இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு

நன்றியுள்ளவர்களாக வாழ அழைப்பு

2 அரசர் 5: 14-17
2 திமோத்தேயு 2: 8-13
லூக்கா 17: 11-19

இயேசுவில் அன்புள்ள சகோதர, சகோதரிகளே இன்றைய வாசகங்கள் நாம் கடவுளுக்கும், மனிதருக்கும் நாம் பெற்ற கைமாறுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. ஆம் அன்பார்ந்தவர்களே நன்றி என்ற மூன்றெழுத்து சொல் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும். நன்றி என்ற சொல்லுக்கு பல சக்திகளும், குணங்களும் உண்டு. முதலில் நாம் நன்றி சொல்லுகின்ற போது ஒருவரின் உயர்ந்த குணத்தைப் பாராட்டுகிறோம். இரண்டாவது ஒருவர் நமக்குச் செய்த உதவியை நினைவு கூர்கிறோம். மூன்றாவது அவர் செய்த நன்மைகளை பிறருக்கு எடுத்துக் கூறுகிறோம். நான்காவது நம்முடைய பணிவை வெளிப்படுத்துகிறோம். ஐந்தாவது நாமும் அவரைப்போல பிறருக்கு உதவி செய்யக் கற்றுக்கொள்கிறோம். கடைசியாக நன்றி சொல்லும்போது நல்ல நட்பும், அன்பும் தோழமையும் அவர்களோடு நமக்கு உண்டாகிறது.
,br> ஆம் இத்தகைய நலன்கள் அடங்கிய நன்றியை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அப்படி செய்த உதவிக்கு நன்றி கிடைக்காதபோது, ஏமாற்றமும், வெறுப்பும் அடைகின்றனர். இது மனித இயல்பும் உலக நியதியும் கூட. இன்றைய நற்செய்தியில் நாம் இதைத்தான் காண்கின்றோம். இயேசு பத்து தொழுநோயாளிகளை குணப்படுத்துகின்றார். அவர்களில் ஒருவர் மட்டுமே தான் குணமடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த இயேசுவிடம் திரும்பி வருகின்றார்.

தொழுநோய் என்பது யூத சமுதாயத்தில் ஒரு சாபக்கேடான நோயாகக் கருத்தப்பட்டு வந்தது. பெரிய பாவத்திற்கு தண்டனையாக கடவுள் கொடுத்த நோயாக மக்கள் கண்டார்கள். எனவே தொழுநோய் பிடித்தவர்களை ஊருக்கு வெளியே தள்ளி வைத்திருந்தார்கள். அவர்கள் யாரும் பேசக்கூடாது. அவர்களைப் பார்க்கக் கூடாது. அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இரக்கமற்றவர்களாகக் கருதப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் தான் இயேசு வருவதைக் கேள்விப்பட்ட பத்து தொழுநோயர்கள் தூரத்தில் நின்றுகொண்டு இயேசுவே எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் கத்தினார்கள். இயேசு அவர்கள் மீது மனமிரங்கி, அவர்களுக்கு கட்டளையிட்டு நீங்கள் குருவிடம் சென்று உங்களைக் காட்டுங்கள் என்று கூறினார். அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கைகொண்டு குருவிடம் காட்டச் செல்லும்போது அவர்கள் குணமடைகின்றனர்.

அப்படிக் குணமடைந்த பிறகு அவர்களுள் ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி கூறுகின்றார். அவரோ ஒரு அந்நியர், அதாவது இயேசுவின் குலத்தைச் சாராதவர். ஆனால் மற்ற ஒன்பது பேரும், இயேசுவின் புதுமையை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்கள் தங்களுக்கு சுகம் கிடைத்த மகிழ்ச்சியில் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டு, இயேசுவை மறந்தார்கள். ஆதாயம் கிடைத்து விட்டது தப்பித்துக் கொள்வோம் என்ற எண்ணம் அவர்களிடம் வெளிப்பட்டது. அவர்கள் இயேசுவின் நல்ல குணத்தை கண்டுகொள்ள தவறிவிட்டார்கள். அவர்கள் சந்தர்ப்பவாதிகள். தங்களுக்காக வாழ்பவர்கள். பிறரிடம் பெறுவதையெ குறிக்கோளாகக்கொண்டு வாழ்பவர்கள். நாமும் நம்வாழ்வில் பல நேரங்களில் இப்படித்தான் வாழ்கிறோம். நமக்கு அறிமுகமானவர்கள், நம் குடும்பத்தில் உள்ளவர்கள், நம் சொந்தக்காரர்கள் நமக்கு நல்லது செய்யும் போது நாம் அதைப் பெரிதாகப் பார்ப்பதில்லை. சாதாரணமாக நினைத்துக்கொண்டு, இது அவர்கள் நமக்கு செய்ய வேண்டிய கடமை என்று நம்க்குள்ளே தவறாக நினைத்துக்கொண்டு நாம் இருந்து விடுகின்றோம். மற்றவர்கள் தாம் அடுத்தவர்களின் நல்ல குணத்தைக் கண்டு பெருமைப்படுவர், நன்றி செலுத்துவர் அவர்களோடு நல்ல நட்புகொள்ள விரும்புவர்.

எனவே நாம் இன்றைய வாசகங்கள் வழியாகக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நன்றி மறவாமல் வாழ்வது. நாம் பெற்ற நன்மை ஒரு சிறு காரியமாகக்கூட இருக்கலாம். நாம் அந்தக் காரியத்தைப் பார்க்காமல் அவரின் நல்ல மனதைப் பார்த்து அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் பிறர் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி சொன்னால் தான், பிறர் நாம் அவர்களுக்குச் செய்யும் நன்மைகளுக்கு நன்றி சொல்வர். நாம் நன்றி சொன்னால் அந்நன்றி திரும்ப நம்மை வந்து சேரும். எனவே இனிமேலாவது நம்முடைய வாழ்வில் கடவுளுக்கும், பிறருக்கும் நாம் எந்த சூழ்நிலையிலும் நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து அவர்களின் நலனைத் தொடர்ந்து நம் வாழ்வில் பெற்று நாமும் அந்நலனை பிறருக்கு செய்து வாழ்ந்திட இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று தொடர்ந்து இத்திருப்பலியில் வேண்டிக்கொள்வோம்.