இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, India



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)






தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

‘ கேளுங்க! கேளுங்க! கேட்டுக்கிட்டே இருங்க’

தொநூ 12‘1-4
2திமோ 1‘8-10
மத் 17‘1-9

‘இவருக்கு செவிசாயுங்கள்!’
ஒரு திறந்த இதயத்தின் நம்பக் கூடிய ஒரே அறிகுறி திறந்த காதே ஆகும் - டேவிட் ஆக்ஸ்பர்கா

புதிய ஏற்பாட்டில் தந்தைக் கொடுத்த கட்டளை


திருமுழுக்கின்போது ‘இவரே என் அன்பார்ந்த மகன்! இவரால் நான் பூரிப்படைகிறேன்’ என்று மட்டும் அறிக்கையிட்ட தந்தை, தம் திருமகனுடைய உருமாற்றத்தின் போது சற்று கூடுதலாக ‘இவருக்கு செவிசாயுங்கள்’ என்று புதிய கட்டளையைப் பிறப்பிக்கிறார். புதிய ஏற்பாட்டில் தந்தையாம் இறைவன் பேசிய மொழி இது மட்டுமே: அவர் விடுத்த கட்டளை ‘இவருக்கு செவிசாயுங்கள்’ என்பதுதான்
செவிசாய்த்தல் இன்றியமையாத ஒரு பண்பு! இத்தவக்காலத்தில் இறைவனுக்கு செவிசாய்க்கிற மக்களாக இருக்கவேண்டும் என்பதுதான் சிந்தனைப் பொருள்! இறைவனை அறிந்தவர்களால் மட்டுமே அவருக்கு செவிசாய்க்க முடியும். கடந்தவார நற்செய்தியில், பாலைவனச் சோதனையில் ஆண்டவர் இயேசு அலகைக்கு செவிசாய்க்காமல், தந்தைக்கு செவிசாய்த்து தன் அர்ப்பணத்தை நிறைவேற்றினார். ஆகையால் தான் தந்தையே பூரீத்துப்போய், தன் மகனுக்கு ‘செவிசாயுங்கள்’ என்று உலகனைத்திற்கும் மலைமீது கட்டளைப் பிறப்பிக்கிறார்.

எல்லா சமயங்களிலும்


செவிசாய்க்கிறோமா? பொதுவாகவே உலகிலுள்ள ஒவ்வொரு சமயமும் செவிசாய்க்கிற பண்பை வலிமையாக வலியுறுத்துகின்றன. இந்து சமயத்தில் சிராவனம் -இறைவனுக்கு செவிசாய்த்தல் என்பது மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு பக்தனும், சீடனும் செவிசாய்க்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். இஸ்லாம் மார்க்கத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் தொழுகைக்கு (நமாஸ்க்கு) செல்லும்போது ‘ஒளு’ என்ற சடங்கை நிறைவேற்ற வேண்டும். இரண்டு கை மணிக்கட்டுகளை கழுவ வேண்டும்: வாய்க் கொப்பளிக்க வேண்டும்: நாசித்துவாரங்களை கழுவ வேண்டும்: முகம் கழுவ வேண்டும்: மசகு செய்ய வேண்டும் அதாவது தலையோடு சேர்த்து காதை மசகு செய்ய வேண்டும் (கையை மூன்றாக பிரித்துவைத்துக்கொண்டு) கடைசியாக கரண்டைக் காலை கழுவ வேண்டும். ஒவ்வொன்றையும் மூன்று முறையும் வலதுபுறத்திலிருந்து இடது புறமாகவும் மேற்கொள்ள வேண்டும். இங்கே கவனிக்கத்தக்கது காதை மசகு செய்தல்-சுத்தம் செய்தல். இறைவனின் வார்த்தையைக் கேட்க தன்னையே தூய்மைப்படுத்தித் தயார்ப்படுத்துதல்: செவிசாய்த்தலுக்கான அடையாளம். கிறிஸ்தவர்கள் திருமுழுக்குப் பெறும் போது ‘எப்பேத்தா’ என்று சடங்கின் மூலம், திருமுழுக்குப் பெறுபவர்கள் கடவுளின் வார்த்தையை காதால் கேட்டு, நாவால் அறிக்கையிடும் அருளைப் பெறுகின்றனர். செவிசாய்க்கிற மக்களாக இருக்க அங்கே தயாரிக்கப்படுகிறார்கள். ஆகையால் குறிப்பாக இத்தவக்காலம் ஆண்டவருக்கு செவிசாய்க்காத தருணங்களை -அலகைக்கு செவிசாய்த்த தருணங்களை- நினைந்து வருந்தி, ஆண்டவரிடம் திரும்பி வரும் மனமாற்றத்தின் காலம்: அவருக்கு தொடர்ந்து செவிசாய்க்கும் காலம். ஆகையால்தான் தந்தைதாமே ‘ செவிசாயுங்கள்’ என்கிறார். ‘பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; (எபி1‘1-2). அப்படியெனில், கடவுள் பேசிய இறுதி மொழி என்று சொன்னால் அவருடைய திருமகன் - திருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான். எனவே அவருக்கு நாம் செவிசாய்த்தே ஆக வேண்டும்.

நாம் ஆண்டவருக்கு செவிசாய்க்காவிடில்...


பொதுவாகவே நாம் ஒருவருக்கு செவிசாய்க்காவிடில் என்ன நிகழ்கிறது என்பதை பின்வரும் வரிகள் கற்பிக்கின்றன. சாமுவேல் மனநிலை நமதாக வேண்டும். ‘ஆண்டவரே, பேசும், உம் அடியான் கேட்கிறேன்! என்ற திறந்த மனம் வேண்டும். சாமுவேல் மனநிலை நம்மிடம் இல்லையென்றால்.. பலருக்கு செபம் என்றால் நாம் பேசுவதுதான்: பல்வேறு தேவைப் பட்ஜெட்டை தாக்கல் செய்வதுதான். அதைவிட மேலானது ஆண்டவரை பேசவிட்டு, நாம் அமைதியாக இருந்து அவருடைய திருவுளத்தை அறிவது. நாம் ஆண்டவருக்குச் செவிசாய்க்காவிட்டால்...என்ன ஆகிறது?

ஒருவேளை ஆண்டவா; சொல்வதைக் கேட்பதைவிட நாம் அதிகமாக பேசினோம் என்றால் நாம் அவரைப் புறக்கணிக்கிறோம்.
ஆண்டவர் சொன்ன விஷயத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாம் அவரை அவமானப்படுத்துகிறோம்.
ஆண்டவர் சொல்லும்போது ஒவ்வொரு கட்டத்திலும் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றால் அவரை ஒதுக்கிவைக்கிறோம்.
ஆண்டவர் பேசும்போது நாம் பொறுமையில்லாமல், அவர் தொடங்கிய ஒவ்வொரு தொடரையும் அவசரப்பட்டு முடிக்கிறோம் எனில் அவருக்கு எரிச்சலூட்டுகிறோம்.
ஆண்டவர் பேசும்போது, நாம் உடலளவில் இருந்துக்கொண்டு, மனதை எங்கோ செலுத்துகிறோம் என்றால் அவருக்கு விரக்தியை ஏற்படுத்துகிறோம்.
ஆண்டவர் பேசும்போது கவனிக்காமல்.. அவரை இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப சொல்ல வைக்கிறோம் என்றால் அவரை முட்டாளாக்குகிறோம்.
ஆண்டவர் பேசும்போது சம்பந்தமே இல்லாத கருத்துக்களை குறுக்கே சொல்லுகிறோம் என்றால் அவரை பொருட்படுத்தப்படாதவராக கருதுகிறோம்.
ஆண்டவர் பேசும்போது நாம் படபடப்போடும், கவனம் சிதறிய நிலையிலும் இருக்கிறோம் என்றால் அவரை உற்சாகமிழக்கச் செய்கிறோம்.
ஆண்டவர் பேசும்போது ஒன்றையும் கவனியாமலும், கேட்காமலும் இருக்கிறோம் என்றால் அவருக்கு சங்கடத்தையும், மனச்சோர்வையும் உண்டாக்குகிறோம்.
நாம் அடுத்தவருக்கு செவிமடுப்பது அவர்மீது நாம் கொண்டிருக்கிற அக்கறையைக் காட்டுகிறது. மற்றவரிடம் ஒர் அக்கறையுள்ள மனப்பாங்கை நாம் காட்டும் போது அவர் தன்னை முக்கியமானவராக உணர்கிறார் அவர் முக்கியமானவராக உணரும்போது அவர் மிகவும் உற்சாகமடைந்து நமது கருத்துக்களுக்கு செவிசாய்ப்பார் என்கிறார் You can win என்ற புத்தக ஆசிரியர் ஷிவ் கெரா.
‘ஆண்டவரே! பேசும் உம் அடியான் கேட்கிறேன்’ என்று ஞானி ஏலி தன் சீடன் சாமுவேலுக்கு கற்றுக்கொடுத்ததுகூட இதனால்தான். நாம் சாமுவேல்களாக இருக்க வேண்டும். திறந்த செவி ஞானத்தை நமக்குள் நிறைக்கும்: அதனால்தான் கண்களுக்கு கதவுகளை வைத்தக் கடவுள், காதுகளுக்கும் நாசிக்கும் கதவுகளை வைக்கவில்லை. மனிதன் நாம் உறங்கும்போது கண்கள் உறங்கி விடுகின்றன: காதுகள் உறங்குவதில்லை. எனவேதான் காதுகளை நம்பி, அலாராம் வைத்துப் படுக்கிறோம். நாலிரு திசைகளில் வருகின்ற எதற்கும் செவிமடுக்கிற பாங்கு அதற்கு உண்டு. இரண்டு காதுகள் இறைவனின் கொடைகள். பார்வையற்றவா;களுக்கு காதுகளே கண்களாகி அனைத்தையும் தெரிவிக்கிறபோது அதன் அருமை நமக்குப் புரிகிறது. செவித்திறன் குறைந்தவர்கள் வாய்ப்பேச இயலாதவர்களாவது கண்கூடு. எனவே தந்தையாம் இறைவனின் கட்டளை ‘இவருக்கு செவிசாயுங்கள்’ என்பது பொருத்தமானது.

விசுவாசத்தின் வெளிப்பாடு செவிசாய்த்தல்


நாம் ஒருவர்மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம் என்றால் அவர் சொல்வதுதான் வேதவாக்கு: அதற்கு அப்படியே செவிசாய்ப்போம். இதைத்தான் முதல்வாசகம் கற்பிக்கிறது. இனம்-சொந்தபந்தம்-உறவு அனைத்தையும் துறந்து புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு செல் என்றவுடன் ஆபிரகாம் முழுமையாக செவிசாய்த்தார். எதிர்க்கேள்வி எதனையும் அவர் ஆண்டவரிடம் முன்வைக்கவில்லை. ஆகையால் கடவுள் தாமே அவருடன் உடன்படிக்கைச் செய்துகொண்டார் மகனை வாக்களித்தார் அந்த ஒரே அன்பு மகனையும் பலியிடவேண்டும் என்றவுடன் (தொநூ22) எதிர்க்கேள்விக் கேட்காமல், அப்படியே கீழ்ப்படிகிறார். விசுவாசத்தின் தந்தை என்று அறியப்படுகிறார். இன்றைய நற்செய்தில் சட்டத்தின் பிரதிநிதியாக நிற்கிற மோசேயும்கூட சந்தேகத்தை தெளிவுப்படுத்திக்கொள்கிறாரே தவிர அவருக்கு முழுமையாகச் செவிசாய்க்கிறர்(விப3). இறைவாக்கினர்களின் பிரதிநிதியாக ஆண்டவருடன் உரையாடுகிற எலியாவும் சாரிபாத்துக் கைம்பெண்ணுக்கு உதவியபோதும், பாகாலை எதிர்த்துப் போராடியபோதும், முழுமையாக செவிசாய்த்தார். ஆகையால் தான் இவர்களுடைய மரணம் ஆசிர்வதிக்கப்பட்டதாக இருக்கிறது(காண்க‘ இச34,2அர2).
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கு அடுத்தபடியாக, இறைவனுக்கு செவிசாய்த்தவர்களில் முதன்மையானவர் அன்னை மரியாள். ‘இதோ உமது வாh;த்தையின்படியே ஆகட்டும’; என்ற மரியாளின் செவிசாய்த்தல் அவளை மகிமைப்படுத்தியது. ஆகையால்தான், கானாவூரில், ‘அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள் என்று கூட அன்னை மரியாள் தந்தையின் வழியில் தன் மகனுக்கு செவிசாய்க்க அழைக்கிறார். ஆண்டவர் அவளுடைய மரணத்தையும் ஆசிர்வதித்துள்ளார். செவிசாய்க்கிறவர்கள் ‘தான்’ ‘நான்’என்ற ஆணவத்தை வேரறுத்து வெற்றுப்பாத்திரங்களாக தங்களை முன்வைத்து நிறைத்துக்கொள்கிறார்கள். எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்ற மனநிலை அவர்களிடம் இல்லை. செவித்தினவும் திமிரான மனமும் அவர்களிடம் இல்லை (திப. 7:512 திமொ. 4:3). நாம் எப்படி? விசுவாசமுள்ளவர்களா? ஆணவம் இல்லாதவர்களா? செவித்தினவு உடையவர்களா?

செவிசாய்க்கும் காலம் - தவக்காலம்


தவக்காலம் இறைவனுக்கு செவிமடுக்கும் காலம். அவருடைய கட்டளைகளுக்கும், திருச்சபைக்கும் (மத். 18:17) கீழ்ப்படியும் காலம். கீழ்ப்படியாமல் ஊதாரி மைந்தனாக இருந்தது போதும். நாம் புறப்பட்டு தந்தையின் இல்லத்திற்குச் செல்வோம். செவிசாய்க்காதபோது (நம் பாவங்களால்) நாம் கடவுளைச் சார்ந்தவர்களாக இல்லை: அவருக்குச் செவிசாய்ப்பதில்லை.(யோவா. 8:43,47,9‘31, 1யோவா.4:6) விளைவு‘ கடவுளும் நமக்குச் செவிசாய்ப்பதில்லை (யோவா.9:31) . இத்தவக்காலம் ஒரே மந்தையையும் ஒரே ஆயரையும் உருவாக்குகிற காலம் (யோவா10:16). ஆகையால்தான் தந்தையின் ஒரே கட்டளையான ‘இவருக்கு செவிசாயுங்கள்’ என்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அப்போது ஆயனின் குரலுக்கு செவிமடுக்கிற ஆடுகளும், பரஸ்பர உறவும், பாதுகாப்பும் உருவாகும் (யோவா. 10:27). நாம் உண்மையைச் சார்ந்தவர்களாக தூய்மையான கிறிஸ்தவா;களாக விளங்குவோம்(யோவா18:37). உருமாற்றத்தின்போது இடம்பெற்ற யோவானும் பேதுருவும் உயிர்ப்பிற்குப் பிறகு இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ கற்பிக்கவோ கூடாது என்ற மிரட்டலுக்குப் பணியாமல், யுதத் தலைமைச் சங்கத்திற்கு செவிசாய்க்காமல், கடவுளுக்கு செவிசாய்த்தார்கள் (திப4‘18-19). ஆகையால் இத்திருப்பலியில் பங்கேற்கிற நாம் அனைவரும் திருச்சபைக்கும், அதன் போதனைகளுக்கும், இறைவார்த்தைக்கும், மனசாட்சிக்கும் செவிசாய்க்கிற மனநிலையைப் பெற்று ஒரே ஆயரின் கீழ் ஒரே மந்தையை உருவாக்கி, புதிய திருச்சபைக்கு களம் அமைப்போம். அப்போதுதான் ‘நாம் இங்கேயே இருப்பது நல்லது’ என்று நம்மால் கூற முடியும். கடவுளின் வார்த்தைக்குச் செவி சாய்க்க மறுத்து விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வுலகில் அவரது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்தவர்கள் தண்டனைக்குத் தப்பவில்லை. அவ்வாறெனில் விண்ணுலகிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால், நாம் எவ்வாறு தப்பித்துக் கொள்ளமுடியும்? (எபி. 12:25 ’ 1யோவா4:6)