தித்தார். அவர் மனுமகன்- இறைமகன் என்று விசுவசித்தார். ‘என் ஆண்டவரே! என்தேவனே!’ என்று சரணடைந்த புனித தோமையாரைப்போல ‘ஆண்டவரே நம்பிக்கைக்கொள்கிறேன்’ என்று சரணடைந்தார்: மீட்படைந்தார். இப்படிப்பட்ட மனநிலைதான் நமக்கு வேண்டும்.

நாமும் பார்வைப் பெற்ற மனிதர்களாக

அப்போஸ்தலர்களைப்போல் பொருத்தமில்லாததைப்பற்றி ஆராயாமல், அக்கம்பக்கத்தாரைப்போல் கண்ணை மூடிக்கொண்டே தீர்ப்பிடாமல், சுயநலவாதிகளாக இராமல், பெற்றோரைப்போல் சமுதாய அக்கறை இல்லாதவர்களாக இராமல், பரிசேயர்களைப்போல் குற்றம் கண்டுபிடிப்பதையே குலதொழிலாக கொண்டு அடுத்தவரை அநியாயமாக தீர்பிடாமல் இருக்க முற்படுவோம். தவக்காலம் இயேசுவைத் தேடும் காலம். நான் இந்த அளவுக்கு ஆசிர்வாதம்பெற்று வாழ்வதற்கு காரணம் இயேசு என்றறிந்து அவரைத் தேடி சரணாகதி அடையும் காலம் தான் தவக்காலம். அவமானங்கள் ஏற்படலாம்: விசாரணைக்குட்படுத்தப்படலாம்: ஏளனப் பேச்சுக்கு ஆளாகலாம்: ஊரை விட்டு ஒதுக்கிவைக்க நேரிடலாம். இயேசுவைத் தேடுவோமா? ஆண்டவரே நம்பிக்கைக் கொள்கிறேன் என்று சரணாகதி அடைவோமா? கண்ணிருந்தும் குருடர்களாக, குருட்டு வழிகாட்டிகளாக, இருந்தது போதும். இத்தவக்காலத்தில் பார்வைப் பெறுவோமா?. இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்.