இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு

மனமாறி புதுவாழ்வு வாழ

விடுதலைப்பயணம் 32: 7-11, 13-14
1 திமோத்தேயு 1: 12-17
லூக்காஸ் 15: 1-10 (சுருக்கமான நற்செய்தி)

இறையேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி நான்காம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இன்றைய திருவழிபாட்டின் மூன்று வாசகங்களும் நமக்கு கடவுளுடைய மன்னிப்பையும், அன்பையும், இரக்கத்தையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரயேல் மக்கள் நமக்கு முன்னால் நின்றுகொண்டு, நம்மிடம் கூறுவது என்னவென்றால், எங்கள் சகோதர சகோதரிகளே, கடவுள் எங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையெல்லாம் மறந்தோம். கடவுள் எங்களை செங்கடலைக் கடக்கச் செய்து எங்களை பாரவோன் மன்னனின் அடிமைத்தளையிலிருந்து மீட்டார். வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்து எங்கள் பசியைப் போக்கினார். கற்பாறையிலிருந்து தண்ணீர் வரச்செய்து எங்கள் தாகத்தை தணித்தார். ஆனால் அதையெல்லாம் மறந்து கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தோம். பொன்னால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்கி பலிசெலுத்தினோம். ஆனால் எங்கள் தலைவர்கள் எங்கள் வேண்டுதலைக்கேட்டு எங்களுக்காக கடவுளிடம் பரிந்துபேசி எங்களுக்குப் பாவ மன்னிப்பைப் பெற்றுத் தந்தார்கள். எனவே எங்கள் பாவங்களை மன்னித்த கடவுள் உங்கள் பாவங்களையும் மன்னிப்பார் என்பதில் நீங்கள் உறுதியாயிருங்கள்.

இரண்டாவதாக புனித சின்னப்பர் நம்மைப் பார்த்து கூறுவதாவது. நான் கிறிஸ்துவைப் பழித்துரைத்தேன். துன்புறுத்தினேன். கிறிஸ்தவமறையை இழிவு படுத்தினேன். பாவிகளுள் பெரும்பாவியாக நான் இருந்தேன். இறுப்பினும் ஆண்டவராகிய கிறிஸ்து என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டார். என்னை மன்னித்து எனக்கு ஆசியளித்த ஆண்டவர் உங்களையும் மன்னித்து ஆசியளிப்பார் என்று இரண்டாம் வாசகத்தில் அவர் நமக்குக் கூறுகின்றார்.

மூன்றாவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இளைய மகன் தந்தையின் பேச்சைக் கேட்காமல் தன் சொத்தைப் பிரித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடினான். ஓடினான் ஓடினான் வாழ்வின் அழிவை நோக்கி ஓடினான். விலைமாதரோடு வாழ்ந்தான். சொத்தையெல்லாம் அழித்தான். இறுதியில் புத்தி தெளிந்து மீண்டும் தந்தையிடம் வந்தான். தந்தை ஓடிச்சென்று கண்கலங்க கட்டி அணைத்து முத்தமிட்டார். அப்பா, உமக்கெதிராகவும், விண்ணகத்திற்கு எதிராகவும் நான் பாவம் செய்தேன். இனி உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன் என்று சொல்லி முடிக்குமுன்பே, தந்தை அவனைப்பேச விடவில்லை. அவனுக்கு உடுக்க புதிய ஆடையையும், விரலுக்கு மோதிரமும், கால்களுக்கு மிதியடிகளும் கொடுக்கச் சொல்லி கொளுத்த கன்றை அடித்து விருந்து கொண்டாடினார். என் மகன் காணாமல் போயிருந்தான் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டான் என்று மகிழ்ச்சியடைந்தார். ஆம் இந்த தந்தையைப் போல எந்த தந்தையும் இல்லை. இல்லவே இல்லை. இந்த தந்தையை விட கடவுள் இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர், மன்னித்து ஏற்றுக்கொள்பவர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இதைத்தான் எசாயா இறைவாக்கினர் தன்னுடைய புத்தகத்தில் கூறுகின்றார். நம்முடைய பாவங்கள் செந்தூரம் போல் சிவந்திருந்தாலும், கடவுள் அவைகளை பனித்துளிகளைப் போன்று வெண்மையாக்குவார். நம்முடைய் பாவங்கள் இரத்தக்கறையைப் போன்று இருந்தாலும் அவர் அவற்றை நீக்கி பஞ்சுபோல் தூய்மையாக்கிவிடுவார் (எசாயா 1: 18).

இறைவனின் இரக்கத்தைப் பேற்று பேரின்பம் கொண்டவர் எத்தனையோ மனிதர்கள். இங்கே அப்படி இறைவனின் மன்னிப்பைப் பெற்று புனிதரான ஒருவருடைய வாழ்க்கை நிகழ்வைக் காண்போம். இத்தாலி நாட்டில் ப்ளாரன்ஸ் என்ற ஒரு நகரம் உண்டு. அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தவள் சம்மனசுமேரி என்ற பெண். தன்னுடைய வாழ்வில் அநேகப் பாவங்களைச் செய்து மற்றவர்களையும் பாவத்தில் வாழவைத்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் தன் அலமாரியைத் திறந்து சேலையை எடுக்கும்போது அவள் கண்ணில் படாத ஒன்று பட்டது. பாடுபட்ட சிலுவை அங்கு காணப்பட்டது. அந்த பாடுபட்ட சிலுவை நான் உனது பாவங்களுக்காக மறித்தேன் என்று கூறியது. இதைக்கேட்ட சம்மனசுமேரி மிகவும் பூரித்துப்போய், தன்னுடைய பாவ வாழ்வை விட்டுவிட்டு புதிய வாழ்வு வாழ ஆரம்பித்தாள். ஆனால் பாவம் அவளை விடவில்லை. அவளைத் துரத்தியது. மீண்டும் முந்திய பாவவாழ்வை விட பிந்திய பாவவாழ்வு மோசமானது. அவள் அதிகப் பாவங்களைச் செய்ய ஆரம்பித்தாள். கடவுளை வெறுத்தாள். இருப்பினும் இயேசு பொறுமையோடு அவள் மனமாற்றத்திற்காக காத்திருந்தார். ஒருநாள் இந்த சிலுவைதான் என்னை மனமாற அழைக்கிறது. எனவே இதை ஒழித்துவிட வேண்டும் என்று எண்ணி, வீட்டில் இருந்த எல்லா சிலுவைகளையும் தீயில் போட்டு எரித்தாள். இனி நான் பயமில்லாமல் வாழலாம் என்று நினைத்தாள். ஒருநாள் அவள் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் அழகுபடுத்திக் கொண்டிருக்கும்போது, அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாக கண்ணாடியில் தெரிய ஆரம்பித்தது. கண்ணாடியில் இரத்தகறை படிந்த இயேசுவின் முகத்தை அவள் பார்த்தாள். அவளுக்குப் பின்னால் பாடுபட்ட சுருபம் தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவள் இயேசுவின் அன்பை உணர்ந்தாள். அன்றிலிருந்து தன் பாவத்தை முழுமையாக விட்டுவிட்டு புதுவாழ்வு வாழத் தொடங்கினாள். இன்று ஒரு புனித சம்மனசுமேரியாகத் திகழ்கின்றார்.

ஆம் நாமும் நம் வாழ்வில் புனித சம்மனசுமேரியைப் போன்று, ஆண்டவருடைய மன்னிப்பின் மான்பை உணர்ந்து, நம்முடைய பாவத்திற்காக மனம் வருந்தி, பாவத்தை விட்டு விலகி, புதிய வாழ்வு வாழ ஆரம்பித்தால், நாமும் கடவுளின் அருளால் ஒரு புனிதராவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே. கடவுள் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், மன்னிப்பவர் என்பதை நாம் முழுமையாக விசுவசிப்போம். அவருடைய பிள்ளைகளாக தூய வாழ்வு வாழ்வோம்.