இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)


தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

‘ ஓர் ஆன்மாவின் விசுவாசப் பயணம்’

விப 17‘3-7
உரோ 5‘1,2,5-8
யோவா 4‘5-42

‘இறைவா! உம்மை நான் புரிந்துகொண்டு அன்பு செய்வதற்கு எவ்வளவு பின் தங்கி விட்டேன்! உண்மையாகவே உம்மை நான் அன்பு செய்ய நான் பிந்திவிட்டேன். நீர் என்னுள் குடியிருந்தீர். ஆனால் நானோ வெளியுலகில் அலைந்து திரிந்தேன். வெட்ட வெளியில் உம்மை வீணாக தேடித் திரிந்தேன். உமது கைவேலையாகிய அழகிகளிடம் மட்டுமே என் மனதைப் பறிகொடுத்தேன். நீர் என்னுள் இருக்க, நான் உம்மோடு இல்லாதிருந்தேன். படைப்பு பொருட்கள் உம்மை என்னைவிட்டு மிகுந்த தொலைவில் பிரித்துவிட்டன. நீர் என்னை அழைத்தீர் ஒலித்தீர், என்செவிகளை துளைத்தது உமது பேரொலி. உமது ஒளியும் ஒளிர்ந்துகொண்டிருந்தது. என் கண்களையே மங்க வைத்தது. இப்போது உம்மிடம் மட்டுமே எனக்கு பசியும், தாகமும். நீர் என்னைத் தொட்டதுதான் தாமதம். நீர் தரும் பேரமைதிக்காக நான் உருகி நிற்கிறேன்’ இவை புனித அகுஸ்தின் மனமுருகி இறைவனின் அன்பில் திளைத்து கூறிய பொன்மொழிகள்.

இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் சமாரியப்பெண்ணைப்போல தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்தவர்தான் புனித அகுஸ்தினார்(354-430). தன் இளமைப்பருவத்தில் தப்பறைக்கொள்கையான மாணிக்கேயத்திலும், சிற்றின்பத்திலும் உலக காரியங்களிலும் ஊறிப்போயிருந்தார். பல்வேறு கலைகளைக் கற்றார். தனது பயணம் தவறானது என்று உணர்ந்து முப்பதாவது வயதில் மிலான் நகரத்து ஆயர் அம்புரோஸியாரின் அரவணைப்புக்குள் வந்தார். தன்னந்தனியாளாய் இயேசுவைச் சந்தித்த சமாரியப்பெண்ணைப்போல தனிமையில் ‘எடுத்துப் படி’ என்றதும் திருவிவிலியத்தைப் படித்தார். ‘இரவு முடியப்போகிறது: பகல் அண்மையிலுள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக(உரோ13‘12) என்ற ஆண்டவரின் வார்த்தை அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டது: மனம் மாறினார். இரண்டு ஆண்டுகள் தம்மையே தயாரித்து 32ஆம் வயதில் திருமுழுக்குப்பெற்றார். நான்கு வருடங்களுக்குபின்பு குருவானார். 42ஆம் வயதில் ஆயராக உயர்த்தப்பட்டார். இறுதியில் பலரை இறைவன்பால் கொணர ஒரு துறவற சபையைக்கூட நிறுவினார். இது கூட ஒர் ஆன்மாவின் புனிதப் பயணம்தான்.

இன்றைய இறைவார்த்தை கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்தோடு விசுவாசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கிறது. இந்த விசுவாசப் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்மையே அனைத்தையும் அறிந்த இறைவனிடம் இழந்திட வேண்டும் என்பது இது உணர்த்தும் பாடம். ஒவ்வொருவருக்கும் ‘தில்’ இருந்தால் இயேசுவை தன்னந்தனியாளாக சந்தித்துப்பாருங்கள்: நீங்கள் யார் என்பதை அறிந்துக்கொள்வீர்கள். ‘நீதிமான்களையன்று அன்று பாவிகளையே தேடி வந்தேன் என்று சொன்ன ஆண்டவர் தன்னந்தனியாளாய், காணமால் போன ஆட்டைத்தேடி கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார். ஆயனுக்கே இத்தகைய களைப்பு என்றால் ஆட்டைப் பற்றி சொல்லத் தேவையில்லை. நண்பகல் நேரம் ஆள் அரவமற்ற பொழுதில் கிணற்றடியில் ஓர் ஆன்மாவைப் பிடிக்க காத்திருக்கிறார்.

மக்களை அல்ல: பாறையை அடி

முதல் வாசகம் எப்படி இஸ்ராயேல் மக்கள் விசுவாசப் பயணத்தில் -விடுதலைப் பயணத்தில்-தடுமாறி தத்தளித்து தோற்றுப் போயினர் என்பதை விவரிக்கிறது. இங்கே மக்கள் தண்ணிருக்காக வாதாடியது முக்கியமல்ல: மாறாக, ‘ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா? இல்லையா?’ என்று சோதித்ததுதான் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இது விசுவாசப் பயணத்தில் அவர்களுடைய தளர்ச்சியைக் காட்டுகிறது. இவர்கள்தானே, ஆண்டவருக்கு எதிராக முறுமுறுத்து, ‘ இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே .. . இறந்திருந்தால்’ என்று (விப16‘3) அடிமை சாசனத்தை புதுப்பிக்க முயன்றவர்கள். சூர் பாலைவனத்தில் தண்ணீர் எதுவுமே தென்படாத நிலையில் ‘மாரா’ என்ற இடத்தில் மரத்துண்டின் வழியாக கசப்பான நீரை சுவை மிகுந்த நீராக்கி நமக்கு கொடுத்த ஆண்டவர் ‘நம்மோடு இருக்கிறார்’ என்று நம்பாத அவிசுவாசிகள்: வணங்கா கழுத்துள்ள மக்கள் (விப32‘9,33‘3,5). ஆனாலும் ஆண்டவர் அவர்களை அன்பு செய்தார் ஆன்மாக்களை மீட்க திருவுளம் கொண்டார் எனவே தான் அவர்களை அடிப்பதற்கு பதிலாக பாறையை அடிக்கப் பணிக்கிறார் இது மாசா மெரிபா கற்றுத்தந்த பாடம்.

இன்றைய இரண்டாம் வாசகம் இதனை அடியொற்றியே ‘நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி இயேசு கிறிஸ்துவின் வழியாக கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்’ என்கிறது. இத்தகைய விசுவாசப் பயணத்தைத்தான் சமாரியப் பெண் மேற்கொள்கிறாள். எனக்கு அடுத்திருப்பவன் யார் என்று கேட்டபோது ஆண்டவர் சொன்ன நல்ல சமாரியன் பாராட்டுக்குரியவனானதுபோல் தம் ஊராரைக் கொண்டுசேர்த்த இந்த (நல்ல) சமாரியப் பெண்ணும் பாராட்டுக்குரியவள்தான். அனைத்து தடைகளையும் தாண்டி இயேசுவை ‘உலகின் மீட்பராக’ அடையாளம் கண்டுக்கொள்கிறாள். விசுவாசப்பயணத்தில் வெற்றியடைகிறாள். ஆகையால் இத்தவக்காலத்தில் நாமும் தனியொரு ஆளாக இத்தகைய ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

காத்திருக்கும் இயேசு.

ஆண்டவா; இயேசு அதுவும் நண்பகல் வேளையில், கிணற்றடியில் அமர்ந்திருப்பது ஒவ்வொரு ஆன்மாவின் மீதும் அவர் கொண்டுள்ள தீராத தாகத்தைக் காட்டுகிறது. ஆண்டவராகிய அவரே களைப்புற்றிருப்பது அவருடைய மனித சுபாவத்துடன் கூடிய இயல்பு நிலையையும், விடாமுயற்சியையும், தன்னிகரற்ற தேடலையும் குறிக்கிறது. இந்த சமாரியப் பெண்ணிடம் ‘குடிக்க தண்ணீர் கொடு’ என்று ஆண்டவர்தாமே உரையாடலை தொடங்குகிறார். ஆனால் இறுதிவரை அவர் கேட்ட தண்ணீரைப் பருகவில்லை என்பது இந்த அதிகாரத்தைப் படிக்கிறபோது புலப்படுகிறது. ஏற்கனவே நா வறண்டு போன நிலையில் இவ்வளவு நேரம் அவர் பேசியும், கடைசிவரை தண்ணீர் பருகாதததும் அவர் ஆன்மாவின் மீது கொண்டுள்ள தேடலை தெளிவுப்படுத்துகிறது. கிணற்றடியிலிருந்து கல்வாரி வரை இது தொடர்ந்தது. ஆகையால்தான் ஆண்டவர் சிலுவையில் தொங்குகிறபோது ‘தாகமாயிருக்கிறது’ (குடிக்க தண்ணீர் கொடு) என்று சொன்னார். தண்ணீருக்குப் பதிலாக புளிச்ச திராட்சை இரசம் தரப்பட்டது. அப்போதும் அவருடையத் தாகம் தணிக்கப்படவில்லை.

இயேசு இன்றும் தாகமாயிருக்கிறார். ஆகையால்தான் அன்னைத் தெரசா, தன் சபைச் சார்ந்த மடாலயங்களில் தாகமாயிருக்கிறது என்பதை (I thirst) என்று எழுத பணித்துள்ளார்.
நீங்களும் தனியொரு ஆளாய் ‘தில்’ இருந்தால் இயேசுவை சந்தித்துப்பாருங்கள்: அப்போது நீங்கள் யாரென்று அறிவதைவிட அவர் யார் என்று அறிந்து கொள்ள முடியும். பிறகு விசுவசிப்பது நலம் பயக்கும். ஆகையால் இன்றைய நற்செய்தி ஒரு ஆன்மாவின் விசுவாசப் பயணமாக அமைகிறது. தண்ணீரால் குடத்தை நிறைக்க வந்தவள், தன்னை இயேசுவால் நிறைத்துக்கொண்டு இல்லம் சென்றாளன்றோ? கிணற்றில் தண்ணீர் மொள்ள வந்தவள், இறுதி வரை தண்ணீர் முகண்டு செல்லாமல் குடத்தை அங்கே விட்டுவிட்டு இல்லம் சென்றதும், குடிக்க தண்ணீர் கேட்டவர் இறுதி வரை தண்ணீர் பருகாமல் உயிருள்ள தண்ணீராய் உவகை அளித்து ஆன்மாவை மீட்டதும் இன்றைய நற்செய்தியின் சிறப்பம்சம் ஆகும்.
கிணற்றடியில் காத்திருந்ததுபோல் இன்று நற்கருணையில் திருவருட்சாதனங்களில்.. இறைவார்த்தையில் ஆண்டவர் காத்திருக்கிறார் தில் இருந்தால் ஒத்தைக்கு ஒத்தை என்பார்களே.. சந்திக்க நாம் தயாரா?. தவக்காலத்தில் இவ்வாசகம் வைக்கப்படுவதன் நோக்கம் முன்பெல்லாம் இந்த நாற்பது நாளும் உயிர்ப்பு ஞாயிறன்று திருமுழுக்குப்பெற தயாரிக்கப்படுவார்கள். அவர்கள் மனமாற்றமடைந்து, கிறிஸ்துவில் ஐக்கியமாவதின் அடையாளமாக திருமுழுக்குப் பெறும் தண்ணீர் எப்படி அவர்களை உருமாற்றுகிறது என்பதன் அடையாளமாக இது அமைகிறது.

இது ஒரு ஆன்மாவின் விசுவாசப் பயணம்.

யூதர்கள் ஆன்மாவின் இறைவனுக்கான தாகத்தைத்தான் ‘தண்ணீர்’ என்றும் ‘வாழ்வுத்தரும் ஊற்று’ என்றும் குறிப்பிடுவர். அப்படிப்பட்ட ஆன்மாவின் தாகத்தை ஆண்டவரால் மட்டுமே தணிக்க முடியும் (திவெ21‘6,7‘17). எனவேதான் திருப்பாடாலாசிரியர் ‘கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல் கடவுளே! என் நெஞ்சம் (ஆன்மா) உமக்காக ஏங்கித் தவிக்கின்றது (திபா42‘1)என்கிறார். இந்த சமாரியப் பெண்ணின் விசுவாசப்பயணம் ஏழுவிதமான படிநிலைகளைக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, இயேசுவை அந்நியப்படுத்துகிறார். ‘நீர் யூதர் நானோ சமாரியன்’ என்று தடுப்பு ஏற்படுத்தி இவள் பிளவுப்பட்டு நிற்கிறாள். விசுவாசம் இல்லாத போது இப்படிதான் கடவுளிடமிருந்து நாமும் நாத்திகவாதியாக அந்நியப்பட்டுப்போகிறோம். ஒரு ‘மனிதர்’ தண்ணீர் கேட்கிறார் என்று பார்க்காமல், ஒரு ‘யூதன்’ தண்ணீர் கேட்கிறார் என்று அவள் பாவிப்பது அவளுடைய சிறுமையைக் காட்டுகிறது. ஆகையால்தான் (கடவுள்) பெருந்தன்மையாக குடிக்க தண்ணீர் கொடு என்று கேட்டவர் தன்னிலை விளக்கம் தர முயல்கிறார். ‘தன்னை யார்?’ என்று படிப்படியாக வெளிப்படுத்துகிறார். உரையாடல் உணர்வுப்பூர்வமாக தொடங்குகிறது.

இரண்டாவதாக, தூரமாய் நின்றவள், ஐயா ( ஒரு மனிதர்) என்று அருகில் வருகிறாள். முதலில், நீர் என்னிடம் தண்ணீர் கேட்பது எப்படி? என்றவள், இப்போது நீர் கிணற்றில் தண்ணீh; மொள்வது எப்படி? என்று குறைபட்டுக்கொள்கிறாள். இப்படிதான் நாமும் கொட்டாங்குச்சியால் கடல்நீரை மொண்டு சேகரிப்பதுபோல் நம்முடைய பகுத்தறிவால் கடவுளை இகழ்ச்சிக்குள்ளாக்குகிறோம்.

மூன்றாவதாக, தண்ணீர் கொடுக்க வேண்டியவள், தண்ணீர் எனக்குக் கொடும் என்று கேட்கிறாள். இது தான் விந்தை. படைப்பின்மீது படைத்தவனின் ஆதிக்கம். ஐயா(போதகரே) என்று விளிப்பது இவளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது.

நான்காவதாக அங்கே அவளுடைய பாவம் சுட்டிக்காட்டப்படுகிறது. இருவருமே இருவேறு தளங்களில் பயணிக்கின்றனா;. ஆண்டவர் இயேசு ஆன்மீக தளத்திலும் சமாரிப்பெண்ணோ உலகியல் தளத்திலும் பயணிக்கின்றனர். ஆண்டவரை முழுமையாக புரிந்துக்கொள்ள அவளுக்கு தடையாக இருப்பது அவளுடைய பாவநிலை. எனவேதான் ஆண்டவர் அவளுடைய வாழ்க்கை நிலையை அலசுகிறார். இறையருள் எனும் வாழ்வுதரும் ஊற்று சுரக்க பாவம் தடையாக இருக்கிறது என்பதை கற்பித்து அவளுடைய ‘இறந்த காலத்தை’ வேரோடும் வேரடி மண்ணோடும் தகர்த்தெறிந்து புதிய எதிர்காலத்திற்கு களம் அமைக்கிறார். ஆனாலும் அவள் பிடி கொடுப்பதாக தெரியவில்லை. தன்னிலையிலிருந்து விலகி அவள் ஆன்மீகத்தைக்- வழிபாட்டை- கையிலெடுக்கிறாள்: பேச்சை திசைத்திருப்புகிறாள். இருப்பினும் ஒரு கட்டத்தில், இயேசுவை ‘இறைவாக்கினர்’ என்று கண்டுகொள்கிறாள்.

ஐந்தாவதாக இயேசுவை ‘மெசியா’ என்று ஏற்றுக்கொள்கிறாள். அவரை ‘உலகின் மீட்பர்’ என்று விசுவசிக்கிறாள். இறுதியாக இயேசு அனுபவம் பெற்ற பிறகு இன்னொரு அப்போஸ்தலராகி பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அனைவருக்கும் அறிக்கையிடுகிறாள். அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியதை (அப்போஸ்தலர்களோ ஊருக்குள் உணவுவாங்க சென்றனா; ) அவள் செய்கிறாள். இதுதான் இந்த ஆன்மாவின் விசுவாசப் பயணம்.

இங்கே கவனிக்கத்தக்க இன்னொன்று, வழிபோக்கர் விருந்தாளியாவது. வழிப்போக்கராக கிணற்றடியில் தங்கிய இயேசு, இரண்டு நாள் அவ்வூரில் தங்கி அங்கே ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தங்குகிறார். வந்து பாருங்கள் கிணற்றடிக்கு- தனியாளாய்! நம்மையறிந்த கடவுள் முன் நம்மால் ஒருபோதும் தப்பிக்க முடியாது. தனியாளாய் விசுவாசப் பயணம் மேற்கொள்ள தயாரா?

வாருங்கள்! வந்து ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பாருங்கள் (திபா34‘8)