இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு

நாயைப் போல

எசா 56:1,6-7 உரோ 11:13-15, 29-32 மத் 15:21-32

கானானியப் பெண்ணைப் பற்றி இன்றைய நற்செய்தி எடுத்தியம்புகிறது. இன்றைய நற்செய்தியில் திருப்புமுனையாக அமைவது ‘ஐயா எனக்கு உதவும்’ என்று கெஞ்சிய அப்பெண்ணைப் பார்த்து, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்று இயேசு கடிந்து கொண்டவுடன், அப்பெண், ‘ ஐயா! ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னும்’ என்று தைரியமாக பதிலிறுக்கிறாள்: தன்னை ஒரு நாயைப்போல அவள் பாவித்துக்கொள்வதும், ஆண்டவரும் அவளை நாயைப் போல அணுகுவதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் ஆண்டவர் இப்பெண்ணை நாயாக பாவிக்கவேண்டும் என்று சிந்திக்கிறபோது எழுந்த சிந்தனையின் வடிவம் இன்றைய மறையுரை. அது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல: ‘வலிமார்களின் வரலாறு’ என்ற நூலின் சுஃபி ஹஸன் பசரி அவர்கள் தொகுத்தளித்த நாய்களின் நற்பண்புகள் நமதாகவேண்டும் என்ற சிந்தனையோட்டத்தின் விளைவாக இது விளக்கப்படுகிறது.

நாயிடம் உள்ள பத்துவிதமான பண்புகளும் இறைநம்பிக்கை உள்ளவர்களிடம் (விசுவாசிகளிடம்) இருந்தால் பெற்றுக்கொண்ட விசுவாச வாழ்வு பொருளுள்ளதாக இருக்கும் என்ற கருத்தின் கீழ் சிந்திக்க இருக்கிறோம்! அப்படியென்ன ... ஒரு சாதாரண நாயிடம் இருக்கிறது என்று கேட்கலாம்!

பொதுவாகவே, நாம் ஒவ்வொருவரையும் கடிந்து கொள்கிறபோது, ‘நாயே! அறிவுகெட்ட நாயே! சொரணைக் கெட்ட நாயே’ என்று திட்டுவது வழக்கமல்லவா! நாய் என்றால் அவ்வளவு கேவலமா போகிவிட்டதா?

முதலாவதாக நாய் என்பது பசித்திருக்கும். ‘ச்சு’ ‘ச்சு’ என்று எப்போது கூப்பிட்டு சோறு போட்டாலும் சாப்பிடும். அல்லது ஒருவாய் தின்னுவிட்டுதான் வேண்டாம் என்றால் ஒதுங்குமே ஒழிய சும்மா ஒதுங்காது. பசித்திருத்தல் என்பது நல்லவர்களின் பண்பு. ஏதவாது ஒரு ஏக்கம்! அன்பைக் காட்டுகிறபோது ஆதரவு- ஒத்துழைப்பு நல்லவர்களிடம் எப்போதுமே மிளிர்ந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் கேட்பது போல மேசையிலிருந்து விழும் ரொட்டித் துண்டுகளை விழுந்த மாத்திரத்திலேயே அது சாப்பிடுவதைப்போல, நல்லவர்கள் எப்போதுமே இறைவனுக்காகவும் அடுத்தவருக்காகவும் காத்திருப்பார்கள்: பசித்திருப்பார்கள். ஆகையால்தான் ஆண்டவர் இயேசுவும் சீடர்களை அனுப்புகிற போது ‘உணவை’யும் எடுத்துச் செல்லவேண்டாம் என்று பணிக்கிறார்.(லூக்9~3). எப்போதுமே பசித்திருக்க வேண்டும். எலியா பசித்திருந்தார். எனவே இறைவனின் தூதர் எழுந்து சாப்பிடு என்றவுடனே சாப்பிட்டு ஒரேபு மலையை அடைகிறார் (1அரச19). பசித்திருத்தல் நமது பண்பாக வேண்டும்.

இரண்டாவதாக, நாய் தங்குவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நிரந்தர இடம் கிடையாது. இந்த பண்பு இறையாதரவு பெற்றவர்களின் அடையாளம்! நாம் அதனைக் கட்டிப்போட்டொழிய அது தனக்கென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்காது: இடம் மாறிக்கொண்டே இருக்கும்: காற்று விசுகிற திசையில் தன் முகத்தை வைத்து படுக்கும். அதற்கென்று ஒரு குறி;பிட்ட இடம் கிடையாது. அப்படிதான் இறை ஆதரவு பெற்றவர்களும்! அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது, சாதுக்களுக்கும், குருக்களுக்கும், கன்னியர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது: அவர்களும் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்க மாட்டார்கள்: தமிழ்நாட்டின் திரு.பரதேசி பீட்டர், அருணாச்சல பிரதேசத்தின் திரு பிரேம்பாய் என்கிற ஹென்றி கெய்க்வாட் இவர்களெல்லாம் நல்ல உதாரணம். எனவே தான் ஆண்டவர் இயேசுவும் ‘ உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்றும், ஒரே ஊரில் நிலையாய் தங்கிடாமல் ‘ஊர் ஊராய் சென்று’ (லூக்; 9~6) நற்செய்தியை அறிவிக்கும்படியும் பணிக்கிறார்.

மூன்றாவதாக, நாய் இரவிலே சிறிது நேரம்மட்டுமே தூங்கும்: முழுக்க முழுக்க விழித்திருக்கும். இது இறைக் காதலர்களின் நற்பண்பு. தந்தையாம் இறைவனை அன்புச் செய்த இயேசு விடியற்காலை கருக்கலில் எழுந்து தனிமையான இடத்தில் இறைவனிடம் வேண்டினார் (மாற்1~35) என்று நற்செய்தி விளக்குகிறது. தந்தையை அவர்மிகவும் நேசித்தார். அதேபோன்று இயேசுவை அன்புச் செய்த மகதலா மரியாளும் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்துகிறார் (மத்28~1). நாம் வணக்கம் செலுத்தும் புனிதர்களில் பலர் இரவிலே கண் விழித்து செபித்து தங்களைத் தாங்களே பக்குவப்படுத்திக் கொண்டவர்கள்தான். ஆகையால் ஆண்டவர் இயேசுவும் திருத்தூதர்களைப் பார்த்து ‘விழித்திருந்து உங்களால் செபிக்க இயலாதா?’ என்ற கேள்வியைக் கேட்கிறார். ஆகையால் மணமகனின் வருகைக்காக விழித்திருந்த அறிவுள்ள ஐந்து கன்னியரைப்போல இறைக்காதலர்களாக,விழித்திருத்தல் என்ற நற்பண்பை நாம் கெண்டிருக்க வேண்டும்!

நான்காவதாக, நாய் இறந்தால் அதற்கென்று அனந்தரம் கொள்ளும் - சொந்தம் கொள்ளும் பொருள் என்று எதுவும் கிடையாது. இது துறவிகளின் அடையாளம். முற்றும் துறந்தவர்கள்தான் துறவிகள்! இறைவனுக்காக தன்னை இழந்தவர்கள் தான் துறவிகள். சீடர்களை அழைத்த இயேசு, ‘என்னைப் பின்செல்லுங்கள்’ என்றுதான் பணிக்கிறார். ‘கடவுளுக்கும் செல்வத்திற்கும் உங்களால் ஊழியம் புரிய முடியாது’ (மத்6~24) என்று சொல்லி கடவுளுக்கு ஊழியம்புரிய செல்வத்தை இழக்கச் சொல்கிறார். இம்மையில் இழப்பவர்கள் மறுமையில் நிலைவாழ்வைப் பெறுவர் (மாற்10~30) என்று பாராட்டுகிறார். ஆகையால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இதனை உணர்ந்திட வேண்டும்: இறைவனுக்காக அனைத்தையும் இழந்து, அவருக்காகவே வாழ முற்பட வேண்டும். ஏழை லாசரை அன்புச் செய்யாமல் செத்த செல்வந்தனின் கதை நமக்கு தெரியுமல்லவா? ஆகையால் நாம் கிறிஸ்துவை மட்டுமே ஒப்பற்ற செல்வமாக கொண்டு (பிலி3~8) வாழ்வோம்.

ஐந்தாவதாக, நாய் அதன் உரிமையாளர்- எஜமானன் எத்தனைமுறை அடித்து விரட்டினாலும் அது அவரையும் அவரது குடும்பத்தையும் விட்டு விலகாது. கிராமங்களிலே கூட நக்கலாக ‘நாயைப்போல சுத்தி சுத்தி வர’ என்று சொல்வதுண்டு. வாலை ஆட்டிக்கொண்டு பின் தொடரும் எஜமான விசுவாசத்திற்கு –நன்றிக்கு-சிறந்த நல்லுதாரணம் வீட்டு விலங்கான நாய் என்று சொன்னால் அது மிகையன்று. ஆகையால் நாமும் அத்தகைய விசுவாசிகளாக இருக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் கானானேய பெண் அதனைத்தான் செய்தாள்: கத்திக் கொண்டே வருகிறாள்- கண்டுக்கொள்வாரில்லை: உனக்காக நான் அனுப்பப்படவில்லை என்று உதாசீனப்படுத்தப்பட்டாள்: ஆனாலும்கூட ‘எனக்கு உதவும்’ என்று நாயினும் கீழாக கெஞ்சி, விசுவாசத்தால் சாதிக்கிறாள்! இத்தகைய அவளுடைய பண்பு நமக்கெல்லாம் பாடம்! நாமும் நம்முடைய எஜமானரான இறைவனை விட்டு ஒருபோதும் விலகாதிருக்க வேண்டும்.

ஆறாவதாக, நாய் பூமியில் தாழ்ந்த இடத்தையே பொருத்திக் கொள்ளும்! நம்மூர் பழமொழியொன்று ‘ நாயைக் கொண்டு நடு வீட்ல வச்சாலும் அது நக்கிதான் குடிக்கும்’ என்பார்கள்! நாய் சாக்கடை, திண்ணை, ஈரப்பதம் நிறைந்த இடம் என்று தனக்கென்று ஒரு சில இடத்தை மட்டரகமான இடத்தை மட்டுமே தீர்மானித்து குடியமரும்! இது தாழ்ச்சியின் அடையாளம்! பணிவின் சிறப்பு! ‘உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும் (மத் 20~26) என்று சொன்ன இயேசு, ‘நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்று பாதங்களை கழுவுகிறார். தாழ்ச்சியும் விட்டுக்கொடுத்தலும் கிறித்தவத்தின் முகவரியாகும். நாமும் தாழ்ச்சியுள்ளோராக இருப்போம்!

ஏழாவதாக, நாய்.. அதோட இடத்தை வேறொன்று ஆக்கிரமித்துக்கொண்டால் அது வேறு ஒரு இடத்திலே போய் படுத்துக்கொள்ளும்: விட்டுக்கொடுக்கும். இது இறைநாட்டமுள்ளோரின் பண்பு. நாய் படுத்திருக்கிற ஈரப்பதம் நிறைந்த இடத்தை கோழி ஆக்கிரமித்து தன் குஞ்சுகளோடு வந்து சீய்க்கிறது என்று சொன்னால் நாய் வேறொரு இடத்திலே போய் படுத்துக்கொள்ளும். இறைவனை நாடுகிறவர்கள், ‘இறைவனே கதி’ என்று நினைப்பவர்கள், ‘ எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார்’ என்று இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, எதிரிகளுக்காக விட்டுக்கொடுத்து, அன்றாட வாழ்க்கையை வாழ்வார்கள்! இது இறைநாட்டமுள்ளோரின் நற்பண்பு.அப்பண்பு நமதாக வேண்டும்.

எட்டாவதாக, ஒரு நாயை எத்தனை தடவை விரட்டி அடித்தாலும், அதன் முன்னாடி, ஒரு ரொட்டித்துண்டைக் காட்டினால் நட்பால் வருமே ஒழிய, வினயத்துடன் - பழி வாங்கும் மனதுடன் வரவே வராது. இது பக்திமான்களின் நற்பண்பாகும். கானானேயப் பெண் எத்தனை முறை விரட்டி அடிக்கப்பட்டாலும் மனந்தளராமல் ஆண்டவரைப் பின்தொடர்ந்து, ‘ அம்மா! உமது நம்பிக்கைப் பெரிது, நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்’ என்று ஆண்டவர் சொன்னவுடனே, அவள் ‘என்னை அவமானப்படுத்தின நீர் செய்யும் புதுமை எனக்கு வேண்டாம்’ என்று மறுப்பேதும் சொல்லாமலும், ஆண்டவரை எதிர்த்துப் பேசாமலும், மகளின் பிணி நீங்க ஒத்துழைக்கிறாள். இவள் சிறந்த பக்திமான். அப்படியே நடுவர் கண்டுகொள்ளாதபோதும் தொடர்ந்து தொந்தரவு செய்து தனக்குரிய நீதியை வென்றெடுக்கிறாளே ஏழைக் கைம்பெண், அவளும் சிறந்த பக்திமான்! (லூக் 18~5). நாமும்; இறைவன் நம்முடைய வேண்டுதலுக்கு செவிசாய்க்காத போதும், காலம் தாழ்த்துகிறபோதும் மனங்கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். என்வேண்டுதல் கேட்கப்பட வில்லை என்று ஞாயிறு திருப்பலிக்கு வராமல் இருப்பது நல்லதல்ல. நல்ல பக்தியுள்ளவர்களாக வாழ வேண்டும்.

ஒன்பதாவதாக, நாய் உணவைக் கண்டால், அது தொலைவில் அமர்ந்து வழிபார்த்துக் கொண்டிருக்கும். இது ஏழைகளின் நற்பண்பாகும். உணவைக் கண்டவுடனே, விரைந்துச் சென்று உண்டுவிட நினைக்காது: இடம், பொருள், ஏவல் அறிந்து அது செயல்படும். எப்படி அந்த இடத்தை அடைவது? எதிரிகள் எங்கேயாவது இருக்கிறார்களா? என்று சிந்தித்த பிறகே செயல்படும். இது ஏழைகளுக்குரிய குணம். பொருளைத் திருடுவது என்று இங்கு அர்த்தம் கொள்ள கூடாது. அது இலவசமாக கிடைக்கிறது. அதனை அடைய ஏக்கம் கொண்டிருப்பது ஏழைகளுக்குரிய பண்பாகும். இலவச வேட்டி-சேலை (இலவச டி.வி!), இலவச அரிசி எங்கு கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொண்டு, அதற்கேற்ப ஆஜர் ஆவார்கள். அன்னதானம் எங்கு,எப்போது நடைபெறுகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். இது ஏழைகளுக்குரிய பண்பு. அடுத்தவரைச் சார்ந்திருக்கிற பண்பு. (பொதுவாக எல்லோருமே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்பது உண்மை). ஆகையால் தான் ஆண்டவரும் ‘ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத்5~3) என்று பாராட்டுகிறார். ஏழை லாசர் இறந்த பிறகு ஆபிராமின் மடியில் கொண்டுபோய் சேர்க்கப்படுவதுகூட அவன் வாழ்நாளில் இறைவனைச் சார்ந்திருந்தார் என்பதற்காகதான் (லூக் 16:22).

இறுதியாக, நாய் ஒரு இடத்தைவிட்டு கிளம்பி விட்டால், அது மீண்டும் அந்த இடத்தைத் திரும்பி பார்க்காது. இது விசாரமுள்ளவர்களின் குணம். தெருநாய் என்று சொல்கிறோமே, அத்தனை நாய்களும் வீட்டில் வளர்ந்த நாய்கள்தான். ஒருமுறை அது வீ;ட்டைவிட்டு கிளம்பிவிட்டால் அது மீண்டும் வீட்டிற்கு வராது. விசாரமுள்ளவர்கள் - கவலை உள்ளவர்கள் என்று சொல்லும்போது, நாமும்கூட விண்ணக திருப்பயணிகளாக இருக்கிறோம். ஒருமுறை இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டால் மீண்டும் நாம் இங்கு பிறக்கபோவதில்லை: ஆகையால் பெறப்போகும் விண்ணக வாழ்விற்கு மண்ணக வாழ்வு வழி ஏற்படுத்தி தரவேண்டும்: விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைப்பதென்பது இதுதான் (மத்6:19-20).

மேற்கண்ட (நாயின்) பத்துப் பண்புகளையும் நமதாக்கி, வாழ முற்படுவோம்!