இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு

பொறாமை ஒழியட்டும்

எசா 55:6-9
பிலி 1:20-24,27
மத் 20:1-16

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையா மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் குறள் 162

(எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருக்கும் குணத்தை ஒருவன் பெற்றிருந்தால், அவன் பெறுதற்குரிய செல்வங்களுள் அதனை ஒப்பது வேறு இல்லை)

நால்வகை மனிதர்கள்

இந்த உலகில் வாழக்கூடிய மனிதர்களை நான்குவகையாகப் பிரிக்கலாம். முதல்வகையினர் மேன்மக்கள்: இரண்டாவது வகையினர் நல்லவர்கள்: மூன்றாவது வகையினர் கெட்டவர்கள்: நான்காவது வகையினர் மிகவும் கெட்டவர்கள். இவர்களை, பேருந்தைப் பயன்படுத்திப் புரிந்துக்கொள்ளலாம். முதல்வகையினரான மேன்மக்கள் நாம் கஷ்டப்பட்டாலும், அடுத்தவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவர்கள்: மிகவும் நல்லவர்கள். உதாரணமாக, பேருந்திலே பயணம் செய்யும் போது, ஒரு முதியவரோ, ஒரு கர்ப்பிணியோ நின்றுக்கொண்டு வரும் போது, உட்கார்ந்திருக்கக்கூடிய இவர், தன் இடத்தை அவருக்கு விட்டுக்கொடுத்து நின்றுக்கொண்டே பயணிப்பார். இவர் மிகவும் நல்லவர். அடுத்தவருக்காக துன்பத்தை அனுபவிக்க தயங்காதவர்.

இரண்டாவது வகையினர் நல்லவர்கள்@ நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்கள் அடுத்தவருக்கு கெடுதல் பண்ணமாட்டார்கள்: ஆனால் அதே சமயம் தன்னுடைய நலத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உதாரணமாக, பேருந்திலே உட்கார்ந்து கொண்டே பயணிக்கிற இவர், முதியவரைக் கண்டு, கர்ப்பிணியைக் கண்டு பரிதாபப்படுவாரே தவிர, தன் இடத்தை விட்டுக்கொடுத்து உதவமாட்டார். ‘நான் ஒன்ணும் தியாகி இல்லேன்’னு நழுவிவிடுவார். இவர் ஒரு வகையில சேர்க்கலாம். நல்லவர்.

மூன்றாவது வகையினர், தன் சொந்த நலனுக்காக, அடுத்தவங்க நலனை, கெடுக்க துணிந்தவர்கள்: கெட்டவர்கள். பேருந்திலே, ஒர் இருக்கையில் இன்னொருத்தர் துண்டு போட்டு இடத்த பிடிச்சிருந்தாலும், அந்த துண்டை நைசா எடுத்து ஜன்னலுக்கு வெளியே போட்டுட்டு, நல்ல பிள்ளையாட்டம் உட்கார்ந்திருப்பார். துண்டுப் போட்டவர் வந்து கேட்டா ‘துண்டா நான் பார்க்கலையே’ நழுவிவிடுவார். சுயநலக்காரர். கெட்டவர்.

நான்காவது வகையினர், எப்பொழுதும் கெடுதல் பண்ணிக்கிட்டே இருப்பார். இவரு பேருந்துல உட்கார்ந்திருப்பார். பக்கத்து சீட்டுல ஒருத்தர் துண்டு போட்டுட்டு போயிருப்பார். இவரு ஊமைக் குசும்பனாட்டம் அந்த துண்டை எடுத்து, வெளியே போட்டுட்டு, யாராவது அந்த காலியான இடத்திலே உட்காரலாமான்னு கேட்டா, தாரளமா உட்கார வைப்பார். அப்புறம் துண்டைப் போட்டவர் வந்து உட்கார்ந்திருக்கிறவரோட சண்டைப் போடுவார். இரண்டு பேரும் சண்டைப் போடுவதைப் பார்த்து, ரசித்துக்கிட்டே இருப்பார். இவர் மிகவும் கெட்டவர்.

இதற்கும் இன்றைய நற்செய்திக்கும் சம்பந்தம் உண்டு, நிலவுரிமையாளர் ரொம்ப நல்லவர் என்றால், முதலில் வேலைக்கு வந்தவர்கள் மிகவும் கெட்டவர்களாக, நான்காவது வகையினராக இருக்கிறார்கள். இன்றைய நற்செய்தியைக் கூர்ந்து ஆழ்ந்து சிந்திக்கிற போது, பொறாமைக் குணம் வேரறுக்கப்பட வேண்டும் என்பது வலிமையாக வலியுறுத்தப்படுகிறது.

பொல்லாத பொறாமை

பொறாமைதான், ஒரு மனிதனின் அழிவுக்கு வகைச் செய்கிறது. கிராமங்களிலே, ‘ஆமை புகுந்த வீடு உறுப்படாதது போல, பொறாமையுள்ள மனிதனும் உருப்பட மாட்டான்’ என்ற சொல்வதுண்டு. காயின் ஆபேலின் இரத்தத்தைச் சிந்தியதற்கு அடிப்படைக் காரணமே, பொறாமைதான். பொறாமையிலிருந்து புறப்படுகிற அன்பிலாத்தனம், சினத்தில் வேருன்றி, பாவத்தில் பழிவாங்குதலில் முடிவடைகிறது. எனவேதான் வள்ளுவர்கூட, மிக அழகாக,
‘அழுக்காறு, அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ என்று சொல்லி, பொறாமை, ஆணவம், சினம், கடும்சொல் இந்நான்கும்
இல்லாததே அறம் என்கிறார்.. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொல்லி பாடத்திற்கு எதிர்பதமாக, ஆசைக்கு முன்பாக, ஏன் சினத்திற்கு முன்பாக ‘பொறாமையை’ வள்ளுவர் முன்னிலைப்படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது (காண்க நீதி 27:4) பொறாமை என்பது தனிமனித ஆளுமையின் அழுகல் நோயாக இருக்கிறது. பொறாமை உள்ள மனிதர் வாழ்வில் முன்னேறுவதற்கு வழியுமில்லை: செல்வம் சேர்ப்பதற்கு வழி வகையுமில்லை. பொறாமையே ஒரு மனிதனின் அழிவிற்கு அஸ்திவாரமாக அமைகிறது. இது தன்னையும் அழிக்கும்@ தன்னைச் சார்ந்தவரையும் அழிக்கும். இன்றைய நற்செய்தி, இரக்கத்துடன் கூடிய நீதியைப் பற்றி வலியுறுத்தினாலும், அதன் பின்புலத்தில் மனிதர்களிடையே புரையோடிப்போன ‘பொறாமையின் கோரத்தாண்டவம்’ பளிச்சிடுகிறது. ‘தாங்கள் தங்களுக்குரியதைப் பெற்றுக்கொண்டோம்’ என்ற திருப்தி அடையாமல், ‘தங்களைப் போன்றே அவர்களும் கூலி பெற்றுக்கொண்டனரே’ என்று பொறாமைப்படுகின்றனர். மாலை 5 மணிக்கு வந்து கூலி வாங்கியவரைப் பற்றி, மதியம் 3 மணிக்கு வேலைக்கு வந்தவர்களும் மற்றவர்களும் பொறாமைப்படுகின்றனர் 3 மணிக்கு வந்தவர்களைப்பற்றி, பனிரெண்டு மணிக்கு வந்தவர்களும் மற்றவர்களும் பொறாமைப்படுகின்றனர். பனிரெண்டு மணிக்கு வந்தவர்களைப் பற்றி, காலை 9 மணிக்கு வந்தவர்கள் பொறாமைப்படுகின்றனர். பொறாமைதான் அவர்களை ஒருவர் மற்றவருக்கு எதிராக முணுமுணுக்க வைக்கிறது: எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், அவர்கள் ஒருவர் ஒருவரைப் பற்றி பொறாமைப்படுகின்றனர். இங்கே யாருக்கும் அநீதி இழைக்கப்பட வில்லை. பேசப்பட்ட கூலி பேசியவண்ணம் தரப்படுகிறது. தனக்குரிய முழுமனச் சுதந்திரத்துடன் செயல்படுகிற முதலாளி, இறுதியிலே அவர்கள் நாணிப் போகும்படி கேட்கிற கேள்வி, ‘நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்பதுதான். இங்கே தொழிலாளிகள் சக தொழிலாளிகள்மீதும், ஒரு கட்டத்தில் அவர் நல்லவராய் இருப்பதால் முதலாளிமீதும் பொறாமைப்படுவதையும் நற்செய்தியில் ஆண்டவர் நாசூக்காகச் சுட்டிக்காட்டுகிறார். ‘சொந்தக்காரரின் பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை’ என்று ஒனிடா விளம்பர வாசகம் வாழ்க்கையின் எதார்தத்தை, நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கிற பொறாமை குணத்தைப் படம் பிடிப்பதாக அமைகிறது. (1 கொரி. 3:3) அடுத்தவர் கொஞ்சம் நல்லாயிருந்தால், நாலுப் பணம் சேமித்தால், மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டால், பரிசு வாங்கினால், கொஞ்சம் சொத்து சேர்த்தால், ... அடுத்தவர் படுகின்ற காய்மகாரம் - பொறாமை ஆளையே காலிப்பண்ணிவிடுகிறது. எனவேதான் திருச்சபை காய்மகாரத்தை – பொறாமையை தலையான பாவங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

விவிலியம் காட்டும் உண்மை

அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது (சாஞா2:24).காயின் ஆபேலின் மீது கொண்ட பொறாமை கொலையில் முடிந்தது(தொநூ 4:8). யாக்கோபின் மகன் யோசேப்பின் செல்வாக்கு பதினொரு சகோதரர்களும் பொறாமைப்படும்படி அமைகிறது. இறுதியில் கொலையில் முடியவேண்டிய யோசேப்பின் வாழ்க்கை, பாழடைந்த கிணற்றில் தள்ளப்பட்டு முடிந்தது (தொநூ 37:11). கோலியாத்தைக் கொன்றதால் கொடிகட்டிப் பறந்த தாவீதைக் கண்டு சவுல் பொறாமைக் கொண்டார்: பழிவாங்க துடித்தார்: அரசப்பதவியை இழந்தார் (1சாமு18:6-16). .. இவையெல்லாம் விவிலியத்தில் உள்ள ஒரு சில உதாரணங்கள் மட்டுமே!

இப்படி சமுதாயத்தில் பொறாமையால் அலைகின்ற மக்கள் ஆயிரம் ஆயிரம். தன்னிடம் திறமை இல்லை என்பது ஊரறிய தெரிந்திருந்தும், தன்னிடம் உள்ள அந்த குறையை ஏற்றுக் கொள்ள இயலாமல், அதனை மூடி மறைக்க பொறாமையால் அடுத்தவன் பெயரைக் கொடுப்பார்கள் இல்லாத அவதூறுகளைப் பரப்பிடுவார்கள். மேலதிகாரிகளிடம் பொய்ப்புகார் அளிப்பார்கள்.

பொறாமையின் ஊற்றுக்கண் இயலாமையின் வெளிப்பாடாக, சுய குறைகளை ஏற்றுக்கொள்ளாமையின் வெளிப்பாடாக அமைகிறது. எல்லா தொழிலாளர்களுமே, தாங்களும் வேலையின்றி முற்றத்தில் காத்துக் கிடந்த தினக்கூலிகள் என்ற நிலையை குறையை ஏற்றுக்கொண்டிருந்தால் நிச்சயம் பொறாமை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியில்லாத காரணத்தினால்தான் பொறாமைப்படுகின்றனர். ஆகையால் பொறாமையால் பகைத்து, பிரிந்து நிற்கிற அவர்களுக்கு பாடம் கற்பிக்கிற விதமாக முதலாளியே, ‘தோழரே’ என்று அழைக்கிறார். ‘முதலாளி – தொழிலாளி’ என்ற பேதம் மறைந்து, சமத்துவ சமதாயம் கட்டமைக்கப்படுகிறது. ‘ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்- என் சகோதரன்’ என்ற தோழமையுணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. அன்பு பொறாமைப்படாது (1 கொரி. 13:4) என்று புனித பவுலடியார் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. ஒரு முதலாளியே தன் தொழிலாளியை ‘தோழரே’ என்று அழைக்கும்போது, ஏன் தொழிலாளி சக தொழிலாளியை தோழராக கருதி பொறாமைப்படாமல் வாழ முடியாது என்பது சிந்திக்க தக்கது.

இவ்வுலகில் பொறாமையால் வாழ்ந்தவர்களைவிட வீழ்ந்தவர்களே அதிகம்! பொறாமை தன்னை அழிக்கும்: அடுத்தவரை அழிக்க சூட்சமத்தைக் கற்றுத்தரும். வீழ்த்துகிறோம் என்று சொல்லி வீழ்பவர்களே அதிகம்! ஒரே கம்பெனியின் தயாரிப்புகள் போலியாக தயாரிக்கப்படுவதற்கு காரணம் பொறாமைதான். எனவே ‘ஒரிஜினல்’ என்ற 3னு ஹோலோகிராம் வில்லைகள் ஒட்டப்படுகின்றன. இப்படி போலிகளின் நடமாட்டத்திற்கு பொறாமைதான் காரணம். பொறாமையை வேரறுக்காத சமூகமும், எந்த ஒரு தனிமனிதனும் முன்னேறியதாக வரலாறு இல்லை. அமெரிக்கா-ரஷ்யா பனிப்போர் நல்ல உதாரணம்.(காண்க சீஞா. 14:8 சீஞா. 30:24 சாஞா. 6:23)

என்ன செய்ய வேண்டும்?

பொறாமையை களைந்திட என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, நம்மிடம் உள்ள பொறாமைக் குணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இது மாபெரும் சவால். இரண்டாவதாக, உங்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணுங்கள்: அதில் நல்ல கவனம் செலுத்துங்கள். உங்களுக்க மேலிருப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். மூன்றாவதாக, நீங்கள் நிர்ணயித்திருக்கிற வாழ்க்கை இலட்சியங்களை அடைய உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ளுங்கள். நான்காவதாக, மற்றவர்கள் சாதித்திருக்கிற சாதனைகளை அங்கீகரித்து மனமுவந்து பாராட்டுங்கள்: தாழ்ச்சி உங்களிடம் வரும்போது தற்பெருமையும் பொறாமையும் சுக்கு நூறாகிடும். அவர்களுக்கு, மகிழ்ச்சியாக தோன்றுங்கள். ஐந்தாவதாக, பொறாமை உங்களிடம் இருக்கிறது என்று சொன்னால், நல்ல உளவியலாளரிடம் பகிர்ந்து தீர்வு கண்டிடுங்கள். பொறாமை வருகிறது என்ற உடனே அந்த சூழலை நன்றாக உணர்ந்து நின்று நிதானித்து பரிசோதனைச் செய்யுங்கள் வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக! (கலா. 5:26). நீங்கள் 1.மிகவும் நல்லவரா? 2.நல்லவரா? 3.கெட்டவரா? 4. மிகவும் கெட்டவரா?. சிந்தித்துப் பாருங்களேன்.