இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு

அன்பே அருமருந்து

விப 22:20-26 1
தெச 1:5-10
மத் 22:34-40

ஒரு ஊர்ல ஒரு பெரிய மரம். ரொம்ப கம்பீரமா நின்னுக்கொண்டிருந்தது. அதிலே நிறைய பூக்கள்! ..கனிகள் .. பறவைகள்!

ஒரு சின்ன பையன் அந்த மரத்தடியிலே வந்து, தினந்தோறும் விளையாடுவது வழக்கம்! இப்படியே பழகினதாலே அந்த பையனுக்கு அந்த மரத்தின் மேல் பாசம் உண்டானது. பையனும் அந்த மரத்திலே உள்ள பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டான்: பழத்தை தின்ன ஆசைப்பட்டான். அந்த மரமும் தன்னோட கிளைகளை வளைச்சு, அவனுக்கு எட்டுகிற அளவுக்கு தலை சாய்ச்சது.

பையன் பூக்களைப் பறிச்சான்: மரம் சந்தோசப்பட்டது! கல்லால் அடித்தான்: தாங்கிக்கொண்டது! மரம் அன்பின் அடையாளம்! அதனாலே அது கொடுக்கறதுக்கு ஆசைப்பட்டது. மனிதன் ஆணவத்தின் அடையாளம்: அதனால் இவன் பிடுங்குவதிலும், பறிப்பதிலும் சந்தோசப்பட்டான். பையன் வளர்ந்தான். அந்த மரத்தின் மடியிலே படுத்துத் தூங்கினான். பூக்களைப் பறித்து, தலையிலே சூடிக்கொண்டான்: பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். அதைப் பார்த்து மரம் சந்தோசப்பட்டது. கொஞ்ச நாளாச்சு, பையனும் வளர்ந்து பெரியவனா ஆனான். அந்த மரத்தில் ஏறி, .. கிளையிலே உட்கார்ந்து, ஊஞ்சலாட ஆரம்பித்தான். அவனுக்கு சௌகரியத்தைக் கொடுக்கிறதிலே மரத்திற்கு பேரனாந்தம். மரத்துக்கு அசௌகரியத்தைக் கொடுக்கிறதிலே அவனுக்கு ஆனந்தம். இது அன்புக்கும் ஆணவத்திற்கும் உள்ள வித்தியாசம்!.

பையனுக்கு பரிட்சை.. கடமை.. வேலை லட்சியம் எல்லாம் வந்து சேர்ந்தது. படித்து தேர்விலே வெற்றிபெற வேண்டியிருந்ததால், பையன் மரத்திடம் வருவதில்லை. ஆனால் மரம் அவனுக்காக ஆசையாய் காத்திருந்தது! பையனோ உலக விஷயங்களில் மூழ்கிவிட்டான். ஒருநாள் அந்தப் பக்கமா போனான். மரம் அவனைப் பார்த்தது. மறந்திட்டியா என்னை? நான் உன்னைப் பார்க்கனும்னு ஆவலா காத்திருக்கிறேன் என்று அன்பாய் சொன்னது. இவன் மரத்தைப் பார்த்தான். ‘நீ எனக்குன்னு என்ன வைச்சிருக்கே? எனக்கு இப்ப பணம் வேணும். உங்கிட்ட இருக்கா சொல்லு? நான் இப்பவே வர்றேன்? என்றான்.

உனக்குப் பணம் தானே வேணும். இங்கேவா என்னுடைய பழங்களைப் பறித்து, விற்று, காசாக்கிக்கொள்’ என்றது. பையனும் மரத்திலே ஏறி, பழங்களையும், பழுக்காத காய்களையும் பறித்தான்: தன்னோட கிளைக் கொம்புகள் ஒடிவதைப்பற்றிகூட கவலைப்படாமல், அனைத்தையும் மரம் அன்பாய் தாங்கிக்கொண்டது. அனைத்தையும் பறித்தவன், கொஞ்சம் நன்றிகூட சொல்லாமல், நகர்ந்தான்.

அதற்கப்புறம், அவன்அந்த பக்கமே வரலை. பணம் சம்பாதிக்கிறதிலே குறியா இருந்தான். மரத்துக்கு அவன் இந்தப் பக்கம் வரலையே வருத்தம்!

ரொம்ப வருசத்திற்கு அப்புறம் அவன் வந்தான்! ‘ வா மகனே! வந்து என்னைக் கட்டிப்பிடிச்சுக்க் என்றது மரம்! நான் இன்னும் என்ன சின்ன பிள்ளையா! நான் இப்ப வீடு கட்டப்போறேன்! உன்னால உதவ முடியுமா? என்று கேட்டான். மரமும் தாரளமாக, ‘ என்னுடைய கிளைகளை வெட்டிக்கோ’ என்றது. அவனும் மரத்தை கிளைகளை வெட்டி மொட்டையடிச்சு.. வீடு கட்டினான்.

மறுபடியும் கொஞ்சம் வருடங்களுக்குப் பிறகு, கிழவனாகி, வந்தான். ‘நான் வெளிநாட்டிற்குப் போய், பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறேன்! நான் பயணம் செய்ய ஒரு படகு தேவை! அதுக்கு உதவ முடியுமா என்ற கேட்டான். ‘அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை! என் அடிமரத்தை வெட்டிக்கோ!’ என்றது மரம்.

அவன் வெட்டினான்: ...படகு செய்தான்... போயிட்டான். இனிமே திரும்ப வருவானோ? வரமாட்டோனே? தெரியாது. ஆனா அடிமரம் அவனுக்காக காத்திருந்தது. அன்பு எப்போதுமே கொடுத்துக்கொண்டேயிருக்கும்! ஆணவம் எப்போதும் கெடுத்துக்கொண்டேயிருக்கும்! அன்பு நிறைவானது! ஆணவம் குறையுள்ளது!

கிறிஸ்தவத்தின் ஆணிவேரே அன்புதான்! அன்பிலிருந்துதான் அனைத்துப் புண்ணியங்களும் ஊற்றெடுக்கின்றன. ஆண்டவருடைய ஒட்டுமொத்த போதனையும் ஒரே வார்;த்தையில் அடக்க வேண்டும் என்றால்... அன்பு என்பதிலே அடக்கிவிடலாம்! இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவையென்றால் ‘இறையன்பு’ ‘பிறரன்பு’ என்று விரிவுப்படுத்தலாம்! அன்பு இல்லையேல் கிறிஸ்தவம் இல்லை: கிறிஸ்தவம் இல்லையேல் அன்பு இல்லை!

பன்னிருவகை அன்பு
வெறுமனே அன்பு.. அன்பு என்கிறோமே.. அன்பிலே எத்தனை வகையிருக்கிறது என்று என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா? இரக்கம்-கருணை- காருண்யம்- பந்துத்துவம்- பட்சம்- பாசம்- நேசம்- விசுவாசம்- அபிமானம்- காதல்- பக்தி- இப்படி பன்னிரெண்டு விதமாக அன்பைப் பகுத்துப்பார்க்கலாம்! இதிலே வித்தியாசம் இருக்கிறது!. ஒவ்வொன்றும் உன்னதானது.
இரக்கம்: எளியவர்கள்மேல் செலுத்துகிற அன்புதான் இருக்கிறதே அதுதான் இரக்கம்.
கருணை: அறிவு பலம்- உடல் பலம் இது இரண்டுமே இல்லாதவர்கள் மேல் காட்டுகிற அன்பு. அதாவது வலிமையற்றவர்களின் மேல் செலுத்துகிற அன்புதான் கருணை!
ஜீவகாருண்யம்~ எறும்புலேயிருந்து யானை வரைக்கும்.. ஏன் டைனோசர் வரைக்கும் உலகில் உள்ள படைப்பு அனைத்தின் மீதும் அதாவது ஜீவ ராசிகள் அனைத்தின் மீதும் காட்டுகிற அன்புக்குப் பெயர்தான் ‘ஜீவகாருண்யம்’. ஒரு புறாவுக்காக தன் சதையை அரிந்து தானம்செய்த சிபி சக்கரவர்த்தி காட்டின அன்பு இந்த ரகம்தான்!
பந்துத்துவம்: உறவினர்கள், அதவாது நம்முடைய சொந்தக்காரர்கள்மேல் அவர்கள் வசதியாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், வித்தியாசமில்லாமே காட்டுற அன்பு இருக்கிறதே அதற்குப் பெயர்தான் பந்துத்துவம்!
பட்சம் ஒரு முதலாளி தன் தொழிலாளர்களிடம் காட்டுகிற அன்பு தான் ‘பட்சம்’. தொழிலாளிகள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் இருக்கிறது என்று அங்கீகரித்து, அவரும் தன்னைப் போன்றே இறைவனின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டு அவரை மதிப்பதும், அதே சயமம் அவர்களிடையே எவ்வித பாரபட்சமுமின்றி, நடந்து கொள்கிற அன்புதான் பட்சம்.
பாசம்: ஒரு தாய் தன் குழந்தை மேல் செலுத்துகிற அன்புக்கு ‘பாசம்’ என்று பெயர்!
நேசம்: தம்மைப் ஒத்த நண்பர்களிடம் செல்வம், அந்தஸ்து, சாதி, இனம், மொழி என எதுவும் பாராமல் சமத்துவ உணர்வுடன் செலுத்துற அன்புக்கு நேசம்’ என்று பெயர்.
விசுவாசம்: ஒரு தொழிலாளி, தன் முதலாளியிடம் காட்டுகிற அன்புக்குப் பெயர் ‘விசுவாசம்’ .
அபிமானம்: தேசத்தின் மேலும், ஏன் தாய்மொழி தமிழ் மேலும் செலுத்துகிற அன்புக்கு ‘அபிமானம்’ என்று பெயர். தேசாபிமானம் என்ற சொல்கிறோமே அது இதுதான்!
காதல்~ ஒரு கணவன், தன் மனைவி பேர்லே காட்டுகிற தூய்மையான அன்புக்கு காதல் என்று பெயர்! பக்தி~ படைக்கப்பட்டவை படைத்தவர்மீது (கடவுள்மீது) செலுத்துகிற அன்பிற்கு பெயர் ‘பக்தி’. இங்கேயுள்ள சிக்கல் என்னவெனில் வேறுபாடு தெரியாமல் நாம் இடம், நபர் மாற்றி, அன்புச் செய்தால் அன்பின் தன்மை மாறுபடும்! அதுவே இடைஞ்சலாகும்.

கிறிஸ்வத்தின் அன்பு
இன்றைய நற்செய்தி, அன்பிற்கு முகத்துவாரமாக அமைகிறது. உலகில் உள்ள எல்லா சமயங்களுமே அன்பை முதன்மைப்படுத்துகின்றன: இதில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை. ஆனால் கிறிஸ்தவ சமயம் மட்டுமே அன்பு என்பது எதிரியை மன்னிப்பதையும் அன்புச் செய்வதையும் கடமையாக கற்பிக்கிறது.(இன்றைய முதல் வாசகம்) (மத் 5~44-46). இயேசுவே சிலுவையில், ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று சொல்லிதான் தன் இன்னுயிரை மானுட மீட்பிற்காக ஈந்தார். அவரது வழியல் முதல் மறைசாட்சி ஸ்தேவான் பயணித்தார்.

கிறிஸ்தவம் பழிக்குப்பழி- பல்லுக்குப் பல்- கண்ணுக்கு கண் என்பதெல்லாம் மண் மூடி போக, அன்பை முன்னிலைப்படுத்துகிறது. வாழ்வாக இருந்தாலும் அன்பு தான்! அதுவே வழிபாடாக இருந்தாலும் அன்புதான். எனவேதான் ஏதாவது மனத்தாங்கல் இருந்தால், அப்படியே காணிக்கையை வைத்துவிட்டு, சென்று ஒப்புரவாகி, நல்லுறவு ஏற்படுத்தி, பின்பு வந்து காணிக்கையை செலுத்து என்கிறார் இயேசு (மத்5~24). எல்லாவற்றையும் விட இயேசு இன்றைய சமுதாயத்திற்கு கொடுத்த மாபெரும் பொன்விதி, ‘ பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்: இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே (மத் 7~12) என்பதுதான். அடுத்தவரை அன்புச் செய்வதில் தான், என் வாழ்க்கையே அர்த்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் உணர்ந்து வாழ வேண்டும்.

தன்னன்பு பிறரன்புக்கு ஈடாகாது: ஆனால் பிறரன்பு இறையன்பிற்கு ஈடாகும்: இறையன்பு, பிறரன்பிற்கு ஈடாகும். இதுதான் கிறிஸ்தவத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு. தன்னன்பு ஒருபோதும் பிறரன்பிற்கு சமமாகாது: ஆனால் பிறரன்பு இறையன்பிற்குச் சமமாகும்.(மத் 22~39). இதனை ஒவ்வொருவரும் புரிந்து வாழ வேண்டும். எனவேதான் ஆண்டவர் இயேசுவும், தாம் கொடுத்த கட்டளையில், ‘நான் உங்களிடம் அன்புச் செலுத்தியது போல, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புச் செலுத்துங்கள்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து, நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ என்று (யோவான் 13~34-35) வலியுறுத்துகிறார். இதுதான் கிறிஸ்தவத்தின் மூலாதாரம். நாம் அன்பு செய்ய மறுக்கிற போது, கிறிஸ்தவம் மரிக்கிறது: அன்பு செய்கிறது போது அது உயிர்க்கிறது. அன்பிலேதான் கிறிஸ்தவம் அடங்கியிருக்கிறது. முத்.அன்னை தெரசா... புனித மாக்கிமில்லியன் கோல்பே.. இவர்களெல்லாம் சிறந்த முன்மாதிரிகள்!

கடவுள் நம்மை அன்புச் செய்வதால் நாமும் ஒருவர் மற்றவரை அன்புச் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். இது நமது தார்மீக கடமையாகிறது (1யோவா4~11). அதிலேதான் அன்பு நிறைவடைகிறது. காரணம், கடவுள் அன்பாயிருக்கிறார்: அன்பும் நிறைவுள்ளதாகிறது. அதே சமயம், கடவுளை அன்புச் செய்வதாக சொல்லிக்கொண்டு, நாம் நம் சகோதர சகோதரிகளை வெறுத்தால், நாம் பொய்யர்கள் (1யோவா4~20): கொலையாளிகள் (1யோவா 3~14): கடவுளின் பிள்ளைகளுமல்ல (1யோவா3~10). எனவே கிறிஸ்தவத்தின் ஆணிவேர் அன்பே! எனவேதான் அன்பின் பெருமையை புனித பவுலடியார் மிகச்சிறப்பாக, கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (13) எடுத்துரைக்கிறார்.

அசோகன்! கலிங்கப்போரோடு மட்டும் அரசனாக இருந்திருந்தால் வரலாற்றில் வாழாதிருந்திருப்பார்: கி.மு262-ல் கலிங்க தேசத்தை வெற்றிக் கண்ட பிறகு, அவன் பார்த்த குருதி வெள்ளம், செத்து மடிந்த வீரர்களின் சடலங்கள், குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடக்ககும் வீரர்கள், வஞ்சம் தீர்க்கும் வெறித்தனங்கள், நாடு கடத்தல்கள் .. என யுத்தத்தைத் தொடர்ந்த அத்தனை அவலங்களையும், கண்டு கதிகலங்கினார்: தன்னையே மாற்றினார்: அப்போது அன்பைப் போதித்த சமயமான புத்த மதத்தை தழுவி, அதனை பரப்ப முனைந்தார்: தர்மத்தின் வழிநின்று 38 வருடங்கள் அவர் ஆண்டபோதும் வாழும் வரலாறானார்: அவருடைய கல்வெட்டுகள் அன்பை முன்மொழிந்தன: சத்தியத்தை வாழ்வித்தன: அன்பினால் அவர் வாழ்கிறார்: கைவிளக்கேந்திய காரிகை, பிளாரன்ஸ் நைட்டிங்கேல்..அன்னை தெரசா.. பாபா ஆம்தே.. புனித டேமியன் இவர்களெல்லாம் வரலாற்றில் இடம் பெற காரணம் அன்பே! ஒன்று மட்டும் உண்மை! நாம் உயிரோடு வாழ்கிறோம் என்று சொன்னால் அன்புச் செய்வதால் தான்: இல்லையேல் நடைபிணம்!

‘ஓத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் - அன்பு செய்ய புறப்படுவோமா!