இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு

நல்ல பொய்யன்

எசே 18:25-28 பிலி 2:1-11 மத் 21:28-32

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலா சொல் குறள் 200

கோயபல்ஸ்
பொய் பேசுபவர்களை ‘கோயபல்ஸ்’ என்று அழைப்பது உலக வழக்கம்! யார் இந்த கோயபெல்ஸ்? உலகப் போரின்போது ஹிட்லரின் பிரசார பீரங்கியாக செயல்பட்டவர்தான் ‘கோயபல்ஸ்’. 1897–ல் பிறந்த இவர், எட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயின்றவர். தத்துவத்தில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லரின் அமைச்சரவையில் பிரச்சார மந்திரியானார். உலகப் போரின் போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயரை உலகம் முழுதும் பரவச் செய்தார். போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்த போதும் அவர் வெற்றிப் பெற்று வருவதாக பொய்ப் பிரச்சாரம் செய்தார். இப்படி இவர் செய்த காரணத்தினாலேயே பொய் சொல்பவர்களை ‘கோயபல்ஸ்’என்று சொல் வழக்கு உலகில் உண்டாயிற்று! இன்றைய நற்செய்தியிலும், இரண்டு கோயபல்ஸ்களைப் பார்க்கிறோம்!

செய்யாமலிருப்பதை சொல்வதும், செய்வதைச் சொல்லாமலிருப்பதும் பொய்தான்: குற்றம்தான். முதல் மகனும் இரண்டாவது மகனும் பொய்யர்கள்தான். பொய்யர்களில் சிறந்த பொய்யன்யார்? என்று கேட்பதில் அர்த்தமில்லை. எனவேதான் வி;ல்லியம் பார்க்கலே என்ற விவிவிலிய அறிஞர், இதற்குரிய விளக்கப் பகுதியில், ‘இரண்டு கெட்டவர்களில் ஓரளவுக்கு நல்லவன்’ (The Better of the Two Bad Sons) என்று நக்கலாக தலைப்பைக் கொடுத்திருக்கிறார். இருவருமே கெட்டவர்கள்தான்! இரண்டு கெட்டவர்களில் கொஞ்சம் நல்லவன் யார்? என்பதைத்தான் இயேசு அடையாளப்படுத்துகிறார். கல்வாரியில் இயேசுவோடு அறையப்பட்ட இரண்டு கள்வர்களில் ‘நல்ல கள்வன் யார்? என்பததை நாம் உணர்ந்து கொண்டது போல இன்றைய நற்செய்தியிலிருந்து ‘நல்ல பொய்யன் யார்?’ என்பதை நாம் அடையாளம் காண வேண்டும்.

பொய்களின் வகை!
பொய் என்பது சமதாயத்தில் புரையோடிப் போன கொடிய நோய்! நம் தமிழக அரசின் முத்திரையில்கூட ‘சத்திய மேவ ஜெயதே’ – வாய்மையே வெல்லும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நிர்வாகத்தின் எல்லா நிலையிலும், பொய்மை வேரறுக்கப்பட வேண்டும் என்பது மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது. பொதுவாக பொய்யை ஆறுவகையாக பகுத்துப்பார்க்கலாம்.

முதலாவதாக, முகஸ்துதி. இதுவும் ஒரு வகையான பொய். பெரிய மனிதர்களிடம், அதிகாரங்களைக் கொண்டு அரசியல்வாதிபோல செயல்படுகின்றவர்களிடம், நமக்கு மேலே பொறுப்பில் இருப்பவர்களிடம், காரியம் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர், ‘உங்களைப் போல உண்டா? ஆகா? ஒஹோ’ ன்னு அடுக்கடுக்காக புகழ ஆரம்பிச்சுடுவார்கள்! உதாரணமாக சிலர், சாதாரண குடிமகனை, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும், ரஷ்யாவின் ஸ்டாலினுக்கும் ஒப்பிட்டு பேசுவாங்க. சிலர், ‘நீங்க,வள்ளல் பாரியின் மறு வடிவமுன்னு சொல்லுவாங்க! உடனே அவரும் கையில கிடைச்சதை அள்ளி அள்ளி கொடுப்பார். இதுல உள்ள சைக்காலஜி என்னவெனில். செய்யுறது முகஸ்துதிதான்கிறது கேக்கறவங்களுக்கு தெரியும். இருந்தாலும் மனசுக்கு அதைக் கேக்கறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குறதால கண்டுக்காம விட்டுவிடுவாங்க. இது மனித பலவீனம். முகஸ்துதியும் ஒரு வகை பொய்தான்.

இரண்டாவதாக, தற்புகழ்ச்சி. அதுவும் ஒரு வகையான பொய்தான். அடுத்தவங்களைப் புகழ்வதற்கு ‘முகஸ்துதி’ என்று சொன்னால், ஒருவர் தம்மைத் தாமே புகழ்ந்துக்கொள்வதற்கு தற்புகழ்ச்;சி என்று பெயர். இது ஏன் பொய் என்று சொன்னால், நம்மிடம் உள்ள குறைகளை மறைத்து, நிறைகளை மிகைப்படுத்தி, ஒரு போலி பிம்பத்தை, சமுதாயத்தில்- அடுத்தவரிடத்தில், உருவாக்குகிறோம். இதனால் ஒருவருடைய உண்மையான சாயல் குணம் மறைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, சாக்குப் போக்கு. பல சமயங்களில், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரிவரச் செய்யாமல், கொடுத்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு, அந்த தவறுகளை மறைப்பதற்காக, பொய் சொல்கிறோம். அதற்கு பெயர்தான் ‘ சாக்குப் போக்கு’. இதுவும் ஒருவகையில் பொய்தான்.

நான்காவதாக, வீண்பேச்சு. இதுவும் பொய்யில் ஒரு வகைதான். ஏதோ பொழுது போக வேண்டும் என்பதற்காக, இல்லாததையும், பொல்லாததையும் பேசிக்கொண்டிருப்பார்கள். இதில் உண்மையை விட பொய் கலப்பு மிக அதிகமாக இருக்கும்.

ஐந்தாவதாக, அவதூறு. அடுத்தவங்களைப் புகழைக் கெடுக்கிற விதத்திலும், நிம்மதியைக் குலைக்கிற விதத்திலும் இல்லாததையும் பொல்லாததையும் பரப்புவதற்குப் பெயர்தான் அவதூறு. ஒருவர் பணியிடம் மாறி, இன்னொரு இடத்தில் பொறுப்பு எடுப்பதற்குள், அவருடைய குலம்-கோத்திரம், கடந்த கால வரலாறு.. என அனைத்தையும் அறிந்து, அவர் தலைநிமிர்ந்து நடக்காதபடி அவதூறு பரப்பப்படவதைப் பார்க்கிறோம். ‘அவன் என்ன சார் பெரிசா சாதிச்சுட்டான். நான் சாதிக்காத சாதனையா? அப்படின்னு பேசுறவங்க, எத்தனை பேர்? நாம் யோசிக்கணும்.

ஆறாவதாக, பொய்களிலேயே கொஞ்சம் வலிமையானது- கொடூரமானது பொய்சாட்சி! இது வாழ்க்கையை மிகவும் அதிகமாக பாதிக்க கூடியது. நடந்ததை நடக்கவில்லை என்று சொல்வதும், நடக்காததை நடந்ததுன்னு சொல்றதும் எவ்வளவு பெரிய மோசடி. ஒரே இடத்தில் பணிபுரிந்துக் கொண்டு, ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அடுத்தவர் பெயருக்கு, புகழுக்கு களங்கம் கற்பிக்க நினைப்பவர்களின் நாவினில் உள்ள சூலாயுதம் ‘பொய்சாட்சி’. பொய்சாட்சிதான் பொய்களி;ன் தாயகம் ஆகும்.

இப்படி பொய்களிலேயே ஆறுவகையான பொய் இருக்கிறது! இன்றைய நற்செய்தி பொய்களின் சங்கமம்! பொய்களிலே எது நல்ல பொய்? என்று பார்க்க வேண்டியிருக்கிறது. நல்ல பிள்ளையைப் போல வயலுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போகாமலிருப்பதையும், போகவில்லை என்று சொல்லி விட்டு வயலுக்குப் போவதையும் பொய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இயேசுவின் சான்றாண்மை
‘வாக்கு சுத்தம்’ ‘வாக்கு தவறாமை’என்று சொல்வதுண்டு: சான்றோன் என்று சொன்னாலே பொய்யாமைதான் முதன்மையான பண்பு சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு என்பார்அய்யன் வள்ளுவன். ஆண்டவர் இயேசு அதிசிறந்த சான்றோராக இருந்தார். தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்தவர். ஆகவே நீங்கள் பேசும்போது ;ஆம் ; என்றால் ;ஆம் ; எனவும் ;இல்லை ; என்றால் ;இல்லை ; என்றும் தலைநிமிர்ந்து தைரியமாக அவரால் சொல்ல முடிந்தது (மத் 5:37). ‘ஆம்’ என்று பதில் சொல்லிட்டு, செயல்படாமலிருப்பதும், ‘இல்லை’ என்று சொல்லிவிட்டு செயல்படுவதும் குற்றம்தான்.

ஆண்டவர் இயேசுவைப் பொருத்தவரை, ‘ஆம்’ என்று சொன்னார் அதன் படியே செயல்பட்டார்: கெத்சமனியில், சோதிக்கப்பட்டாலும் சோர்வடையவில்லை: ‘என் விருப்பமன்று: உம் திருவுளத்தின்படியே ஆகட்டும்’ என்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அவர் முழுமையான ஆமெனாக (Perfect Amen) இருந்தார். எனவேதான் புனித பவுலடியாரும், இறைமகன் இயேசு, ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும பேசபவரல்ல: மாறாக, அவர் ‘ஆம்’ என்று உண்மையையே பேசுபவர் (2கொரி1:19) என்று சான்று பகர்கிறார்.

இறைவா! உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்’ (எபி10:9), தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிட, தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்தார்(பிலி 2:6-10). ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்று தம்மையே ஒப்புக்கொடுத்தார். இன்றைய நற்செய்தியில் உள்ள இரண்டு மகன்களைப் போலன்றி, ஆம் என்று சொல்லி, அதனை முழுமையாக நிறைவேற்றினார்.

நாமும் ஆண்டவர் இயேசுவின் இந்த மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்: உலகத்தின் போக்கின்படி ஒழுகாமல், உள்ளம் புதுப்பிக்கப் பெற்று, கடவுளின் திருவுளம் யாது? என்று தேர்ந்து தெளிந்து, எது நல்லது எது உகந்தது, எது நிறைவானது என்பதை அறிந்து நிறைவேற்றினார் (உரோ 12:2). அத்தகைய மனநிலையை , அதவாது சொல்லிலும் செயலிலும் ‘ஆம்;’ நிலைப்பாட்டை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும்.

பரிசேயத்தனம் நம்மிடம் களையப்பட வேண்டும். தாங்க முடியாத சுமைகளை மக்களின் மேல் சுமத்திவிட்டு, ஆனால் நாம் அதனை ஒரு விரலால் கூட தொடாவிட்டால் நிச்சயம் இயேசு நம்மைப் பார்த்து ‘ஐயோ கேடு!’ என்றுதான் எச்சரிப்பார் (லூக்11:46). இதுவும் சொல்வதை செய்யாத நிலைதான். இரண்டாவது மகனின் நிலை! முதல் வகைப் பொய்யான, முகஸ்துதி செய்கிறவன் இவன்! எச்சரிக்கை!

அன்னை மரியாள் இதோ உமது வார்த்தையின் படியே ஆகட்டும் என்று சொல்லி, அதன் படியே இயேசுவைப் போல முழுமையாக நிறைவேற்றினார். ஆம் என்று சொன்னவர் இறுதிவரை, வியாகுலங்களின் மத்தியிலும், மனந்தளராமல், முழுமையான ஆமென்- ஆக இருந்தார். புனித பவுல் அடியாரும்கூட, ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பிறகு, ஆம் என்று சொல்லி, இயேசுவின் சீடராக மனம் மாறியவர், வாழ்வது நானல்ல: என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்ற இயேசுவின் மனநிலையைக் கொண்டிருந்தார். சொல்லி மாளாத துன்பத்தின் மத்தியிலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் சீடத்துவத்தைச் சிறப்புற வாழ்ந்தவர்: இறைவனின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றியவர்.

நமது சீடத்துவம்
முதலாவதாக, நாமும் இவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மனமாற்றம் அடைந்து, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற உறுதி பூண்டிட வேண்டும்! நாம் நம்முடைய திருமுழுக்கின் வாயிலாக, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு இசைவு தெரிவித்திருக்கிறோம்! ஆகையால் நம்முடைய செயல்பாடு இயேசு மனநிலையைக் கொண்டிருப்பதாக அமைந்து, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் முடிவடைய வேண்டும். சீடத்துவத்தின் சிறப்பே, தந்தையின்திருவுளத்தை நிறைவேற்றுவதில்தான் அடங்கியிருக்கிறது. ஆகையால் கிறிஸ்தவ வாழ்விற்கு இது மிகவும் அடிப்படையாகும்.

இரண்டாவதாக, சொற்களைப் பயன்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்: சொல்லாளத் தெரிந்தவர் உலகாளத் தெரிந்தவர். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு, ‘இல்லை’ என்ற செயல்படுவதும், ‘இல்லை’ என்று சொல்லி விட்டு, ‘ஆம்’ என்று செயல்படுவதும் ஆளுமை மனச் சிதைவைக் குறிக்கிறது. எனவே, நாம் சொற்களை முறையாகப் பயன்படுத்தி வாழ முற்படுவோம்!

பொறுப்பற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும்: குரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்க கூடும்: ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தும்: ஒரு முரட்டுச் சொல் மரணத்தை உண்டாக்கலாம்: ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம்: ஒரு மகிழ்வான சொல் நாளையே வெளிச்சமாக்கலாம்: ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம்: ஒரு அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசிர்வதிக்கலாம்! ஆகையால் சொற்களை கையாளுவதில் ஒவ்வொருவருமே அதீத திறமைப் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் உண்மையாளரா? அல்லது ‘நல்ல’ பொய்யரா?