இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
Mylapore, Chennai, Indiaஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
பாஸ்கா காலம் 4 ஆம் ஞாயிறு

‘ நல்ல ஆயனாக...தலைவனாக...’

திப 2:14,36-47 1
பேது 2:20-25
யோவா 10:1-10

டிசம்பர் 18,2005 ஞாயிறு அன்று, சென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரணத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி; 43 பேர் உயிரிழந்தனர்: 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த எம்ஜிஆர் நகரை அடுத்துள்ள சத்தியமூர்த்தி நகரில் ஒரு வாடகைவீட்டில் வசித்து இருபத்தெட்டு வயது சக்திவேல் என்பவர் வசித்து வந்தார். இவர்ஒரு வாடகைக் கார் ஓட்டுநர். சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த அவரை அவரது நண்பர்கள் செல்போன் மூலம்தொடர்பு கொண்டு எம்ஜிஆர் நகரில் ஏற்பட்ட நெரிசல் குறித்து தகவல்; தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் உதவிக்கரம் நீட்ட தனது காரில் அந்த பள்ளி வளாகத்திற்குச் சென்றார். தன்னைக் கண்டவுடன் காப்பாற்றுமாறு கைகளை அசைத்தவர்களை தனது பலம் கொண்டமட்டும் வெளியே இழுத்து நெரிசலில் இருந்து காப்பாற்றினார். ஒருவர்பின் ஒருவராக சத்யா நகரைச்சேர்ந்த குசலாம்பாள்,கமலம், ராணி, லட்சுமி, ..என 15 பேரை காப்பாற்றினார். கடைசியாக ஒரு மூதாட்டியைக் காப்பாற்ற முயன்றபோது பின்புறமாக கும்பல் நெருக்கித் தள்ளியதால் இவரும் நெரிசலில் சிக்கினார். தரையில் மிதிபட்டு சில நிமிடங்களில் 15 பேரைக் காப்பாற்றிய சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு சகிலா (23) என்ற மனைவியும் கஸ்தூரி(3), நரேன்(6) என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நல்ல ஆயனுக்கு தலைவனுக்கு இவர் ஒர் நல்லுதாரணம்.

நல்லாயன் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் நான்காவது ஞாயிறான இன்றைய தினத்தை ‘நல்லாயன் ஞாயிறு’ என்றே அழைத்துக் கொண்டாடலாம். திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாண்டுகளிலும் ‘நல்லாயன்’ நற்செய்தியே இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பெற்றோர், ஆசிரியர், அன்பியத்தலைவர் (தலைவி), நண்பர், பங்குப்பணியாளர், செவிலியர், மருத்துவர் என ஒவ்வொருவருமே ‘ஒர்; ஆயன்’ என்ற நிலையில் தன் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும். இது கிறிஸ்தவ அழைப்பு. ஆயன் என்று சொன்னால் அது திருச்சபைத் தலைவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தப்பிக்காமல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்கள் சூழ்நிலையில் எப்படி நல்ல ஆயனாக தலைவனாக செயல்பட முடியும் என்று சிந்திக்க இன்றைய இறைவார்த்தை அழைக்கிறது.

நல்ல ஆயன் - மெசியா

இன்றைய நற்செய்தியில் இரண்டு விதமான உவமைகள் கையாளப்படுகின்றன. ஒன்று நல்லாயன்: இரண்டவாது வாயில். இரண்டுமே விவிலிய முக்கியத்துவம் வாய்ந்தவை. பழைய ஏற்பாட்டிலே ஆயன் உருவகத்தை பல்வேறு இடங்களில் காணலாம். இன்றைய பதிலுரைப்பாடல் கூட ‘ஆண்டவர் என் நல்லாயன்’ என்பதையே விளக்கியது. (திபா 23, 77~20ஈ 79~13, 80~1, 95~7, 100~3) இறைவாக்கினர் எசாயாகூட மெசியாவைப் பற்றிக்குறிப்பிடும் போது, ‘ஆயனைப்போல் தன் மந்தையை அவர்மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளை கவனத்துடன் வழிநடத்திச் செல்வார்(எசா40~11) என்றே குறிபிப்பிடுகிறார். இறைவாக்கினர் எரேமியாவும் (23~1-4), எசேக்கியேல் இறைவாக்கினரும் (34~ 1-31) மெசியாவை நல்ல ஆயனுக்கே ஒப்பிட்டு இறைவாக்குரைக்கின்றனர். ஆகையால்தான் ‘நல்லாயன்’ விவிலிய முக்கியத்துவம் வாய்ந்த உருவகமாகும்.

இயேசுவே நல்லாயன்

ஆண்டவர் இயேசுவும் ஒரு நல்ல ஆயனாக பரிவுக் கொண்டு மனமிரங்கினார் (மத் 9~36): நல்ல ஆயனாக தன்னையே வெளிப்படுத்தினார் (லூக் 15~4): தன் சீடர்களை ‘ஆடுகளாக்கி’ பயிற்சி கொடுத்தார் (மாற்14~27). தலைமை ஆயராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் (எபி13~20). இன்றைய இரண்டாம் வாசகம் குறிப்பிடுவதைப்போல ஆன்மாக்களின் ஆயராக கண்காணிப்பாளராக துலங்கினார் (1பேதுரு 2~25). ஆன்மாக்களின் ஆயராக, கண்காணிப்பாளராக ‘என்ஆடுகளை மேய்: பேணி வளர்’ என்று தன் அப்போஸ்தலர்களை (பேதுருவை) தனக்குப்பின் அவரே ஏற்படுத்தினார் (யோவா21~15-17). இன்றைய தலத் திருச்சபை ஆயர்களின் தலைமையில் (பங்குக்) குருக்கள் வழிநடத்துவது நாமறிந்ததுதான். அதே போன்றே ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுக்குரிய சூழ்நிலையில் ஒரு நல்ல ஆயனாக இருக்க வேண்டும்.

ஆயனும் ஆடுகளும்

தாய், தந்தை, ஆசிரியர் அன்பியத்தலைவர், பங்குப்பேரவை உறுப்பினர், பஞ்சாயத்;து தலைவர்.. என தன்னிலையில் நல்லாயனிடம் காணப்படுகின்ற அத்தகைய பண்புகளை கருக்கொண்டு புதிய சமுதாயம் படைத்திட முனைந்திட வேண்டும். கிறிஸ்தவர்கனி;ன் தலைமைப் பண்பு நம் சமுதாயத்தில் தனித்து ஒளிர்ந்திட வேண்டும். ஆகையால் பின்வரும் நல்லாயனுக்குரிய பண்புகளை நமதாக்கிக்கொள்வோம்.

1. ஆயன் தன் மந்தையை, குறைகளைக் கடந்து செயல்படுவது போல ..

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர்...) அனைவரும் தன் மக்களை குறைகளைக் கடந்து செயல்பட வேண்டும். ஒவ்வொருவருமே ஒவ்வொருவரிடமிருந்து குணத்தால் பண்பால் வேறுபட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆயனும் ஒவ்வொரு ஆடும் தன் இயல்பில், பண்பில், நிறத்தில் வேறுபட்டவை. எல்லா ஆடுகளும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. அங்கே வேறுபாடுகள், குறைநிறைகள் உண்டு. ஆனால் அவை ‘ஒரே மந்தை’. ஆண்டவருடைய மந்தையில் விபச்சாரிகளும், பரிசேயர்களும், வரிவசூலிப்பவர்களும், தீவீரவாதிகளும், நூற்றுவர் தலைவர்களும், ஏழைகளும் பணக்காரர்களும், படித்தவர்களும் பாமரர்களும் உண்டன்றோ? ஆனாலும்கூட அவர்கள் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ‘ஒரே ஆயனின்’ தலைமையின் கீழ் ‘ஒரே மந்தையாக’ இருந்து செயல்பட்டனர். ஒருவர் மற்றவரை குறைநிறைகளோடு ஏற்றுக்கொண்டு அன்பு செய்தனர்: ஒருவர் மற்றவருக்கு துணை நின்றனர். இத்தகைய பண்பு இன்றைய தமிழகத் திருச்சபைக்கு தலத்திருச்சபைக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் அடிப்படை. அனைத்து குறைகளையும் கடந்து நிறைவாழ்வுக்கு கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. இது திருச்சபைக்குள்ள மாபெரும் சவால்.

2.ஆயன் தன் மந்தையை நேசிப்பது போல ..

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர்...) அனைவரும் தன் மக்களை நேசிக்க வேண்டும். ஆடுகள் இருந்தால்தான் ஆயனுக்கு வேலை உண்டு. ஆடுகள் இல்லையேல் ஆயனும் தேவையில்லை: மேய்ச்சலுக்கும் வழியில்லை. ஆகையால் ஒவ்வொரு ஆடும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஒர் ஆடு காணாமல் போனாலும் அந்த ஆட்டைத்தேடி ஆயன் செல்வது ஆயன் அந்த ஆட்டின் மீது வைத்துள்ள தனிப்பட்ட அன்பை அடையாளப்படுத்துகிறது. மந்தையில் உள்ள ஒவ்வொரு ஆடும் தனி மதிப்புக்குரியது: விலைமதிப்பற்றது. ஒவ்வொரு ஆட்டினையும் புரிந்து ஏற்றுக்;கொண்டு அன்பு செய்து வழிநடத்துவது ஆயன் மீது சுமத்தப்பட்ட கடமையாகும். அன்பியத்தில்,பங்கில், ஊரில்.. அத்தகைய அணுகுமுறை இன்றியமையாதது. திருச்சபைக்குகந்த வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் மறுமலர்ச்சியையும், வேறுபட்ட அனுபவத்தையும் பெற்றிட வேண்டும். அதற்கு ஒவ்வொருவருடைய பங்களிப்பும் தேவை.

3.ஆயன் தன் மந்தையை நம்புவது போல ...

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர்..) தன் மக்களை நம்ப வேண்டும். ஆயன் ஆட்டிற்கு முன்பு செல்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. காரணம், ஆடுகளின் மீது அவன் கொண்டுள்ள மிகுதியான நம்பிக்கையின் அடையாளம் அது. அவை தன்னைப் பின்தொடர்கிறதா? இல்லையா? என்ற ஆயன் ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. காரணம் நற்செய்தியில் இடம் பெற்றிருப்பதைப்போல அவை அறியாத ஒருவரை பின் தொடராது. ஒவ்வொரு ஆடும் அத்தகைய நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் நடந்துகொள்ள வேண்டும். ஆயனின் தலைமையில் வழிநடக்கும்போது நிச்சயம் நல்மேய்ச்சல்நிலமும் நீரும் கிடைக்கும் என்பதை நம்ப வேண்டும். ஒவ்வொரு தலைவரும் தன் மக்களை நம்ப வேண்டும். அத்தகைய நம்பிக்கைத்தான் பரஸ்பரத்தை விரிவுப்படுத்தும்: ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்: புதிய விடியலுக்கு களம் அமைக்கும்.

4.ஆயன் தன் மந்தையை அறிவது போல ...

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர்..) தன் மக்களை அறிந்திட வேண்டும். இது பகுத்தறிவால் ஆனதன்று: மாறாக அன்பால் ஆனவொன்று. ஆயன் ஆட்டினை அறிவது இன்றைய நற்செய்தியிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவை ஆயனுக்கு செவிசாய்ப்பதும் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதும், இருவருக்குமிடையிலான பரஸ்பர உறவை வெளிப்படுத்துகிறது. ஆயனை ஆடுகள் அறிவதைவிட, ஆடுகளை ஆயன் அறிந்திருக்க வேண்டும். ஆயன் பெயர் சொல்லி அழைப்பது அவனது மேலாண்மையை வெளிப்படுத்துகிறது. இது ஆதிக்கத்தால் ஆனதல்ல: மாறாக, அன்பால் ஆனது.

5.ஆயன் தன் மந்தையை பாதுகாப்பது போல ...

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர்..) தன் மக்களை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும். திருடர் கொள்ளையர்.. ஓநாய்கள், விரோதிகள், அனைவரிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு ஆயனும் தடிக்குச்சியையும், கவணையும் வைத்திருப்பர். ‘என் மக்கள்’ ‘என் சமூகம்’ என்ற பொறுப்புணர்வு சார்புநிலை ஒவ்வொருவருக்கும் வேண்டும். அவை விரோதிகளுக்கு செவிசாய்க்காத வண்ணம் தன் மேலாண்மையை பணிவுடன் செயல்படுத்த வேண்டும். ஆதிக்கம் கூடாது: மாறாக பணிவு வேண்டும்.

6.ஆயன் தன் மந்தையை நெறிப்படுத்துவதைப் போல ...

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர் ...) தன் மக்களை நெறிப்படுத்தி நேசிக்க வேண்டும்.தேவைப்படும் போது எச்சரிக்க வேண்டும்: பண்ணிசைத்து இளைப்பாறச் செய்யவேண்டும். தவறி தான்தோன்றித்தனமாக செல்லும் ஆட்டிற்குமுன் கல்லெறிந்து எச்சரிக்க வேண்டும்: மீறியும்சென்றால் முன்சென்று தடுக்கவேண்டும். ஆயனிடம் உள்ள வளைந்த கோல் வழிதவறி செல்வதை கழுத்தில் மாட்டி இழுத்து மந்தையில் சேர்ப்பதற்காக தான். ஆகையால் தேவைப்படும்போது துரிதமாக செயல்பட வேண்டும்.

7. ஆயன் தன் மந்தையை வழிநடத்துவது போல ...

ஒவ்வொரு தலைவரும் (பெற்றோர், ஆசிரியர், நண்பர்...) தன் மக்களை வழிநடத்திட வேண்டும். தன்னார்வத்தொணடுள்ளம், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாக தியாகம், காட்டையும் மேட்டையும் கண்டு அஞ்சாத கடினமான உழைப்பு, பசுமையும் நீர்வளத்தையும் அறிந்து வழிநடத்த இலட்சியம் நிறைந்த பார்வை இவையெல்லாம் ஆயனுக்கும் தலைவனுக்கும் அடிப்படை. ஓப்படைக்கப்பட்ட மந்;தையை ஆண்டவர் பாதுகாத்து வழிநடத்தியதுபோல ஆற்றல் குறையாமல் வழிநடத்திட வேண்டும். தேவைப்பட்டால் தன்னையே இழந்திட வேண்டும்.

இ;ன்றைய திருச்சபைக்கு சிறந்த தலைவர்களே தேவைப்படுகிறார்கள். புனித பேதுருவைப்போல (முதல் வாசகம்) மக்களை நல்வழிப்படுத்தவும், நெறிப்படுத்தவும், அறிவுறுத்தவும், கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்கவும் நல்ல சிறந்த தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆகையால் ஒவ்வொருவருமே அவரவர்களுக்குரிய சூழ்நிலையில் சிறந்த தலைவர்களாக இருந்து திருச்சபையை வலிமைப்படுத்துவோம்: புதிய எழுச்சி காணுவோம்!