ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
நான் யார்?
பாகம் நான்கு

3ம் பாகத்தில் குறிப்பிட்டது போல்:
சாட்சிய வாழ்வுக்கு அடிப்படையான அம்சங்களை புரிந்துகொள்ள முயற்சிப்போம். முதல் கேள்வி நான் யார்? இந்த கேள்வியை வரலாற்றில் பல தத்துவ ஞானிகள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தங்களுக்குள் கேட்டதால் தான் பல முன்னேற்றங்களை இந்த உலகம் அடைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் மனிதனை பலவிதங்களில் வரையறுத்து கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக! இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் பார்த்தால் „மனிதன் பல்வேறு நரம்பு மண்டலங்களின் தொகுப்பு" என்று வரையறுத்து கூறுகிறது.

வேதியிலாளர்கள் „மனிதன் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவை" என்று கூறுகின்றனர்.
மருத்துவ உலகம் „இரத்தமும் சதையும் உள்ள பிண்டம்" என்று கூறுகிறது.
தத்துவ ஞானிகள் „மனிதன் ஒரு காற்றடைத்த பை" என்று கூறுகின்றனர்.
„மனிதன் ஒரு பேச தெரிந்த மிருகம்" என்று கூறுகின்றனர்.
„உலகம் ஒரு நாடக மேடை; நாமெல்லாம் வெறும் நடிகர்களே. நமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நடித்து முடித்துவிட்டு செல்ல வேண்டும்" என்றும் கூறுகின்றனர். இவைகளையும் தாண்டி நம்மை படைத்த கடவுளின் பார்வையில் நான் யார்? என்று சற்று யோசிப்போம்.

தொடக்கநூல் 1:26 „அப்பொழுது கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.“ இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை: நாம் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள். அத்தோடு மட்டுமல்ல கடவுளின் உருவையும் சாயலையும் கொண்டவர்கள். ஆனால் இன்று நம்மில் பலர் எழுப்பும் கேள்வி: கடவுள் தனது உருவிலும் சாயலிலும் இந்த உலகில் எல்லா மனிதரையும் படைத்திருந்தால் ஏன் குற்றங்களும் தவறுகளும் பெருகிக் கொண்ட இருக்கின்றன? மனிதன் ஏன் சுயநலத்தோடு வாழ்கின்றான்? ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு ஏன்? இவற்றுக்கெல்லாம் ஒரே பதில் மனிதன் தான் யார் என்பதை தவறாக புரிந்துகொண்டு செயல்படுவதுதான். மனிதன் தோன்றியது முதல் இன்று வரை தனது பிறப்பிற்கு தானே காரணம், தான் மட்டுமே எல்லாம், தன்னால் மட்டும்தான் எல்லாம் முடியும் என்ற தலைக்கணம் தான். நமது குடும்பத்திலும் சரி, இந்த உலகிலும் சரி பல்வேறு இயற்கை சீற்றங்கள், அழிவுகள் எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம் என்று பழி போடுவதில் நாம் அதிக நேரம் செலவு செய்கின்றோம். ஆனால் இந்த அழிவுகளுக்கெல்லாம் பின்னால் நம்மை போன்ற மனிதர்கள் செய்யும் தவறுகள் இருக்கின்றன என்பதை சரியாக மறந்து விடுகின்றோம். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதன் இயற்கையோடு தனக்குள்ள தொடர்பை அந்நியபடுத்திக் கொள்வதால் இயற்கை அவ்வப்போது நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றது. தன்னோடு இணைந்து செயல்பட அழைக்கின்றது. நம் கடவுள் தான் படைத்த படைப்பு அழிவுறுவதை கண்டு மகிழ்ச்சியடைபவர் என்று தவறாக நினைக்கின்றோம். கடவுள் நம்மை படைத்தது நாம் அன்றாடம் அழிவை நோக்கி பயணம் செய்ய அல்ல; மாறாக வாழ்வை நோக்கி பயணம் செய்வதற்கே. எப்படி பெற்றோரின் தியாகத்தை, கடின உழைப்பை புரிந்துகொள்ளாமல் பிள்ளைகள் பெற்றோரை குறை கூறுவதுபோல் நாமும் கடவுளிடம் குறைகாண ஆசைப்படுகின்றோம்.

நாம் யார்? நாம் வெறும் கடவுளின் படைப்பு மட்டுமல்ல; மாறாக அவரின் அன்புக்கு சொந்தக்காரர்கள். காரணம் கடவுள் நம்மை படைத்தது வெறும் பொழுது போக்கிற்காக அல்ல; மாறாக தனது அன்பை பல்வேறு வழிகளில் நமக்கு வெளிபடுத்திக் கொண்டே இருக்கிறார். பழைய ஏற்பாடு நூல் முழுவதும் இதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு. ஆதிப்பெற்றோரை உருவாக்கி ஏதோன் தோட்டத்தில் வைத்தார், கீழ்படியாமையால் அவர்கள் தங்கள் நல்வாழ்வை இழந்தனர். காயின் பொறாமையால் ஆபேலைக் கொன்றான். தனது இஸ்ராயல் இனத்தை காக்க பல்வேறு நீதித்தலைவர்களை உருவாக்கி வழிநடத்தினர். ஆனால் மக்கள் பஞ்சம் ஏற்பட்டு எகிப்தியர்களுக்கு அடிமைகள் ஆனார்கள. அடிமைத்தனத்திலிருந்து மீட்டு; பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார். மக்கள் கேட்டுகொண்டதால் அரசர்களை தந்தார். அரசர்கள் வழி மாறிய போதெல்லாம் இறைவாக்கினர்களை தந்து வழிநடத்தினார். அரசர்கள் சரியான வழிகாட்டாமல் பாபிலோனியருகளுக்கு அடிமைகள் ஆனார்கள். மீண்டும் கடவுள் அவர்களுக்கு மெசியாவை வழங்குவதாக உறுதி கொடுத்தார்.. யேசுவை மெசியாவாக அனுப்பினார். அவரையும் கொன்றார்கள். இவ்வாறு கடவுளின் அன்பை புரிந்துகொண்டவர்களைவிட புறக்கணித்தவார்கள் பட்டியல் இன்று வரை நீண்டு கொண்டே செல்கிறது. நாம் இதில் எந்த பக்கம்? சற்று யோசிப்போம். ஆனால் நாம் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள், அவரது அன்புக்கு சொந்தமானவாகள் என்பதை மட்டும் ஒருநாளும் மறந்திடாமல் கடவுளின் அன்புக்குரிய சாட்சிகளாக வாழ்வை தொடருவோம்.
[2014-01-18 11:59:31]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.