இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germanyஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
மூவொரு இறைவனின் பெருவிழா

நல்லிணக்கம் நம்மிடையே மலர

விப 34: 4,6,8-10
2கொரி 13:11-13
யோவா 3:16-18

‘ஒரு மன்னரின் அரண்மனையில் நல்லிணக்கம் நிறைந்திருக்காவிட்டால் அது ஒரு குடியானவரின் மாட்டுத்தொழுவமாக மாறிவிடுகிறது. ஒரு குடியானவனின் குடிசையில் நிலவுகிற நல்லிணக்கம் செல்வச் சீமானின் மாட மாளிகையில் நிலவாவிட்டால் இதைவிட அந்தக் குடிசையில்தான் பெருமளவுக்கு மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க முடியும்.’ நெப்போலியன் ஹில் - The Law of Success என்ற புத்தகத்தில்


இன்று தாய்த்திருச்சபை மூவொரு இறைவனின் பெருவிழாவைச் சிறப்பிக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிறப்பு முதல் இறப்பு மூவொரு இறைவனில் நாம் கொண்ட விசுவாசத்ததை அறிக்கையிடுகிறோம். மூவொரு இறைவன் என்று எண்ணும்போதே அவர்களிடம் காணப்படும் நல்லிணக்கம்-ஒற்றுமையுணர்வு நம் மனதில் எழுகிறது. அத்தகைய நல்லிணக்கம்-ஒற்றுமையுணர்வு நம் ஒவ்வொருவருள்ளும் தோன்ற வேண்டும். நல்லிணக்கத்தால் நாம் மூவொரு இறைவனை விசுவசிக்கும் குடிகள் என்ற புரிதல் உலகினர் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

மூவொரு இறைவனே மையம்

இன்றைய திருப்பலிகூட ‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே’ என்று ஆரம்பித்து, ‘நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்களனைவரோடும் இருப்பதாக’ என்று வாழ்த்தி, இறுதியிலே ‘எல்;லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக’ என்று தான் முடிய இருக்கிறது. நம் பெயரைச் சொல்லி பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்கிறேன் என்று ஆரம்பித்த நம் கிறிஸ்தவ வாழ்க்கை, ஒப்புரவு அருட்சாதனத்திலே ‘நானும் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் உன் பாவங்களிலிருந்து விடுவிக்கிறேன்’ என்று நம்மை நெறிப்படுத்தியது. நோயில் பூசுதல்;,கல்லறை அடக்கம் என்று இறுதி மூச்சு வரை நாம் மூவொரு இறைவனோடு கொண்டிருக்கிற பந்தம் விசுவாசம் தொடர்கிறது.

மூவொரு இறைவன் விசுவாசத்தின் மறைபொருள்

மூவொரு இறைவன் நம் விசுவாசத்தின் மறைபொருள். திருச்சபைப் போற்றும் வல்லுநர் புனித அகுஸ்தினார், புனித தாமஸ் அக்குயினாஸ் கூட இதனை தன் வாழ்வில் உணர்ந்திருந்தார் என்பது நம் அறிந்த வரலாற்று உண்மை. கிறிஸ்துவின் மூலம் நாம் அறிந்துகொண்ட அல்லது கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விசுவாசப் பேருண்மை இது. ஆண்டவரின் திருமுழுக்கின்போதும், (மத் 3:16-17) திருமுழுக்குக்கொடுக்க அப்போஸ்தலர்கள் அனுப்பப்பட்ட போதும் (மத் 28:19), அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்தபோதும் (லூக்1:35) மூவொரு இறைவனின் வெளிப்படுத்தலை விவிலியத்தில் நாம் அறிகிறோம். இதிலே குறிப்பிடதக்கவை அப்போஸ்தலர்கள் அனுப்பப்பட்ட போது கொடுக்கப்பட்ட வாய்ப்பாடும் புனித பவுலடியாரின் மூவொரு இறைவனை மையப்படுத்திய வாழ்த்தும்(2 கொரி 13:14) குறிப்பிடத்தக்கவை.
‘நாம் திருமுழுக்குப் பெற்ற போது மூவொரு இறைவன் பெயரால் திருமுழுக்குப் பெற்றோம்: ஆகையால் அந்த மூவொரு இறைவனையே விசுவாச அறிக்கை வெளியிட அழைக்கப்பட்டிருக்கிறோம்’ என்கிறார் புனித பேசில். இதனை கான்ஸ்டான்டின் நோபிள்; திருச்சங்கம் அறிவுறுத்துகிறது. இது ஒரு மறைபொருள். மூவொரு இறைவன் நம் புலனறிவுக்கு எட்டாத விசுவாசத்தின் மறைபொருள். எனவே தான் ஆண்டவர் இயேசுவே ‘என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்: மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ; மத். 11:27 என்று கூறியுள்ளார். மேலும், ‘கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை: தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்’ யோவா. 1:18 என்று இம்மறைப்பொருளை வெளிப்படுத்தியுள்ளார்.

மூவொரு இறைவனிடையே நல்லிணக்கம்

தந்தையின் அன்பு,கிறிஸ்துவின் கீழ்ப்படிதல், தூய ஆவியின் வழிநடத்துதல் ஆகிய மூன்றும் நம்மை கிறிஸ்தவத்தில் இயக்குகிறது: ஆற்றல்படுத்துகிறது. இதனை ஒவ்வொருவரும் உள்@ற உணர்ந்திட வேண்டும். ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா. 3:16) என்று நாம் வாசிக்கிறோம். தந்தை தன்னுடைய ஒரே பேறான மகனை அளித்து நம்மை அன்பு செய்தார். எனவே தான் திருமுழுக்கின்போதும் தாபோர் மலை உருமாற்றத்தின்போதும் ‘இவரே என் அன்பார்ந்த மகன்’ என்று தன்னுடைய பூரிப்பை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவும் யூத சமுதாயத்தில் சிந்தனையிலிருந்தும் போக்கிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு, இறைவனை ‘தந்தையே’ என்று அழைத்து நம் அனைவரையும் கடவுளின்மக்களாக பிள்ளைகளாக மாற்றுகிறார்: நிலைநிறுத்துகிறார்(லூக் 11:2). இறைவனை ‘அப்பா! தந்தையே!’ என்று அழைக்கும் உரிமைப்பேற்றினை நமக்குக் கொடுத்திருக்கிறார் (உரோ 8:15). அவர் வழியாய் நாம் தந்தையை அடைந்திருக்கிறோம் (யோவா 14:6)). நாம் தந்தையிடம் கிறிஸ்துவின் பெயரால் எதைக் கேட்டாலும் தந்தை நமக்குத் தர தயாராயிருக்கிறார் (யோவா15:16).
தந்தை மகனை மாட்சிப்படுத்தினார்: மகன் தந்தையை மாட்சிப்படுத்தினார். தந்;தையின் விருப்பத்;திற்கு மீட்பின் திட்டத்திற்கு தம்மையே கையளித்தார். எனவேதான் ‘அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும் ; என்று மனநிலையோடு (மாற். 14:36) ‘தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ என்று (லூக். 23:46) தந்தைக்கு தன்னையே ஈந்தார். இருவருள்ளும் உறவு நல்லிணக்கம், ஒற்றுமை ஆழமாக வேருன்றியிருந்தது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ; (யோவா. 10:30 14:11) என்ற ஆண்டவரின் வெளிப்படுத்துதல் எவ்வளவு ஆழமான விசுவாச பேருண்மை.
தூய ஆவியும் உறவில் நல்லிணக்கத்தில் ஒன்றித்திருந்தார். தந்தையிடமி;ருந்து கிறிஸ்து அனுப்பிய தூய ஆவி (யோவா.15:26) திருச்சபையை ஒருங்கிணைத்தார்: இறைவனை ‘அப்பா தந்தையே’ என்று அழைக்க வைத்து பிள்ளைகளாகிய நாம் உறவில் வளர உறுதுணையாக இருக்கிறார் (கலா 4:6). அனைவருக்குள்ளும் நல்லிணக்கத்தை ஒற்றுமையை உருவாக்கினார். ‘கடவுளின் பிள்ளைகள்’ என்ற உரிமையளித்து (யோவா1:12) அதற்கு சான்று பகர்கிறார் (உரோ 8:16). தந்தையோடும் மகனோடும் ஒப்புரவாக்கிய தூய ஆவி ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்துகிறார். இப்படி படைப்பு, மீட்பு, பராமரிப்பு இவற்றில் முவொரு இறைவன் ஒருங்கிணைந்து செயல்படும் பாங்கு நமக்கெல்லாம் சவால்.

நம்மிடையேயும் நல்லிணக்கம் வேண்டும்

மூவொரு இறைவன் தம்மை விசுவசிக்கும் அனைவரும் ஒன்றாயிருக்க வேண்டும் என்று ஆசிக்கிறார். ‘நாம்’ ஒன்றாய் இருப்பது போல ‘அவர்களும்’ ஒன்றாயிருக்கும் படி (17:11) எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி (17:21) விரும்புகிறார். இந்த மூவொரு இறைவன் திருவிழா நமக்கு முன்வைக்கிற சவால் தந்தைக்கும் தனக்கும் உள்ள நல்லிணக்கத்தை அவர் சுட்டிக்காட்டி விளக்குகிறார்.. இவ்வாறு, ‘நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும் (யோவா. 17:23) என்று நாமும் நல்லிணக்கத்தில் வளர வேண்டும்: ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசிக்கிறார். ஆகையால் கிறிஸ்தவர்களாகிய உறவிலும் ஒற்றுமையிலும் நல்லிணக்கத்திலும் நாளும் வளர வேண்டும்.

திருப்பலி

மூவொரு இறைவனின் ஒருமித்த செயல்பாட்டிற்கு நல்ல உதாரணம் இந்த திருப்பலி. செபிக்கப்படும் (பெரும்பாலும்) எல்லா செபங்களும் தந்தையை நோக்கியும் கிறிஸ்துவின் வழியாகவும், திருவுடல் திரு இரத்தத்தின் வழியாக கிறிஸ்துவை பிரசன்னப்படுத்தியும், தூய ஆவியின் வருகையால் எழுந்தேற்றத்தால் (எபிக்கிளேசிஸ்) திருவுடலாகவும் திருஇரத்தமாகவும் என்று மூவொரு இறைவனின் ஒருமித்த செயல்பாடு நம்மையும் எல்லா காரியங்களிலும் அப்படியே ஒருங்கிணைந்து செயல்பட அழைக்கிறது.

அன்னை மரியாள்

அன்னை மரியாள்கூட மூவொரு இறைவனின் ஒருமித்த செயல்பாட்டிற்கு நல்லுதாரணம். அன்னைமரியாள் மூவொரு இறைவனின் கூடாரமாக விளங்கினார். உன்னத கடவுளின் வல்லமை நிழலிட, தூய ஆவியின் வருகையினால், கிறிஸ்துவை தன் திருவயிற்றில் சுமந்தார். ஆகையால் ஆதித்திருச்சபைக்குள் ஒன்றிப்பையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதில் தீவீரமாக இருந்து அனைவரையும் மேல்மாடியில் கூட்டி ஒன்றுசேர்த்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! (2கொரி 13:13) என்ற மூவொரு இறைவனின் வாழ்த்தை தன் திருமுகங்களில் திரும்ப திரும்ப இடம்பெற செய்த அந்தந்த தலத்திருச்சபையும் ஒருமித்து ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறார். (காண்க எபே1:2,கலா 1:3,2கொரி 1:2,1கொரி 1:3... )
ஆகையால் மூவொரு இறைவனின் திருவிழாவைச் சிறப்பிக்கும் நாம் நம் ஒவ்வொருவருடைய இல்லத்திலும், பங்கிலும், அன்பியங்களிலும், அரசியல்செயல்பாடுகளிலும் ஒரு மித்து நல்லிணக்கத்துடன், ஒற்றுமையுணர்வுடன், சகோதரத்துவத்துடன் செயல்பட முற்படுவோம். நம்முள் உள்ள பிளவுகளையும், பிரிவினைச்சக்திகளையும் களைந்தெறிவோம். மூவொரு கடவுள் அன்பாய் இருக்கிறார்(1யோவா4:8),: நம்மை அன்புச் செய்கிறார்(1யோவா4:11), ஆகையால் நாமும் அத்தகைய நல்லிணக்கத்துடன் ஒருவர் மற்றவரை முழுமையாக அன்பு செய்து ஒற்றுமையாக வாழ முற்படுவோம்.அப்போதுதான் மூவொரு கடவுள் நம்முடன் இணைந்திருக்கிறார்: அவரது அன்பு நம்மில் நிறைவுறும்.(1யோவா 4:16)

“தந்தை மகன் தூய ஆவி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமையோடு ஒன்றிணைந்த ஒரு மக்கள் குலம் தான் திருச்சபை”-புனித சிப்ரியான்