இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண

ஆமோஸ் 6: 1, 4-7
1 திமோத்தேயு 6: 11-16
லூக்காஸ் 16: 19-31

கிறிஸ்துவில் அன்பிற்குரியவர்களே, ஒரு தடவை கடவுள் இல்லை என்று சொல்லும் ஒருவன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் ஒருவனைப் பார்த்து கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டான். அதற்கு அவன் கடவுள் உன் நாக்கில் இருக்கிறார் என்றான். கடவுள் என் நாக்கில் இருந்தால், என் நாக்கை நான் வெட்டி விடுவேன் என்றான். அதற்கு பக்தன் கடவுள் உன் கையிலிருக்கிறார் என்றால் என்ன செய்வாய் என்றான். என் கையை வெட்டி எறிந்து விடுவேன் என்றான். மீண்டும் பக்தன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனை நோக்கி, கடவுள் உன் பணத்திலிருந்தால் என்ன செய்வாய் என்று கேட்க, அவன் கடவுள் என் பணத்திலிருந்தால் நான் அவரைப் பெட்டியில் பூட்டிவைத்து பூசை செய்வேன் என்றான். இந்தக் கதையிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளைவிட பணத்தை அதிகம் அன்பு செய்யும் மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

இந்தக் கதையைப் போல, இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு ஒரு கதையைச் சொல்கிறார். பணக்காரன், ஏழை லாசர் என்ற இருவர் இருந்தனர். பணக்காரன் பகட்டான ஆடை உடுத்தி, அருசுவை உணவு அருந்தி சொகுசான வாழ்வு வாழ்ந்து வந்தான். அவனுடைய வீட்டின் முன்னால் ஏழை லாசர் பசியோடு மிகவும் துன்பத்தில் வாழ்ந்து வந்தான். பணக்காரன் ஏழை லாசரையும் அவனுடைய பசியையும் கண்டுகொள்ளவில்லை. அவன்மீது மரமிரங்கி அவனுக்கு இரக்கம் காட்டவில்லை. இருவரும் ஒருநாள் இறந்தனர். ஏழை லாசர் மோட்சம் சென்று கடவுளுடைய மடியில் இளைப்பாற்றி அடைந்தான். ஆனால் பணக்காரனோ எரியும் நரகத்தில் தள்ளப்பட்டு வேதனை அடைந்தான். இவ்வுலகில் தான் செல்வ செழிப்பில் வாழ்ந்த போது, பணக்காரன் ஏழையான லாசரைக் கண்டுகொள்ளவில்லை. அவன் தன் இன்ப சுகங்களை மட்டும் தான் கவனித்தான். ஏழை லாசருக்கு உதவிசெய்ய அவனுக்கு மனமில்லை. இவ்வுலகில் அவன் சுகத்தை அனுபவித்தான். அதனால் மறு உலகில் அவன் துன்புற்றான். ஏழை லாசர் இவ்வுலகில் துன்புற்றான். மறுவுலகில் இன்புற்றான்.

இந்தக்கதை நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? கடவுளின் ஆசீரைப்பெற பலவழிகள் உண்டு. அதில் ஒரு அருமையான வழி நாம் சந்திக்கும் ஏழை எளியவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்து அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுப்பது. உலகில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் தங்களுடைய சகோதர, சகோதரிகள் தேவையில் கஷ்டப்படுவதைக் கண்டு அவர்களுக்கு உதவ முன்வராவிட்டால், அவர்கள் எப்படி கடவுளை அன்பு செய்ய முடியும் என்று புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் 3: 17 ல் தெளிவாகக் கூறுகிறார். இதனால இயேசு மத்தேயு நற்செய்தியில் 6 வது அதிகாரத்தில் விண்ணகம் செல்ல முதன்மையாக செய்ய வேண்டிய காரியம் அறச்செயல்கள், அதாவது தர்மம் செய்ய வேண்டும் என்று அழுத்தமாகக் கூறுகிறார். மேலும் மத்தேயு 25 ம் அதிகாரத்தில் நடுத்தீர்வு என்ற தலைப்பில் இயேசு கூறும்போது சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள். பரலோக மகிமையில் இடம் பெறுவீர்கள் என்று கூறுகின்றார்.

எனவே நாம் கடவுளின் மீட்பைப் பெற, ஆசீரைப் பெற வேண்டுமென்றால், நாம் ஏழை எளியோருக்கு தர்மம் செய்வதில் கொஞ்சம் அதிகமாக அக்கறை காட்ட வேண்டும். இவ்வுலக செல்வங்களைப் பயன்படுத்தி இல்லாதவர்களுக்கு உதவி செய்து மறுவுலகில் புண்ணியத்தை நாம் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். இவ்வுலக செல்வங்கள் எதுவும் நாம் இறக்கும் போது நம்மோடு வரப்போவதில்லை. மாறாக நாம் செய்யும் நல்ல செயல்களே, குறிப்பாக நாம் செய்யும் அறச்செயல்களே நம்மோடு வரும். நமக்கு வானக வாழ்வு தரும். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர் ஏழைகளுக்கு உதவி செய்யாத பணக்காரர்களைப் பார்த்து உங்களுக்கு ஐயோ கேடு என்று கூறுகின்றார். பிறருக்கு நாம் உதவி செய்யவிடாமல் நம்மைத் தடுப்பது நமது சுயநலம். எனவே நாம் நமது சுயநலத்தை நீக்கி, இவ்வுலகில் பிறர் நல சிந்தனையோடு உதவி செய்து வாழ்ந்து வந்தால் இறைவனின் இரக்கத்தையும், அன்பையும், மறுவாழ்வையும் பெற்று நாம் புனிதர்களாக மகிழ்ச்சியோடு வின்னகத்தில் வீற்றிருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பிறரை வாழவைத்து வாழக் கற்றுக்கொள். அப்போது தான் உன் வாழ்வின் அர்த்தம் உனக்குப் புரியும். நீ பிறரை வாழவைத்தால், கடவுள் உன்னை வாழவைப்பார். ஆமென்.