இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு

விசுவாசத்தை அதிகமாக்கும்

அபாகூக் 1: 2-3; 2: 2-4
2 திமோத்தேயு 1: 6-8, 13-14
லூக்கா 17: 5-10

விசுவாசம் என்பது நாம் ஒரு நபர், பொருள், மதம், கருத்து மீது எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் அவைகள் மீது முழுமையான நம்பிக்கை, உறுதி கொள்வதாகும். அதே நேரத்தில் நாம் ஒருவரை நம்புவதற்கு காரணங்கள் அல்லது அத்தாட்சிகள் தேவையில்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. மாறாக கொடுக்கப்பட்ட சூழலில் அத்தாட்சிகளுக்கு இடமில்லை என்று இருக்கின்றபோது நாம் பெருந்தன்மையோடு நம்பிக்கை கொள்கின்றோம். இது தான் நம்பிக்கையின் மகத்துவம். அதைத்தான் பேச்சு நடையில் நம்பிக்கை இருக்கனும் என்று சொல்வார்கள். கிறிஸ்தவ மறையில் விசுவாசம் என்பது இயேசுவின் போதனையிலும் அவருடைய புதுமையிலும் அடங்கியுள்ளது.கிறிஸ்தவ விசுவாசம் என்பது வெறும் பேச்சோடு நிற்கின்ற செயலற்ற ஒன்றல்ல. மாறாக அது ஒவ்வொரு கிறிஸ்தவனையும், கிறிஸ்தவளையும் இயேசுவைப்போல் வாழ அழைக்கிறது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் கடவுளின் மறையுண்மைகள் வழியாகவும் அவருடைய அருளின் வழியாகவும் அவரைக் கண்டுகொள்ளவும், அவர் மீது நம்பிக்கைகொண்டு அவருக்கு கீழ்ப்படியவும் விசுவாசம் உதவுகிறது. கிறிஸ்தவ விசுவாசம் ஒருமுறை ஏற்படுவதல்ல. மாறாக அது ஒவ்வொரு நாளும் கடவுளைப்பற்றி அறியவும், அவ்விசுவாசத்தில் நாளும் வளரவும் உதவுகிறது.

கிறிஸ்தவ வாழ்வில், விசுவாசம் கடவுளைப்பற்றி ஆழமாக அறியவும், நம்முடைய வாழ்விலும் ஒரு மாற்றம் காண காரணமாக இருக்கிறது. விசுவாசம் என்பது சட்ட திட்டங்களையும், வரைமுறைகளையும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் கண்மூடித்தனமாக கடைபிடிக்கும் ஒன்றல்ல. கிறிஸ்தவர்கள் விசுவாசம் கொள்வதற்கு முன், யாரிடம், எவற்றில் விசுவாசம் கொள்ள வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும். சரியாக புரிந்துகொள்ளாமல், உண்மையான விசுவாசம் இருக்க முடியாது. உண்மையான விசுவாசம் விசுவாசிகளின் கூட்டத்திலும், மறைநூலிலும், பாரம்பரியத்திலும், தனிப்பட்ட விசுவாச அனுபவத்திலும் கட்டப்படுகிறது. கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட விசுவாசம் என்னும் வார்த்தைக்கு நம்பத்தக்க விசுவாசம் என்று பொருள்படும். அதாவது உறுதியுள்ள நம்பிக்கை.

புதிய ஏற்பாட்டில், விசுவாசம் என்பது கிறிஸ்து இயேசு வழியாக கடவுளின் மீட்பு நமக்கு அருளப்பட்டது. எனவே மனிதன் கடவுளோடு ஒரு தனிப்பட்ட உறவு வாழ்வுக்கு வாழ அழைக்கப்படுவது தான் விசுவாசம். சுருக்கமாக விசுவாசம் என்பது புதிய ஏற்பாட்டில் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடைய உள்ள ஒரு உன்னத உறவாகும். இயேசுவின் போதனையில், புதுமைக்கும், நல்வாழ்வுக்கும், பாவ மன்னிப்புக்கும் விசுவாசம் மிகத்தேவையான ஒன்றாக இருந்ததை நாம் பார்க்கிறோம். இயேசுவின் உயிர்ப்புக்கு பின்னால் இயேசுவே ஆண்டவர் என்றும் அவர் வழியாக எல்லா மனிதரும் கடவுளோடு உறவுகொண்டு வாழுகிறோம் என்னும் விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். இந்த நட்பு கிறிஸ்துவில் ஒரு புதிய உருவெடுக்கிறது. கடவுளின் வார்த்தைக்கு செவிமடுப்பதின் வழியாக நாம் விசுவாசத்தில் வளர்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் வரும் உவமையானது ஒரு சிறிய விவசாயியைப் பற்றியது. அவர் வயலிலும், வீட்டிலும் வேலை செய்யும் ஒரு வேலையாளை வைத்திருக்கின்றார். வீட்டு உரிமையாளர் வேலைக்காரரிடம் இதோ இங்கே வந்து அமர்ந்து உணவு அருந்தும் என்று கூறமாட்டார். மாறாக வேலையாள் வயலிலிருந்து வந்தவுடனே வீட்டு உரிமையாளர் உண்ண இரவு உணவை தயார் செய்வார். வீட்டு உரிமையாளருக்கு பரிமாறிவிட்டு பின்பு தன் தேவைகளை பூர்த்தி செய்வார். வேலையாள் செய்த வேலைக்காக வீட்டு உரிமையாளர் அவனுக்கு நன்றி கூறமாட்டார். ஏனெனில் அது அவனுடைய வேலை. அவன் தான் செய்ய வேண்டியதைத்தான் செய்தான். இந்த உவமையைக்கேட்ட இயேசுவின் சீடர்கள், தாங்களும் கடவுளின் ஊழியர்கள் தாங்கள் செய்த பணிக்காக எதையும் கடவுளிடம் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொண்டார்கள்.

எனவே இன்றைய நற்செய்தியிலிருந்து நாமும் ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இறைப்பணியை செய்யும் ஒவ்வொருவரும் பலனை எதிர்பார்த்து அல்லது ஆதாயத்தைத் தேடி பணிவாழ்வில் ஈடுபடக்கூடாது. அப்படி பலனை எதிர்பார்த்து பணிசெய்தால் நாம் பல நேரங்களில் ஏமாந்து போகக்கூடும். பணியில் சோர்ந்து போகக் கூடும். மாறாக கடவுள் நமக்குரிய பலனை அவர் தானாகவே வழங்குவார். நாம் அதை நினைத்து கவலைகொள்ளத் தேவையில்லை. மாறாக நாம் பணியில் முழுமையாக கவனம் கொண்டு, கடவுளின் திருவுளத்தை இயேசுவின் வழியில் அவருடைய உண்மையான சீடர்களாக மனந்தளராமல் செய்தோமானால் இம்மையிலும் மறுமையிலும் கடவுளின் பலனைப் பெற்று வாழ்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே பணி செய்வதே தன் கடமை என்று பணியில் ஆர்வத்துடன் வாழக் கற்றுக்கொள்வோம். பலனை, பாக்கியத்தை பாமரன் இயேசு நமக்கு அருள்வார். அமென்.