இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

‘நன்மை செய்வதே மேல்: அன்பு செய்வதே சிறப்பு’

திப 8:5-8,14-17 1பேது 3:15-18 யோவா 14:15-21

இந்த உலகில் நான் ஒருமுறைதான் வலம் வருவேன்.
எனவே யாருக்காவது எந்த நன்மையாவது செய்ய முடிந்தால் யாருக்காவது, ஏதாவது அன்பை என்னால் காட்ட முடிந்தால் நான் இப்போதே செய்து விடுகிறேன்.
தள்ளிப்போடவோ ஒதுக்கவோ கூடாது. ஏனெனில் இந்த வழியே நான் மறுபடி போக முடியாமல் போகலாம்.’இந்த மிகச்சிறிய மேற்கோள் உலகப் புகழ்ப் பெற்றது. யார் எழுதினார் என்றோ யார் சொன்னார் என்றோ கணிக்க முடியவில்லை. ஆனால் உலகினர் எல்லோர் இதயத்திலும் இடம் பெற்ற இந்த மேற்கோள் ஆழ்ந்த சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் அடித்தளமிடுகிறது.

இன்றைய இறைவார்த்தை ‘நன்மை செய்யவும் அன்பு செய்யவும்’ அழைப்பு விடுக்கிறது. இன்னொரு கோணத்தில் பார்க்கிறபோது ‘தூய ஆவி’க்கான வாக்குறுதியை எடுத்துரைத்தாலும் கடந்தவார யோவான் நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தி பிரியாவிடையின்போது இயேசு அழுத்தம் கொடுத்த அன்புக்கட்டளையை ஆழமாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் தூய ஆவியின் வருகைக்கு திருச்சபை உறுப்பினர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். ஆகையால் இறைவார்த்தை பெந்தேகோஸ்தே பெருவிழாவுக்கு நம்மையே தயாரிக்கிறது.
முதல் வாசகத்தில் பிலிப்பு சமாரிய மக்களை அன்புச் செய்து அவர்களுக்கு கிறிஸ்துவை பிரசன்னப்படுத்தியதையும், புத்திளம் திருச்சபை எழுச்சிப் பெற்றதையும் விவரிக்கிறது. புனித பேதுரு இரண்டாம் வாசகத்தில் ‘அன்பிற்குரியவர்களே’ என்று ஆரம்பித்து கிறிஸ்தவ நெறிமுறை - வாழ்க்கைமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தெளிவுப்படுத்தி நன்மை செய்து துன்புறுவதே மேல்’ என்று நிலைநிறுத்துகிறார்.
இன்றைய நற்செய்தியில் ‘நீங்கள் என்மீது அன்புக் கொண்டிருநத்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்;கள்... என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவன் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்று முத்தாய்ப்பாக ‘அன்பை’ முன்மொழிகிறது. ‘நன்மை செய்வது மேல்: அன்பு செய்வது சிறப்பு என்பது இன்றைய இறைவார்த்தையில் இழையோடுகிறது.

நன்மை செய்வதே மேல்

ஆண்டவர் இயேசுவைப் பற்றி திருத்தூதர் பேதுரு அனுபவ ரீதியாக உணர்ந்து குறிப்பிடும்போது ‘ இயேசு நன்மை செய்துகொண்டே சென்றார்’ என்று சான்று பகர்கிறார். ‘கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார் (திப. 10:38) என்று அவர் செய்த நன்மைத்தனங்களைத்தான் அடிக்கோடிடுகிறது. காரணம் ஆண்டவர் இயேசு ‘ஓய்வுநாளில் மனிதருக்கு ‘நன்மை’ செய்வதே முறை’ என்று சட்டங்களை சமநிலைப்படுத்தினார் (மத்12:12 மாற் 3:4). உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள் என்று சொன்னதோடு அன்றி உங்களை வெறுப்போருக்கு ‘நன்மை’ செய்யுங்கள் என்று செயல்பாட்டிற்கு அழைத்தார்(லூக்.6:27).
பாவிகளைப்போல நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்தல் என்ற எல்லைக்கோட்டைத் தகர்த்தெறிந்து தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்(லூக். 6:33). கிறிஸ்துவின் செயல்பாடு நன்மை செய்வதில் வேருன்றியிருந்தது (லூக் 7:22). ஆகையால்தான் தான் இறந்த பிறகு தன் விலாவில் ஊடுருவ குத்தியவனுக்கு பார்வைக்கொடுத்து தன் ‘அன்பை’ இறுதிவரை முழுமையாக வெளிப்படுத்தினார். எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் நன்மை செய்து துன்புறுவதே மேல் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நன்மை செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

பவுலடியாரின் மனப்போராட்டம்- நமக்கு ஒரு பாடம்

தான் ஓர் ஊனியல்பினன் என்று ஒப்புக்கொள்கிற பவுலடியார் தனக்குள் ஏற்பட்ட மனப்போராட்டத்தை பதிந்துள்ளார். ‘நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை: எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன். .. நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை: அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை: விரும்பாத தீமையையே செய்கிறேன்’ என்று அவர் தனக்குள் ஏற்பட்ட மனப்போராட்டத்தை (உரோ7.15-21)விளக்குகிறார். இருப்பினும் நன்மை செய்வதில் தீராத ஆர்முடையவராக விளங்கினார். தம்முடைய போதனையில் ‘உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்’ (உரோ. 12:9 2 கொரி. 13:7 கலா. 6:9 எபே. 4:32) என்றும், ‘தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்! என்று அறிவுரையை பொருளுணர்ந்து கூறுகிறார் (உரோ. 12:21).
கொரிந்து நகரில் ஆண்டவரின் திருவிருந்தில் பாகுபாடு மற்றும் பிளவால் தீமை மிகுந்திருக்கும்போது வன்மையாக கண்டித்தார்.(1 கொரி. 11:17) ஆகையால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனக்குள் ஏற்படும் மனப்போராட்டத்தில் ஆண்டவர் சார்பாக நின்று அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழ முற்பட வேண்டும் (உரோ. 15:2). நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் இருக்க வேண்டும் (உரோ. 16:19 ). அப்துல்கலாம் பயின்ற திருச்சி புனித ஜோசப் (வளனார் தன்னாட்சி) கல்லூரியின் விருதுவாக்கு ‘நன்மைக்கும் உண்மைக்கும்’ என்றே அமைந்திருக்கிறது. நன்மை செய்வதில் நாட்டம் என்பது மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவை. ‘எல்லோரும் இன்புற்றிருப்பதே அன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே’ என்ற தகைமையுள்ளம் சாலச் சிறந்தது.

பிலிப்புவின் முன்மாதிரி

முதல் வாசகத்தில் இடம்பெறும் அப்போஸ்தலர் பிலிப்பு இதற்கு முன்பாக பந்திப் பணிவிடைக்காக தெரிந்தெடுக்கப்பட்ட திருச்தொண்டர் எழுவருள் ஒருவர். இவர் எருசலேமிலிருந்து 60 கல் தொலைவிலிருந்த சமாரியா நகரில் நற்செய்திப் பணி புரிந்தார். யூத சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்ட, ‘வேண்டாதவர்’ என்று வெறுத்தொதுக்கப்பட்ட , தீண்டத்தகாதவர் என்று அடிமைப்படுத்தப்பட்ட சமாரியர்களிடம் தன் சீடத்துவத்தால் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறார். அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து இளம் திருச்சபையை வளர்ச்சிப்பெற எழுச்சிப்பெற செய்கிறார். பல்வேறு நன்மைத்தனங்களைச் செய்து தன்வசமாக்குகிறார். நற்செய்தி அறிவிக்கப்படுகிறது: அரும்அடையாளங்கள் நிகழத்தப்படுகின்றன. பேய்ப்பிடித்தவர்கள் குணமடைகின்றனர்: முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் குணம் பெற்றனர்.

பேதுருவின் போதனை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு ‘கிறிஸ்தவரின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று புதிதாக திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களுக்கு கற்பிக்கிறார். அதிலே கிறிஸ்தவர்களின் வாழ்வுரிமையினை விளக்குகிறார். கிறிஸ்து அடுத்தவருக்கு நன்மைச் செய்து அன்பு செய்து எப்படியெல்லாம் துன்புற்றார் என்பதை பொறுப்புணர்வுடன் விளக்கி இத்தகைய புதிய சமுதாயம் படைக்க களம் அமைக்கிறார். ‘வன் செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: பழிக்கப்பட்ட போது பதிலுக்குப் பழிக்கவில்லை: துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை (1 பேதுரு 22-23) என்று கிறிஸ்துவை முன்மாதிரியாக முன்நிறுத்தி ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நன்மையும் அன்பும்

நன்மை செய்பவர்கள் அன்பிலே வேரூன்றியிருக்க வேண்டும். அன்பு இல்லையேல் நன்மைத்தனத்திற்கு இடமில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் அன்பிலே வேருன்றியிருந்தார். கொல்லப்பட வேண்டியவனுக்குப்பதிலாக தன்னையே தாரை வார்த்த புனித மாக்ஸி மில்;லியன் கோல்பே அன்பிலே வேரூன்றியிருந்தார். அஹிம்சை வழியில் விடுதலைப்போரை முன்னெடுத்த "blue"> மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், இன்றும் அன்பின் வழியில் அஹிம்சைப் பாதையில் போரடிக்கொண்டிருக்கிற "blue">ஆங் சாங் சூயி (மியான்மர்), தலாய் லாமா (திபேத்) ஆகியோரும் அன்பிலே வேருன்றியிருக்கின்றனர். தொழுநோயாளிக்கு தன்னையே ஈந்து தொழுநோய் கண்டு தன்னையே ஈந்த புனித டேமியன், சாவின் விளிம்பில் போரடிய மனிதனுக்கு மடியில் தாலாட்டு பாடிய முத்திப்பேறு பெற்ற அன்னை தெரசா என எல்லோருமே அன்பில் நிலைத்திருந்தனர். அன்பு ஒன்றே நன்மை செய்யும் (1 கொரி. 13:4) . ஆகையால் கிறிஸ்தவர்களாகிய நாம் அன்பால் பற்றியெரிய வேண்டும். நாம் அன்பு செய்யவில்லையென்றால் பாவிகள்: நன்மை செய்ய தெரிந்திருந்தும் நன்மை செய்யவிட்டால் நாம் பாவிகள் (யாக். 4:17). நன்மை செய்தால் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் (3யோவான் 1.11) நன்மை தீமை இவற்றை அறியும் அறிவைப் பெற்றிருக்கிறோமல்லவா? இன்றைய நற்செய்தியின் தொடக்கமும் முடிவும் அன்பை வலியுறுத்துகிறது. அங்கே கவனிக்கத்தக்க என்னவெனில் கிறிஸ்துவை அன்பு செய்பவர் கட்டளைகளைக் கடைபிடிப்பர்(யோவா14:15) கட்டளைகளை கடைபிடிப்பவர் கிறிஸ்துவை அன்பு செய்வர்(யோவா14.21) என்று ஆழமான ‘பிணைப்பு’ திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகிறது. ஆண்டவர் கொடுத்த கட்டளையே ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்பதுதான் (யோவா. 13:34 15:17). அத்தகைய கட்டளையைக் கடைப்பிடித்தால் நாம் கிறிஸ்துவின் நண்பர்கள் (யோவா15:14) அப்படியெனில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். (1 யோவா. 3:23). நாம் நம் சகோதரர் சகோதரிகனை வெறுத்தால் கொலையாளிகள் ( 1 யோவா. 3:15). என்பதை அறிந்திட வேண்டும்.

எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் தூய ஆவியின் வருகைக்காக நம்மை தயாரிக்கிற இக்கால கட்டத்தில் நன்மை செய்வதில் ஆர்வமும் அன்பு செய்வதில் விடாமுயற்சியும் கொண்டு கிறிஸ்தவ வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். தூய ஆவியின் வருகைக்கு இதுவே உகந்த தயாரிப்பு.

நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை (எபி. 13:16).
தீமையை விட்டு விலகி நன்மை செய்க! நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க! (1 பேது. 3:11).
அன்பார்ந்தவரே, தீமையைப் பின்பற்ற வேண்டாம்: நன்மையையே பின்பற்றும். நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். தீமை செய்வோர் கடவுளைக் கண்டதில்லை (3 யோவா. 1:11).