இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

'உள்ளம் கலங்காதவர்களாக...’

திப 6:1-7 1
பேது 2~4-9
யோவா 14~1-12

அமெரிக்க பத்திரிகையாளரும் கவிஞருமான பால் ஹெமில்டன் ஹேய்ன் எழுதிய உலகப் புகழ்பெற்ற பாடல்
துயரத்தில் இருக்கிறாயா தோழா? உனக்காக நான் பிராத்திக்கிறேன். ஆறுதல் கொள்! இதுகூட கடந்து சென்றுவிடும்.
மேன்மை அடைந்துவிட்டாயா? சந்தோஷத்தில் தள்ளாடாதே! மனதைக் கட்டுப்படுத்து! இதுகூட கடந்து சென்றுவிடும் .
ஆபத்தில் இருக்கிறாயா? மனம் அலைபாய்கிறதா? நம்பிக்கை கொள்! இதுகூட கடந்து சென்றுவிடும்.
கவர்ந்திழுக்கப்பட்டாயா? உன் மனவேதனையில் இதயத்தில் ஓர் உண்மை விளங்கட்டும். இதுகூட கடந்து சென்றுவிடும் .
பேரிலும் புகழிலும் மமதை கொள்கிறாயா? ராஜா போல் திரிகிறாயா? இதுகூட கடந்து சென்று விடும்.
நீயாராக இருந்தாலும், உன் பாதம் எங்கு சென்றாலும், இந்த ஞானமுள்ள வார்த்தைகளைக் கேள். இதுகூட கடந்து சென்றுவிடும்.

இக்கவிதை எழுத அவரைத் தூண்டிய கிழக்கிந்திய கதை இதுதான். ஒருமுறை ஓர் அரசன் தன் நாட்டில் உள்ள ஞானிகளை ஒன்று கூட்டி ‘ சிக்கலான தருணத்தில் உதவக்கூடிய, எப்போதும் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள கூடிய, சந்தோசமான துக்கமான தருணத்திலும் பொருந்தும்படியான, எல்லா சந்தர்ப்பங்களிலும், வாழ்நாள் முழுதும் ஒருவனுக்கு ஆலோசனை வழங்க கூடிய, ஞானமுள்ள, உண்மையான, என்றென்றும் நீடித்திருக்ககூடிய ஒரு சில வார்த்தைகளே அடங்கிய தாரக மந்திரத்தை உருவாக்க வேண்டும்’ என்று பணித்தான். அவ்வார்த்தையை தன் மோதிரத்தில் பொறிப்பதாகவும் உறுதி அளித்தான். ஞானிகள் சிந்தித்தார்கள்: சிந்தித்தார்கள். இறுதியில் அரசவைக்கு வந்து அரசினிடம் மந்திரச் சொல்லை தெரிவித்தார்கள்: அதுதான் ‘இதுவும்கூட கடந்து சென்றுவிடும்’ என்ற தாரக மந்திரம். அரசன் அதனை தன் மோதிரத்தில் பொறித்து அணிந்தான். ஞானிகளை பாராட்டி கௌரவித்தான். துன்பமும் நிரந்தரமல்ல: கடந்து போய்விடும்;: இன்பமும் நிரந்தரமன்று: கடந்து போய்விடும்.

இந்த உலகில் துன்பங்களை அனுபவிக்காத மனிதர் யார்? சவால்களை எதிர்கொள்ளாத மனிதர் யார்? இன்னலைச் சந்திக்காத மனிதர் யார்? பதில், திருச்சபை உட்பட ‘யாருமில்லை’ என்பதுதான்! எல்லோருமே ஒரு வகையில் துன்பத்தை அனுபவிக்கிறோம்: துயரத்தில் உழல்கிறோம்: சவாலை எதிர்கொள்ளுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் கொடுக்கிற ஒரு ஆழமான படிப்பினை ‘உள்ளம் கலங்க வேண்டாம்’. திருச்சபைக்கூட கடுமையான சவால்களையும், துன்பங்களையும் சந்தித்தது: சந்திக்கிறது: சந்தித்தே ஆக வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் கிரேக்க மொழி பேசுவோரின் முணுமுணுப்பை வெளிப்படுத்துகிறது. ஆகையால்தான் அன்றே ஆண்டவர் ‘ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல்’ என்று அப்போஸ்தலர்களை அனுப்பினார். ஒவ்வொருமுறையும் ‘இதுவும்கூட கடந்து சென்றுவிடும்’ என்ற உறுதியான மனநிலை நமக்குத் தேவை! ‘உள்ளம் கலங்க வேண்டாம்’. பாஸ்கா காலத்தில் இருக்கிற இந்நிலையில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய இறுதி இரவு உணவின் போது தம் அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த பிரியாவிடையிலிருந்து (யோவா 13:13-17) ஒரு பகுதி இன்றைய நற்செய்தியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இது நிகழப்போகும் ஆண்டவருடைய விண்ணேற்பின் பின்னனியில் எடுத்தகொள்ளப்பட வேண்டும் என்பது மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஆகையால் ‘இன்றைய நற்செய்தியின் தொடக்கமே முத்தாய்ப்பாக ‘உள்ளம் கலங்க வேண்டாம்’ என்று உரக்க சொல்லுகிறது.

அச்சம் தவிர்
பயம்! இது மனிதனைக் கொள்ளும் கொடிய நஞ்சு. எனவேதான் பாரதிகூட தன் புதிய ஆத்திச்சூடியில் ‘அச்சம் தவிர்’ என்றே பிஞ்ச மனத்தில் ஆரம்பித்தார். 'அஞ்சாநெஞ்சன்’ என்று இவ்வுலகில் எவருமே இல்லை. பயம் மனிதனுக்குத் தேவைத்தான். அது இருக்கும்போதுதான் அவன் எச்சரிக்கையுடன் வாழ்வில் இருக்க முடியும். எதிர்ல புலி வரும்போது நான் பயப்படமாட்டேன்னு ஒருவர் நிக்கமுடியுமா? பயம் வேண்டும். ஆனால் அளவுக்கு அதிகமான பயம் ஒருபோதும் கூடவே கூடாது. பயம் பதட்டமாகி, அந்த பதட்டம் உச்சத்தை அடையும் போது மனிதனுக்கு பிரமை (யுnஒநைவல Pளலஉhழளளை) ஏற்படுகிறது. அதன் பின் அவர்கள் நடைபிணம்தான். எல்லோருமே ஒருவகையில் பயந்துகொண்டே வாழ்கிறோம்
. உலகில் ஒவ்வொருவரும் ஆறுவிதமான காரணங்களுக்காக, பயப்படுவதாக உளவியல் நிபுணர்கள் சொல்லுகின்றனர். வேறுவிதத்தில் சொல்ல வேண்டுமானால், ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற பயத்தை இந்த ஆறுவகைக்குள் அடக்கி விடலாம்.

ஆறு வகை பயம் என்னென்ன?
முதலாவதாக, வறுமைப் பற்றிய பயம் . இப்படிப்பட்டவர்கள், எதிலும் அக்கறையற்றவர்களாக, குறிக்கோளில்லாதவர்களாக, உடல் மற்றும் மனச் சோர்வுற்றவர்களாக, பிடிப்பில்லாதவர்களாக, ஆர்வம்-முனைப்பு-கற்பனைத்திறன் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
இரண்டாவதாக பழிச் சொல் பற்றிய பயம் . அதவாது, அடுத்தவர்கள் நம்மை குறைச் சொல்வார்களோ என்கிற பயம். இவர்கள், புதியவர்களைச் சந்திக்க பயப்படுபவர்களாக, முடிவு எடுக்க முடியாமல் குழம்புபவர்களாக, பிரச்சனைகளைத் தவிர்ப்பவர்களாக, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக, வரக்குமீறி செலவு செய்து, இமேஜை உயர்த்திக்கொள்பவர்களாக ...இருப்பார்கள்.
மூன்றாவதாக, உடல்நலம் பாதிப்பு பற்றிய பயம்: அதாவது நோய் பற்றிய பயம் .இவர்கள், தனக்கு அந்த நோய் இருப்பதாக கற்பனை செய்பவர்களாக, நோயைப் பற்றியே பேசுபவர்களாக, அது சம்பந்தமான செய்திகளைப் படிப்பவர்களாக.. இருப்பார்கள்.
நான்காவதாக, காதல் தோல்வி பற்றிய பயம் . அதாவது, நேசிப்பவரின் அன்பை இழக்க நேரிடுமோ என்கிற பயம். இது மிகவும் வேதனையானது. உடலை மனதையும் மிகவும் பாதிக்கும்.
ஐந்தாவதாக, முதுமைப்பற்றிய பயம் . வயசான காலத்தில எப்படி சமாளிக்கிறது,, சுதந்திரமா செயல்படறது.. என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பார்கள்.
ஆறாவதாக.. மரண பயம் . இது மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள பயம். ஆகையால் எல்லோருமே ஒருவகையில் பயத்தில் சிக்கித் தவிக்கிறோம். ஒவ்வொருவரின் பயத்தை இந்த ஆறுவகைக்குள் அடக்கிவிடலாம்.

உள்ளம் கலங்க வேண்டாம்
‘உள்ளம் கலங்க வேண்டாம்’ என்ற வார்த்தையை மிகவும் துயரமான தருணத்தில்தான் வெளிப்படுத்தகிறார். முத்தமிட்டு காட்டிக்கொடுத்தலும், மூன்று முறை அநாயசமான மறுதலிப்பும், துன்பக் கிண்ணமும், கல்வாரி பாடுகளும், மந்தையின் சிதறலும் அவருடைய மனக்கண்முன் நிழலாடும் தருணத்தில் அவர் உதிர்த்த வார்த்தைதான் ‘ உள்ளம் கலங்க வேண்டாம்’. அதற்குப் பின்பு அவர் சொன்னதுதான் உள்ளம் கலங்காதிருக்க வழியாகும். ‘கடவுளிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்: என்னிடமும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்’ என்பதே. கடவுள் மீது நம்பிக்கைக் கொள்ளும்போது கவலைக்கும், வீண்பயத்திற்கும்; இடமில்லை: கண்ணீருக்கும் அவசியமில்லை. ‘அஞ்சாதே! நான் உன்னை மீட்டுக்கொண்டேன்: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்குரியவன்’ என்ற ஆண்டவரின் வார்த்தையை இதயத்தில் சுமந்திடும்போது கவலைக்கும் பயத்திற்கும் இடமில்லையன்றோ?.(எசா43:1). ஆகையால் மேன்மை மிக்கவரும், அஞ்சதற்குரியவருமான ஆண்டவரை மனதிற்கொண்டு (நெகே4:14) அன்றாட வாழ்வை எதிர்கொள்ளுங்கள்: பயத்தை அப்புறப்படுத்துங்கள்.

தாவீது ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்டுதான் கோலியாத்தை வீழ்த்தினான் (1சாமு17:4-11). ஆகையால் ஆண்டவர் இயேசுவும் உள்ளம் கலங்காதிருக்க ‘கடவுளிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்’ என்கிறார். நாம் கடவுள் நம்பிக்கை இழக்கும் போதுதான் அச்சம்-பயம் நம்மைச் சூழ்கிறது. காற்றையும் கடலையும் கடிந்துகொள்ளும் இயேசு, ‘நம்பிக்கைக் குன்றியவர்களே! ஏன் அஞ்சுகிறீர்கள்’ என்று அப்போஸ்தலர்களை கடிந்து கொண்டதும் இதனால்தான். (மத்8:26). நம்பிக்கைக் கொண்டோர் ஒருபோதும் பதற்ற மடையார் (இன்றைய இரண்டாம் வாசகம்).நீங்கள் மூலைக்கல்லான கிறிஸ்துவின் மீதும் கடவுளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கொண்டிருக்கிறீர்களா?! ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எப்போது பயம் நம்மிடம் இருக்கிறதோ, அப்போது சூழ்நிலையும் நமக்கெதிராக சூழ்ச்சிச் செய்யும். உதாரணம் பேதுரு. கடல்மீது நடக்க அவர் முயற்சித்த போது ஆழமான நம்பிக்கை இல்லாத காரணத்தினால் பெருங்காற்று வீசியதைக் கண்டு (சூழல்) அஞ்சி முழ்குகிறார் (மத்14:30). அப்போஸ்தலர்களும்கூட கொந்தளித்த கடலைக் கண்டு (சூழல்) கொந்தளித்ததும் தத்தளித்ததும் பயத்தில் தான். பயம் நம்மிடம் இருக்கிறபோது சூழலும் நமக்குப் பாதகம் செய்யும்.

திருச்சபையின் துணிச்சல்
திருச்சபையும் சவாலையும் எதிர்ப்புகளையும் இன்றுவரை எதிர்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய முதல் வாசகம் நல்லுதாரணம். நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும், உறுதியாய் நிலைத்திருந்த (இரண்டாம் ஞாயிறு வாசகம்) அதே திருச்சபை இன்று எபிரேய மொழி பேசுவோர் - கிரேக்க மொழிபேசுவோர் என்று எதிரும் புதிருமாக, பகைமை வளர்த்து பிரிந்து நிற்கிறது. இதுவும்கூட கடந்து போய்விடும். விருத்த சேதனமா- திருமுழுக்கா? பிரச்சனை. இதுவும் கடந்து போய்விடும். ஆங்கிலிக்கனா? மார்ட்டின் லூதரா? பிரச்சனை. இதுவும் கூட கடந்து போய்விடும். இன்றும்கூட ஓரினச்சேர்க்கையா? கருக்கலைப்பா? கருணைக்கொலையா? திருமண குருத்தவமா? பெண் குருத்துவமா?...என அத்தனை சவால்களையும் எதிர்ப்புகளையும் எதிர்த்து நின்று, விசுவாசத்தின் வழிநின்று, உண்மைக்கு சாட்சியாக பாறையாக திருச்சபை விளங்கிகொண்டிருக்கிறதல்லவா? கொண்ட கொள்கையில் விசுவாசத்தில் சமரசமில்லாமல் உரைகல்லாக திருச்சபை இருப்பதால்தான், நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடறுதற்கல்லாகவும், தடுக்கி விழச் செய்யும் கற்பாறையாகவும் இன்றுவரை துலங்குகிறது.(இரண்டாம் வாசகம்)

நமக்கும் துணிச்சல் வேண்டும்
உயிர்ப்பிற்கு முன்பு ‘உள்ளம் கலங்க வேண்டாம் : மருள வேண்டாம்’ என்று சொன்ன ஆண்டவர்,(14:1, 27) உயிர்ப்பிற்குப் பிறகு, ‘நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?’ (லூக்24:38) என்று அவர்களைக் கேள்விக் கேட்பது தன்னை முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காகதான். ஆகையால் பயம் நீங்க, வழியும் வாழ்வும் உண்மையுமான ‘என்னிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்’ (14:1 ) என்கிறார். தூய ஆவியின் வருகை தெளிவையும் ஏற்படுத்தி : புரிதலை ஆழப்படுத்துகிறது. திருச்சபை மறுமலர்ச்சி காண உதவுகிறது. (முதல் வாசகம்). ஆகையால் ஒவ்n;வாரு கிறிஸ்தவரும் உள்ளம் கலங்காதவராக, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களையும் துயரங்களையும், இக்கட்டான தருணங்களையும் கண்டு அஞ்சாமல், முடங்கி போகாமல், மூலைக்கல்லான கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு, ஒருபோதும் பதற்றமடையாமல், ‘இதுவும் கடந்துபோய்விடும்’ என்ற தத்துவத்தில் நிலைத்து இறையாட்சி நோக்கி பயணிப்போமாக!

எனக்கு வலுவூட்டுபவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு – புனித பவுலடியார் (பிலி 4:13)