இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு

எதைத் தேடுகிறீர்கள்? எதை விற்கப் போகிறீர்கள்?

1 அர 3:5,7-12
உரோ 8:28-30
மத் 13:44-52

சென்னையில் ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரியம் ஜீவன் குமார், சற்றே வித்தியாசமான இளைஞர். எப்போதும் புன்முறுவல் தவழும் முகம்: ஒடியாடி சுறுசுறுப்பாக வேலைச் செய்யும் மனம் அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஒருநாள் அவருடைய டேபிளுக்கு வந்த கலைக்கல்லூரி மாணவர்கள் கெமிஸ்ட்ரி பாடத்தைப் பற்றி, பேசி, ஒரு சந்தேகம் தீரமால் குழம்பிப்போய் திண்டாடினார்கள். இதனைப் பார்த்த, ஜீவன்குமார், ஒரு பேராசிரியரைப்போல, லாவகமாக, அவர்களுக்கு விளக்கினார். மாணவர்கள் கைத்தட்டி தங்கள் பாராட்டுக்ளைத் தெரிவித்தனர். கல்லாவில் இருந்த ஹோட்டல் முதலாளி, ஓடிவந்தார். அப்போதுதான் அவருக்கே தெரியவந்தது தன்னிடத்தில் சம்பளம் வாங்கும் ஜீவன்குமார், எம்எஸ்சி, எம்ஃபில், முடிச்சுவிட்டு, பிஹெச்டி படிக்க சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்; என்று. இவர் நேர்மையானவர், கஸ்டம்மர்கள் தருகின்ற டிப்சில், இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தவிடுவாராம்.

ஜீவன்குமார், கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள, கன்னை கிராமத்தில் மரிய ஜோசப்- சிறும்பாயி கலப்புத்திருமண தம்பிதியினருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு சகாய மேரி என்ற தங்கையும் உண்டு. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ முடித்த பிறகு திருச்சி ஈவேரா கல்லூரியில், பிஎஸ்சி கெமிஸ்ட்ரி எடுத்துப்படித்தார்: பிற்பட்டோர் விடுதியில் தங்கி படிப்பை முடித்தார். எம்எஸ்சி படிக்க சிரமமேற்பட்டது. ஆகையால் தொடர்ந்த ஒரு தனியார் கம்பெனியில் வேலைச் செய்துகொண்டே, நேஷனல் கல்லூரியில் தன் கெமிஸ்ட்ரி படிப்பைத் தொடர்ந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை, திரு.மரிய ஜோசப் நோய்வாய்பட்டு, எம்எஸ்சி முதலாம் ஆண்டில் இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கு பத்து நாட்கள் முன்பாக இறந்துபோனார். மனந்தளராமல் தேர்வெழுதி வெற்றியும் பெற்றார். இரண்டாம் ஆண்டில் எதிர்பாராத விதமாக, அவருடைய தாயும் முற்றிய நிலையில், புற்று நோய்க்குப் பலியானார். ஒரே தங்கை அப்போது தங்கை சகாய மேரி பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தார். ஆகையால், படிப்பைத் தொடராமல், ஆங்காங்கே, வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றினார்.

சில மாதங்களுக்குப் பிறகு அனைத்துப் பாடங்களையும் எழுதி 67 விழுக்காட்டோடு தேர்ச்சிப்பெற்றார். தொடர்ந்து, Chemical Kinetics என்ற ‘வேதியியில் வேதிவினை’ என்ற தலைப்பில் எம்.ஃபில் படித்தார். பிஹெச்டி படிக்க பணம் பத்தாத நிலையில், வெளியே தெரிந்தால் வேலை தரமாட்டார்கள்: அல்லது பழக மாட்டார்கள் என்ற நினைத்து, உண்மையை யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்தார். அங்குதானே உணவும் தங்குமிடமும் இலவசம். உயர்ந்த லட்சியத்திற்காகவும், உன்னத நோக்கத்திற்காகவும், உழைத்துக்கொண்டிருக்கிற இவர், நல்முத்தைத் தேடுகின்ற நல்வணிகர்: மறைந்திருக்கும் புதையலை நாடுகின்ற நல்மனிதர்: வலையில் அகப்பட்ட நல்ல மீன் போல என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்.

நான் துன்புறுத்துவது இயேசுவையே என்பதை கீழே விழுந்த பிறகு அறிந்து, அந்த இயேசுவை இவ்வுலகில் வாழ்விக்க , தன்னை இழந்து, துன்புற்று புறவினத்தாருக்கெல்லாம் அஞ்சாமல், துஞ்சாமல் நற்செய்தி அறிவித்த புனித பவுல், ஒருவன் உலகமெலாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன என்று அறிந்து தன்னை இறைவனின் பணிக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட புனித பிரான்சிஸ் சவேரியார், தலை வெட்டப்பட்டாலும் தனக்கு கவலையில்லை என்று இறைவனுக்கு பணிபுரிவதே என் பெருமை என்று மறைசாட்சியாக மரித்த பொதுநிலையினரின் பாதுகாவலரான புனித தாமஸ் மூர், தன் நண்பனுக்கான தன் இன்னுயிரை ஈந்த புனித மாக்சிமில்லியன் கோல்பே.. இயேசுவை ஆதாயமாக்கிக் கொள்ள தன்னைக் கொல்ல அனுமதித்த தமிழகத்தின் தேவசகாயம் (பிள்ளை) .. இவர்களெல்லாம் நல்முத்துக்களைத் தேடி அடைந்த பெரும் வணிகர்கள், புதையலைக்கண்ட புண்ணியவான்கள்: வலையில் அகப்பட்ட நல்ல மீன்கள்.

இதற்கெல்லாம் என்ன செய்யவேண்டும்? இலக்கு என்ன என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆகையால் தான் ‘எதைத் தேடுகிறீர்கள்? எதை விற்கப்போகிறீர்கள்? என்று கருத்தின் கீழ் சிந்திக்கிறோம்.

எதைத் தேடுகிறீர்கள்?

ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேடல் மிக அவசியம். அந்த தேடல் புதையலாக இருக்க வேண்டும்: நல்முத்தாக அமைய வேண்டும். தேடலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகைத்தேடல், இருப்பதை இழந்த பிறகு தேடுவது. இரண்டாவது இல்லாததைச் சொந்தமாக்கிக்கொள்ள தேடுவது. முதல்வகைக்கு நல்உதாரணம் காணமல் போன நாணயம் (உவமை). அவர் கொண்டிருந்ததை இழந்துவிட்டார்: ஆகையால் விளக்கேற்றி தேடுகிறார். காணாமல் போன ஆடும் அப்படியே! ஆனால் இரண்டாவது வகைத் தேடல், உயர்ந்த லட்சியத்திற்கானது. கொண்டிருப்பதைவிட உயர்ந்த ஒன்றை அடைய தேடுவது. இது இன்றைய நற்செய்திக்கு முற்றிலும் பொருந்தும். அதனை எப்பாடு பட்டாவது அடைய வேண்டும் என்று உந்துதலோடு செயல்பட தோன்றும்.

புதையல் தனக்குரியதும் அல்ல: தன்நிலத்திலும் இல்லை. ஆனால் அதனை எப்பாடுபட்டாவது அடைந்திட முயற்சிக்கிறார். நல் முத்தும் கூட அப்படிபட்டதுதான். ஒரு வணிகர் தன்னிடம் எண்ணற்ற முத்துக்களைக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவற்றைவிட மேலான, விலையுயர்ந்த முத்தைத் தேடுகிறார். இந்த தேடலுக்கு முடிவு இருப்பதாக தோன்றவில்லை. சாதாரண முத்தைவிட சிறந்த நல்முத்து: அந்த நல்முத்தைவிட மிகச்சிறந்த முத்து.. என தேடல் தொடரலாம்.

பட்டத்து இளவரசர் சாலமோனிடம் இவ்வுலகச் செல்வங்களில் இல்லாததொன்றுமில்லை: ஆனாலும்கூட அவர் தேடல் உயர்வானது: உயர்ந்த லட்சியத்திற்கானது. ஆகையால்தான் இறைவனே மறுப்பேதும் சொல்லாமல் சாலமோனை மெச்சுகிறார்: அவருக்கு நிகராக, எவரும் இல்லாத வண்ணம், தேவையான ஞானத்தைக் கொடுத்து ஆசிர்வதிக்கிறார்.

எதை விற்கப்போகிறீர்கள்?

இங்கே இழப்பதென்பதும் விற்பதென்பதும் கட்டாயம். இழக்காமல் நம்மால் பெற இயலாது. ஒருவரிடம் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்கி, எதிர்காலத்தில் அதனை அவரிடமே ஈட்டின்பேரில் இழப்பதைவிட, நாம் நமக்கென்று கொண்டிருக்கிற சொத்துக்களை விற்றாவது விலைமதிப்பற்றதை (புதையலை, நல்முத்தை) பெறல் வேண்டும். அதைத்தான் நல்வணிகரும், விவசாயியும் செய்கின்றனர். ‘யாவற்றையும் விற்று’ என்ற சொல்லாடல் இருவருக்குமே நற்செய்தியில் இரண்டுமுறை பயன்படுத்தப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இது வயலில் விளைவது அல்ல: மாறாக கொடையாக கொடுக்கப்படுவது (புதையல்). இது இறைவனின் கொடை. இதனை அடைந்திட வேண்டும். அந்த கொடைக்கு நன்றிக்குரியவர்களாகத் திகழவேண்டும்: அதிலிருந்து லாபம் அடைய முற்படவேண்டும். அங்கே யாவற்றையும் விற்பதென்பது ஒரு தியாகம்: இது தானாக நிகழவேண்டும். அடுத்தவருடைய வற்புறுத்தலால் நிகழக்கூடாது. ஆகையால்தான் ஆண்டவர்தாமே, இன்றைய நற்செய்தியில், ‘இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா? என்று கேட்கிறார். காரணம், தனிமனித ஈடுபாட்டோடு, ஒத்துழைப்போடு நிகழ்ந்திடும் நிகழ்வு!

விண்ணரசை அடைந்திட என்ன செய்யவேண்டும்?

முதலில் இலக்கினைத் தீர்மானிக்கவேண்டும்: இரண்டாவதாக அந்த இலக்கினை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும்: மூன்றாவதாக, இலக்கினை அடையும் போது வரும் இடர்களைத் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெற்றிப் பெற வேண்டும்.

இலக்கை தீர்மானிப்பது மிகவும் முக்கியம். கிறித்தவர்கள் உலகிற்கு உப்பாக, ஒளியாக, புளிக்காரமாக வாழ அழைக்கப்பட்டவர்கள். ஆகையால் இவ்வுலகில் கரைந்து காணாமல் போகக் கூடாது. புதையலை, நல்முத்தைக் கண்டடைய வேண்டியவர்களே காணாமல் போவது வருத்தத்திற்குரிய செயலாகும். ஆகையால் நாம் உயர்ந்த லட்சியங்களோடு உன்னத வாழ்க்கை வாழ வேண்டும். ‘யாவற்றையும் விற்று’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வேண்டும். இலக்கை நிர்ணயித்த பிறகு கொண்டிருப்பதை இழக்க தயராயிருக்கவேண்டும். புனித பவுல் நல்லுதாரணம். ‘உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன். (பிலி. 3:8) என்கிறார்.

ஆணவம் இருந்தால் அதனை இழக்கவேண்டும்: ஈகையில்லா உள்ளமிருந்தால் அதனை இழக்க வேண்டும்: அன்புசெய்யாத மனமிருந்தால், மன்னிக்காத மனநிலையிருந்தால்.. அத்தனையையும் இழந்து விண்ணரசை அடைய முயன்றிட வேண்டும். புனித பவுல் உரோ. 14~17 இல் குறிப்பிடுவதைப்போல் இறையாட்சி (விண்ணரசு) என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. விழுமியங்கள்தான் வி;ண்ணரசின் வேர்களாக இருக்கின்றன. மேலும் புனித பவுல் 1கொரி 6~9 இல் இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது என்பார். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நாம் விண்ணரசை அடைய முற்படவேண்டும். ஆகையால்தான் விண்ணரசில் மிகப்பெரியவர் என்று திருமுழுக்கு யோவானைப் பாராட்டுகிறார். அன்றாடம் கிறித்துவின் விழுமியங்களுக்காக வாழ்ந்து தன் வாழ்வை தியாகமாக்கியவர் அவர். ஆகையால் தான் கிறித்துவாலே பாராட்டப்படுகிறார் (லூக் 7~28).

ஆண்டவரும் அறிவார்ந்தவராக, மிக அழகாக, இறையாட்சி கண்களுக்கு புலப்படும் முறையில் வராது என்று என்று அறிவித்துவிட்டு, உங்கள் நடுவே செயல்படுகிறது என்கிறார்(லூக்17~20,21). கிறித்தவ மதிப்பீடுகள் செயலாக்கம் பெறும்போது விண்ணரசு மலர்ந்தே தீரும். கடந்த வாரத்தில் கடுகு விதை, புளிக்காரம் என்று சொன்ன ஆண்டவர், மறைந்திருக்கிற புதையலோடும் தென்படாத நல்முத்தோடும் ஒப்பிடுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. கடுகுவிதை, புளிக்காரம் இவையெல்லாம் வெளிப்படையானவை, மறைந்திருக்கிற புதையல், தென்படாத நல்முத்து உள்ளார்ந்தவை. உங்கள் நடுவே என்பது இதுதான். செயல்பாடு நமதாக வேண்டும். அடைந்திட இழக்க தயாராயிருக்க வேண்டும்.

உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! ; என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது (யாக். 2:8)