இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு

விதைகளாக.

எசா 55:10,11 உரோ 8:18-23 மத் 13:1-23

விதைகளைப் பற்றிதான் இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கிறது. விதைக்கப்படுகிற விதையில் எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை: மாறாக விதையானது விதைக்கப்படுகிற நிலங்களில்தான் குறைகள் காணப்படுகின்றன. வழியோர நிலம், பாறைநிலம், முட்செடி நிறைந்த நிலம், நல்ல நிலம் ஆகிய நான்கு வகையான நிலங்களில் வேறுபாடு உண்டு: ஆனால் விதைக்கப்பட்ட விதைகளில் இல்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் நல்ல விதைகளாக இருக்க முயலுவோம்: நிச்சயம், ஆண்டவர் நல்ல விளைநிலத்தைத் தந்திடுவார். ஆகையால், விதையை மையப்படுத்தி சிந்தனையைக் கூர்மைப்படுத்துவோம்.
ஒவ்வொரு கிறித்தவரும் விதையின் ஒவ்வொரு பண்புகளையும் கருத்தாங்கி, கருத்தாய்ச் செயல்படுகிறபோது கிறித்தவ மதிப்பீடுகள் தழைத்தோங்கும்.

விதை என்பது தேர்ந்தெடுக்கப்பட்டது

முதலாவதாக, விதை என்று சொன்னாலே தேர்ந்தெடுக்கப்பட்டது. விளைநிலங்களில் விளைகிற அனைத்துமே விதைக்குரிய பண்புகளைக் கொண்டிருந்தாலும், அனைத்துமே விதையாவதில்லை. மாறாக, விவசாயி தன் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது ஒரு குறிப்பிட்ட செடியை (காய்கறி) விதைக்கென்று ஒதுக்கி வைப்பார்: அவற்றிலிருந்துதான் விதைகளை அடுத்த பட்டத்திற்கு சேர்த்து வைப்பார். இந்த விதைகளைப் போன்றே, கிறித்தவர்களும் இவ்வுலக மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: சிறப்புக்குரியவர்கள். விதைகளாக கிறித்தவ விழுமியங்களை வாழ்வாக்க கடைப்பட்டிருக்கிறார்கள்.

விதை என்பது நேர்த்திச் செய்யப்பட்டது

இரண்டாவதாக, விதை என்றால் நேர்த்திச் செய்யப்பட்டது. விதைகள் மிகுதியாக பலன் தரும் வண்ணம், அவை விதைக்கப்படுவதற்கு முன்பு, நுண்ணூட்டச் சத்துக்களையும்: களைக்கொல்லிகளையும் (அசோஸ்பயிரில்லம் போன்ற) சேர்த்து விதை நேர்த்திச் செய்வர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அவற்றை விதைப்பர். இப்படி விதைக்கும்போது அவை மிகுந்த பலனைத் தரும். அப்படியே, ஒவ்வொரு கிறித்தவர்களும் மிகுந்த பலன்தரும்பொருட்டு, தகுந்த மறைக்கல்வி போதனை, பயிற்சி, விவிலிய விளக்கம் போன்றவற்றைப் பெறுகின்றனர். இவற்றின் மூலம் அவர்கள் நேர்த்திச் செய்யப்படுகின்றனர். பலன் தர தயாரிக்கப்படுகிறார்கள். நாம் பலன் தருகிறோமோ?

விதை என்பது முழுமையானது

மூன்றாவதாக, விதை என்பது முழுமையை தன்னகத்தே கொண்டது. நன்றாக முழுமையாக விளைந்தால்தான் அது விதை: அரைகுறையாக முற்றாமல் விளைந்தால் அதற்குப் பெயர் ‘பதர்’. பதரை ஒருபோதும் விதைகளாக தேர்ந்தெடுக்கமாட்டார்கள். அவை ஒன்றிற்கும் உதவா. அப்படியே கிறித்தவர்களும் முழுமையான வளர்ச்சியைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருநாளும் திருவருட்சாதன உறவில் நிலைத்திருந்து படிப்படியாக முழுமையான வளர்ச்சியைப் பெற வேண்டும்.

விதை என்பது மரபணுவைக் கொண்டது

நான்காவதாக, விதை என்பது பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டது. மரபணு – ஜீன்களை ஒவ்வொரு விதையும் கொண்டிருக்கிறது. புளிய விதை வளர்ந்து மாம்பழங்களைக் காய்ப்பதில்லை. விதைக்கப்படுகின்ற விதை, அதே விதையைத்தான் உற்பத்திச் செய்யுமே தவிர, வேறொன்றை விளைவிப்பதில்லை. ‘முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரமெல்லாம் நச்சுக்கனிகளைக் கொடுக்கும்’ என்கிறார் இயேசு (மத்7:16-17). அப்படியே ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறித்தவ பாரம்பரியத்தையும், மதிப்பீடுகளையும் தலைமுறைத் தலைமுறையாக கொண்டுச்செல்ல வேண்டும்.

விதை என்பது ஆண்-பெண் பேதமற்றது.

ஐந்தாவதாக, விதை என்பது ஆண்பெண் பேதமற்றது. பொதுவாக விதைகள் ஆண் பெண் என்று தங்களை வேறுபடுத்திக்கொள்வதில்லை. ஆண் விதை – பெண் விதையென்று அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். அப்படியே கிறித்தவர்களும் ஆண்பெண் பேதமின்றி, (கலா 3:28) சமத்துவ உணர்வுடன் இறையாட்சிக்காக உழைக்க வேண்டும். அனைவரும் கிறித்தவர்கள் என்ற மனப்பான்மையுடன் செயல்படவேண்டும்.

விதை என்பது மேலும் கீழும் வளர கூடியது.

ஆறாவதாக, விதை என்பது மேலும் கீழும் வளர கூடியது. விதைக்கப்படுகிற ஒவ்வொரு விதையும் மண்ணில் வேருன்றி, கிளைகளை விண்ணை நோக்கி விரித்து வளர்ந்தாக வேண்டும். வேர் மட்டும் அதனை வாழ்விப்பதில்லை: மண்ணுக்கு வெளியே பரவியிருக்கும் கிளைகளும் இலைகளும் ஒளிச்சேர்க்கைச் செய்தாக வேண்டும். மண்ணும் விண்ணும் மிக அவசியம். அப்படியே ஒவ்வொரு கிறித்தவர்களுக்கும் இவ்வுலக வாழ்வும், உயிர்ப்பிற்குப் பிறகு பெறப்போகும் விண்ணுலக வாழ்வும் மிக முக்கியம். அதே போன்று, சகோதர அன்பும் (மண்ணுலகம்), இறையன்பும் (விண்ணுலகம்) மிக அவசியம் (மாற்கு 12:28-31). விண்ணையும் மண்;ணையும் இணைக்கிற ஒப்புரவு பணியை, ஒவ்வொரு கிறித்தவரும் தன் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டும்.

விதை என்பது சார்ந்து வாழக்கூடியது

ஏழாவதாக, விதை என்பது சார்ந்து வாழக் கூடியது. நீர், நிலம், காற்று, வெளி, சூரியன் என அனைத்தையும் ஒரு விதைச் சார்ந்தே வாழ வேண்டும். ஒன்றைப் புறக்கணித்து, ஒருதலைச்சார்போடு வாழ்தல் என்பது இயலாது. அப்படியே கிறித்தவர்களாகிய நாமும் அனைத்தையும் சார்ந்தே வாழ வேண்டும். உறவு வாழ்க்கை நமக்கு உயிர்மூச்சாகும். அன்பியங்கள், கிறித்தவ வாழ்வின் வழிகாட்டிகள். நாமும் இயற்கையையும், சாதி, சமயம் கடந்து அண்டை அயலாரையும் சார்ந்தே வாழ்ந்திட வேண்டும். உறவோடு வாழும் உள்ளங்களில்தான் தெய்வம் தரிசனம் என்பதை உணர்ந்திட வேண்டும்.

விதைகளுக்குள் வேறுபாடு இல்லை

எட்டாவதாக,விதை என்பது களஞ்சியத்தில் (குருதில்) ஒற்றுமையாக இருக்கும்: பாகுபாட்டைத் தவிர்க்கும். ‘நான்தான் முதலில் வளர்ந்த விதை: நான் தான் முதலில் உயர்ந்தவன்’ என்றெல்லாம் சொல்லி மோதிக் கொள்வதில்லை. சமத்துவ உணர்வுடன், பாகுபாடின்றி களஞ்சியத்தில் ஒற்றுமையாக இருக்கும். கிறித்தவர்களாகிய நாமும் சாதி, மதம், மொழி ஆகிய பாகுபாடுகளைக் கடந்து, ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும். எவ்வித பிரிவினைகளும் நம்மை கூறு போடக் கூடாது. ஒரே திருமுழுக்கு: ஒரே திருச்சபை: ஒரே திருவுடல் என்ற விசுவாச போதனையில் நிலைத்து, பிரிவனைக்கூறுகளை உடனுக்குடன் வேரறுக்க வேண்டும். (கலா3:28).

விதை என்பது பலனளிக்ககூடியது

ஒன்பதாவதாக, விதை என்பது தன்னையே அழித்துக்கொண்டு பலனளிக்க கூடியது. விதைக்கப்பட்ட விதை ஒவ்வொன்றும் நிச்சயம் இன்னொரு விதையை உற்பத்திச் செய்யாமல் மடிவதில்லை. முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு என்பதில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், பலனிக்காமல் மடிதல் கூடாது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர்நிறைய தானியம் என்று நிலம் தானகவே விளைச்சல் அளிக்கிறது (மாற்கு4:28). அந்த விதை பலனளிக்க, மண்ணில்மடிந்திட வேண்டும் (யோவான் 12:24). இப்படியே ஒவ்வொரு கிறித்தவரும் பலன்தர வேண்டும். கிறித்துவுக்காக, முப்பது மடங்கு, அறுபது மடங்கு என பலன் தர வேண்டும். பலன் தராத கிறித்தவர் கிறிஸ்துவில் இணையாதவர்.

போராட்டம்தான் வாழ்க்கை!

வழியோர நிலத்தில் எதிரி பறவைகள்: பாறை நிலத்தில் எதிரி கதிரவன்: ஒரளவுக்கு நல்ல நிலத்தில் எதிரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு முளைத்தெழும் முட்செடிகள். இங்கே கவனிக்க தக்கது பாதுகாப்பு விகிதாச்சாரங்கள். வழியோர நிலத்தில் முழுமையாக பாதுகாப்பு என்பதில்லை: நடந்துச் செல்லுகின்ற மனிதர்கள் விலங்குகளின் பாதங்களில் சிக்கி, மிதிப்பட்டு ஒன்றுமில்லாமல் போகலாம்: பறவைகள் உண்ணலாம். பாறைநிலத்தில் ஒரளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது: முளைத்தெழ முடியும்: ஆனால் முழுமையாக தாக்குப்பிடிக்க முடியாது: முட்செடிகள் நடுவில் முளைத் தெழுந்த விதை போரடினால் வெற்றி பெற முடியாது. அவை விழுந்த போNது முளைத்திருக்கிற முட்செடிகள் நடுவே விழுந்திருக்கின்றன. இனி வேர்விட்டு, சூரியனைப் பார்பதென்பது கடினம். போராட்டம்தான் வாழ்க்கை என்பது இதன் பாடம். நல்ல நிலம் முழுமையாக பாதுகாப்பானது: அதனால் பலனளிக்க கூடியது. பாதுகாப்பு எங்குள்ளதோ அங்கே பலன் தரமுடியும். இறைவன் என் அரணாக, கோட்டையாக, கேடயமாக, பாதுகாப்பாக இருக்கிறார் என்கிற போது நம்மால் பலனளிக்க முடியும்.

ஒவ்வொரு கிறித்தவரும் ஒருவகையில் ஒரு விதைதான். இதை உணர்ந்து விதையின் ஒன்பது விதமான பண்புகளை நாம் வாழ்வாக்கும்போது நிச்சயம் நம்மாலும் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறுமடங்காக, கிறித்தவர்கள் என்ற நிலையில் பலனளிக்க முடியும்.