இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தொண்பதாம் ஞாயிறு

முழு நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்

விடுதலைப்பயணம் 17: 8-13
2 திமோத்தேயு 3: 14; 4: 2
லூக்கா 18: 1-8

கிறிஸ்துவில் எனது சகோதர, சகோதரிகளே, இன்றைய வாசகங்கள் குறிப்பாக முதல் மற்றும் நற்செய்தி வாசகம் நமக்கு செபத்தின் வல்லமையைப்பற்றி விளக்கிக் கூறுகிறது. செபிக்க நமக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்பது எதிர்பார்ப்பு. நம்பிக்கையோடு காத்திருப்பது. உதாரணத்திற்கு நாம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கிறோம். பேருந்து நேரத்திற்கு வரத் தாமதம் செய்தால், பேருந்து கண்டிப்பாக வரும் என்று அது வரும் வரை காத்திருக்கிறோம். ரயில்வே நிலையத்தில் ரயில் வரும் என்று காத்திருக்கிறோம். இதுபோல கடவுளிடம் கேட்ட காரியம் கைகூடாதபோது, நாம் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும்.

செபம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையான ஒன்று. ஏனெனில் செபத்தின் வழியாக நாம் கடவுளை அறிகிறோம். கடவுளோடு பேசுகிறோம். கடவுளின் அன்பிலும், நட்பிலும் வளர்கிறோம். செபத்தின் வழியாக கடவுள் நம்மோடு பேசுகிறார். நம்மோடு இருக்கிறார். செபம் கடவுளையும், மனிதனையும் இணைக்கும் ஒரு பாலமாக இருக்கிறது. எனவே தான் இயேசு தன் வாழ்வில் செபத்தை முக்கியமாகக் கொண்டிருந்தார். தான் மட்டும் செபிக்கவில்லை. தன்னுடைய சீடர்களுக்கும் செபத்தின் முக்கியத்துவத்தையும், எவ்வாறு செபிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். இயேசு செபிக்காத நாளே கிடையாது. செபத்தின் வழியாக இயேசு கடவுளின் திருவுளத்தை முழுமையாக அறிந்திருந்தார். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். கடவுள் அவரோடு குடிகொண்டிருந்தார்.

நாம் செபிக்கின்ற போது மூன்று காரியங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில் நாம் நம்பிக்கையோடு செபிக்க வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக நாம் மத்தேயு நற்செய்தி 15:8 ல் கனானேயப் பெண்ணைப் பற்றி வாசிக்கிறோம். அவளுடைய ஒரே மகள் தீய சக்தியால் பெரிதும் அவதிக்குள்ளானாள். எனவே தன் மகளுக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் என்று அப்பெண் இயேசுவின் பின்னால் சென்றாள். இயேசு அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவளைப் புறக்கணிப்பது போல நடந்துகொண்டார். இருப்பினும் அவள் நம்பிக்கையோடு இயேசுவைத் தொடர்ந்து பணிந்து நம்பிக்கை கொண்டு கேட்டதால் இயேசு அவளுடைய நம்பிக்கையைப் பார்த்து வியந்து அவளுடைய மகளைக் குணப்படுத்துகின்றார். நாமும் முழுமையான நம்பிக்கையோடு செபிக்க வேண்டும். கிடைக்குமா அல்லது கிடைக்காத என்று அவநம்பிக்கையோடு செபிக்கக் கூடாது.

இரண்டாவது நாம் விடாமுயச்சியோடு செபிக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில், அந்தக் கைம்பெண் தனக்கு நீதி கேட்டு நீதியற்ற கண்காணிப்பாளனை நாள்தோறும் தொந்தரவு செய்கிறாள். அவள் சலிக்காமல் தினந்தோறும் அவனிடம் கேட்டுக்கொண்டேயிருக்கிறாள். காரணம் அவளுக்கு எப்படியாவது நீதி கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எனவே அந்த நீதியற்ற கண்காணிப்பாளன் அவளுக்காக கொடுக்காவிட்டாலும், அவளுடைய தொல்லையின் பொருட்டு அவளுக்கு நீதி வழங்குகிறான். நாமும் இவ்வாறு கடவுளிடம் நமது தேவைக்காக செபிக்கும் போது விடாது செபிக்க வேண்டும். நம்முடைய தேவை கிடைக்கும் வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செபிக்க வேண்டும்.

மூன்றாவது நாம் செபிக்கும் போது தாழ்ச்சியோடு செபிக்க வேண்டும். உதாரணத்திற்கு லூக்கா 22:42 ல் இயேசு பாடுகள் படுவதற்கு முன் கெத்சமனி தோட்டத்தில் கடவுளிடம் தனியாக செபித்தார். தந்தையே, நீர் விரும்பினால் இந்த துன்பக்கலத்தை என்னிடம் இருந்து எடுத்து விடும். எனினும் என் விருப்பமல்ல, உம்முடைய விருப்பத்தின் படியே ஆகட்டும் என்று தாழ்ச்சியோடு செபித்தார்.அதே போல லூக்கா நற்செய்தியில் இன்னொரு இடத்தில் இரண்டு பேர் கோயிலுக்குச் செபிக்க சென்றார்கள் ஒருவர் பரிசேயர், மற்றவர் ஆயக்காரர். பரிசேயர் நெஞ்சை நிமிர்த்தி அன்னாந்து பார்த்து கடவுளிடம் தன்னைப்பற்றி பெருமையாகச் பேசினார். ஆயக்காரனைப் பழித்துப் பேசினார். ஆனால ஆயக்காரனோ தொலைவில் நின்றுகொண்டு கடவுளைப் பார்க்கத் துணியாமல் குணிந்த வண்ணமாய் ஆண்டவரே நான் பாவி என்னை மன்னியும் என்று செபித்தான். இயேசு தன் சீடரிடம் இவ்விருவருள் யார் செபத்தை கடவுள் கேட்டார். அவர்கள் ஆயக்காரன் என்று பதில் சொன்னார்கள். இயேசுவும் சரியாகச் சொன்னீர்கள் என்று சொன்னார். ஆம் நாம் செபிக்கும் போது அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் செபிக்கக் கூடாது. மாறாகத் தாழ்ச்சியோடு செபிக்க வேண்டும். அப்போது ஆண்டவர் நமது செபத்தை கேட்பார்.

எனவே சகோதர, சகோதரிகளே, நாம் செபிக்கும் போது இந்த மூன்று காரியத்தை நினைவில் கொள்வோம். நம்பிக்கையோடு செபித்தல், விடாமுயற்சியோடு செபித்தல், தாழ்ச்சியோடு செபித்தல். இந்த மூன்றையும் கொண்டு நாம் செபித்தால் கடவுள் நம் செபத்தைக் கேட்டு நமக்கு ஆசீரை அளிப்பார். நாம் நமது தேவைக்காக மட்டுமே செபிக்க வேண்டும். நமது பேராசைகளுக்காக, தேவையற்ற காரியத்திற்காக செபிக்கக் கூடாது. அப்படி செபித்தால் அந்த செபத்தை கடவுள் கேட்கமாட்டார். குறிப்பாக நாம் செபிக்கும் போது பிறருக்காகச் செபிக்க வேண்டும். நோயாளிகளுக்காகச் செபிக்க வேண்டும். பொது நலனுக்காகச் செபிக்க வேண்டும். எனவே செபிப்போம், ஜெயிப்போம் சேர்ந்து வாழ்ந்து சாட்சியுள்ள கிறிஸ்தவ சமூகத்தை கடவுளின் ஆசீரால் இவ்வுலகில் கட்டியெழுப்புவோம். ஆமென்.