இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு

இறைவனை நம்பி மனவுறுதி மிக்கவர்களாக

1 அர 19:9,11-13
உரோ 9:1-5
மத் 14:22-33

1960 ஆம் ஆண்டு! கோடை வெயில் கொளுத்தி எடுக்க பகலில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாமல் திணறியது ரோம் மாநகரம்! கடைசியில் ராணுவ வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி வர இரவில் மாரத்தான் போட்டியை இரவில் நடத்தியது. இப்படி பகலில் வெயில் கொடுமையை தவிர்க்கவே மாலையில் போட்டியை நடத்தியது. அதில் வெறும்காலுடன் ஓடி தங்கம் வென்று சாதனை படைத்த வீரர்தான் ஆப்பிரிக்காவின் அபெபெ பிகிலா.

கடைசி சில மைல்களில் இருவர் மட்டுமே ஒடுகளத்தில் ஓடிக்கொண்டிருந்தனர். ஒருவர் அபெபெ பிகிலா: இன்னொருவர் மொராக்கோவின் ராடி பென் அட்பெஸ்ஸம். கடைசியில் பரபரப்பாக இறுதி 26 வினாடிகள் வித்தியாசத்தில் அட்பெஸ்ஸம்த்தை தோற்கடித்து தங்கம் வென்றார் பிகிலா.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார். அது உலக சாதனையாகவும் அமைந்தது, வெறும் 2 மணிநேரம் 15 நிமிடம் 16 வினாடிகளில் கடந்து இச்சாதனையை அவர் மேற்கொண்டார். அங்கிருந்தவர்கள் பிகிலாவிடம் ‘ வெறும் காலுடன் ஏன் ஒடினிர்கள்? என்று கேட்டபோது, பிகிலா, ‘எத்தியோப்பியர்கள் மனஉறுதியால் மட்டுமே வெல்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவே அப்படி ஒடினேன்’ என்றார் பொறுமையோடு.

இடையில் நோய்வாய்ப்பட்டாலும், அதையும் வென்று, அடுத்து ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்ற முதல் வீரர் என்ற புகழையும் பெற்றார் அபெபெ பிகிலா! வெறும் காலுடன் மாரத்தானில் ஓடி தங்கம் வென்று மனவுறுதியால் மகுடம் சூடியவர்: மனவுறுதிக்கு இலக்கணம் வகுத்தவர் இந்த பிகிலா நமக்கெல்லாம் நல்ல பாடம்!

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மனவுறுதி மிகவும் அடிப்படை! தொடர்ந்து போராட வேண்டிய ஆற்றலை மனவுறுதியும் இறைநம்பிக்கையும்தான் அளிக்கிறது என்பது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர்களின் பாடம்! இறைநம்பிக்கையின்றி தன்னம்பிக்கை வளர்வதில்லை: தன்னம்பிக்கையின்றி இறைநம்பிக்கை வலுப்பெறுவதில்லை.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வரும் துன்பங்களைக் கண்டு தப்பித்து ஓட நினைப்பவர்களே இவ்வுலகில் மிக அதிகம்! ‘ துணிந்து நில்! போராடு!’ என்று தாரக மந்திரத்தை கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவே!

கிலி பிடித்த எலியா

எலியா இறைவாக்கினர் பழைய ஏற்பாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க இறைவாக்கினர்: செல்வாக்கு மிக்க இறைவாக்கினர். யாவே இறைவனுக்கெதிராக, அதிகாரத்தை மட்டுமே பலமாகக் கொண்டு செயல்பட்ட அரசி ஈசபேலை துணிந்து எதிர்த்தவர். ‘வந்துபார்’ என்று சொல்லி பாகால் தெய்வத்தை வழிபடும் 150 பொய்வாக்கினர்களை அழைத்து சவால் விட்டு, அவர்களுக்கு எதிராக தனியொரு ஆளாக நின்று, உண்மையான தெய்வம் யாவே என்பதை நிருபித்து அனைவரையும் கண்டதுண்டமாக வெட்டி, மனவுறுதியோடு இறைவனின் போர்வாளாக போராடியவர்(1அரச18). ஆனாலும்கூட ஈசபெல் அரசி, தன்னைக் கொல்ல தேடுகிறாள் என்றவுடன் தப்பியோடி தலைமறைவு வாழ்க்கை வாழ முற்படுகிறார். ‘இறைவன் தன்னோடு இருக்கிறார்’ என்பதை உணராமல் ஓடி ஒளிந்து உயிர்பிழைக்க நினைக்கிறார். இதைத்தான் இன்றைய முதல்வாசகம் நமக்கு விளக்குகிறது.

ஒருவேளை எலியா ஓரேபு மலையை அடைந்தாலும் இன்னும் இறைவன் இல்லாத பள்ளத்தாக்கில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரைக் கைவிடாத இறைவன் அவரோடு அளவளாவுகிறார்: இறைவன் தந்த உணவினால் பலமடைந்தவர், இறைவனின் உடனிருப்பை உணர்கிறார். சுழற்காற்று.. நிலநடுக்கம்.. தீ.. என்று இறைவனின் பிரசன்னத்தை தேடி இறுதியில் ‘மெல்லிய ஒலி’ கண்டடைந்து ஊக்கம் பெறுகிறார். இங்குதான், இறைவனில் ஐக்கியமாகும்போதுதான் வாழ்வின் துன்பங்கள் வலுவிழக்கின்றன. புதிய எழுச்சி, புதிய நம்பிக்கை, புதிய விடியலைக் கண்டு.. வாழ்க்கையின் துன்பங்களை எதிர்கொள்ள வலிமைப் பெறுகின்றார். வந்த வழியே தமஸ்குச் செல்ல துணிச்சலை அடைகின்றார் (1அரச19:15).

துணிவு இல்லாத மக்களினம்!

இன்றைய நற்செய்தி மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஐந்து அப்பங்களைப் பலுகச் செய்து தன் ஆற்றலை எண்பித்த இறைமகன் இயேசு தண்ணீரின் மேல் நடந்து வருகிறார். இதன் மூலம் விசுவாச வாழ்வுக்கும் மனவுறுதி நிறைந்த வாழ்க்கைக்கும் அழைக்கிறார். இன்றைய நற்செய்தி கடல் மீது நடப்பதற்கு முன்பு என்ன நிகழ்ந்தது என்பதை விலாவாரியாக விளக்குகிறது. அப்பங்களையும் மீன்களையும் வயிறார உண்ட மக்கள் இல்லம் திரும்புகின்றனர்: இயேசு செபிக்க தனியே மலைமீது ஏறுகிறார்: சீடர்கள் படகேறி அக்கரைக்குச் செல்ல பணிக்கப்படுகின்றனர். இது இரவு நேரம். எதிர்காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

இருளும் எதிர்காற்றும் கொந்தளிக்கும் கடலும் மிகவும் குறிப்பிடத்தக்கன. வாழ்க்கையின் எதார்த்தங்களை இவை அடையாளப்படுத்துகின்றன. வாழ்க்கை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் எதார்த்தத்தை படம்பிடித்துக்காட்டுகின்றன. இருள் என்று சொன்னாலே பயம் மற்றும் பாதுகாப்பின்மையைக் குறிக்கும். எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை! இந்நிலையில் எதிர்காற்று என்பது துன்பத்தின் உச்சம்! அலையால் கடல் கொந்தளிக்கிறது. ‘துன்பத்திற்குமேல் துன்பம் என்பார்களே’ - அந்த கையறுநிலை. அதில் வேறு ஆண்டவர் இல்லாமல் இருப்பதும் பயத்திற்கு மேல் பயத்தைக் கொணர்கிறது.

மனத்துணிவு என்பது யாரிடமும் இல்லை. எதிர்காற்றை எதி;ர்த்து படகை செலுத்த திராணியில்லை: இருளிலே, வெளிச்சம் தெரிகிற கரையை நோக்கி தன்னம்பிக்கையோடு படகைச் செலுத்த மனத்துணிவு துளியும் இல்லை. இப்படிதான் பலரும் வாழ்க்கையிலே நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். ‘பக்திமான்- எனக்குப் போய் இப்படி நேர்ந்துவிட்டதே!’, ‘தினமும் குடும்ப செபம் சொல்லுகிறோம்: கோயில்கோயிலாய் சென்று செபிக்கிறோம். ஆனால் இறைவன் எங்களுக்கு மேன்மேலும் துன்பத்தைக் கொடுக்கிறாரே’ என்று நொந்துக்கொள்பவர்கள் ஏராளம்: தாராளம். ‘இனி வாழ்வதில் அர்த்தமில்லை’ நான் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?’ என்று மனஅழுத்தத்தில்தற்கொலைக்குகூட முயல்பவர்களை நம் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பார்க்கிறபோது மன வேதனை மேலிடுகிறது.

பேதுருவைப் போல துணிச்சல் மிக்கவர்களாக!

‘இறைவா! எனக்கு ஏன் இந்த சோதனை என்று நொந்துக்கொள்பவர்களுக்கு இவ்வுலகில் பஞ்சமில்லை. ஆனாலும்கூட பேதுருவைப் போல துணிச்சல் மிக்கவர்கள் திருச்சபைக்கு வேண்டும். எதையும் இவர் யோசிக்காமல் செய்தாலும் இவருடைய துணிச்சல் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் தேவை: அது கெத்சமேனியில் தலைமைக்குருவின் பணியாளரைத் தாக்கி வலக்காதை வெட்டியபோதாக இருந்தாலும் சரி, அல்லது ஆண்டவரை தனியே அழைத்து எருசலேமுக்கு போகவேண்டாம் என்று கெஞ்சியபோதாக இருந்தாலும் சரி, அல்லது ஆண்டவரே நீர்தான் என்றால் தண்ணீரில் இறங்கி கடல் மீது நடந்ததாக இருந்தாலும் சரி.. அவருடைய துணிவு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டும்.

இருளாயிருந்தால் எனக்கென்ன? எதிர்காற்று அடித்தால் எனக்கென்ன? இன்னும் ஒருபடி மேலே போய், ‘ அது பேயாக இருந்தால் எனக்கென்ன? ‘இறைவன் இருக்கிறார்’ என்ற மனத்துணிவு பேதுருவிடம் இருந்தது, ஆகையால் நீ பாறை என்று உறுதிக்கு மனவுறுதிக்கு எடுத்துக்காட்டாக இயேசுவே அவரை முன்னிறுத்துகிறார்.

ஆகையால் நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு நாசூக்காக சீடர்களிடம் அச்சம் தான் அனைத்திற்கும் ஆணிவேர் என்றறிந்து, அவர்களிடம் ‘துணிவோடிருங்கள்! நான்தான். அஞ்சாதீர்கள்’ என்று எடுத்தியம்புகிறார். நான்தான் என்பதுகூட துணிச்சலுக்கான சொல்லடலே! மனதில் ‘தில்’ இருக்கிறவராக கெத்சமேனியில் ஆண்டவர் இயேசுவே ‘நான்தான்’ என்று கோழைகளைப் பார்த்து வீரனாக சொல்கிறார்(யோவா 18~8). தன்னிடம் ஒப்படைத்தவர்கள் யாரையும் இழக்க விரும்பாத இயேசு(யோவா18~9) பேதுருவை இழக்க விரும்பவில்லை. ஒருதாய் தன் பிள்ளையை அழைப்பதுபோல ‘வா’ என்று அழைக்கிறார். இது விசுவாச நடைபயணம்! ஆனாலும்கூட ...

இதுதான் மனித பலவீனம்! பெருங்காற்று அடிப்பதைக் கண்டவுடன் படகைப் போல ஆடிப்போன பேதுரு.. ‘ஆண்டவரே! என்னைக் காப்பாற்றும்’ என்று அலறுகிறார். இறைவனும் தன் உடனிருப்பை முன்னிறுத்தி, கையை நீட்டி காப்பாற்றுகிறார். முழுமையான சரணாகதி அடைகிறபோது இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். காற்றையும் கடலையும் கடிந்துகொண்டவர், இவரைக் கடிந்துகொள்வதற்கான காரணம் கூட ‘ ஆண்டவரே நீர்தாம் என்றால்.. என்று நடக்க ஆரம்பித்தவர்.. இயேசுவை நெருங்காமல் தண்ணீரில் முழ்க தொடங்குகிறபோதுதான். ஐயம் அவரை ஆட்கொள்ள, ஆண்டவரை விட்டுவிட்டார்: விசுவாசத்தில் தளர்ந்துவிட்டார். துன்பம் நம்மை ஆட்டுவிக்கிறபோது, பெரும்பாலோனோர் இறைவனை நினைப்பார்கள்: செபிப்பார்கள்: ஆனால் முழுமையான சரணாகதி அடையமாட்டார்கள். முழுமையான சராணகதி இறுதியிலே’ உண்மையாகவே நீர் இறைமகன்;’ என்று எல்லோரும் பணிந்து சொல்வதில் அடங்கியிருக்கிறது.

ஒரு குரு சீடர்களிடம் போதித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு சீடன் துடுக்காக, நாம் விழிப்புணர்வு அடைவது எப்படி? என்று கேட்டான். அது நம்மை இறைமையால் நிறைத்துக்கொள்ளும் போது நிகழ்கிறது’ என்றார் குரு. புரியவில்லை என்று பதிலளித்தான் சீடன். சல்லடையில் தண்ணீரை நிரப்புவது போன்ற முயற்சி என்று மேலும் விளக்கமளித்தார் குரு. சீடர்கள் அனைவரும் சல்லடைகளைக் கையிலேந்தி தண்ணீரை நிரப்ப முயற்சி செய்தார்கள். ஊற்ற ஊற்ற தண்ணீர் கீழே வழிந்தோடியது. சரி! இது முடியாத காரியம் என்றுதான் குரு இதனை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்போலும் என்று நினைத்தார்கள் சீடர்கள். குருவிடம் சென்று, ‘சல்லடையை நீரால் நிரப்பவே முடியாதே! என்று கவலையுடன் நின்றார்கள். ஏன் முடியாது? சல்லடையை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று பணித்தார் குரு. சல்லடையைத் தூக்கி ஆற்றில் எறிந்தார். சல்;லடை நீரில் முழ்கியது. இப்போது பாருங்கள்! சல்லடை நிரம்பி விட்டது. உங்களைத் தூக்கி இறைமைக்குள் எறியுங்கள். நீங்கள் நிறைந்துவிடுவீர்கள்: அப்படிச் செய்தால் இறைமை நமக்குள் துளிர்க்கும்: கடவுள் மறுபடி உயிர்த்தெழ முடியும் என்றார்.

ஆண்டவரே நீர்தாம் என்றால் நாமும் இறைமைக்குள் மூழ்கும் போது எந்த கவலையும் நம்;மை அழுத்தாது, ‘வா’ என்று அழைத்த கடவுள் நம்மை வாடிப் போக விடமாட்டார்: ஒருபோதும் கைவிடமாட்டார். துணிவோடிருங்கள் என்று சொன்னவர் நம்மை தொலைத்துவிடமாட்டார். நம்மை என்றும் காப்பார். புனித பவுலடியார்கூட இதனைத்தான் செயலாக்கம் செய்தார். துன்பத்தின் மத்தியிலும் துணிவோடிருந்தார்: நடையை மட்டும் முடிக்கவில்லை: ஓட்டத்தையே வெற்றியோடுமுடித்தார்: வெற்றி வாகைச் சூடினார். ஆகையால் நாமும் காக்கும் கரமாக, இறைவன் என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன், மனத்துணிவோடு வாழ்வில் வருகின்ற துன்பங்களை எதிர்த்துப் போராடுவோம்! வெற்றி நமதே!

‘நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. 2 திமொ.4:7-8