இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு

கர்ணம் பாய்பவர்களின் கவனத்திற்கு

எசா 25:6-10
பிலி 4:12-14
இ,19,20 மத் 22:1-10

வேர்களைக் கவனியுங்கள்!
சீனாவின் சிற்பி மாசேதுங்! அவருக்கு பனிரெண்டு வயது இருக்கும்! அவருடைய தந்தை இறந்ததால் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த கால கட்டம் அது! அப்போது, ரோஜாப்பூ பிரியரான அவருடைய தாய் ரோஜா பூந்தோட்டம் வைத்து, அழகாக பராமரித்து வந்தார். ஆனால் தீடீரென்று, அவருடைய சகோதரிக்கு உடல்நலமில்லை என்று செய்தி வந்ததால், இன்னொரு ஊருக்கு புறப்பட நேர்ந்தது.. ஆகையால், தன் மகன் மாசேதுங்கிடம் ரோஜா பூந்தோட்டத்தை, தாம் திரும்பி வரும்வரை பத்திரமாக பராமரிக்கும்படி வேண்டினார். அவரும், ‘அம்மா கொஞ்ச நாட்களுக்குத்தானே! கவலைப்படாமல் போய் வாருங்கள்! நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் பவ்யமாக!

மாவோவின் தாயார் தன் தங்கையின் ஊருக்கு கொஞ்சம் தயக்கத்தோடுதான் புறப்பட்டார். மாசேதுங் பொறுப்புமிக்க பையனாக காலை முதல் மாலைவரை, ரோஜாத் தோட்டத்தை அக்கறையுடன் பராமரித்தார். ஆனாலும் அவருக்கு ஒரே மன வருத்தம்! ரோஜா செடிகள் எல்லாம் ஒவ்வொன்றாக பட்டுப்போகத் தொடங்கின. அவர் தாயார் திரும்பி வந்தபோது, தோட்டத்தில் மருந்துக்குகூட ஒரு ரோஜாப்பூவும் இல்லை.

மாசேதுங்கோ, தன் தாயிடம். ‘அம்மா! நான் காலையிலிருந்து மாலை வரை தோட்டத்திலேயே இருந்து வேலை செய்தேன். அப்படியிருந்தும் இப்படி ஆகிவிட்டது’ என்று அழுதுகொண்டே சொன்னார். அவர் தாயார், ;இப்படியாகும் என்று எனக்குத் தெரியும். நீ தோட்டத்தில் ‘வேலை செய்துக்கொண்டிருக்கிற போதே உனக்குத் தெரியாமல், நீ என்ன செய்கிறாய் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ ஒவ்வொரு பூவையும் தண்ணீர் விட்டு கழுவிக்கொண்டிருக்கிறாய். பிரஷ்ஷால் அழுக்கை எடுத்துக்கொண்டிருந்தாய். அதனாலேயே பூக்கள் உதிர்ந்துக்கொண்டிருந்தன. ரோஜா செடிகளின் வேர்களுக்கு நீ தண்ணீர் ஊற்றிருக்க வேண்டும். நீ அதைச் செய்யவில்லை. நீ வேருக்கு தண்ணீர் ஊற்றிருந்தால், வேர்கள் மலர்களைப் பார்த்துக்கொள்ளும். உனக்கு வேர்களைப் பற்றித் தெரியவில்லை. பரவாயில்லை. நீ கவலைப்படாதே!

‘இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்கள். அவர்கள் பூக்களைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். வேர்களை கவனிப்பதில்லை. பூக்களை உண்டாக்குவதும் காப்பதும் வேரின் வேலை. நாம் வேரை கவனித்துக்கொண்டால் போதும். வேர் பூவைக் கவனித்துக் கொள்ளும்’ என்றார்.

உண்மைதானே! இன்று உலகில் பலர் வேராக துலங்கும் கடவுளைப் பற்றி கவலைப்படுவதில்லை: இவ்வுலக ஆசா பாசங்கள் என்னும் பூக்களைப் பற்றியே கவலைப்படுகிறார்கள்! வேர்களை மறந்த கிளைகளாக, வேர்களை மறந்த இலைகளாக, வேர்களை மறந்த பூக்களாக, வேர்களை மறந்த காய்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். நாத்திகம் ஆத்திகத்தைக் கொல்கிறது. இறைவன் விருந்திற்கு அழைக்கிறார்! அதுவும் தேர்ந்தெடுத்து அழைக்கிறார்! ஆனால் அவரைப் பற்றி கவலைப்படுபவர்கள் மிகவும் குறைவு! எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: எதற்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்படுத்த வேண்டும்? என்று சிந்தித்து செயல்படாமல், அநேகம்பேர் அழைப்பை புறக்கணிக்கிறார்கள் தண்டணைக்குள்ளாகிறார்கள்! வாழ்க்கையில் மூன்றே மூன்று திரும்ப கிடைக்கவே கிடைக்காது. முதலாவதாக, கடந்துவிட்ட நிமிடம், இரண்டாவதாக, வாய்தவறிய சொல், மூன்றாவதாக, நழுவவிட்ட வாய்ப்பு ..இம்மூன்றும் நாம் தலைகீழாக நின்றாலும், இவை நம் வாழ்வில் திரும்ப கிடைக்கவே கிடைக்காது! ஆகையால், நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இம்மூன்றையும் கையாள வேண்டும்! வேர்களா? பூக்களா? என்றால்.. வேர்களை மட்டுமே நம் கவனிக்க வேண்டும்! வேர்களை ஒழுங்காக கவனித்தாலே பூக்கள் தானாக பூத்திடுமன்றோ?! இன்றைய நற்செய்தி நமக்குப் பாடம்!

மூன்று வகை கர்ணம்!
பொதுவாகவே, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ‘கர்ணம்’ பாய்கிறவர்கள்தான் மிகவும் அதிகம்! சென்னை வட்டார வழக்கில் ‘தபாய்க்கிறது’ என்பதுண்டு! திருச்சி வட்டார வழக்கில், ‘பல்டி’ அடிக்கிறது என்று சொல்வதுண்டு! மனிதர்களுடைய குணத்தை வைத்து, இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்!
முதல் வகை மனிதர்கள் கஜ கர்ணம் போடுவர்கள். கஜம் என்றால் யானை. யானை எப்போதும் தன்னுடைய நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. ஒன்றை மாற்றி ஒன்றாக தூக்கித் தூக்கி வைத்து அசைந்துக்கொண்டே இருக்கும். இப்படியும் சில மனிதர்கள் உண்டு! இவர்களெல்லாம் ஒரு விஷயத்தில் தங்களுடைய கருத்தைச் செலுத்தாமலே, பல விஷயங்களில் ஈடுபட்டு குழப்புவார்கள். யானை மாதிரி எந்த ஒரு விஷயத்திலேயும் உறுதியாக இருக்க மாட்டார்கள்!

இவர்களெல்லாம் கஜகர்ணம் போடுபவர்கள்!
இரண்டாவதாக, அஜ கர்ணம் போடுபவர்கள்! அஜம் என்றால் ஆடு. ஆட்டு வாலைப் பிடித்து யாராவது இழுத்தால் அல்லது தூக்கினால் ஆடு உடனே தன் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும். ஆடு வைத்திருக்கிறவர்கள் இதனை சோதனை முயற்சியாக செய்துப் பார்க்கலாம்!
இப்படியே சில மனிதர்கள் உண்டு! ‘இந்த மாதிரி கோபப்படுறீங்க! இல்லாது பொல்லாததெல்லாம் என்னைப் பற்றி சொல்றீங்க! அநாவசியமா செலவு பண்றீங்க!’ என்று குறைகளைச் சுட்டிக்காட்டினால்,அடுத்த நிமிடமே நம்மை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். நம்மை திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்! ஆடு மாதிரி தலையைக் கவிழ்த்துக்கொண்டே சென்றுவிடுவார்கள்! இவர்களெல்லாம் அஜகர்ணம் போடுபவர்கள்!
மூன்றாவது வகை மனிதர்கள், கோ கர்ணம் போடுபவர்கள்! கோ என்றால் மாடு. மாட்டு உடம்பிலே எந்த இடத்தில விரலால தொட்டாலும், அந்த இடம் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு சிலிர்க்கும்! அதுமாதிரி அறிவாளிகள் நடந்துக்கொள்வார்கள்! எந்த குறையைச் சுட்டிக்காட்டினாலும், அதைப் புரிந்துக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு திருந்துவார்கள்! பழிவாங்க துடிக்க மாட்டார்கள்! இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பெயரைக் கெடுக்கமாட்டார்கள்! மாற்று வாழ்க்கை வாழ முயல்வார்கள்! இவர்களெல்லாம் கோகர்ணம் போடுபவர்கள்!

நற்செய்தியில் கர்ணம் பாய்ந்தவர்கள்!
இன்றைய நற்செய்தியிலே கர்ணம் பாய்ந்தவர்கள் உண்டு! ஒர் அரசர் திருமண விருந்திற்கு மனமுவந்து அழைக்கிறார். யூத முறைப்படி, நாள் நேரம் எதுவும் அறுதியிட்டுச் சொல்லாமல்,த pருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குறையற செய்துவிட்டு, பிறகுதான் விருந்துக்கு அழைக்கிறார். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும், அடித்து சமையல் செய்து தயாராய் வைத்துக்கொண்டு, ‘வாருங்கள்! ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்! என்று தாரளமாய் அழைக்கிறார். ஆனால் மத்தேயு நற்செய்திப்படி, அழைக்கப்பெற்றவர்களில், ஒருவன் வயலுக்குப் போவதும், வேறு ஒருவர் கடைக்குப் போவதும் அழைப்பை உதாசீனப்படுத்துவதை அப்பட்டமாக காட்டுகிறது. லூக்கா நற்செய்தியில், ‘நான் ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன்: அவற்றை ஓட்டிப் பார்க்கப் போகிறேன் என்று விளையாட்டுப் பிள்ளைத்தனமாக ஒருவர் அதில் சொல்கிறார். இன்னொருவர், ‘எனக்கு இப்போதூன் திருமணம் ஆயிற்று: ஆகையால் என்னால் வர முடியாது’ என்று நொண்டிச் சாக்கு சொல்கிறார். இவர்களெல்லாம் கஜகர்ணம் போட முயல்பவர்கள்! ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தாமல் பலவற்றிலும் கவனம் செலுத்தி, முடிவில் ஒன்றையுமே செய்யாமல் வாழ்க்கையை வீணடிப்பவர்கள்!. வேர்களைக் கவனியாமல் பூக்களைக் கழுவுபவர்கள்! இதில் வலுவான, நியாயமான காரணம் இருப்பதாக தோன்றவில்லை. எல்லாமே நொண்டிச் சாக்கு! இவர்கள் கஜகர்ணம் போடுபவர்கள்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் திருமண ஆடையின்றி நுழைந்தவனைப் பற்றிப் பார்க்கிறோம்! ‘தோழா! திருமண ஆடையின்றி நீ எவ்வாறு உள்ளே நுழைந்தாய்? என்ற அரசன் கேட்டவுடனே அவன் வாயடைத்து நிற்பதை நற்செய்தி விளக்குகிறது. குறையைச் சொன்னவுடனே, தலையைத் தொங்கப்போட்ட ஆட்டைப் போல! இவன் கஜகர்ணம் போடுகிறவன். மன்னனின் திருமண விருந்திற்கு முதலில் முறைப்படி அழைக்கப்படாமல், ஆனால் மன்னர் அழைத்திருக்கிறார் என்று அறிந்து, தங்கள் குறைகளையெல்லாம் சரிசெய்துக்கொண்டு, உரிய திருமண ஆடையோடு, பந்திக்கு வந்த சாலையோரவாழ் மக்கள்! இவர்கள் கோகர்ணம் போடுபவர்கள்! எந்நேரமும் இறையழைத்தலுக்குச் செவிசாய்த்து செயல்பட தயராக இருக்க கூடிய தாரளமனத்தினர்!

இறைவன் அழைக்கிறார்!
இறைவன் நம்மையும் அழைக்கிறார்! பெயர் சொல்லி அழைக்கிறார்! இது மாபெரும் கொடை! ஆகையால் பூக்களைக் கழுவுவதை விட்டு விட்டு, வேர்களைத் தேடி விரைவோம்! இறைவனில் மையம் கொண்டால், நிச்சயம் நாம் பற்பல மடங்கு பலன் தருவோம்! திருச்சபை இயேசு நிறுவிய தலைமை திருவருட்சாதனம்! இதில் பங்கேற்க இருகரம் விரித்து ஆவலாய் அனைவரையும் அழைக்கிறார்.
மணமகனின் திருவிருந்து, அன்றாடம் நிறைவேற்றப்படும் திருப்பலி! தேவாலயத்திலிருந்து எழும்பும் மணியோசை, இறைவனின் அழைப்பாகும்! முதல்மணி ஒவ்வொருவரும் தயாரயிருக்க, இரண்டாவது மணி இறைவனின் இல்லத்தை நோக்கி புறப்பட, மூன்றாவது மணி அனைவரும் ஒன்றுகூடி ஒப்புரவாகிட, தட்டுமணி குருவானவரை வரவேற்று திருப்பலியில் பங்கேற்க! இது இறைவனின் இயல்பான அழைப்பு! நாம் திருப்பலிக்கு முறைப்படி செல்கிறோமா?!
இத்திருப்பலியில் பங்கேற்க, நீதி;ச்செயல்கள் என்னும் திருவுடையை (யோவா 19~7,எபி6~14) அனைவரும் அணிந்து வரவேண்டும்! அரசராகிய இறைவனிடம் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்! ஆகையால் நமக்கு கவனம் தேவை! சாக்குப் போக்குகளுக்கு இங்கே இடமில்லை! அதே போன்று செம்மறியின் திருவிருந்துக்கு அழைக்கப்பெற்ற நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள்தான் (திவெ19~7-9), ஆகையால் அதற்கேற்ப நாம் வாழ வேண்டும்! ‘யாரேனும் தாகமாயிருந்தால், என்னிடம் வரட்டும்: என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் பருகட்டும்’ (யோவான் 7~37) என்று இயேசு அனைவருக்கும் இன,மொழி, ஜாதி பேத வேறுபாடின்றி,அழைப்புக் கொடுக்கிறார். இதுதான் உண்மை! ஆகையால் ஆர்வத்தோடு அவர் அருகில் வருவோம்! நிச்சயம் ஆறுதல் அடைவோம்!

மகிழ்வாக வாழ்ந்திடுவோம்!
திருமணம் என்றாலே கொண்டாட்டம்தான்! திருமண விருந்து மகிழ்ச்சிக்கான அடையாளம்! கிறிஸ்தவத்தின் அடையாளமே மகிழ்ச்சிதான்! கிறிஸ்தவர்கள் என்றாலே மகிழ்ச்சியானவர்கள்! மகிழ்ச்சிக்குரியவர்கள்! வெற்றி வாகைச் சூடவே நாம் இவ்வுலகில் ஓடிக்கொண்டிருக்கிறோம்! (பிலி3~14 2திமொ4~8). பாவிகளாகிய நாம் மனந்திரும்பினால் விண்ணுலகிலே மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15~7, 10). கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவரின் இயேசு கிறிஸ்துவின் வழியாக, நாமும் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம் (உரோ 5~11) எனவேதான் தூய ஆவி மகிழ்ச்சியை கனியாக நமக்குத் தருகிறார் (கலா5~22). இறைவனும் நம்மை மகிழ்ச்சியின் நெய்யால் அருள்பொழிவுச் செய்து, அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தியுள்ளர் (எபி1~9).
இன்றைய முதல்வாசகத்தில் இறைவன் எப்படி துன்பங்களையெல்லாம் அகற்றி நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறார் என்பதை, எசாயா இறைவாக்கினர் விளக்கியுள்ளார். எனவேதான், புனித பவுலடியார், இன்றைய இரண்டாம் வாசகத்திலே வறுமையிலும், வளமையிலும், நிறையிலும்-குறையிலும், வாழ துணிந்திருக்கிறார். புனித பவுல் சாலையோரத்தில் (திப 9) அழைக்கப்பட்டவர். திருமணவிருந்துக்குரிய உடையோடு நுழைந்து, இயேசுவை அனுபவித்து, வாழ்வாக்கியவர். ஆகையால் நாமும், கர்ணம் பாயாமல், வாய்ப்புக்களை தவறவிடாமல், இயேசுவின் அழைப்பிற்கு செவிசாய்த்து, வேரிலே கவனம் செலுத்தி, நற்செய்திப் பூக்களை பூக்கச் செய்து, இறையரசு-மகிழ்ச்சி என்னும் மணத்தை எங்கும் பரப்புவோம்! புனித பவுலைப் போல வாழ்ந்திடுவோம்!