இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
ஆண்டின் பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

சுமைகள் சுகமானவைகளாக..

செக் 9:9,10 உரோ 8:9,11-13 மத் 11:25-30

சுமைகள் சுகமானவையாகத்தான் இருக்க வேண்டும். சுமைகள் சுகமானவைகளாக அமைகிறபோதுதான் வாழ்க்கையின் சுவை கூடுகிறது. சுமைகள் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது. அதுதான் நாம் சாதனைப்புரிய உறுதுணையாக அமைகிறது. நாம் சுமையாகத்தான் இப்பூவுலகில் பிறக்கிறோம். அடுத்தவருக்கு சுமையாக இருந்த பிறகுதான் நாம் நல்லடக்கம் செய்யப்படுகிறோம். ஒருவருக்கு (தாய்க்கு) மட்டும் சுமையாக தொடங்குகிற வாழ்க்கை நால்வருக்கு சுமையாக முடிகிறது. இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். சுமை என்று சொன்னாலே வருத்தத்தைக் கொடுக்கும். சுமை பாரமானது: அழுத்தக்கூடியது. சுமை என்பது துன்பம். ஒருவகையில் உலகில் எல்லோருமே துன்புறுகிறோம். இவ்வுலகில் துன்புறாதவர் எவருமில்லை. சுமை சுமந்து சோராதவர் யாருமிலர். எப்படியிருப்பினும் வாழ்க்கை எதார்தத்தை ‘இப்படித்தான்’ என்று எதிர்கொள்கிறபோது அது சுமையாக அமைவதில்லை. ‘நுகம்’ என்பது சக்கரம் பூட்டப்பட்ட வண்டியை சுலபமாக இழுப்பதற்கு குறுக்காக வைக்கப்படுகிற வழுவழுப்பான நீண்ட தடி. தமிழிலே மிக அழகாக ‘நுகத்தடி’ என்பார்கள். எவ்வளவு பாரமானாலும் மாடுகள் சுலபமாக இழுக்க,நுகத்தடியில் அவற்றைப் பூட்டி, பூட்டான் போட்டு, ஓட்டுகிறபோது, அவ்வளவு சுமையையும் தன் திமிலில் சுமந்து மாடுகள் இழுக்கிற பாங்கு நுகத்தடியின் அருமைக்கும் எளிமைக்கும் நல்லுதாரணம். அந்த நுகத்தடியும், உருளுகின்ற சக்கரங்களும், சுமைகளை சுகங்களாக்குகிறது. பாரத்தை இலகுவாக்குகிறது.

சுமை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால்,சுமை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். சிலர் சட்டைப்பைக்குள் சுமப்பதை, சிலர் தோள்பட்டையில் சுமக்கலாம்: சிலர் தோளில் சுமப்பதை, சிலர் முதுகில் சுமக்கலாம்: சிலர் முதுகில் சுமப்பதை, சிலர் தலையில் சுமக்கலாம். ஆனால் எல்லோருமே சுமக்கிறோம். சுமக்கிற விதங்களில் வேண்டுமானால் அல்லது சுமக்கிற இடங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். ‘வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்: வாசல்தோறும் வேதனையிருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும், வாடி நின்றால் ஒடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்... ... மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? ... என்பார் ‘சுமைதாங்கி’ படத்தில் கண்ணதாசன். உண்மைதானே!

கிராமப்புறங்களில் பாதையோரங்களில் சுமைதாங்கி கற்களை வைத்திருப்பார்கள். சுமைதாங்கி கற்கள் பெரும்பாலும் இறந்துபோன கர்ப்பினிபெண்களின் நினைவாக அவர்களது உறவினர்களால் வைக்கப்படுவன என்று சொல்வதுண்டு. கர்ப்பினித்தாய் ஒரு சுமைதாங்கியாக இருந்து இறந்துவிட்டாலே என்பதன் நினைவாக அதனை பாதையோரங்களில் சுமைத்தாங்கிக் கற்றகளை ‘h’ வடிவில் நிறுவுவார்கள். அந்த சுமைதாங்கி கல்லில் பாதையில் நடப்பவர்கள் நின்றவண்ணம் சுமைகளை தாங்களாகவே இறக்கி வைத்துவிட்டு, யாருடைய உதவியுமின்றி தாங்களாகவே சுமைகளைச் சுமந்துக்கொண்டு மேற்பயணம் செய்வர். அந்த சுமைதாங்கி ஒருவருடைய சுமையை சுகமாக்குகிறது: வழிப்பாதையில் உதவிச் செய்ய யாருமில்லையென்றாலும் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதுணையாக அமைகிறது. ஆகையால்தான் தமிழன், வாழ்க்கையின் எதார்தத்தை சகலருக்கும் கற்பிக்கிற விதத்தில் இதனை கண்டுபிடித்திருக்கிறான். இங்கே சுமைகள் சுகமாகிறது: சுமப்பவர்கள் சோர்வு நீங்கி, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது. அதுதான் இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக்காட்டப்படுகிறது: ‘என்னிடம் வாருங்கள்’ என்பவர் எல்லாவற்றையும் தாங்கும் சுமைதாங்கியாகிறார்: சுமைகளை எளிதாக சுமக்க தச்சனாக ‘நுகத்தடி’ தருகிறார். இந்த இறைவன் தரும் ஆறுதல்: இளைப்பாறுதல் இனிமையானது. வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வலிமையளிப்பது.

வாழ்க்கை எதார்த்தம்

வாழ்வில் சிலர் சுமையாக கருதுவது சிலருக்கு சுகமாக தோன்றும். சிலருக்கு சுகம் எனக் கருதுவது சிலருக்கு சுமையாக தோன்றும். ஆகையால் எல்லாமே மனநிலையைப் பொருத்தே அமைகிறது. நாம் எதை ‘அழகு’ என்று நினைக்கிறோமே அதுவே ஆபத்தாக முடியும். எதை அலங்காரம் என்று நினைக்கிறோமோ அதுவே இடைஞ்சலாக முடியும். நாம் சேர்த்து வைக்கிற சொத்து, நமக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருக்கிற படிப்பு, முன்னே ஒட்டிக்கொண்டிருக்கிற பட்டம், பெயருக்கு அடியிலே தாங்கிக் கொண்டிருக்கிற பதவி, இவை அனைத்துமே பாதுகாப்பு என்று கருதுகிறோம். ஆனால், அவையே நம்முடைய பயத்துக்குக் காரணமாகவும் இருக்கின்றன என்பதை நினைத்துப்பார்ப்பது நலமளிக்கும். இரவீந்திரநாத் தாகூர், தன் கவிதையொன்றில் ஒரு நிகழ்வை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டுவார். ‘இளவரசனின் ஆடைகளையும், தன் கழுத்தைச் சுற்றி விலையுயர்ந்த ஆபரணங்களையும் அணிந்திருக்கும் குழந்தை, விளையாடுவதில் இருக்கின்ற அனைத்து மகிழ்ச்சியையும் இழந்துவிடுகிறது. அந்த உடை, அது ஒவ்வொரு அடி எடுத்துவைக்கிற போதும் இம்சையாக அமைகிறது. எங்கே தன்னுடைய துணி புழுதியில் பட்டுவிடுமோ என்கிற பயத்தில், அசைவதற்குக்கூட அச்சப்பட்டு அது உலகத்திலிருந்து விலகியே நிற்கிறது’ என்பார் தாகூர். எது இன்பமாக இருக்க வேண்டுமோ அதுவே துன்பமாகி தொல்லைத் தருகிறது: குழந்தைக்குரிய இயல்பு வாழ்க்கை புதைந்து போகிறது. எதார்த்தம் அங்கே பெருமூச்சுவாங்குகிறது.

துன்பங்கள் எப்படி?

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் துன்பங்கள் மூன்று வகைகளில் வருகிறது. முதல் வகைத் துன்பம் நம்மாலேயே வருவது. இதை ‘அத்யாத்மம்’ என்பார்கள். நம்முடைய பேராசை, காமம், பொறாமை, கோபம் இவற்றால் நமக்குத் துன்பங்கள் உண்டாகின்றன. பேராசை நம்மையும் அழிக்கும்: நம்மைச் சுற்றியுள்ளதையும் அழிக்கும்: அப்படியே கோபம், காமம், பொறாமை .. என அனைத்துமே நமக்கு உலை வைக்கும்: அடுத்தவரையும் அவமதிக்கும். இந்த முதல்வகைத் துன்பம் பெரும்பாலும் மனநிலை சம்பந்தப்பட்டதாக அமைந்திடும். மனநிலை சிதைந்தால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடங்கிப்போக வாய்ப்புகளுண்டு. இரண்டாவது வகைத்துன்பம் நம்மைச் சுற்றியிருக்கிற சூழ்நிலையால் ஏற்படுகிறது. இதனை ‘அதிபூதம்’ என்பார்கள். நீர், நிலம், காற்று, நெருப்பு, வான் என ஐம்பெரும் பூதங்களால் ஏற்படுகின்ற துன்பம். பருவநிலை மாற்றம் காலத்திற்கேற்ற நல்லுதாரணம். சுனாமி, பெருவெள்ளம், மழை, போன்றன நீரினாலும், நிலநடுக்கம், நிலச்சரிவு, திடீர் பள்ளம் நிலத்தாலும், புயல், சூறாவளி என காற்றாலும், எரிமலை வெடிப்பு, தீ, என நெருப்பாலும், கிரகங்களின்மோதல் சூரிய கிரகணம், சந்திரகிரகணம் என வானாலும் வரும் துன்பங்களை நாம் அறிவோம்! இத்துன்பங்கள் மனிதனை நிச்சயம் பாதிக்கும். இழப்புகளை சந்திக்க வைக்கும்: ஆறா வடுக்களை, ரணங்களை உண்டாக்கும். இவற்றிற்கு நாமே காரணிகளாகக்கூட அமையலாம். மூன்றாவது வகைத் துன்பம் இறைவனால் வருவது. இந்து சமயத்தில் விதி, தலையெழுத்து என்பார்கள்: கிறித்தவ- இஸ்லாமிய சமயங்களில் கடவுளின் திருவுளம்- இன்ஷா அல்லாஹ் என்பார்கள். நம் பாவத்திற்கு கழுவாயாக இது அமையலாம்: அல்லது இறைவன் இத்துன்பத்தின் வழியாக நம்மைப் புடமிடலாம். இந்த மூவகைத் துன்பங்களும் நீங்கி, அமைதி நிலவவேண்டும் என்பதற்காகதான், இந்து சமய உபநிடதங்கள் மிக அழகாக, மூன்று முறை ‘ஓம்! சாந்தி! சாந்தி! சாந்தி!’ என்கிறது.

சாந்தி ! சாந்தி ! ! சாந்தி ! ! !

இந்த மூவகை சாந்தியையும் இன்னொரு விதத்திலும் புரிந்து கொள்ள முடியும். முதல் வகை சாந்தி ‘ இறைவனோடு சாந்தியாகுதல். அதாவது, இறைவன் வகுத்த இயற்கை விதிகளை முழுமையாக மதித்துப் போற்றி ஒழுகுதல். இயற்கைவிதிகளோடு, இறைவனோடு இணங்கிச் செல்பவர் ஒருபோதும் துன்புறார். இறைவனோடும் இயற்கை விதிகளோடும் இணங்கிச் செல்லாமல், முரண்டு பிடிக்கும்போது துன்பம் கடலாகச் சூழ்கிறது. இரண்டாவதாக, சக மனிதர்களோடு சாந்தியாக இருத்தல். தன்னைப்போன்றே இறைச்சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனைப் பகைப்பவன், வெறுப்பவன், போரிடுபவன் அவருக்குத் துன்பத்தைக் கொணர்கிறார். சக மனிதனை வெறுக்காமல் அன்புச் செய்து, போரிடமல் சமாதானத்தோடு வாழ்பவர் இன்பத்தைக் கொணர்கிறார். மூன்றாவதாக, சக உயிர்களிடத்தில் சாந்தியாகுதல், இறைவனால் படைக்கப்பட்ட சக உயிர்களையும் அன்புச் செய்து, வள்ளலாரைப்போல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மனநிலையோடு ஜீவ காருண்யத்தோடு வாழ்கிறவர் இன்பத்தைக் கொணர்கிறார். இப்படி மூவகைச் சாந்திகளும் சமநிலைப்படும்போது இவ்வுலகமே சொர்க்கமாகிறது: இந்த பூகோளமே இறைவனின் இல்லமாகிறது. ஆணவம்,கன்மம், மாயை ஆகிய மலங்கள் நீங்கி, அகிலத்தில் சாந்தி நிலவுகிறது.

செபம் + அன்பு -- சுகம்

யூத சமுதாயத்;தில் துன்பங்கள் சூழ்ந்திருந்தன. மூவகைத் துன்பங்களும் மக்களை வாட்டி வதைத்தன. போட்டி பொறமையால், சட்டத்தின் பெயரால், மதத்தின் பெயரால், காலனியாதிக்கத்தின் பெயரால், பொருளாதாரத்தின் பெயரால்... மக்கள் சுரண்டப்பட்டனர். இயேசு துன்பங்களை களைகின்றவராக, ஆறுதல் தருகின்றவராக, மலைப்பொழிவு பாணியில் இன்று உரையாடுகிறார். ஆயனில்லா ஆடுகள் போல் இருந்தமையால் அவர் காட்டிய இரக்கம் அவரது கருணையுள்ளத்தின் அடையாளம். அதன் வெளிப்பாடுதான் இன்றைய இறைவார்த்தை! சுமையை, சும்மாடு (சுமை அழுத்தாமல் இருக்க சுமைக்கும் தலைக்கும் இடையே வைக்கபடுவது) கூட இல்லாமல் சுமத்தியவர்கள் யார்? இயேசு அறிவார்.பரிசேயர்களும், சதுசேயர்களும், சட்ட அறிஞர்களும்தான். ஆகையால் அவர்களைப் பார்த்து தைரியமாக, ஐயோ கேடு என்று கண்டித்து ‘தாhங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்: நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூட தொடமாட்டீர்கள்’ என்று சுட்டிக்காட்ட முடிந்தது. (லூக் 11:46).

‘வாருங்கள்! இளைப்பாறுதல் தருவேன்’ என்று துணிந்து சொல்வதில் காரணம் இல்லாமல் இல்லை! நம்மைப் பார்த்து ‘வாருங்கள்’ என்று அழைப்து செபத்திற்குத்தான். இன்றைய நற்செய்தின் முதல் பகுதியே ‘தந்தை அனுபவத்தின்’ வெளிப்பாடாக அமைகிறது. ‘தந்தை அனுபவம்’ என்பது செபத்தின் அடையாளம். இரண்டாவதாக, ‘வாருங்கள்’ என்று அழைப்பது அன்பு செய்வதற்குத்தான். அன்புச் செய்கிற போது துன்பம் சுமையாவதில்லை. தாயின் பனிக்குடம் எடை என்று நினைக்காமல், ‘என் பிள்ளை’ என்கிற போது இலகுவாகிறது: அது அன்பினால்தான். வயதான பெற்றோர் உதவாதவர்கள் என்று நினைக்காமல் ‘என்னை உருவாக்கியவர்கள்’ என்று அன்புச் செய்கிறது போது அவர்களின் உடனிருப்பு ஆதரவாக அமைகிறது: எல்லாம் அன்பில்தான். பொதுவாகவே யூத சமுதாயத்தில் திருச்சட்ட அறிஞர்கள், துணியைத் திரியாக்கி, திரியை நூலாக்கி, நூலை பஞ்சாக்குபவர்கள். மோசே கொடுத்த பத்துக்கட்டளைளை 613 சட்டங்களாக்கிய சட்டாம்பிள்ளைகள். இவர்களுக்கு கடிவாளமிடுகிற வகையில்தான் அன்புக் கட்டளையை அனைவருக்கும் உரியதாக்குகிறார். ஒன்று மட்டும் உண்மை! செபத்தில் வேரூன்றாத அன்பும், அன்பில் வேரூன்றாத செபமும்’ அர்த்தம்பெறுவதில்லை. சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களுக்கு ஆறுதலாக செபமும், வழிகின்ற கண்ணீருக்கு மருந்தாக அன்பும் அமைகிறது. அன்பும் செபமும் களைப்பை போக்கும்: சோர்வை நீக்கும். அவைதான் (அஞ்சால்) அலுப்பு மருந்து. துன்பத்தில் செபம் ஆறுதல் தருகிறது: அன்பு, தொடர்ந்து வாழ்க்கையை முன்னெடுக்க உதவுகிறது. பெற்ற குழந்தையைத் தூக்கி, அன்போடு கொஞ்சும்போது, உழைப்பால் வந்த களைப்பு காணாமல் போகிறது: உத்வேகம் பிறக்கிறது. படுகின்ற துன்பத்தின் மத்தியில் செபம் ஒரு நம்பிக்கையை விதைக்கிறது.

செபத்தோடும்... அன்போடும் ...அடியெடுத்து வாருங்களே! சுமைகள் சுகமாகும்! இயேசு இருகரம் விரித்து அழைக்கிறார்.
ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்: இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். (கலா. 6:2)