ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









தவக்காலம்



தவக்காலம் ஆசீர்வாதத்தின் காலம். 

தவக்காலம் அடையாளத்தின் காலம்.

தவக்காலம் உயர்வையும், உருமாற்றத்தையும் நினைக்கும்  அருளின் காலம்.

தவக்காலம்  புதிய நினைவுகளையும், புதிய உறவுகளையும் உருவாக்கும் உயர்ந்தகாலம்.

தவக்காலம்  நிலைவாழ்வு  பெற்று தரும் புனிதகாலம்

          

        தவக்காலத்தை தொடங்க இருக்கும் நமக்கு  அடையாளத்தின் சின்னமாக இரண்டு கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. அன்பின்சின்னம் 2. வெற்றியின்சின்னம்

இதை இத்தவக்காலத்தில் அடையாளம் கண்டுக்கொண்டு , மற்றவருக்கு அடையாளப்படுத்திக் கொள்ள இத்தவக்காலம்  நம்மை வரவேற்கிறது.

 

  1. அன்பின்சின்னம் - இயேசு

நிபந்தனையற்ற   அன்புகொண்டவர்  இயேசு

காணாமற்போன   மகன்   உவமை  (லூக் 15: 11-32 ) இங்கு  இறைமகன்    இயேசுவின்  அன்பு  இவ்வாறாக  எடுத்தெண்பிக்கப்படுகிறது. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.                                                             

                            இப்படிப்பட்ட அன்பைத்தான் இயேசு மறைவல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், பாவிகள்  , வரிதண்டுபவர், ஏழைகள் , சட்டத்தைப் படிக்க  இயலாத   பாமரமக்கள் என அனைவருக்கும் பகிர்ந்தார். இயேசு தன்னையே நிபந்தனையற்ற அன்பின் வழி இவ்வுலகிற்கு இறையாட்சிப்பணியை கொண்டு வந்தார். இந்த சூழ்நிலை சற்றும் மாறாமல் இப்போதும் நம் மத்தியிலும் இருந்து கொண்டு இருக்கிறது. ஆகவே....

          நிபந்தனையற்ற  அன்பு என்ற  குணத்தை  இத்தவக்காலத்தில்   வளர்த்துக் கொண்டால், நாமும் இறைவனோடு  ஒன்றித்திருக்கலாம் மற்றவர்களின்  வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை  ஏற்படுத்தலாம். இந்த அன்பின் தாக்குதலால் இவ்வுலகில் நடக்கும் நிபந்தனையுள்ள அன்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒரு கருவியாக செயல்பட முடியும். அதன்வழி இயேசு மீண்டும் உயிர்ப்பார்.

2வெற்றியின்சின்னம்-- சிலுவை                            

அமைதியில்  தான் அன்பின் சிகரமாகிய சிலுவையை அடைய முடியும் 

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞர் (மத் 19: 16-30)

இயேசு இவ்வுலகிற்கு பிறந்தது, அவர் வளர்ந்தது, அவருடைய சீடர்களை வளர்த்தது, அவருடைய போதனைகள், அவர் இவ்வுலகில் ஆற்றிய பணிகள், அவருடைய பாடுகள், அவருடைய சிலுவை மரணம் , அவருடைய மீட்பு ஆகிய அனைத்தும்  இறைதிட்டம். ஆனால் இதில் நாம் உறுதியோடு விசுவசிக்க கூடிய நிகழ்வுத்தான்  சிலுவை. சிலுவை மரணத்தால் இயேசு நம்மையும்  அவர் படைத்த அனைத்தையும்  பாவத்தின் விளைவுகளில்  இருந்தும் சாவிலிருந்தும் மீட்டெடுத்தார் .

 

நாம் பாவத்தில் மடிந்து போகாமல் இருக்க சிலுவை நம்மைக் காக்கிறது.  சிலுவை நம்மை நிதானமாய்க் காக்கும்.சிலுவையை நாம் ஏறெடுத்துப் பார்க்கும் போது இது நம்மைக் காப்பாற்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு இறைவனுடைய அளவுகடந்த அன்பும், இரக்கமும்  காரணமாய் இருக்கிறது.

“போதகரே! நிலையான வாழ்வைப் பெறுவதற்கு, என்ன நன்மையை நான் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.(மத் 19: 16)

இவ்வுலகத்தில் நாம் பாவத்தை விலக்கி வாழ பழகும் போது நிலை வாழ்வு  பெற்று வாழ வாய்ப்பினை தேடுகிறோம். இவ்வுலகத்தில் அனைத்தும் நிலையில்லாதது, ஆகவே நமது  மனித சிந்தனையில் நிலையானதாக கருதும்  எதிர்மறை கருத்துக்களை மாற்றிட அழைக்கும் இந்த தவக்காலத்தோடு இணைந்து நிலைவாழ்வுக்கு வழிகோலாக இருக்கும் சிலுவையைப்பற்றி அதிகம் தியானித்து இறைவனில் இணைந்து நிலைவாழ்வுக்கு தகுதிப்பெறுவோம் ஆமென்.

[2019-03-11 12:20:14]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி