மாந்தர் இருக்கிறாரா? அல்லது கிடக்கிறாரா? (இருத்தலியல்)

மனிதர்கள், தாங்கள் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். தங்கள் சந்ததினரும் வாழவேண்டும் என்பதற்காக சொத்து, பணம், பதவி, புகழ், நற்பேறு என்று ஆசைப்படுவது அனைத்துமே மாந்தரின் இருத்தலுக்கான ஆசையே ஆகும். ஆனால் மாந்தரின் இருத்தல் என்பது மேற்சொன்ன இவற்றில் இல்லை என்பதை புரிந்துகொண்டவர்கள் ஞானியாகவும், புனிதராகவும், மேதையாகவும் அறியப்படுகிறார்கள்.
மனிதரின் தேடலில்தான் அவர்கள் இருப்பைக் கண்டறியமுடியும். தேடலில்லா மனிதர்கள் உயிரற்ற பொருட்கள் ஆவர். அப்படி நம்மைத் தேடிவந்த தெய்வம்தான் நம் கடவுள். நம்முடன் உறவாடும் கடவுளாக, நம்மோடு பேசும் கடவுளாக இருக்கிறார். இப்படித்தான் நாம் நம் கடவுளின் இருத்தலை உணர்கிறோம்.
விடுதலைப் பயணம் 3:14 ல்
கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார்.
கடவுள் நம்மோடு உறவாடும்போதுதான், அவரின் இருத்தலையே நம்மால் உணரமுடிகிறது. அதேபோல் மனிதர்களும் எப்போது கடவுளோடும், மற்ற மனிதர்களோடும், இயற்கையோடும் உறவாடுகிறார்களோ அப்போதுதான் மாந்தர் என்றே அழைக்கப்படுகிறார்கள். இல்லையென்றால் உயிரற்ற பொருளாக, கிடத்தல் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
படைத்தல், ஒப்புரவு, இறப்பின்வழி விண்ணக வாழ்வு என்ற 3 நிலைகளில் இன்றும் கடவுள் நம்மோடு உறவாடுகிறார்.
1. நம்மைப் படைக்கும்போது அல்லது நாம் பிறக்கும்போது, அவரின் கை நம்மேல் உள்ளது. தொடக்கநூல் 1 மற்றும் 2 ம் பிரிவுகளில் கடவுளின் படைப்பை நாம்
விரிவாக வாசிக்கின்றோம். மூவொரு கடவுளின் உறவாடலே படைப்பு நிகழ்வு.
2. நம் பாவங்களால் அவரைவிட்டு ஒதுங்கும்போது மன்னிப்பு, ஒப்புரவு போன்றவை வழியாக நம்மைத் தேடிவருகிறார்.
3. மண்ணுலக வாழ்வு முடிந்து, விண்ணுலக வாழ்வுக்காக நம்மை வரவேற்க அங்கே காத்து நிற்கிறார். (Eschatological Consummation).
கடவுளின் இத்தகைய உறவாடலுக்கு முத்தாய்ப்பாக இருப்பது கிறிஸ்துவின் பிறப்பு (பிலிப்பியர் 2: 6-9). கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையான நிலையை, வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். சிலுவைச்சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். இயேசு நம்மோடு, சகமனிதர்களைப்போல உண்டார், உறங்கினார், வாழ்ந்தார். இது கடவுளின் இருத்தலுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாகும்.
சோரன் கீர்க்ககார்டு (Soren Kierkekaard) என்ற மெய்யியலார், Existence is not a System என்று சொல்கிறார். மாந்தரின் இருத்தல் என்பது, ஏற்கெனவே அமைந்துவிட்ட
ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் தேடிக் கண்டடையவேண்டியது. நம்முடைய இருத்தல் நம்மிடமே இல்லை என்கிறார், டேவிட் கெல்ஸி என்ற அமெரிக்க மானுட இறையியலார்.
தொடக்கநூல் 1:26-27 ல் சொல்லியுள்ளதைப்போல, கடவுள் மானுடரைத் தம் உருவிலும், தம் சாயலிலும் உண்டாக்கினார். எது கடவுளின் சாயல்? கடவுளோடும், மற்ற மனிதர்களோடும், இயற்கையோடும் மனிதன் கொள்ளும் உறவின் வழியாகக் கிடைப்பதே கடவுளின் உரு, கடவுளின் சாயல். கடவுளின் உருவையும், சாயலையும் மாந்தர் இயல்பிலேயே தன்னகத்தே கொண்டிருந்தாலும், மற்றவர்களோடு ஒப்புரவின் வழியாகத்தான் அதை நாம் கண்டடைய முடியும், உணரமுடியும்.
ஒரு நாட்டில், ஆணவம் பிடித்த அரசன் ஒருவன் வாழ்ந்தான். ஒருநாள் காட்டுக் குடிசையில் வாழ்ந்த புகழ்வாய்ந்த முனிவரைப் பற்றி மக்கள் சொல்ல கேள்விப்படுகிறான். நாள்தோறும் அம்முனிவரின் புகழ் அதிகரிப்பதைப்பார்த்து, அம்முனிவரை பார்க்கவேண்டும் என்று அவரை வரச்சொல்லி தூதனுப்பினான். ஆனால் அவர் வரமுடியாது என்று சொல்கிறார். ஆத்திரமடைந்த அரசன் அந்த முனிவர் வாழ்ந்த காட்டிற்கே செல்கின்றான். குடிசைக்கு வெளியே நின்றுகொண்டு, "நான் வந்திருக்கின்றேன்" என்று உரக்கக் கத்தினான். எந்த பதிலும் வரவில்லை. மேலும் "நான் வந்திருக்கின்றேன்" என்று மீண்டும் உரக்கக்கத்தினான். அப்போது பதில் வந்தது: "நான் செத்தபிறகு வா" என்று முனிவர் பதிலளித்தார். அடக்கமுடியாத ஆத்திரத்தில் அரசன் வாளை உருவி முனிவரைக் கொல்வதற்காக குடிசைக்குள் சென்றான். ஆனால் அந்த முனிவர், வெட்டவந்த அந்த அரசனிடம், "நான் செத்தபிறகு இங்கு உன்னை வரச்சொல்லவில்லை, உன்னுடைய 'நான்' செத்தபிறகு வா என்றேன்" என்றார்.
நான்,என்னுடையது, எனக்கு என்று சொல்லும்போது, நாம் உயிரற்ற பொருளாகக் கிடக்கின்றோம்.
பிறர், மற்றவர் என்று வாழும்போது கடவுளின் உருவாகவே வாழ்கின்றோம்.
[2013-11-20 22:18:04]
எழுத்துருவாக்கம்: அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு
கும்பகோணம் மறைமாவட்டம்
தமிழகம் இந்தியா
| |
|