இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு

இடுக்கமான வாயில்

எசாயா 66: 18-21
எபிரேயர் 12: 5-7, 11-13
லூக்காஸ் நற்செய்தி 13: 22-30

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,துன்பங்கள் நம் வாழ்வில் இணைந்த ஒன்றாக இருக்கின்றது. துன்பங்கள் இல்லாத மனிதர் யாரும் இவ்வுலகில் இல்லை.துன்பமும், துயரமும் இல்லாத வாழ்வுக்காக நாம் ஏங்கித் தவித்தாலும், துன்பம் நம்மை விட்டுப் போவதில்லை. இதையே புனித பவுல் “துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்குத் தெரியும். நாம் துன்பப்படத்தான் வேண்டும். என்று 1 தெச 3:3 வசனத்தில் கூறுகிறார். வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து வருவதை இறைவாக்கினர் ஆமோஸ் அழகாக எடுத்துரைக்கின்றார். “சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பி ஓடி வீட்டிற்குள் நுழைந்து சுவரில் கைவைத்து சாய்ந்த போது பாம்பு ஒன்று கடித்தாற்போலும் என்று ஆமோஸ் 5: 19 ல் சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசுவும் தன்னுடைய இறையாட்சிப் பணி வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தார். இன்றைய நற்செய்தியில் இயேசு ஊர்கள், நகர்கள்தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணமானார் என்று லூக்காஸ் கூறுகிறார். இயேசுவைப் பொறுத்தவரை எருசலேம் என்பது துன்பங்கள், பாடுகளின் இடம். எனவே அவர் தன் துன்பத்தை நோக்கிப் பயணம் செய்தார். கடவுள் இவ்வுலகை தன் மகன் இயேசுவின் இறப்பு உயிர்ப்பு வழியாக மீட்கத் திருவுளம் கொண்டார் என்று நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். எனவே தான் தந்தையின் விருப்பப்படி துன்பத்தை ஏற்று, இவ்வுலகை மீட்டது போல, தன் சீடர்களும் துன்பங்கள் வழியாக தனக்கும், நற்செய்திக்கும் சான்று பகர வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டார். சிலுவை இன்றி மீட்பு இல்லை. துன்பமில்லா கிறிஸ்தவ வாழ்வு உப்பில்லாத பண்டத்தைப் போன்றது.

இன்றைய நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம், போதகரே மீட்பு பெறுபவர் சிலர் தாமோ என்று கேட்க, அவருக்கு இயேசு மறுமொழியாக இடுக்கமான வாயில் வழியே நுழையப் பாடுபடுங்கள் என்று கூறுகின்றார். இதனுடைய ஆழமான அர்த்தம் என்ன? இயேசு எவற்றை இடுக்கமான வாயில் என்று இங்கே குறிப்பிடுகின்றார். இறையரசின் வழியில் யார் நடக்க முயலுகிறார்களோ அவர்களே இடுக்கமான வாயில் வழியாக நுழைபவர்கள். ஏனெனில் இறையரசின் வழிகள் சுலபமான வழிகள் அல்ல. அது உண்மையின் அரசு, அன்பின் அரசு, நீதியின் அரசு, மன்னிப்பின் அரசு, இரக்கத்தின் அரசு சமத்துவத்தின் அரசு. இவைகளை இவ்வுலகில் நிலைநாட்டுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இவைகளை நாம் நிலைநாட்ட முயலும் போது நிறைய இடையூறுகளும், இன்னல்களும், துன்பங்களும் தோல்விகளும் வரும். இவற்றை நாம் சந்திக்க தயாராக இருக்கிறோமா என்று இயேசு நம்மிடம் கேட்கின்றார்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு ஒரு சவால் நிறைந்த வாழ்வு. கல்லும் முள்ளும் நிறைந்த வாழ்வு. இதைத்தான் நாம் பல புனிதர்கள் வாழ்வில் காண்கிறோம். எடுத்துக்காட்டாக நம்முடைய தேசத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மறையைப் பரப்பிய புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) தன்னுடைய தூய வாழ்வாலும், கிறிஸ்தவப் போதனைகளை தன்னுடைய வாழ்வில் கடைபிடித்ததாலும் அவர் தலை வெட்டப்பட்டு வேத சாட்சியாக மரித்தார். ஏன் கோட்டார் மறைமாவட்டத்தில் இந்து குடும்பத்தில் பிறந்து, பின்பு கிறிஸ்துவை உண்மையான கடவுளாக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவராக வாழ்ந்து, சாதிய வேற்றுமைகளையும், சமுதாயக் கொடுமைகளையும் நற்செய்தி வழியாக எதிர்த்துப் போராடிய தேவசகாயம் பிள்ளை சுட்டுக்க்கொல்லப்பட்டார். இன்னும் புனித தோமையார், புனித இராயப்பர், சின்னப்பர் மற்றும் அநேக புனிதர்கள் இயேசு காட்டிய இடுக்கமான வாயிலாகிய இறையாட்சியின் வழியில் நடந்து அவர்கள் இயேசுவோடு விண்ணக மகிமையில் பங்கு கொண்டார்கள்.

இன்று நாம் எப்படி வாழ்கிறோம்? கிறிஸ்தவர்களாக பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நமது மீட்பைப்ற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா? நாம் நமது மீட்பில் அக்கறை உள்ளவர்களாக வாழுகிறோமா? அல்லது நாம் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக சடங்குகளையும், சம்பிரதாயங்களை மட்டும் கடைபிடித்துக்கொண்டு, இவ்வுலக இன்பத்திலும், ஆசையிலும், கவர்ச்சியிலும் மூழ்கி வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கிறோமா? நம்முடைய கிறிஸ்தவ வாழ்வை நாம் எப்படி வாழ்கிறோம்? கிறிஸ்துவைப்போல் நாம் பிதாவாகிய கடவுளை முழுமையாக நம்பி, அவரை அன்பு செய்கிறோமா? அவரிடம் நம்முடைய வாழ்வை ஒப்படைக்கிறோமா? நாம் அவருடைய விருப்பத்தின்படி வாழ அவரிடம் வரம் வேண்டி மன்றாடி இருக்கிறோமா? கடவுள் நம் தந்தை நாம் அவருடைய பிள்ளைகள் என்ற மனநிலை நம்மிடம் ஆழமாக இருக்கிறதா?

இயேசுவின் வாழ்வை நாம் உற்றுநோக்க வேண்டும். அவர் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றார். இயேசுவின் வாழ்வு அவருடைய சீடர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. இயேசு துன்பத்தை ஆவியின் துணையோடு துணிவோடு எதிர்கொண்டது அவருடைய சீடர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. இயேசு பயத்தோடும், நடுக்கத்தோடும், கோழைகளாக வாழ்ந்த தன் சீடர்களுக்கு திடமும் தைரியமும் கொடுத்தார். அவர்களை அவர் தயார் படுத்தினார். என்னைப் பின்பற்ற விரும்புகிறவன் தன்னையே இழக்க வேண்டும். துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் துணிவைக் கொடுத்தார். தன்னை இழக்க விரும்பாதவன் அவருக்கு ஏற்றவன் அல்லன் என்று அவர் எடுத்துரைத்தார். சீடர்கள் இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு பெந்தகோஸ்தே நாளில், ஆவியால் அருட்பொழிவு பெற்று, புத்தொளி பெற்று, தங்கள் வாழ்வை, நற்செய்திக்காக அர்ப்பணித்தார்கள். கிறிஸ்துவோடு இறக்கவும் துணிவு கொண்டார்கள். இனி இந்த வாழ்வு எங்களுக்குச் சொந்தமல்ல, மாறாக இது ஆண்டவருக்குரியது என்று தைரியமாக அவர்களைத் துன்புறுத்தியவர்களிடம் கூறினார்கள்.

எனவே நாம் வெறும் பேச்சில் கிறிஸ்தவர்களாக இல்லாமல், நமது வாழ்வில் கிறிஸ்துவின் மதிப்பீடுகளான, சமாதானம், அன்பு, இரக்கம், மன்னிப்பு, பரிவு,சமத்துவம் போன்றவற்றை கடைபிடித்து வாழவேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கையில் வரும் துன்பங்களையும், சோதனைகளையும் வேதனைகளையும் நாம் சந்திக்க நமது அருளையும், ஆவியின் திடத்தையும் அருள வேண்டுமென்று இயேசுவிடம் கேட்கவேண்டும். நாம் பூரிய கிறிஸ்தவர்கள். நாம் கோயிலுக்கு, திருப்பலிக்கு, செபத்திற்கு தவறாகப் போகிறோம். எனவே கடவுள் நமக்கு நமது இறப்பிற்குப்பின் நமக்கு மோட்சம் கொடுப்பார் என்று நம்மை ஏமாற்றிக்கொள்ளாமல், இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ்வதற்கு வரும் எல்லா தடைகளையும், துன்பங்களையும் சவால்களையும் மனவுறுதியோடு ஏற்க கிறிஸ்துவின் துணைகொண்டு நடைபயில்வோம். இறையரசை நமதாக்கிக்கொள்வோம்.