இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
ஆண்டின் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறு

அரசியலா? ஆன்மீகமா?- இரண்டும்தான்!

எசா 45:1,4-6 1
தெச 1:1-5
மத் 22:15-21

இன்றைய உலகில் அரசியலையும் ஆன்மீகத்தையும் பிரித்துப்பார்ப்பது மிகவும் கடினமானது. அரசியலும் ஆன்மீகமும் இரண்டற பின்னி பிணைந்திருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ‘அரசியலும் ஆன்மீகமும் இரண்டு கண்கள்;’ என்ற சொன்னது மிகவும் சிந்திக்க தக்கது. இந்நிலையில் அரசியலையும் ஆன்மீகத்தையும் பிரித்துப்பார்ப்பது இயலாத ஒன்றுதான்! பழைய ஏற்பாட்டு அரசியலை முன்னின்று வழிநடத்தியரே இறைவன்தான்! ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவர்கள், குறிப்பாக தமிழக கிறிஸ்தவர்கள் அரசியலை ஒதுக்கிவைத்தே அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளுகின்றனர். அரசியலை கையிலெடுக்காத எந்தச் சமூகமும் கிள்ளுக்கீரையாகவும், எடுப்பார் கைப்பிள்ளையாகவும் வாழ நேரிடும் என்பதே வரலாற்று உண்மை.

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களாலும், ஏரோதியர்களாலும் சோதிக்கப்படுகிறார். முரண்பட்ட கொள்கைகளையுடையவர்கள் இயேசுவை எதிர்க்க கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளான ஏரோதியர்கள், உரோமையின் காலனியாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஆட்சி-அதிகார லாபம் அடைந்தவர்கள்: உரோமையின் அடிவருடிகள்: சமயவாதிகளான பரிசேயர்களோ சட்டாம்பிள்ளைகளாக, உரோமையருக்கு வரி செலுத்துவது பாவம், யூதச் சட்டத்திற்கு முரணானது என்ற கொள்கையுடையவர்கள்: உரோமை ஆதிக்கத்தை முழுமூச்சாக எதிர்த்தவர்கள்!

ஆண்டவரை எதிர்க்க, எதிரிகளாகிய இருவருமே ஒன்றிணைகிறார்கள். இது இரண்டாவது முறை! முதல் முறையாக மாற்கு 3~6 –ல் இவர்களுடைய சூழ்ச்சி வெளிப்படுகிறது. எதிரிக்கு எதிரி நண்பனாக இருந்தால் நம் பாடு திண்டாட்டம்தானே!. கடந்த சில வாரங்களாக இடம் பெற்ற நற்செய்தி வாசகங்களில், கொடிய குத்தகைக்காரன் உவமை, இரு புதல்வர்கள் உவமை, அரசனின் திருவிருந்து உவமை...ஆகியவற்றின் மூலம் இயேசுவால் வஞ்சிக்கப்பட்ட இவர்கள், வஞ்சக மனப்பான்மையோடு அதவாது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தந்திர மனப்பான்மையோடு, இயேசுவை முதலில் புகழ்ந்து, ‘ சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? என்ற கேள்வியைக் கேட்கின்றனர்.

வரி என்பது அடிமைத்தனத்தின் அடையாளம்! யூதர்கள் உரோமையருக்கு நிலவரி என்ற பெயரில் பத்தில் ஒரு பங்கு தானியத்தையும், ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய்- திராட்சை இரசத்தையும் செலுத்த வேண்டும்! வருமானவரி என்ற பெயரில், நூற்றில் ஒரு பங்கினைச் செலுத்த வேண்டும். தலைகட்டு வரி என்று 14 வயதுமுதல் 65 வயது நிரம்பிய ஆண்களும், 12 வயதுமுதல் 65 வயதுவரையிலான பெண்களும் ஒரு தெனாரியம் வீதம் செலுத்த வேண்டும். எனவேதான், தந்திரமாக இக்கேள்வி இயேசுவிடம் எழுப்பப்படுகிறது!

இக்கேள்விக்கு ‘ஆம்! வரி செலுத்துவது முறை’ என்று சொன்னால், இயேசு உரோமையின் காலனியாதிக்கத்தை ஒப்புக்கொள்கிறார்: எனவே இவர் மெசியாவாக இருக்க முடியாது என்று கூக்குரலிடுவார்கள்: இது ஏரோதியருக்கு சாதகமாகவும், பரிசேயருக்கு எதிரானதாகவும் அமையும். விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மக்களின் நம்பிக்கையும் பொய்த்துப்போகும்.

அல்லது இக்கேள்விக்கு ‘இல்லை! வரி செலுத்த கூடாது’ என்று சொன்னால், இவர் உரோமை ஆதிக்கத்திற்கு எதிரானவர், கிளர்ச்சியாளர், தண்டணைக்குரியவர் என்று நாடகமாடுவார்கள்! இப்பதில், பரிசேயருக்கு சாதகமாகவும், ஏரோதியருக்கு விரோதமாகவும் அமையும். இருதலைக் கொல்லி எறும்பு போல இக்கட்டான நிலைமை! இங்கேதான் இயேசுவின் மதிநிறைந்த செயல்பாடு வெளிப்படுகிறது!


ஆண்டவரின் செயல்பாடு!
முதலாவதாக, இயேசு, ‘தான் இவ்வுலகத்தினர் எவருக்கும் அடிமையில்லை’ என்பதை, எந்த நாட்டின் நாணயத்தையும் உடைமையாக வைத்திருக்காமல் எண்பிக்கிறார். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று, அவர்களையே அவர்கள் விரித்த வலையில் சிக்க வைக்கிறார். ‘வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்’ என்று அவர்களிடம் கேட்கிறார். நாணயம் கொடுக்கப்படுகிறது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் சீசருடைய உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை இயேசு காட்டுகிறார். அதிலே Pழவெகைநஒ ஆயஒiஅரள என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கிறது. ‘சீசருக்குரியதை சீசருக்கும்’இ ‘கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று பதில் தருகிறார். சீசரை வெறுத்த பரிசேயரிடம், ‘ சீசருக்குரியதை சீசருக்கு கொடுங்கள் என்றும், இறைவனை மறந்த ஏரோதியரிடம் ‘கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள்’ என்று கற்பிக்கிறார். இதுதான் கிறிஸ்துவின் பூமராங்! இயேசு எல்லா வரிகளையும் செலுத்தியவர்தானே(மத்17~25-27).

இரண்டாவதாக, சுயநலத்தை வேரறுக்க கற்பிக்கிறார். வரிக்கும் சுயநலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யூதர்கள் தங்கள் உடைமையிலிருந்து ஒரு பாதியை எடுத்து சீசருக்குக் கொடுக்க யூதர்கள் தயங்கியது பேராசையின் காரணமாகவே ஒழிய, கடவுளின் இறையாண்மையைப் பற்றிய சிந்தனை காரணமாக அல்ல. இதனை எப்படிப் புரிந்து கொள்வது என்றால், எந்த ஆட்சியாளர் (சீசர்) ஒரு நாணயத்தைப் பொறித்தாரோ, அந்த ஆட்சியாளருக்குத்தான், அந்த நாணயம் உரித்தானதாகும். பரிசேயரின் கையிலிருந்த சீசருடைய உருவம் பொறித்த நாணயம் சீசருக்குச் சொந்தம்: உரோமைப் பேரரசர் சீசருடைய சொத்து. எனவே அந்த நாணயம் (தெனாரியம்) சீசருக்கு உரியது: கடவுளுக்கு உரியதன்று! கடவுளுக்குரியதைப் பற்றியே கவலைப்பட்டு, இவ்வுலகைப்பற்றி கவலைப்படாமல் வாழும் மதவாத பரிசேயருக்கு கற்பிக்கப்பட்ட பாடம்! அதேசமயம், கடவுளுக்குரியதைப் பற்றி கவலைப்படாமல், அரசியல் அதிகாரத்தைப் பற்றியே கவலைப்படும் ஏரோதியர்களுக்கு, கடவுளுக்குரியதை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் பாடம் கற்பிக்கிறார். அதாவது சொத்துக்களை விற்று, அதிலிருந்து வரும் வருமானத்தை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். அதிகாரம், அந்தஸ்து , உடைமை ஆகியவற்றைத் துறந்திட வேண்டும்! இப்படி இயேசு இரண்டு விதத்திலும் இரண்டு பேருக்கும் சிறப்பான பாடம் புகட்டுகிறார்!

இன்று யார் இந்த பரிசேயர்கள்! ஏரோதியர்கள்!
பெரும்பான்மை வாதத்தைக் கையிலெடுத்துள்ள இந்து பயங்கரவாத (மத)அமைப்புகளான, விஎச்பி, பஜ்ரங்தள், வன்வாசி கல்யான் ஆசிரம், ஆர்எஸ்எஸ் ஆகியன பரிசேயர்கள்! அரசியல் அமைப்பான பாஜக ஏரோதியர்கள்! இவர்கள் இரண்டு பேருமே இணைந்து நம்மை சிதைக்க கரம் கோர்க்கின்றனர்! ஆகையால் கிறிஸ்தவர்களாகிய நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நாம் பிழைத்துக்கொள்வது மிகவும் அரிது! சீசருக்குரியதை (தேசத்திற்குரியதை) சீசருக்கு (தேசத்திற்கு) செலுத்தவும், கடவுளுக்குரியதை (கிறிஸ்தவத்திற்குரியதை) கடவுளுக்கு (திருச்சபைக்கு) செலுத்தவும் நாம் கிளர்ந்தெழ வேண்டும்! இதுவே நேரம்! இதுவே காலம்!
மதவாதமும், மதவாத அரசிலும் கூட்டணி சேர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான சதிராட்டங்களை சாதுர்யமாக விளையாட ஆரம்பித்துள்ளன! அரசியல் என்பது கிறிஸ்தவத்திற்கு அப்பாற்பட்டது என்ற மாயைத் தகர்த்தெறிந்து, கிறிஸ்தவர்களாகிய நாம் அரசியலில் தகுந்த பங்கெடுப்பை முன்வைக்கவில்லையென்றால், நம்மிடம் உள்ள வேறுபாடுகளையும், பிரிவினைகளையும் தவிர்த்து இயக்கமாக ஒன்றிணையவில்லையென்றால், நமக்கும் சிலுவை மரணம் நிச்சயம்!
ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களாக வழிபாட்டை மட்டுமே மையப்படுத்தியிராமல், மற்ற வார நாட்களில், சமுதாய, அரசியல் ஈடுபாட்டைக் காட்டாத பட்சத்தில், நாமும் சிதைக்கப்படுவோம்! எச்சரிக்கை! கடவுளுக்குரியதை ஞாயிற்றுக்கிழமை செலுத்தும் நாம், இந்த சமுதாயத்திற்குரியதை மற்ற வாரநாட்களில் செலுத்த தவறக் கூடாது! பெரும்பான்மைவாதம்கூட சுயநலவாதம்! பெரும்பான்மை – சிறுபான்மை இரண்டையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம்! பெரும்பான்மைவாதம் மட்டுமே செயல்பட்டால் அது பாசிசம்! எதேச்சதிகாரம்! சர்வாதிகாரம்! அது ஒரு சுயநலம்! இயேசு இதனைத்தான் எதிர்த்தார்! பெரும்பான்மைவாதம் என்ற சுயநலவாதம் மிகக் கொடுமையானது! இதைத்தான் அண்மைக்கால கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்களுக்கெதிரான வன்முறைகளும், வகுப்புவாதமும் எண்பிக்கின்றன!

அரசியல் பங்கேற்பு அவசியம்
நாமும் இயேசு எண்பித்தது போல இவ்வுலகில் யாருக்கும் அடிமையில்லை என்பதை எண்பிக்க வேண்டும்! இயேசு எப்படி அவர்களிடமே நாணயத்தை வாங்கி, அவர்களுக்கே பாடம் கற்பித்தாரோ அதுபோல் நாமும் நம்மை அடக்கிய ஆள நினைக்கும் இந்த சமய-அரசியல் சக்திகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றால் அரசியல் பங்கேற்புதான் தீர்வாக அமைய முடியும். அதற்கான தொடக்கமாகத்தான், நம்மையெல்லாம் ஒருங்கிணைக்க தமிழக ஆயர் பேரவை ‘கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கத்தை’ தொடங்கியுள்ளது. ஆகையால் இதில் கருத்துவேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் இரண்டறக் கலப்பது காலத்தின் கட்டாயம்! திருச்சபையோடு சிந்திக்காதவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்களாகத்தான் இருக்க முடியும்! அணி திரட்டும் முயற்சி மிக விரைவாக நடைபெற வேண்டும்! விழித்தெழாவிட்டால் பிழைத்துக்கொள்வது மிகக்கடினம்! பொதுநிலையினரே! உங்களுடைய பங்களிப்பும், பங்கேற்பும்தான் தமிழகத் திருச்சபையை வலுப்படுத்தும்! ஒரு பீட்டர் அல்போன்சை போல எம் எல்ஏஆகவும், ஒரு அடைக்கலராஜ் போல எம்பியாகவும் ஆகாவிட்டாலும், வார்டு உறுப்பினர், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்... என உள்ளாட்சி அமைப்புகளில் ‘சீசருக்குரியதை சீசருக்கு’ செலுத்தி கிறிஸ்தவர்களாகிய நாம் அரசியல் செல்வாக்குப் பெற வேண்டும்! கடவுள் சைரஸ் அரசனைப் பயன்படுத்தியது போல நம்மையும் அவரது திருவுளத்திற்கேற்ப பயன்படுத்துவார்! இறைவனின் திட்டங்கள் உன்னதமானவை!

பொதுநிலையினரின் பாதுகாவலரான புனித தாமஸ் மூர், கடவுளுக்கு முதன்மையான பணியாளராகவும், அரசில் சிறந்த அதிகாரியாகவும் பணியாற்றினார். சிசருக்குரியதை சீசருக்கும் (அரசியல்), கடவுளுக்குரியதை கடவுளுக்கும் (சமயம்) செலுத்தி, சிறந்த தொண்டாற்றினார். அவருடைய அரசியல் பங்கேற்பு, கிறிஸ்தவத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகும்! எட்டாம ஹென்றி அரசனை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார்: கடவுளை அன்பு செய்ய வேண்டிய நேரத்தில் அன்பு செய்தார். விசுவாசமும், பொதுவாழ்வில் தூய்மையும் கிறிஸ்தவருக்கு கேடயங்கள் என்பதை எண்பித்தார். அரசியல் கிறிஸ்தவ சிந்தனைக்கும் போதனைக்கும் அப்பாற்பட்டதல்ல! ‘ஆன்மீகம்’ மட்டுமே போதும் என்றிருந்தால், நாம் இழப்பதுதான் அதிகமாக இருக்கும்! ‘அரசியல்’ மட்டுமே போதும் என்றிருந்தால், ‘சேர்ப்பதுதான்’ அதிகமாக இருக்கும்! இரண்டுமே நம் கண்களாக வேண்டும்! கிறிஸ்தவ துலாக்கோலின் இரண்டு தட்டுகள்! மார்த்தாவைப் போல .. மரியாளைப் போல.. இருவருமே இயேசுவின் நண்பர்கள்தான்! நல்ல பங்கைத் தேர்ந்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கரங்களில்தான் இருக்கிறது!

நாம் ஒவ்வொருவருமே இரட்டை குடியுரிமைப் பெற்றவர்கள்! எப்படியெனில், இந்நாட்டின் குடிமகன் (ள்) என்ற மண்ணக உரிமையும், இறைவனின் திருமகன்(ள்) என்ற விண்ணகக் குடியுரிமையும் நம் ஒவ்வொருவரிடத்திலும் உண்டு! எப்படி, சீசரின் திருவுருவம் உள்ளதோ, அப்படியே நாமும் இறைவனின் சாயல் (உருவத்தை) தாங்கி நிற்கிறோம்! இறைவனின் பாவனை நம் ஒவ்வொருவரிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. சீசருக்கு வரிவசூலிப்பவர்களைப் போல, விண்ணுலகிற்கு, இயேசுவே நம்மிடமிருந்து வரிவசூலிப்பவர்! ஆகையால் நான் கவனமுடன் இவ்வுலகில் வாழ வேண்டும்! அரசியலை வென்றெடுக்காத சமூகம் அடிமைச் சமூகமே! சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் வன்முறைவாதமே! அரசியலும், ஆன்மீகவும் சரிசமமாக கலந்திட்டால் சமத்துவம் தன்னில் மலரும்! சமுதாயம் மறுமலர்ச்சிக் காணும்!

“நாட்டு அரசியல் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அழைத்தலைக் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர்வைத் தங்களிடத்தில் வளர்த்துக்கொண்டு, பொது நலனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் எடுத்துகாட்டாக விளங்க கடமைப்பட்டிருக்கிறார்கள். ... கடினமானதும் ஆனால் அதே வேளையில் மிக்க மாண்புடைத்ததுமான அரசியல் கலையில் ஈடுபட ஆற்றலுள்ளவர்கள் அல்லது அவ்வாறு ஈடுபடும் ஆற்றலைப் பெறக் கூடுமானவர்கள் அதற்காகத் தங்களைத் தயாரித்திட வேண்டும். தங்களது சொந்த நலனையோ பொருளாதார ஆதாயத்தையோ தேடாமல், இவர்கள் அரசியலில் ஆர்வத்தோடு ஈடுபட முனைய வேண்டும். மேலும், இவர்கள் அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராகவம், தனியொருவருடைய அல்லது அரசியல் கட்சியனுடைய சர்வாதிகாரப் போக்கு மற்றும் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும், நேர்மையான நடத்தையால், முன்மதியோடு போராட வேண்டும். கபடின்றி, நடுநிலை நேர்மையோடு, ஏன் அரசியல் வாழ்வுக்குரிய அன்போடும் துணிச்சலோடும் அனைவருடைய நலனுக்காகவும் தங்களையே அர்ப்பணிக்க வேண்டும். (இன்றைய உலகில் திருச்சபை – எண்-75)