இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு

ஞானமிக்கவர்களாக

சாஞா 6:12-16
1தெச 4:13-18
மத் 25:1-13

ஒரு ஸென் கதை!
ஒரு ஜென் ஞானி ஒருவரை பார்வையற்ற ஒருவர் சந்திக்கச் சென்றார். பல விசயங்களைப் பற்றி பேசி தெரிந்து கொண்ட பின் அந்த பார்வையற்றவர் கடைசியில் அவரிடமிருந்து விடைபெற்றார். அவ்வமயம் அந்த ஞானி எரியும் விளக்கு ஒன்றை, பார்வையற்றவரின் கையில் கொடுத்தார். ‘விளக்கு ஏன்?’ என்று வினவினார் விழியில்லாதவர். ‘இருட்டிவிட்டது. நீங்கள் போகும் வழியில் யார் மீதும் மோதிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கு’ என்றார் ஞானி.‘விழியில் ஒளியில்லாதவனுக்கு விளக்கு ஒளியால் என்ன பயன்? என்று திருப்பிக் கேட்டார் அந்தப் பார்வையற்றவர்.

ஞானி விளக்கு கொடுத்ததன் காரணத்தை விளக்கினார். ‘இந்த விளக்கு இருந்தாலும் உங்களுக்குக் கண் தெரியாது என்பது எனக்குத் தெரியும். அது பிறருக்கும் தெரிய வேண்டும். தெரியாவிட்டால் நீங்கள் இருளில் செல்லும்போது உங்கள்மீது யாராவது தெரியாமல் மோதிவிடலாம். ஆனால் அந்த விளக்கு உங்கள் கையில் இருக்கும் போது இருளில் நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள். உங்களால் பார்க்க முடியாது என்பதை அவர்கள் பார்த்துவிட்டு உங்கள் மீது மோதாமல் எல்லோரும் விலகிச் செல்வர்’. ஞானியின் நுட்பமான இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அந்த விழியற்றவர் கையில் விளக்குடன் இருளில் நடக்க ஆரம்பித்தார். தம் கையில் விளக்கிருப்பதால் தம் யாருமே மோத மாட்டார்கள் என்னும் தைரியத்தின் சற்றே வேகமாகக்கூட நடந்தார். கொஞ்ச தூரம் நடந்திருப்பார். ஆனால் சிறிது நேரத்தில் எதிரே வந்த ஒருவர்மீது வேகமாக மோதிக் கொண்டார்.

பார்வையற்றவருக்கு ஆச்சர்யம். ‘என் கையில் விளக்கிருந்தும் என் மேல் ஒருவர் மோதிவிட்டார்.எப்படி? ஒருவேளை அவரும் கண் தெரியாதவராய் இருப்பாரோ? இந்தச் சிந்தனையுடன் தம்மேல் மோதியவரிடம் கேட்டார்: ‘ஐயா! உங்களுக்கும் கண் தெரியாதோ?’ என்றார். மோதியவர் சொன்னார் ‘தெரியுமே’. இந்தப்பதிலைக் கேட்டதும் பார்வையற்றவருக்கு கோபம் அதிகமானது. ‘பார்வை இருந்துமா என்னை நீர் பார்க்கவில்லை. பிறர் என்மீது மோதிவிடக் கூடாது என்றுதானே இந்த கையில் விளக்கு ஏந்தி வந்து கொண்டிருக்கிறேன். விளக்கு வெளிச்சத்திலுமா என்னை நீர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை’ என்று பார்வையற்றவர் வேகமாகக் கேட்டார். மோதியவர் கூறினார்.

‘ஐயா! நீங்கள் கையில் விளக்கு வைத்திருக்கலாம். அது எனக்குத் தெரியவில்லை. அது எரிந்தாலல்லவா விளக்கையும் அந்த விளக்குத் தரும் வெளிச்சத்தின் மூலம் உங்களையும் காண முடியும்? அதுதான் எரியவில்லையே. அது அணைந்து அநேகமாய் ஐந்து நிமிடம் ஆயிருக்கும் எனக் கருதுகிறேன்’. இந்த ஸென் கதை ஒருவர் அடுத்தவரிடமிருந்து ஞானத்தை ஒருபோதும் பெற முடியாது என்பதை விளக்குவதற்காக சொல்லப்படுகிற கதை. இரவல் அறிவு நமக்கு ஒருபோதும் உதவாது. இன்றைய நற்செய்தியில் கைவிளக்கு ஏந்திய காரிகைகளைப் பற்றி இயேசு ஆண்டவர் விவரிக்கிறார். விளக்கு, எண்ணெய் மற்றும் திரிகளோடு ஐவர்: எண்ணெயின்றி விளக்கோடும் திரிகளோடும் ஐவர். அற்புதமான உவமை. முன்மதியுடையோர் முழுமதியாய் ஒளிர்கின்றனர்: ஞானம் தனக்கென கட்டிய வீடு பாறைமீது நிலையாயிருக்குமன்றோ?. ‘எனக்கே காணோம்: அப்புறம் என்ன தானம்?’ என்று சொல்லி, வணிகரிடம் போய் வாங்கிக் கொள்ள வழிகாட்டுகின்றனர். இதுதான் முன்மதியுடையோரின் சிறப்பு. பின் வருவதை முன்பே அறிந்து கொள்கின்றனர். இவர்கள் வரும் முன் காப்போம் திட்டத்திற்கு வாழ்க்கைப் பட்டவர்கள். ஒரு செயலைச் செய்தால் அதன் எதிர்விளைவு என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள். முன்மதியுடையோர் முழுமதியுடையோராக நடந்து கொள்கின்றனர். ;உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்: எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ; என்று அறிவுரைக்கின்றனர். இங்கே அவர்களுடைய சான்றாண்மையை அறிந்து கொள்வது நல்லது. தங்களை தற்காத்து கொள்கின்றனர்: அதே சமயம், துன்பத்திலிருப்பவரும் காப்பாற்றப்பட வழி காட்டுகின்றனர். ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்’ என்பது தங்களைத் தற்காத்து கொள்கின்ற ஞானம். அதே சமயம், எண்ணெயின்றி அவர்கள் படும் கஷ்டத்தைப் போக்கிட, ‘வணிகரிடம் செல்லுங்கள்’ என்று வழிகாட்டுகின்றனர். இதுதான் சான்றாண்மை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பரந்துபட்ட நோக்கில் செயல்படுகிற தயையுள்ள உள்ளம்.

அறிவிலிகள் என்று அவர்கள் ஐவரையும் சாடுவதைத் தவிர்க்கலாம். அவர்கள் அறிவலிகள் அன்று: முன்மதியற்றோர். யூதர்களுடைய திருமணம் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று புதுமணத்தம்பதியரை ஊரில் உள்ள அனைவரும் வாழ்த்தும் பொருட்டு, நீண்டதூரம் ஊர்கோலம் போவார்கள். தெருவில் போவோரும் வருவோரும், வீடுகளின் முற்றத்தில் இருப்போரும் புது மணத்தம்பதியரை நெஞ்சார வாழ்த்துவார்கள். இப்படி அவர்கள் செல்லும்போது மாலை நேரமாகிவிடலாம்: பொழுது சாய்ந்து இருட்டியும் விட நேரிடும். அப்பொழுது புதுமணத்தம்பதியரின் உறவினர்கள் குறிப்பாக இளம்பெண்கள் விளக்குகளை ஏந்தி அவர்களை வழிநடத்தி செல்வர். லைட் பாய்ஸ் மாதிரி லைட் கேர்ள்ஸ். அப்படி இவர்கள் பயணிக்கிறபோது தங்களுக்குத் தேவையான எண்ணெய், கொள்கலன், விளக்குத்திரி ஆகியவற்றை ஒரு கைப்பையில் கொண்டு செல்வர். இந்தப் பின்னியைக் கொண்டு, ஆண்டவர் இந்த ‘பத்து தோழியர்’ உவமையை ஆண்டவர் கட்டமைக்கிறார். விளக்கு ஞானத்திற்கு அடையாளம்.

விளக்கு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? விளக்குவதுதான் விளக்கு. கிழே கிடப்பது பாம்பா, கயிறாக என்பதை விளக்குவதுதான் விளக்கு. விளக்கு இருந்தால் விளங்குகிறது. எது மேடு! எது பள்ளம் என்ற விளக்குவது விளக்கு. ஒரு விளக்கு இருந்தால் எது மேடு எது பள்ளம் என்பதை நம்மால் அடையாளம் கண்டுகொள்ளமுடியும்: அதற்கேற்ப செயல்பட முடியும்.

புற இருளை அகற்ற பயன்படுகிற விளக்கைப் போன்று, மனிதருள் மண்டிக்கிடக்கிற அக இருளை அகற்ற இந்த ஞானம் தேவை. எனவேதான் ‘தன்னை அறிந்தவன் ஞானி’ என்றனர் பெரியோர். இருட்டில் இருக்கிறபோது கயிறு பாம்பாகத் தெரியும். வெளிச்சம் இருந்தால் கயிறு எது? பாம்பு எது? என்ற வேறுபாடு புரியும். நம்மில் பலருக்கு உள்ளுக்குள் வெளிச்சம் இல்லை. உள்ளத்திற்குள் ஒளியில்லை. அகத்தின் ஒளி முகத்தில் பிரகாசிக்கும். உள்ளத்திற்குள் வெளிச்சம் இல்லாத காரணத்தினாலே நாம் புறத்தே எதையும் பார்க்க முடிவதில்லை.

திருவொற்றியூர் நெல்லிக்காய் பண்டாரத்தெருவில் வசித்த சித்தர் ஒருவர், வீட்டுத்திண்ணை ஒன்றில் அமர்ந்திருந்தார். வீதியில் செல்லும் மனிதர்களைப் பார்த்த அந்த சித்தர் ‘பாம்பு போகிறது: தேள் போகிறது: புலி போகிறது: நரி போகிறது’ என்று உரத்த குரலில் ஓயாமல் சொல்லிய வண்ணம் இருந்தார். அப்போது அந்த வழியில் வள்ளலார் வந்தார். அவரைப் பார்த்த சித்தர் ‘இதோ! மனிதர் போகிறார்’ என்றார். உள்ளத்தில் ஒளி அவருள் ஒளிர்ந்தது.

சிறந்த அறிவியல் அறிஞரான ஐன்ஸ்டீன் ‘ எனக்கு வெளியே உள்ள உலகத்தை ஆய்வு செய்வதிலேயே எனது காலம் அழிந்து விட்டது. எனக்குள்ளே உள்ள உலகம் பற்றிய அறிதலும்,தேடலும் நடக்காமல் போய்விட்டன’ என்று கடைசி நாட்களில் புலம்பியது உண்டாம்.

‘வெள்ளமாய் ஒளி வெளியை நிறைக்கிலென்?
உள்ளக்குகையில் இருட்டே இருந்தால் உலகமும் இருளாம்’ என்ற ஐயா வல்லிக்கண்ணனின் வரிகள் உரமுள்ளவை. ‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புறு சிந்தை இடுதிரியாக’ என்கிறார் பூதத்தாழ்வார். அகஇருள் அகல ஞான விளக்கேற்றுங்கள்.

ஞானம் என்பது என்ன?
ஞானம் என்பது என்ன என்பதை உலகிலுள்ள பல்வேறு சமயங்களின் புனித நூல்களும் ஞான நூல்களும் விளக்க முற்பட்டுள்ளன. ஆனால் கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தைத்தவிர வேறு எதுவும் இவ்வளவு அழகாக விளக்கியதில்லை. சாலமோனின் ஞான நூல் 7~22-29 மிகவும் அழகாக ஞானத்தை வரையறுக்கிறது. இறைவனிடம் நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ, கேட்காமல்.. நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்ட உன்னத ஞானி அல்லவா இந்த சாலமோன். எனவேதான் உலகம் இவரைத் தேடி வந்தது. அந்த சாலமோன் ஞானத்தை நெடிதுணர்ந்து பின்வருமாறு வரையறுக்கிறார்.
ஞானம் - ஆற்றல் கொண்டது. அவற்றால் அறிவுடையது: தூய்மையானது: பல்வகைப்பட்டது: நுண்மையானது: உயிரோட்டம் உள்ளது: தெளிவுமிக்கது: மாசுபடாதது: வெளிப்படையானது: கேடுறாதது: நன்மையை விரும்புவது: கூர்மையானது.எதிர்க்கமுடியாதது: நன்மை செய்வது: மனிதநேயம் கொண்டது: நிலைபெயராதது: உறுதியானது: வீண்கவலை கொள்ளாதது: எல்லாம் வல்லது: எல்லாவற்றையும் பார்வையிடுவது: அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது. அசைவுகள் எல்லாவற்றையும்விட மிக விரைவானது: அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது: எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது. கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி: எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையமுடியாது. என்றுமுள ஒளியின் சுடர்: கடவுளது செயல்திறனின் கறைபடியாகக் கண்ணாடி: அவருடைய நன்மையின் சாயல்.ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது: தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது: தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது: அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது.கதிரவனைவிட அழகானது: விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது: ஒளியைக் காட்டிலும் மேலானது (சாஞா 7~22-29) என்கிறார்.

இப்படிப்பட்ட ஞானத்தை இறைவனே நம் அனைவருக்கும் அருளுகிறார் (விப 31~6, சீஞா 11~15). அவரை அறிவதும், அவருக்கு அஞ்சுவதும் (யோபு 28~28, மீக் 6~9) தான் ஞானம். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம் (சீஞா 19~20). சில சமயங்களில் நமது ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது 1 கொரி. 1~25 என்பதையும் அறிந்திடல் வேண்டும். தூய ஆவியின் வரத்தில் ஞானமே முதன்மையானதாக அமைகிறது எனில் அதன் முக்கியத்துவத்தை அறிதல் இன்றியமையாதது ஆகும். (எசா 11~2 1 கொரி. 12~8). அன்னை மரியாளைப் போற்றும் மன்றாட்டு மாலையில் அவரை ‘ஞானத்தின் இருப்பிடம்’ என அறிக்கையிடுகிறோம்.

ஞானத்தின் பலன்கள்
ஞானம் வலிமை தரும் (சஉ 7~9), முகத்தை ஒளிரச் செய்யும் (சஉ 8~1): ஞானம் இறந்த காலத்தை அறியும்: எதிர்காலத்தை உய்த்துணரும்: உரைகளின் நுட்பங்களையும் புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் பருவங்கள், காலங்களின் பயன்களையும் முன்னறியும்.( சாஞா. 8:8). துன்ப துயரத்திலிருந்து விடுதலைத் தரும் (சாஞா 10~9). தன் மக்களை மேன்மைப்படுத்தும்: தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும் (சீஞா. 4~11). பேச்சில் புலப்படும் (சீஞா. 4~24). மனிதர்களிடையே அடித்தளம் அமைத்துள்ள இது நீங்காது நிலைத்திருக்கும் (சீஞா 1~15). ஞானமுள்ளவர்களாக வாழ முற்படுவோம். ஞானமே – கடவுளின் இருப்பிடமன்றோ?