இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு

நம்பிக்கைத் துரோகம்

எசா 5:1-7 பிலி 4:6-9 மத் 21:33-43

மிகப்பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்தான்! முகத்திற்கு முன்பு முனகுபவர்களைவிட முதுகுக்குப் பின்பு சூழ்ச்சி செய்பவர்கள்தான் இவ்வுலகில் மிக அதிகமாக இருக்கிறார்கள். இன்றைய இறைவார்த்தை நம்பிக்கைத் துரோகம்தனை வேரறுக்கிறவிதத்தை நமக்கு கற்றுத்தருகிறது. இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு சமுதாயத்தில் ‘மோசடி’ என்பது இன்றைய பெயர். அரசியலில் இதற்கு ‘ஊழல்’ என்று பெயர். யார் யாரை ஏமாற்றலாம்? என்றே வழிபார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு சகோதாரர்கள் கூட்டாக சேர்ந்து விவசாயம் செய்தார்கள். இருவரும் பாடுபட்டார்கள். நல்ல மகசூல் கிடைத்தது. ஆனால் அறுவடைக்கு முன்பு அண்ணன் தம்பியிடம், ‘தம்பி! நான் மேல் பகுதியை எடுத்துக்கொள்கிறேன்: நீ கீழ்ப் பகுதியை எடுத்துக்கொள்! அடுத்த முறை பயிர்செய்யும்போது, நான் கீழ்ப்பகுதியை எடுத்துக்கொள்கிறேன். நீ மேல் பகுதியை எடுத்துக்கொள்’ என்றான். தம்பி அப்பாவியாக, ‘ அண்ணா! இந்த முறை நெல் பயிரிட்டோம். அடுத்த முறை என்ன பயிரிடப்போகிறோம்?’ என்றான். ‘முள்ளங்கி’ என்று அண்ணனிடமிருந்து பதில் வந்தது.

இதே போன்றுதான் இரண்டு பேர் மது தயாரிப்பது என்று முடிவுச் செய்தார்கள். ஒருவர் சொன்னார்~ ‘நீ அரிசி கொண்டு வா! நான் தண்ணீர் கொண்டு வருகிறேன்’. இரண்டாமவர் கேட்டார்~ ‘எல்லா அரிசியையும் நானே கொண்டு வந்தால் உருவாகிற இறுதிப் பொருளை எப்படிப் பகிர்ந்துக்கொள்வோம்?’. முதலாமவர் சொன்னார்’ நான் எப்போதுமே போட்ட ஒப்பந்தங்களை நேர்மையாக கடைப்பிடிப்பவன்: பொருள் தயாரானதும், யார் எதைக் கொண்டு வந்தோமோ, அதைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். நான் தண்ணீர் கொண்டு வந்ததினால், திரவத்தை எடுத்துக் கொள்கிறேன். நீ, மீதியிருப்பவற்றை எடுத்துக்கொள்ளலாம்’ . என்றார். இது எப்படியிருக்கிறது? இதுதான் இன்றைய எதார்த்தம். சுயநலம், பேராசை, ‘தான்’தோன்றித்தனம், பொறாமை... என காரண காரியங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இறைவன்போட்ட ஒப்பந்தமே எல்லை மீறப்படுகிறபோது, மனிதர்களாகிய நாம் போடும் ஒப்பந்தங்கள் எம்மாத்திரம்?. ‘உடன்படிக்கை’ என்பது இருவர் மனமொருமித்து செயல்படுத்துவதுதான். இந்த ‘கூட்டுத்தத்துவம்’ நிலைக் குலைந்தால், உடன்படிக்கையே உருக்குலைந்துப் போகும். இப்படி ஏமாற்றுபவர்களைப் பித்தலாட்டக்காரர்கள் என்று சொல்வதுண்டு. ( பித்தளை என்பது பாத்திரங்கள் செய்யப் பயன்படும் விலை குறைந்த உலோகம். தங்கமோ அணிகள் செய்யப் பயன்படும் விலை உயர்ந்த உலோகம்! தங்கத்திற்கு தமிழிலே ‘ஆடகம் என்று பெயர். சித்தர்கள் பித்தளையை ஆடகமாக்கும் ரசவாதம் செய்வதுண்டு. இதுவும் ஒருவகையில் ஏமாற்றுவேலைதான். இதனையே பித்தளை–ஆடகக்காரன் என்பதுதான் மருவி, நாளடைவில் பித்தலாட்டக்காரன் என்றானது.) இன்றைய உலகில் பித்தலாட்டக்காரர்கள்(பித்தல் ஆடகக்காரர்கள்) மிக அதிகம்! போட்ட ஒப்பந்தத்தை மீறுபவர்கள் பலருண்டு. ‘ தங்க கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குவர்கள் மிக அதிகம்! எச்சரிக்கையாக இருங்கள்! ஆபத்துகள் மிக அதிகம்!

நற்செய்தியின் பின்னனி
இவ்வாரத்திலிருந்து பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு வரை வரக்கூடிய நற்செய்தி வாசகங்கள் ஆண்டவருடைய பாடுகளுக்கு முன்பாக, புனித வாரத்தில், அதாவது அவருடைய சாவின் விளிம்பில் போதித்தவையாகும். குருத்து ‘ஞாயிறு’ அன்று எருசலேமில் அடியெடுத்து வைத்த ஆண்டவர், அதற்குப் பிறகு, குறிப்பாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எருசலேம் ஆலயத்தில் போதித்தார்: மாலை வேலைகளில் பெத்தானியா சென்று தம் நண்பர்களான லாசர்-மரியா-மார்த்தா வீட்டில் இளைப்பாறியிருக்கலாம். இத்தருணத்தில் ஆண்டவர் இயேசு யூத மத தலைவர்களோடும், பரிசேயர்கள்,சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்களோடும், தோராவின் அடிப்படையில் விவாதித்து, அவர்களை மீட்க இறுதிகட்டத்தில் கடுமையாக முயலுகிறார்: போராடுகிறார். இதுவே அவரது இறுதிகட்ட முயற்சி. இந்த பிரயத்தனம் வெற்றிப்பெற்றாலும் பெறலாம்: அல்லது அவருக்கெதிராகவே ‘பூமராங்’காக திரும்பலாம். இந்நிலையில் ‘ இருபுதல்வர்கள் உவமை, கொடிய குத்தகைக்;காரர் உவமை, (இன்றைய நற்செய்தி),திருமண விருந்து உவமை’ என சொல்லிப் பார்க்கிறார். இங்கே ஆண்டவருடைய மனோதைரியம் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த பின்னனியோடு இன்றைய நற்செய்தியைப் புரிந்துக் கொள்வோம்.

உள்ள வேறுபாடு
இறைவாக்கினர் எசாயாவின் நற்செய்தியில் இடம்பெற்றுள்ள திராட்சைத் தோட்டத்திற்கும், நற்செய்தியில் இடம்பெற்றுள்ள திராட்சைத் தோட்டத்திற்கும் கூர்ந்து நோக்கும்போது வேறுபாடு இருக்கிறது. எசாயாவின் உவமையில், திராட்சைத் தோட்டமே பலன் தராமல் போகிறது. ஒட்டுமொத்த இஸ்ராயேல் இனமே ஆண்டவருக்கெதிராக இருக்கிறது. அங்கே திராட்சைத் தோட்டம் யாரிடம் குத்தகைக்கு ஒப்படைக்கப்படவில்லை. ஆனால் நற்செய்தியில் இடம் பெறும் திராட்சைத் தோட்ட உவமையில், திராட்சைத் தோட்டம் குத்தகைக்கு விடப்படுகிறது: நன்கு விளைகிறது: நல்ல பலனைத் தருகிறது. ஆனால் குத்தகைக்காரர்கள் கொடியவர்களாக மோசடியில் ஈடுபடுகிறார்கள். நம்பிக்கைத் துரோகமிழைக்கிறார்கள்: ரவுடிகளாக மாறுகிறார்கள்: இறுதியில் கொலைக்காரர்களாககூட மாறத் தயங்கவில்லை. முதல்வாசக உவமை, கொடிய திராட்சைத்தோட்ட உவமை எனக் கொண்டால், நற்செய்தி உவமை, கொடிய குத்தகைக்காரர்கள் உவமையாம்.

உவமை விளம்பும் பாடங்கள்!
திராட்சைத் தோட்டத்தின் ஒட்டுமொத்த உரிமையாளர் இறைவன்தாமே (எசா5~1). கட்டியெழுப்பப்பட்ட சுற்றுச் சுவர் என்பது இஸ்ராயேலரை சிலைவழிபாடுகளைச் செய்யும் புறவினத்து நாடுகளிலிருந்து பாதுகாக்க கோட்டையாக எழுப்பப்பட்ட சிறப்பான பாதுகாப்பு அரண். பாறைகளைக் குடைந்து கட்டியெழுப்பப்பட்ட ‘பிழிவு ஆலை’ என்பது எருசலேமை மையப்படுத்திய ஆலய வழிபாடுகளும், திருச்சடங்குகளும் ஆகும். உயரமாக செம்மாந்து நிற்கும் ‘கண்காணிப்பு கோபுரம’, ஆண்டவர் தம் மக்களுக்கு கோட்டையாக அரணாக இருந்து விழித்து பாதுகாப்பதைக் குறிக்கிறது. பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் தொடக்கமாக, கடைப்பிடிக்க கட்டளைகளைப் பெற்றுக்கொடுத்த மோசே வழியாக பொறுப்பு செயல்படுத்தப்படுகிறது. நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள்... என ஆண்டவருடையபிரதிநிதிகள் முன்வருகிறார்கள். ஆனால் அனைவருமே அவமானப்படுத்தப்படுகிறார்கள். ‘எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையம் அவர்கள் கொலைச் செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்’ என்று கல்லால் எறிந்து கொல்லப்படுவதற்கு முன்பாக, புனித முடியப்பர் (ஸ்தேவான்) கேட்பது குறிப்பிடத்தக்கது (திப. 7:52).

முதலாவதாக, இறைவனின் பேரன்பு~ இறைவன் தாய்க்கும் மேலாக, இஸ்ராயேலை கண்ணனின் கருவிழி போல மிகவும் அன்புச் செய்தார். அடிமை விலங்கொடித்து, அன்புசாசனம் செய்து, பக்குவமாக பாதைக் காட்டிட சட்ட திட்டங்களை வகுத்தளித்து, வாக்களிக்கப்பட்ட நிலத்தை செழுமைப்படுத்தி, நல்ல திராட்சைக்கன்றுகளை நட்டு, உரமிட்டு, களையெடுத்து, காலத்தே கனி கொடுக்க கிளைகளை தறித்து, (யோவான் 15~1-2), கோபுரம், மதிற்சுவர், ஆலை என அத்தனையும் அமைத்து, காத்திருக்கிற தேவனாக, தம் அன்பை முழுமையாக வெளிப்படுத்துகிறார்: பாதுகாக்கிறார்: பராமரிக்கிறார்: கண்காணிக்கிறார். பலன் தரும் என பொறுமையாக காத்திருக்கிறார். இவையெல்லாம் முதல்வாசகம் விளம்பும் கற்பிதங்கள்.

இரண்டாம் வாசகத்தில் ஆண்டவருடைய அளவில்லாத மாபெரும் பொறுமை பாராட்டப்பட வேண்டும். குத்தகைக்காரர்கள், ஆண்டவருடைய (முதலாளியுடைய) பணியாளர்களை அவமானப்படுத்துகிறார்கள்: நையப் புடைக்கிறார்கள்: ஒருகட்டத்தில் பேராசையினால் கொலைஞர்களாகிறார்கள். சொத்தை அபகரிக்க, ‘சொத்துக்குரியவனை’ அவர் தம் ஒரே மகனையும் இல்லாதொழிக்கிறார்கள். இங்கேயும் ஆண்டவர் தம் ஒரே மகனை அளிக்கும் அளவுக்கு அன்பு கூர்வது குறிப்பிடத்தக்கது. எல்லாமே எல்லை மீறும்போதுதான் அழித்தொழிக்க ஆவண செய்கிறார். ஆனாலும்கூட இறைவன் மனிதர் மீது கொண்டிருக்கிற அன்பு ஒரு போதும் மாறாது என்பதை, அவர் மீண்டும் ‘தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்ட தொழிலாளர்களுக்கு திராட்சைத் தோட்டத்தை கொடுக்க முன்வருவது’ குறித்துக்காட்டுகிறது. நம்மை நம்புகிறார். ஆகையால் நாம் கடவுளின் அன்பிற்குரியவர்களாக இருக்க முற்படவேண்டும் என்பது நம் படைப்பின் நோக்கமாக அமைகிறது.

இரண்டவதாக மனிதனின் குறையுள்ள பதிலன்பு~ மனித சுதந்திரம் மாண்புடன்போற்றப்படுகிறது. நல்ல இன திராட்சைக் கொடி என்று ஒவ்வொருவருமே சிறப்பானவர்களாக, அதிசிறந்தவர்களாக இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொருமே உன்னத இறைவனின் ஒப்புயவர்வற்ற சாயலில், பாவனையி;ல் உருவாக்கப்பட்டிருக்கிறோம்! நமக்கு அளவில்லாத சுதந்திரத்தை வாரி வழங்கி கௌரவப்படுத்திருக்கிறார். பலன் தருவதும் பலன் தராமல் சோடைப் போவதும் எல்லாமே நம் கையில் இருக்கிறது. அவ்வவ்போது வருகின்ற துன்பங்கள் வழியாக, கிளைகளைத் தறிப்பதன் வழியாக, இறைவன் நம்மைப் பக்குவப்படுத்துகிறார்- நாம் நிறைவாக பலன் தரவேண்டும் என்பதற்காக. குத்தகைக்காரர்களுக்கு சுதந்திரம் தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட உலக காரியங்கள் ஈர்க்கிற போது, பேராசைப் பிடிக்கிறபோது, இறைவனையே மறந்து போகிறோம்: சக மனிதரையும் சாகடிக்க துணிகிறோம்! பேராசையில் இறைவனே இல்லாதொழிக்க முற்படுகிறோம்.

மானுட துரோகத்திற்கு நல்ல உதாரணம். ஃபிரடெரிக் நீட்சே, தன்னுடைய நூலில் ‘புத்தி சுவாதீனமற்றவன்’ பற்றி குறிப்பிடுகிறார். அவன், ‘நல்ல வெளிச்சமான பகல்பொழுதில் விளக்கையேற்றிக்கொண்டு சந்தைப்பகுதிக்குச் சென்று, தொடர்ந்து கூக்குரலிட்டான். ‘நான் கடவுளைத் தேடுகிறேன்: நான் கடவுளைத் தேடுகிறேன்’. அங்கே கடவுளை மறுதலித்தவர்கள் பலர் நின்றிருந்தனர். தேடுகிறாயே! நீ எங்கே அவரைத் தொலைத்தாய்?’ என்றான் ஒருவன். அவர் என்ன குழந்தையைப் போல் வழியைத் தொலைத்தவிட்டாரா?’ என்றான் இன்னொருவன். ‘அவர் எங்களிடம் பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறாரா?’ ‘அவர் என்ன யாத்திரைச் சென்றிருக்கிறாரா?, ‘வெளிநாட்டிற்குக் குடிப்பெயர்ந்துவிட்டாரா?. அந்த புத்திசுவாதினமற்றவன், குதித்தெழுந்து, அவர்களை ஊடுருவிப் பார்த்தான். ‘எனக்குத் தெரியும் - கடவுள் எங்கென்று. நாம் தான் அவரைக் கொன்று விட்டோம். நீங்களும் நான்-தான். நாம்தான் கொலைக்காரர்கள். ஆனால் எப்படி இது சாத்தியமாயிற்று? எப்படிக் கடலை நம்மால் குடிக்க முடிந்தது? எப்படி கடற்பஞ்சால் முழு மண்டலத்தையும் அழித்துவிட்டோம்? நாம் பூமிக்கும் சூரியனுக்குமிருந்த சங்கிலிப் பிணைப்பைத் துண்டித்துவிட்டோம். நாம் தொடர்ந்து அதால பாதாளத்தில் விழுந்து கொண்டேயிருக்கிறோம். நாம் தொடர்ந்து கடவுளைப் புதைப்பதற்காக குழி தோண்டுபவர்களுடைய கைகளில் மண்வெட்டி ஓசைகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறோம். கடவுள் அழுகிக்கொண்டிருப்பதை நம்மால் நுகர முடியவில்லையா? கடவுள் இறந்து விட்டார். கடவுள் இறந்தே நீடிக்கிறார். கொலைக்காரர்களான நாம் எப்படி ஆறுதலடைவது? நாம் எந்த தண்ணீரால் சுத்திகரிக்கப் போகிறோம்? ... என்று நீட்சே எழுதுகிறார். கடவுளைக் கொல்வது என்பது நாம் செய்யும் நம்பிக்கைத் துரோகம்! (இன்றைய நற்செய்தி).

நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.கடவுளுக்குரியதை கடவுளுக்கும் செசாருக்குரியதை செசாருக்கும் செலுத்த வேண்டும். எதை மாற்றிச் செய்தாலும் தவறு தவறுதான். எனவே ஒருபோதும் நம்பிக்கைத் துரோகத்திற்கு இரையாகாதீர்கள். நாம் நம் திருமுழுக்கின் வழியாக கடவுளோடு உடன்படிக்கைச் செய்திருக்கிறோம். படைத்தவருக்கு பலன் தர வேண்டியது நம் கடமையாகிறது. கடமை தவறுகிற போது தண்டனை என்பது உறுதி. ஆகையால் நாம் நல்வழி நடக்க முயலுவோம். ‘உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்தி (பிலி. 4:8) உடன்படிக்கையின் மக்களாக இருப்போம்! கனவிலும் கடவுளுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்காதிருப்போம்! இறைவன் நம்மை நம்புகிறார்: நாம் அந்த நம்பிக்கைக்குரிய மக்களாக இருப்போம்!