திருப்பாடல் 1ல் – நற்பேறு பெற்றோர் என்ற தலைப்பு மிகவும் அருமையான ஒன்றாக உள்ளது. நற்பேறு பெற்றவர்கள் யார்?
நற்செய்தியின் வழியாக நற்பெறு பெற்றவர்கள் யார்? என்று கூறும் இறைமகன் இயேசுவின் குரலின் சப்தமானது உயிருள்ளது என்பதனைப்பற்றி அறிந்த கொள்வது மிகவும் எளிது ஆனால் இன்று அவற்றை நமது அன்றாட நடைமுறையில் கடைபிடிப்பது எல்லோருக்குமே மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இன்று உலகில் பல்வேறு கோணங்களில் நம்மை திசைதிருப்பும் சமூகவளைத் தளங்கள், தொடர் தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கம் நம்முடைய வாழ்வையும், ஆன்மீக தாகத்தையும், இறைஉறவையும், நம்பிக்கையையும், விசவாசத்தையும் சீரழித்துக் கொண்டுள்ளது. இன்று இறைமகன் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது நாம் அனைவரும் நற்பெறு பெற்று அவருடைய உண்மை சாட்சிகளாய் வாழ வேண்டும் என்று.
இறைமகன் இயேசு கிறிஸ்து தனது இறைப்பணி வாழ்வின் தொடக்கத்தில் விண்ணரசு பற்றிய நற்செய்தியை பறைசாற்றினார். அவர் மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது அமர்ந்து திருவாய் மலர்ந்து பொழிந்த உயிருள்ள வார்த்தைகள்தான் இவைகள். இறைமகன் தனது மறையுரையில் பதினொன்றுமுறை பேறுபெற்றவர்கள் என்று கூறுகின்றார். அவர் கூறும் எளிமையான முறையைப் பின்பற்ற ஒருவர் முயற்சி எடுத்தால், ஆவியானவர் அவருடன் அனைத்திலும் ஒத்துழைப்பார் என்பது நிச்சயம். மலைப்பொழிவு மறையுரையைப் பின்பற்றி, ஆழமாக படித்து, அறிந்து அதன்படி வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனையோ பேர், அவர்களில் பலரை நமக்கும் தெரியும், நற்பேறு பெறவேண்டுமென்று நமது உள்ளங்கள் விரும்பினால் அதற்கு இறைவனே அனைத்து வழிகளையும் ஆவியானவரின் துணையால் அவருடைய விண்ணக கதவை நமக்கு திறந்துவைப்பார். எனவே இறைமகன் இயேசு தனது மலைப்பொழிவு மறையுரையில் நற்பெறு பெற்றவர்கள் யார் என்று வித்தியாசமான முறையில் நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைப்பதைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
அ. ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
ஆ. துயருறுவோர் பேறுபெற்றோர்.
இ. கனிவுடையோர் பேறுபெற்றோர்.
ஈ. நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றொர்.
எ. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்.
ஏ. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
ஐ. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்.
ஒ. நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்.
ஒ. என்பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே.
வார்த்தையான இறைவன் கூறிய ஒவ்வொரு சொல்லும், வார்த்தையும், நம்முடைய வாழ்க்கையை அவருடைய வார்த்தையின்படி கட்டியெழுப்ப உதவும் மூலைக்கல்லாகவும், அடித்தளமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நானும் நீங்களும் படிப்படியாக நற்பாதையில் முன்னேறிப் பயணிக்க முடியும். திருமுழுக்கு யோவான், அவருடைய தந்தையும் தாயும் இறைவனின் பார்வையில் நற்பேறு பெற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் என்று (லூக்கா1:6) காண்கின்றோம். செக்கரியா கடவுள் திருமுன் நிற்கும் கபரியேல் வான தூதரின் நற்செய்தியைக் கேட்க பாக்கியம் பெற்றவர். அவருடைய மகன் திருமுழுக்கு யோவான், ஆண்டவரின் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். எலியாவின் உள்பாங்கையும் வல்லமையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார் என்று லூக்கா நற்செய்தியில் காண்கின்றோம. இறைவன் பார்வையில் நேர்மையுடனும் குற்றமற்றவராய் வாழ்ந்தால் அவருடைய பார்வையில் நற்பேறு பெற்றவர்களாக நம்மால் ஆகமுடியும். இறைவனின் தாய் அன்னை மரியாளிடம் வானதூதுர் அருள்மிகப் பெற்றவரே வாழ்க ! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். தூய ஆவி உம்மீது வரும் உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும் “ என்று ஆண்டவரின் தூதுர் அவரிடம் கூறுகின்றார். இறைவனால் அழைக்கப்பட்ட அனைவரும் அவர் பார்வையில் பேறு பெற்றவர்களாக விளங்கினார்கள் என்று விவிலியம் நமக்கு எடுத்துரைக்கின்றது. இவர்களைப்போல் ஏன் நம்மால் வாழ முடியாது? நம்மால் முடியும் இறைவார்த்தையை அணுகிச் செல்வோம். ஆவியானவர் அனைத்தையும் கற்றுத் தருவார்.
இறைமகன் இயேசுவின் குரலைக் கேட்டவர்கள் யாரென்றால், எளிமையான மீனவர்கள். ஏழையின் உள்ளத்தைக் கொண்டவர்கள். “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் “என்ற வார்த்தைக்கு அடிபணிந்து அவருடைய பார்வையில் நற்பேறு பெற்றார்கள். இறைமகன் இயேசுவின் நற்குணங்களைக் கண்டு, உணர்ந்து, அனுபவித்து, நற்செய்திக்காக தங்களுடைய வாழ்வையே கொடையாக கொடுத்து சாட்சியாக வாழ்ந்து, இம்மண்ணிலும் விண்ணிலும் திருத்தூர்கள் அனைவரும் நற்பேறு பெற்றார்கள். இன்று நானும் நீங்களும் இறைவன் நமக்கு கொடையாக கொடுத்துள்ள நற்பண்புகளை உண்மையாக பின்பற்றி நமது சிறிய வாழ்வின் வட்டாரத்தில் இறைவனுக்கு சாட்சியாய் வாழ்வோம். நற்பேறு பெறுவதற்கு தடையாய் இருக்கும் அனைத்துச் செயல்களையும் நம்மிலிருந்து அகற்ற ஆண்டவரின் முன் தாழ்மையுடன் நம்மை அர்ப்பணிப்போம்.
தொடரும்
[