இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு [நீதியின் ஞாயிறு]

உண்மையான சீடத்துவம் எது?

எரேமியா 38: 4-6, 8-10
எபிரேயர் 12: 1-4
லூக்காஸ் நற்செய்தி 12: 49-53

கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே, இன்றைய ஞாயிறு நீதியின் ஞாயிறாக சிறப்பிக்கப்படுகிறது.இன்றைய மூன்று வாசகங்களும் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டும் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

புனிதமான வாழ்வு வாழ்ந்து வந்த ஒரு பெரியவரிடம், இளைஞன் ஒருவன் வந்து தான் கிறிஸ்துவை பின்பற்ற விரும்புவதாகக் கூறி, அவரிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு அப்பெரியவர் நீ ஒரு பென்சிலைப் போல வாழ வேண்டும் என்று கூறினார். அவனுக்கு அவர் சொன்னது புரியவில்லை. கொஞ்சம் விளங்குமாறு கூறும்படி கேட்டான். அதற்கு அவர் முதலாவதாக பென்சில் தன்னை கூர்மையாக வைத்துக்கொள்கிறது. இரண்டாவதாக தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுப்பதற்காக தன்னை மற்றொருவர் கையில் முழுமையாகக் கொடுத்துவிடுகிறது. மூன்றாவதாக அது தான் செல்லுமிடமெல்லாம் தனது பதிவை விட்டுச் செல்கிறது. அதுபோல நீயும் உன்னுடைய வாழ்க்கையில் வரும் தோல்விகளையும், துன்பங்களையும் பயன்படுத்தி உன்னையே பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக உன்னையே பிறருக்கு கொடுக்க உன்னை கடவுள் கையில் ஒப்படைக்க வேண்டும். மூன்றாவது உன்னுடைய நல்ல சிந்தனைகளாலும், செயல்களாலும் மக்களது மனதில் இடம் வகிக்க வேண்டும் என்று கூறினார். இதுவே நீ கிறிஸ்துவை பின்பற்ற விரும்பும் வழியாகும் என்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினரை மக்கள் தண்ணீர் இல்லாத் பாழ்கிணற்றில் அவரைத் தள்ளி விடுகிறார்கள். காரணம் அவர் அவர்கள் விருப்பத்திற்கு இணங்காமல் கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்து மக்களுடைய அக்கிரமங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் மனம் மாறாவிடில் அவர்கள் கடவுளின் கோபத்துக்கு ஆளாவார்கள் என்று எச்சரித்து வந்தார். எரேமியா இறைவாக்கினர் கடவுளுக்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்ததால் கடவுள் அவரை மக்கள் இழைத்த ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவரைத் தேற்றி அவருக்கு திடமளித்து தன்னுடைய பணியை கைவிடாது செய்யும்படி ஆணையிடுகிறார். எரேமியா கடவுளின் வார்த்தையை நம்பி அவருடைய பணியை நேர்மையோடு செய்து வந்தார்.

இரண்டாம் வாசகம் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் ஆசிரியர் கிறிஸ்துவை மெசியாவாக ஏற்று திருமுழுக்குப்பெற்ற கிறிஸ்தவர்களிடம், தங்களது அழைப்புக்கேற்ப, தங்களது பாவ வாழ்வை விடுத்து, இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகரும் உன்னத வாழ்வில் மனவுறுதியோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். நம்பிக்கையை நமக்கு கொடையாகக் கொடுத்து அதை நிறைவு செய்பவராகிய கிறிஸ்து மீது நமது கண்களைப் பதிய வைக்க வேண்டுமெ என்று கூறுகிறார். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் எவ்வாறு மனவுறுதியோடு போராடி வெற்றிபெற்றார் என்பதை நாம் எண்ணிப்பார்த்து, நாமும் பாவத்திற்கு எதிரான் போராட்டத்தில் இரத்தம் சிந்தும் அளவுக்கு எதிர்த்து நிற்க அழைக்கப்படுகிறோம். இதுதான் உண்மையான கிறிஸ்துவ சீடத்துவ வாழ்க்கை முறையாகும். கிறிஸ்துவின் சீடர்கள் அநீதிக்கும், அக்கிரமத்துக்கும் பாவத்திற்கும் எதிராக போராட வேண்டும். அதனால் வரும் இழப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நீதி உண்மை, அன்பு அமைதி என்னும் தீயை மூட்ட வந்தேன் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இவற்றை நிலைப்படுத்துவதற்கு அவர் பாடுகள் என்னும் திருமுழுக்கைப் பெற வேண்டும் என்றும் அது நிறைவேறுமளவும் அவர் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறதாகக் கூறுகிறார். இயேசுவின் பொருட்டும் அவருடைய நற்செய்தியின் பொருட்டும் இவ்வுலகில் மக்களிடையே பிளவு ஏற்படும். இந்தப் பிளவும் பகையும் முதலில் குடும்பத்தில் உள்ளவர்களிடையே நிகழும். இருப்பினும் மனவுறுதியோடு நிற்பவர்கள் உண்மையான சீடத்துவ வாழ்வு வாழ்வார்கள். அவர்கள் இறுதியில் தங்களுடைய கைம்மாறைப் பெற்றுக்கொள்வார்கள்.

நாம் எப்படி நம்முடைய கிறிஸ்தவ அழைப்பை முழுமையாக உணர்ந்து, இயேசுவின் உண்மையுள்ள சீடர்களாக அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அதன்படி வாழுகிறோம். இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் கடமைக் கிறிஸ்தவர்களாக மேலோட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்து மேலும் நற்செய்தி மேலும் ஒரு ஆழமான விசுவாசமும் பிடிப்பும் இல்லை. அவர்கள் சிந்தனையும், செயலும் இந்த உலகக் காரியங்களைப் பற்றியதாகவே உள்ளது. உலகைச் சார்ந்த மக்களாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் வேரற்ற மரத்திற்கு ஒப்பானவர்கள். வெளிச் சடங்குகளுக்கும், ஆடம்பரங்களுக்கும், அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் தங்கள் அந்தரங்க வாழ்வை அலசிப்பார்க்க அவர்கள் நினைப்பதில்லை. அதைப் பொருட்படுத்துவதில்லை. கண் இருந்தும் குருடர்களாகவே நமது விசுவாச வாழ்வில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இத்தகைய போலி கிறிஸ்தவ வாழ்க்கை மாற வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஆவியில் வாழும் கிறிஸ்தவர்களாக மாறவேண்டும். அதற்கு நாம் இவ்வுலக சிற்றின்ப ஆசைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். உடலின் இச்சைகளுக்கு இடங்கொடாமல் ஆவியின் கனிகளால் தூண்டப்பட்டு, நமது வாழ்வு பிறருக்கு ஒளியூட்டும் உன்னத வாழ்வாக மாற இறைவனின் அருளை நாம் இத்திருப்பலியில் தொடர்ந்து வேண்டுவோம். இயேசுவைப் போல் கடவுளின் இறையரசை இவ்வுலகில் நிறுவ, துன்பங்களையும் துயரங்களையும் கண்டு துவண்டு போகாமல் இயேசு நம்மோடு இருக்கிறார் நமக்கு எந்த பயமும் இல்லை என்ற நம்பிக்கையில் விடியலாய் மாறுவோம். இறையாட்சி மலரச் செய்வோம்.