இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு

இறையாட்சி மண்ணில் மலர..

சாஞா 12: 13, 16-19 உரோ 8:26,27 மத் 13:24-43

ஆங்கிலேய அரசு 1922-ல் மகாத்மா காந்திக்கு தண்டனை விதித்துச் சிறையில் அடைத்தது. இந்த முறை, அவா ஆறு ஆண்டுகாலம் சிறையில் இருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் காந்திஜியைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர் சிறையிலுள்ள எல்லா கைதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் ஆகையால் தீவீரமான கண்காணிப்பு அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஆகையால் பிரி;ட்டிஷ் அரசின் பரம எதிரியான காந்திஜி தன்னுடைய சத்தியா கிரஹ -அகிம்சை – கொள்கையை எடுத்துரைக்காத வண்ணம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் சிறைக்கண்காணிப்பாளர் உறுதியாக இருந்தார்.

இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே காந்திஜியைப் போற்றி வணங்கினர். இந்த நிலையில், அவருக்கு உதவியாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது? தீவிரமான யோசனைக்குப் பிறகு, கண்காணிப்பாளர், இந்திய மொழிகளுள் எதையுமே அறியாத ஒர் ஆப்ரிக்க கைதி ஒருவரை நியமித்தார். காந்தியால் அவரை ஒன்றுமே செய்து விட முடியாது என்று நம்பினார். அந்த நீக்ரோதான் காந்திஜியின் உதவியாளராக இருந்தார்.

ஒருநாள் அந்ந ஆப்ரிக்க கைதியை தேள் கொட்டிவிட்டது. அவர் வலியால் துடியாய் துடித்துக்கொண்டு காந்திஜியிடம் ஓடி வந்தார். வாய் திறந்து எதுவும் பேச முடியாமல் தேள் கொட்டிய இடத்தை காட்டுவதற்காக தன் கையைத் தூக்கினார். அடுத்த நொடியே காந்திஜி அவருடைய கையை எடுத்து விஷத்தை உறிஞ்சி, வெளியேற்றினார். பிறகு பாபுஜி அவருக்கு தனக்கு தெரிந்து கை வைத்தியத்தைச் செய்து வலியை போக்கினார். அந்த ஊழியக்காரரான நீக்ரோவுடைய பணிவிடையை அனுபவிக்க வேண்டிய காந்திஜி அவருக்கே ஒரு ஊழியராகி பணிவிடை செய்தார். அந்த ஆப்ரிக்க கைதி அதுவரை, அவரை அன்பு செய்த ஒரு ஆத்மாவை பார்த்ததேயில்லை. அவர் அன்றுமுதல் காந்திஜியின் அஹிம்சையைக் கடைப்பிடிக்கும் சத்தியா கிரஹியானார். அகிம்சையின் ஊழியரானார். ஒருகாலத்தில் களை என்ற அறியப்பட்டவர் இன்று பயிராக பலன் தருகிறார்.

மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் உதய் நகர்- மிர்சாபூர் பகுதிகளில் பழங்குடியினர் மத்தியில் பணி செய்த அருட்சகோதரி ராணி மரியாவை 1995 இல் ஒடுகின்ற பேருந்திலிருந்து விழத்தாட்டி கொலைச் செய்தவர்தான் சமதார் சிங்! அதற்காக ஆயுள்தண்டனைப்பெற்று இந்தூர் சிறையில் கைதியாக இருந்தார். ராணிமரியாவின் தங்கை,அருட்சகோதரி செல்மி பால், அவருடைய தாய் தந்தை ஆகியோர் காட்டிய அன்பாலும் மன்னிப்பாலும் மனம்மாறி, அண்மையில் விடுதலையாகி உறவினர்கள் மனைவி தன்னை கைவிட்ட நிலையிலும் திருமுழுக்குப் பெற்று பவுல் என்ற பெயரோடு நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒருகாலத்தில் களை என்ற அறியப்பட்டவர் இன்று பயிராக பலன் தருகிறார்.

இன்றைய நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு மூன்றுவிதமான உவமைகளை முறையாக கையாளுகிறார். முதலாவதாக, வயலில் தோன்றிய களைகள் உவமை, இரண்டாவதாக கடுகுவிதை, மூன்றாவதாக, புளிப்பு மாவு உவமை. இங்கே, கையாளப்பட்டிருக்கிற மூன்று உவமைகளிலும், நல்ல சமாரியன் உவமையைப் போல களைகள் பற்றி உவமை, ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது கவனிக்கத்தக்கது. ஆகையால்தான், ஆண்டவர்தாமே, வயலில் தோன்றிய உவமைக்கு மறையுரையாற்றிவிட்டார்.

இங்கே கேள்வி எழலாம்? எப்படி களையையும் பயிரையும் ஒன்றூக வளரவிடலாம். இதற்கு பதில், திராட்சைத் தொட்ட வேலையாள் உவமையில், ‘எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதாய் உமக்குப் பொறாமையா? (மத். 20:15) என்பதுதான் பதிலாக அமையமுடியும்.

இறைவனுடைய திட்டங்கள் மனித ஞானத்திற்கு அப்பாற்பட்டவை. பயிர்களையும் களைகளையும் ஒருசேர வளர்ப்பது அவர் விருப்பம். வயலின் சொந்தக்காரர் எடுக்கும் முடிவில் ஊழியர்கள் குறுக்கே நிற்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வயலில் விளை நிலத்தில் ஒருபோதும் பயிர் களையாக முடியாது (ஆனால் பதராகலாம்): அப்படியே களை ஒருபோதும் பயிராக முடியாது. ஆனால் மனிதர்களைப் பொருத்தவரை இது நிச்சயம் மாறும். ஒரு நல்லவர் கெட்டவராக முடியும்: கெட்டவர் நல்லவராக முடியும். இதைத்தான் மேற்கண்ட இரண்டு நிகழ்வுகள் எண்பித்தன.

இறைவன் எல்லோரும் மீட்படையவேண்டும் என்றுதான் ஆசிக்கிறார். ‘தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று: ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம். எசே. 33:11 என்பதை இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் பொறுமையாய் அனைத்தையும் சகித்துக்கொண்டிருப்பது நாம் மனம் மாற வேண்டும் என்பதற்காகதான். அவர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் நம்மை இல்லாதொழிக்க முடியும். ஊதாரி மைந்தன் திரும்பி வருவாரா, என்ற ஏக்கத்தோடு வழிமேல் விழிவைத்து காத்திருந்த தந்தையைப்போல இறைவன் நமக்காக காத்திருக்கிறார்.

நான் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே இறைவன் பொறுமையோடிருக்கிறார். ‘அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? ( உரோ. 2:4) என்பது இறைவார்த்தை. நம்மை அன்பு செய்கிற காரணத்தால் அவர் பொறுமையாயிருக்கிறார். ஏனெனில் அன்பின் அடிப்படைத்தன்மை பொறுமையில் அடங்கியிருக்கிறது (1 கொரி. 13:4). இறைவன் பொறுமையாயிருப்பதற்கு இன்னொரு காரணம் நாம் யாரும் அழிந்து போகாமல் எல்லோரும் மனம் மாற வேண்டும் என்பதற்காகதான் (2 பேது. 3:9) உங்களுக்காகப் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். இதுதான் இறைவனின் பொறுமையின் முழுமையான பரிமாணம். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காய்க்காத அத்தி மரத்திற்கு எரு போட அவர் தயாராயிருக்கிறார்: பலன் தர நாம் தயாராயிருக்க வேண்டும் (லூக் 13:6-9). நம் ஆண்டவரின் பொறுமையே மீட்பாகும் (2 பேது. 3:15).

அனைவரும் ஆண்டவருக்கு உகந்தவராக தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். களை பயிராக முடியாது. ஆனால் ஒரு பாவி, இறைவனின் அருட்துணையோடு ஒரு புனிதராக முடியும். ‘கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். (எசா. 55:7).

களைகள் அகற்றப்படவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதே சமயம், கோதுமை பாதுகாக்கப்படவேண்டும். களைகளை அகற்றுகிறோம் என்ற சாக்கில், கோதுமையின் வேர்கள் தளர்ந்து போகக் கூடாது. மண்ணுக்குள் பின்னி பிணைந்திருக்கிற வேர் முடிச்சுகள் அசைந்துகொடுத்தால் அதன் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். ஆகையால்தான் நிலத்தின் உரிமையாளர் நிதானத்தை கடைப்பிடிக்கிறார். அழிப்பது சுலபம்: ஆனால் உருவாக்குவது மிக கடினம் என்பதை அறிந்திருக்கிறார். இறையாட்சி மண்ணில் மலர இறைவனின் பொறுமை உறுதுணையாக அமைகிறது.

இரண்டாவதாக, ஒவ்வொருவருமே ஒரு தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்தே ஆகவேண்டும். கடுகு சிறியதாக இருந்தாலும் தனக்குரிய இயல்புத் தன்மையைப் பாதுகாத்து முறையான பலனை முழுமையாக தருகிறது. ஒவ்வொரு கிறித்தவரும், தங்களுக்குரிய சூழ்நிலையில், கிறித்தவ விழுமியங்களை கருத்தாங்கி பலன் தர வேண்டும். ஒவ்வொருவருமே பலன் தந்தே ஆக வேண்டும். சிலர் கடுகு விதையாக இருக்கலாம்: சிலர் பலாப்பழ விதையாக இருக்கலாம். ஆனாலும் அவரவருக்குரிய தகுதியுடன் தகுந்த பலனைத் தந்திட வேண்டும். இதுதான் உண்மையான இறையழைத்தல். தங்கள் திறமை,ஆளுமை... இவற்றிற்கேற்ப தக்க பலனைத் தந்திட வேண்டும்.

மூன்றாவதாக, புளிக்காரமாக, நீக்கமற நிரவி, புதிய சமுதாயத்தைப் படைக்க வேண்டும். புளிக்காரம் கொஞ்சமாக இருந்தாலும் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பாலை, தயிராக்க. உறைமோர் (பேச்சு வழக்கில் பிரைமோர்) என்று கொஞ்சம் சேர்ப்பார்கள். அதனைச் சேர்க்கும்போதுதான் பால் தயிராகி, தயிர் மோராகி, அந்த மோர், இன்னொரு பாலை தயிராக்க உதவும். இது தொடர் வினையாக காலங்காலமாக நிகழும். இரண்டாவதாக, புளித்த மோர் தன் இயல்பை முழுமையாக பகிர்ந்து, வேதி வினை புரிந்து பாலை தயிராக்குகிறது. இது உடனடியாக நிகழ்கிற மாற்றம் அல்ல: மாறாக, படிப்படியாக நிகழ்கிற மாற்றம். இந்த படிப்படியான மாற்றம் ஒரு முழுமையை உண்டாக்குகிறது. ஆகையால் கிறித்தவர்களும் வாழையடி வாழையாக, இறையாட்சி மண்ணில் மலர ஒத்துழைக்க வேண்டும். இரண்டாவதாக, ஒரு மாற்றத்தை படிப்படியாக உண்டாக்கி, அதனை நிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்கிற போது புதிய சமுதாயம் நிச்சயம் இம்மண்ணில் மலரும்.

புளிக்காரமாக, கடுகுவிதையாக இம்மண்ணில் நாம் பலன் தர தூய ஆவியார் நமக்குத் துணை நிற்கிறார். வலுவற்ற நிலையில் பலன்தர நமக்காக தந்தையிடம் பரிந்து பேசுகிறார் என்பதை இரண்டாம் வாசகம் வலியுறுத்துகிறது. இறையாட்சி இம்மண்ணில் மலர இயன்றதைச் செய்வோம்!