இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் இருபத்தைந்தாம் ஞாயிறு

பகிர்வோம் பரலோக மாட்சி பெற

ஆமோஸ் 8: 4-7
1 திமோத்தேயு 2: 1-8
லூக்காஸ் 16: 1-13

கிறிஸ்துவில் பிரியமான நண்பர்களே, நமது வாழ்வில் நாம் இரண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். கடவுள் என்னும் ஒரு நண்பரையும், நம்மோடு வாழும் மனிதர்கள் என்னும் மற்றொரு நண்பரையும் நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகில் நாம் மகிழ்ச்சியோடு வாழ இவ்வுலக நண்பர்கள் அவசியம். விண்ணுலகில் மாட்சியோடு வாழ கடவுள் என்னும் நண்பர் அவசியம்.

செல்வத்தைக்கொண்டு நாம் கடவுளின் அன்பையும் நட்பையும் நாம் சம்பாதித்துக்கொள்ள முடியும் என்பதற்கு இங்கே ஒரு கதையை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். ஓர் ஊரிலே இரண்டு பணக்காரர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் பெரிய கொடை வள்ளல். தனது செல்வத்தைக்கொண்டு தனது ஊர் மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தான். அவ்வூரில் யாருக்கும் இல்லை என்ற பேச்சே கிடையாது. ஆனால் மற்றொருவன் தனக்குப் போக மிஞ்சியதை பிறருக்குக் கொடுத்து வந்தான். அவன் பெரிய கொடை வள்ளல் அல்ல.

கவிஞர் கண்ணதாசன் எழுதி வைத்திருப்பது போல ஆடிய ஆட்டமென்ன, பாடிய பாட்டென்ன, தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றமென்ன, கூடுவிட்டு ஆவிபோனால கூடவே வருவதென்ன. நம் கூடவே வருவது நமது பாவமும் புண்ணியமும் தான். இரண்டு பணக்காரர்களும் இறந்தார்கள். அரசனும் கணக்கு கொடுக்க வேண்டும். ஆண்டியும் கணக்கு கொடுக்க வேண்டும். இருவரும் கடவுளிடம் கொண்டுவரப்பட்டார்கள். கடவுள் இருவருடைய கணக்கையும் பார்த்து விட்டு, முதல் பணக்காரனிடம் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி இதோ உன் மாளிகை நீ அங்கு செல் என்றார். இரண்டாவது பணக்காரனிடம் ஒரு குடிசையைக் காட்டி இதோ உன் வீடு என்றார். இரண்டாவது பணக்காரன் இது அநியாயம் என்று சொல்லி கடவுளிடம் கோபப்பட்டான். நாங்கள் இருவரும் பணக்காரர்கள் எனக்கு குடிசை வீடு, அவனுக்கு மாளிகை வீடா என்று கேட்டான். கடவுள் அவனுக்கு கூறினார். நீ எனக்கு கொடுத்த பணத்தை வைத்து இந்த குடிசையைத்தான் என்னால் கட்ட முடிந்தது. ஏனெனில் நீ கொஞ்சம் கொடுத்தாய். அவனோ மிகுதியாகக் கொடுத்தான் எனவே அவன் கொடுத்ததை வைத்து அவனுக்கு மாளிகையைக் கட்டினேன் என்றார். அவன் அடுத்து கடவுளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் தான் செய்ததை நினைத்து வருந்தினான்.

இந்தக் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? நாம் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் மறுவுலகில் பெற விரும்பினால், நாம் இவ்வுலகில் வாழும்போது நம்மால் எவ்வளவு பிறருக்கு தர்மம் செய்ய முடியுமோ, அதை நாம் தாராள மனதுடன் செய்ய வேண்டும். ஒவ்வொரு மனிதனிலும் கடவுளைக் கண்டு நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அடுத்து மனிதர்களை நாம் நண்பர்களாக்கிக்கொள்ள நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும். தனியாக அழுது விடலாம். ஆனால் தனியாக சிரிக்க முடியாது. அப்படி சிரித்தால் நாம் பைத்தியராகக் கருதப்படுவோம். ஆகவே குடும்பத்தில் கணவனுக்கு மனைவி தேவை, மனைவிக்கு கணவன் தேவை. பிள்ளைகளுக்கு பெற்றோர் தேவை, பெற்றோருக்கு பிள்ளைகள் தேவை. ஆசிரியருக்கு மாணவர்கள் தேவை, மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை. தொண்டருக்கு தலைவன் தேவை, தலைவருக்கு தொண்டன் தேவை. இவ்வாறு நாம் வாழ்வில் ஒருவர் மற்றவரின் நட்பை, உதவியை சார்ந்து வாழ்கிறோம். இவ்வுலகில் எந்த மனிதனும் ஒரு தனித்தீவாக வாழ முடியாது. அவன் நான்கு பேரோடு சேர்ந்து வாழ்ந்தால் தான் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும். ஏனெனில் மனிதன் பிறரோடு சேர்ந்து வாழ கடவுளால் படைக்கப்பட்டவன். எனவே தான் தொடக்கத்தில் கடவுள் மனிதனை ஆனும், பெண்ணுமாகப் படைத்தார் என்று வாசிக்கின்றோம்.

எனவே நம்முடைய வாழ்வில் அதிக நண்பர்களை நாம் சம்பாதிக்க முடியாவிட்டாலும், ஒரு நான்கு பேருக்காவது நன்மை செய்து நாம் நண்பர்களை சம்பாதித்துக்கொள்ள வேண்டும். காரணம் பெரியவர்கள் கூறுவது போல, செத்தபிறகு நமது பாடையைத் தூக்க நான்குபேராவது வரனும். எனவே நமக்கு நண்பர்கள் தேவை. இப்படி நண்பர்களைப் பெறுவதற்கு சரியான வழி பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை நாம் செய்வதாகும். இயேசு இவ்வுலகில் அனைவருக்கும் நன்மைகளையே செய்துவந்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்களுக்கு கடவுளுடைய அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், கருணையையும், தன்னுடைய செயல்களில் வெளிக்காட்டினார். மக்கள் அவரை ஒரு மிகப்பெரிய இறைவாக்கினராக, போதகராகப் பார்த்தார்கள். கடவுள் தன் மக்களைத் தேடி வந்திருக்கிறார் என்று சான்று பகர்ந்தார்கள்.

எனவே நாமும் இயேசுவைப் போல, இவ்வுலக வாழ்வில் பிறருக்கு நன்மையையே செய்து வாழும் வரத்தை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம். நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாகி, உலகப் பொருட்கள் நம்மை ஆட்டிப் படைக்க விடாமல், உலக செல்வங்கள் நமக்கு மட்டும் சொந்தமல்ல. மாறாக இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களுக்கும் சொந்தம் என்று எண்ணி பொருட்களை முடக்கிவைக்காமல் அவைகளைப் பகிர்ந்து வாழும் பக்குவத்தையும், பண்பையும் நாம் கொண்டு, இயேசு விரும்பிய இறையாட்சியை அவருடைய அப்போஸ்தலர்களைப் போல நாமும் இவ்வுலகில் நிலைநிறுத்திட இத்திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம். பகிர்ந்து வாழ்வோம் பிறரோடு, பரலோகத்தைப் பெற்றிடுவோம் பரமனிடம்.