இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr. Maria Gabriel
St. Jude's Church, Kajupada, Jerimeri, Mumbai, India
frmariagab2015@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டின் பொதுக்காலம் 18 ம் ஞாயிறு

பகிர்ந்து வாழ

சஉ 1:2, 2:21-23
கொலோ 3:1-5, 9-11
லூக் 12:13-21

ஒருமுறை நண்பர்கள் மூன்றுபேர் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் ஒரு காட்டு வழியே சென்றுகொண்டிருந்த போது, ஒரு புதையலைக் கண்டார்கள். அதைப் பிரித்துப் பார்த்தபோது, அவற்றில் ஒரு குடம் நிறைய தங்கக் காசுகள் இருந்தது. அந்த மூவரும் இந்தத் தங்கக் காசுகள் எனக்கு மட்டுமே சேர வேண்டும் என்று தங்களுக்குள் எண்ணிக்கொண்டார்கள். அப்போது அவர்கள் ஒருவரிடம், நீ நகருக்குள் சென்று உணவு வாங்கிக்கொண்டு வா என்று அனுப்பிவைத்து விட்டு, இருவரும் அவனைக் கொன்றுபோட்டு தங்கக் காசுகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்தார்கள். உணவு வாங்கச் சென்றவன் வந்தவுடன் இருவரும் அவனைக் கொன்று போட்டனர். பின்பு அவன் கொண்டு வந்த உணவை இருவரும் சாப்பிட்டனர். உடனே இறந்து போயினர். காரணம் அந்த உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. மூன்று பேரும் இறந்து போயினர். பொருளுக்கு, பணத்துக்கு ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் அவற்றின் மீது பேராசைப் படுவது தவறாகும். பணம் வைத்திருப்பது தவறல்ல. ஆனால் பணத்தை தேவைக்குமேல் சேர்த்துவைப்பது தவறாகும். இயேசுவின் பனிரெண்டு சீடர்களின் ஒருவர் யூதாஸ் இஸ்காரியோத்து. இவர் பணத்தின் மீது பேராசை கொண்டு வாழ்ந்ததால், இயேசுவைக் காட்டிக்கொடுத்து தவறு செய்தார். இறுதியில் தற்கொலை செய்து தன் வாழ்வை அழித்துக்கொண்டான். பேராசை அவனை தற்கொலைக்கு கொண்டுசென்றது. இதனால் தான் இன்றைய நற்செய்தி உவமையில் சேர்த்துவைக்க விரும்பிய பேராசைக்காரனை ‘அறிவிலியே’ (லூக்காஸ் 12.20) என்று கடவுள் அழைப்பதாகக் கூறுகிறார். தனக்குத்தானே சாவைத் தேடிகொள்கிறவன் முட்டாள்தானே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித சின்னப்பர் பொருளாசையை சிலை வழிபாட்டிற்கு ஒப்பிடுகிறார். சிலை வழிபாடு என்பது உண்மைக் கடவுளை மறுதலித்து படைக்கப்பட்ட பொருள்களை கடவுளாகக் கும்பிடும் மனநிலை ஆகும். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் இறந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நாம் சேர்த்துவைக்கும் செல்வம் நமக்குக் கைகொடுக்கப் போவதில்லை. எனவே நாம் பொருளாசையை ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார்.

நம்மோடு எந்தச் செல்வமும் கூட வரப்போவதில்லை. இதனால் தான் கவிஞன்

ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?

எனப் பாடியிருக்கிறான். நாம் பாடுபட்டு சேர்த்த செல்வத்தை, நாம் முழுமையாக அனுபவிப்பதில்லை. பாடுபடாத மற்றொருவர் அனுபவிக்கின்றார். இதனால் தான் சபை உரையாளர் வீணிலும் வீண் முற்றிலும் வீண். எல்லாமே வீண் என்கிறார் (சபை. 1.2)
நாம் எல்லாருமே வாழத்தான் விரும்புகிறோம். யாரும் சாக விரும்புவதில்லை. வாழ விரும்பும் நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன? நம்மிடம் உள்ளதை மற்றவரிடம் பகிர்ந்து வாழ வேண்டும். ”எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக். 12.15) என்ற இயேசுவின் வார்த்தைகளை நமது இதயத்தில் பதித்து, அவற்றை நமது அன்றாட வாழ்வில் வாழத்தொடங்குவோம்.

ஆன்றோர் மொழி:
ஒருவனுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் அவன் வைத்துக்கொண்டால் உலகம் முழுவதும் திருப்தியுடன் வாழும். காந்தியடிகள்.