இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 19 ம் ஞாயிறு

விழிப்போடும், நம்பிக்கையோடும் காத்திருத்தல்

சாலமோன் ஞான நூல் 18: 6-9
எபிரேயர் 11: 1-2, 8-12
லூக்காஸ் நற்செய்தி 12: 32-48

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் அவருடைய வருகைக்காக விழிப்போடும், நம்பிக்கையோடும் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் உண்டு. அந்தந்தச் செயலை, அந்தந்த காலங்களில் செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்து முடிக்க வாய்ப்பு இல்லாத போது, அதற்காக காத்திருந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். காத்திருப்பதற்கு நமக்கு பொறுமை வேண்டும். பொறுமையோடு காத்திருந்து அந்தச் செயலை நாம் சிறப்பாகச் செய்யும் போது, நமக்கு மகிழ்ச்சியும், வெற்றியும், உயர்வும் கிடைக்கும்.

காத்திருப்பதில் பலவகை உண்டு. காதலன் காதலிக்காக காத்திருக்கிறான். மனைவி கணவனுக்காக காத்திருக்கிறாள். மாணவ மாணவிகள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். படித்து முடித்தவர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். கர்ப்பினிப் பெண் குழந்தை பிறப்பிற்காகக் காத்திருக்கிறாள். இன்னும் எவ்வளவோ காத்திருத்தலை நாம் உலகில் பார்க்கின்றோம்.

ஆனால் காத்திருப்பவர்கள் காலம் வரும் வரை சும்மா சோம்பேறியாக ஒன்றும் செய்யாமல் இருக்கிறதில்லை.எதிர்ப்பார்க்கும் காலம் வரை அவர்கள், அந்த காலத்தில் செய்ய வேண்டிய செயலை மனதில் கொண்டு அவற்றிற்காக தங்களை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழில் பழமொழி ஒன்று உண்டு. காற்றுள்ள போதே தூற்றிக்கொள். காலம் வாய்க்கும் போதே செயலை நாம் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் வெற்றியைப் பெறமுடியும். எனவே நாம் காத்திருப்பதை ஒரு சுமையாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு நல்ல தயாரிப்புக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நாம் நல்ல மந்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தலைவன், பணியாளன் என்னும் உவமை வழியாக, நாம் அவருடைய வருகைக்காக எவ்வாறு நம்மைத் தயாரிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். வெளியூர் சென்ற தலைவன், பணியாளனிடம் பொறுப்புக்களை நம்பிக்கையோடு ஒப்படைத்துச் செல்கின்றான். பணியாளன் தலைவன் அவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை உணர்ந்து, தன்னுடைய பணியை நேர்மையான மனதோடு செய்ய வேண்டும். அப்படி தலைவன் திரும்பி வரும்போது, பணியாளன் தன்னுடைய பணியை செவ்வனே செய்திருப்பதை பார்க்கும் போது அவன் பணியாளனைப் பாராட்டுவான்.

அதைப்போல கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும், இறையரசின் பணிகளை நேர்மையான முறையில் செய்து, கிறிஸ்து நமக்கு தந்தை வழியாக வாக்களித்துள்ள விண்ணக மகிமையைப் பெற்றுக்கொள்ளவும், அவரின் இரண்டாம் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்து காத்திருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

நாம் நம்மை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை நமக்கு இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது.” உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள். விண்ணுலகில் குறையாத செல்வத்தைஇ தேடிக்கொள்ளுங்கள்” என்கிறார். (லூக். 12.33).

இன்றைய உலகில் ஆண்டவர் நம்மிடம் வருவதை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்? ஒவ்வொரு நாளும் திருப்பலியில் அப்ப இரச வடிவில் ஆண்டவர் நம்மிடம் வருகிறார். இரண்டாவது நமது அன்றாட வாழ்வில், மற்றவர் வழியாக குறிப்பாக ஏழை எளியோர், கைவிடப்பட்டோர், பெற்றோரை இழந்தோர், துன்பத்தில் இருப்போர், நோயாளிகள், தேவையில் இருப்போர் இன்னும் பலர் வழியாக நம்மைச் சந்திக்கிறார். ஆனால் நாம் தான் அவரைக் கண்டுகொள்வதில்லை. காரணம் நாம் சுயநலத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் பிறரைப்பற்றி அக்கறை கொள்வதில்லை, நினைப்பதில்லை.

ஆனால் துவக்க காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழ்ந்து வந்தார்கள். கூடிச் செபித்தார்கள், தங்களிடம் உள்ளதை இல்லாதவர்களோடு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள். இறைவனையே நம்பி வாழ்ந்தார்கள். அவர்கள் செபத்திலும், இறைநம்பிக்கையிலும், இறைபக்தியிலும் நிறைந்திருந்தார்கள்.

நம்மில் பலபேர் உலக ஆசையில் மூழ்கி, நமக்கு சாவு இப்போது வராது என்று நினைத்துக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டு நிலையற்ற இன்பங்கங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். மனம் மாறி நல்ல வாழ்வு வாழ இன்னும் காலம் இருக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு கண்போன, கால்போன போக்கில் நாம் நமது வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உலகப் பொருள்களையே நம்பி வாழ்ந்த நாம் எப்படி நமது இறுதிக் காலத்தில் இறைவனை நம்பி வாழ நினைப்போம். கடைசிக் காலத்தில் நாம் மனம்நொந்து, குற்ற உணர்வோடு குழம்பிப்போய் வாழும் நாட்களில் வாழ்க்கையை வீணடித்து விட்டோமே என்று வருந்தி அழுது புலம்பிக்கொண்டிருப்போம். எனவே ஆண்டவரை நாம் சந்திக்க எப்போதும் விழிப்புடன் வாழக் கற்றுக்கொள்வோம்.

சக்கேயு எவ்வாறு இயேசுவைப் பார்க்க ஆவலோடு காத்திருந்தானோ, அதே போன்று நாமும் நமது மீட்பரை சந்திக்க தூய வாழ்வு வாழ்வதன் வழியாக நாம் நம்மையே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சக்கேயுவின் ஆர்வத்தை உணர்ந்த இயேசு அவனைத் தேடிச்சென்று அவனோடு பேசி அவனுடைய வீட்டில் அவனோடு உணவு உண்டு அவனுக்கு புதுவாழ்வு கொடுத்தது போல, நம்மையுன் அவர் தேடிவந்து நமக்குப் புதுவாழ்வு அளிப்பார்.

செல்வம் தன் மாமா துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கல்கத்தா போகும் வழியில் இரயில் நிலையத்தில் அவரைச் சந்திக்க ஆவலோடு காத்துக்கொண்டிருந்தான். இரயில் சரியான நேரத்திற்கு வரவில்லை. அரை மணிநேரம் காலதாமதமாகி விட்டது. எனவே பக்கத்தில் இருக்கும் தனது நண்பன் வீட்டிற்குப் போய் வரலாம் என்று நினைத்து சென்றுவிட்டான். அவன் போன பத்து நிமிடத்தில் இரயில் வந்துவிட்டது. அவன் திரும்பிவந்து பார்த்தபோது இரயில் ஏற்கெனவே போய்விட்டது என்பதைக் கேட்டு ஏமாற்றம் அடைந்து கண்ணீரோடு வீட்டுக்குச் சென்றான்.

சிந்திக்க
ஆம், நம் தலைவர் இயேசு எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது. எனவே விழிப்பாய் இருந்து காத்திருப்போம். காத்திருப்பது சுமையல்ல, சுகமானது என்பதை ஏற்றுக்கொள்வோம். இயேசு மீண்டும் வரும்வரை, அவரை எதிர்கொள்ள இவ்வுலகில் தங்கள் வாழ்வில் அவரிடம் விசுவாசம் கொண்டு அவர் வழியில் நடப்போர் பேறுபெற்றோர் என்பதை மறந்து விட வேண்டாம். ஆண்டவர் நம்பிக்கைக்கு உரியவர். அவர் வாக்கு மாறாதவர்.