ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
பாகம் மூன்று

சாட்சிய வாழ்வு எங்கிருந்து துவங்க வேண்டும்? நாம் வேலை செய்யும் இடத்தில் சாட்சியாக இருந்தால் போதும், கோவில் அல்லது ஆன்மீக காரியங்களில் சாட்சியாக இருந்தால் போதும், மற்றும் பொது இடங்களில் சாட்சியாக இருந்தால் போதும், என்று பல வரைமுறைகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அடிப்படையில் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிட கூடாது. சாட்சிய வாழ்வு துவங்கப்பட வேண்டிய இடம் நமது இல்லம்(வீடு). நம் முன்னோர்கள் சொல்வதுண்டு: „அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்“. அது தான் உண்மையும் கூட. சாட்சிய வாழ்வு துவங்க வேண்டிய இடம் நமது இல்லம்(வீடு). நமது இல்லத்தில்(வீட்டில); சாட்சியாக வாழாமல் வெளியே மட்டும் சாட்சியாக வாழ்வது கிறிஸ்தவ வாழ்வுக்கு பொருந்தாத ஒன்று. இல்லத்தில் கணவன் மனைவிக்கு சாட்சியாக, மனைவி கணவனுக்கு சாட்சியாக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சாட்சிகளாக, பிள்ளைகள் பெற்றோருக்கு சாட்சிகளாக வாழ வேண்டும். கணவன் மனைவி உறவு என்பதே ஆண் பெண் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய முடியும் என்பதற்கு சாட்சியாகும். பெற்றரின் அன்புக்கும், உறவுக்கும் சாட்சி தான் பிள்ளைகள். பிள்ளைகளின் வாழ்வுமுறை பெற்றோருக்கு சாட்சியம் தருகிறது. இந்த சாட்சிய மனப்பான்மை எந்த இல்லத்தில்(வீட்டில்) ஏற்பட வில்லையோ அங்கு எல்லாமே கடமைக்காக செய்வதாகவே அமையும். ஆனால் குடும்ப வாழ்வு என்பது கடமை என்ற சிறிய வட்டத்தையும் தான்டி பாசம், அன்பு, பகிர்தல், தியாகம் மற்றும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை அடித்தளமாக கொண்டு அமைவதாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் „குடும்பம் ஒரு கோயில்“ இறைவன் உறையும் இடமாக உயர்த்தி கூறினார்கள். எனவே சாட்சிய வாழ்வு என்பது நமக்கு புதியது அல்ல, மாறாக நமது வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்மோடு இணைந்து வாழவேண்டிய அடிப்படை பண்பு.

குடும்பத்தில் சாட்சிய வாழ்வை பின்பற்ற நாம் சில அடிப்படை அம்சங்களை புரிந்துகொள்ள வேண்டும். நான் யார்? என்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன? நான் எதை நோக்கி தினமும் அயராது ஓடிக்கொண்டிருக்கிறேன்? எனது திறமைகள் என்ன? என்ற கேள்விகளுக்கு அவ்வப்போது விடை தேடும் போதுதான் சாட்சிய வாழ்வின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நம்மவர்களில் தொண்ணூறு சதவீதமானவர்கள் தரும் பதில்: „இதை பற்றியெல்லாம் சிந்திக்க நேரமும், காலமும் ஏது? ஓடிக்கொண்டே இருப்போம் வாழ்வின் இறுதிவரை.“ இவ்வாறு நினைப்பதன் மூலம் நாம் அடிப்படையில் ஒன்றை சரியாக மறந்துவிடுகின்றோம். ஓட்டபந்தயவீரன் ஓட்டபந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு காரணம் தினமும் ஓடுவதால் மட்டுமல்ல, மாறாக உட்கார்ந்து, தான் எடுக்கும் பயிற்சிகள் சரியானது தானா? மாற்றம் செய்யப்பட வேண்டியவைகள் என்ன? என்று சிந்திக்கும் போதுதான், வெற்றியை அடைகின்றான். நம்மை படைத்த கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதுதான். இறைவன் நமக்கு கொடுத்த திறமைகள், ஆற்றல்கள்; மற்றும் ஆசீர்கள் எல்லாவற்றையும் சரியாக பயன்படுத்தாமல் „இறைவன் என் வாழ்வை இப்படி எழுதிவிட்டார்“ என்று நாளும் புலம்பும் நமது புலம்பலுக்கு இறைவன் தான் காரணம் என்று குறை கூறும் மனநிலை சரியா? சில வேளைகளில் நமது புலம்பலில் நமது பெற்றோர்களையும், நமக்கு இறைநம்பிக்கையை சுட்டிக் காட்டியவர்களையும் சோர்க்கவும் மறப்பதில்லை. இந்த போக்கு சரியானது அல்ல. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலையை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

குடும்பத்தில் ஓன்றாக இணைந்து உணவு உட்கொள்வது, ஓன்றாக இணைந்து செபிப்பது போன்ற அடிப்படை காரியங்களை நாம் எப்பொழுது தவிர்க்க நினைகின்றோமோ, வேலை வேலை என்று சாக்கு போக்கு சொல்கின்றோமோ, நேரமும இல்லை வாய்ப்புகளும் இல்லை என்று குறை கூறுகின்றோமோ அப்பொழுதெல்லாம் நாம் நம்மை நாமே அந்நியப்படுத்திக் கொள்கின்றோம் என்பதை மறந்திட வேண்டாம். இறைவன் தந்த இந்த வாழ்வில் நம்மை நாமே அந்நியப்படுத்திக் கொள்ளும் காரியங்களை குறைத்துக் கொண்டால், சாட்சிய வாழ்வு என்ற பயணத்தில் சரியாக பயணம் செய்கின்றோம் என்று நம்மை நாமே மார்தட்டிக்கொள்வதில் தவறு ஒன்றுமில்லை.
[2013-11-25 23:12:48]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.