ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

திருப்பாடல்கள் வழியாக இறைவனின் சப்தம்வேதாகமத்தில் திருப்பாடல்கள் நூல் முன்னுரையில் காண்பது. திருப்பாடல்கள், விவிலியப் பக்திப் பாடல்கள், இறைமன்றாட்டுக்களின் தொகுப்பு என்றும், இஸ்ரேயல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினார்கள் என்றும்,

இறைவனைப் புகழ்ந்து வழிபடுவது.

இறைவனிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டுவது.

மன்னிப்பு வேண்டும் மன்றாட்டுகள்.

இறைவன் வழங்கிய ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவது.

அரசர் பற்றியது.

அறிவுரை அளிப்பது, என்று காண்கின்றோம்.

திருப்பாடல்கள் தனிமனிதன் வாழ்விலும், குடும்பவாழ்விலும், குழும்ப வாழ்விலும், இறைசமூகம் ஒன்று கூடலிலும், வார்த்தை வழிபாட்டிலும், திருப்பலி ஒன்று கூடலிலும், அன்பிய ஒன்று கூடலிலும் உபயோகித்து இறை அனுபவத்தை ஆண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆன்மாவும் இறைஅறிவுரையையும் இறைபிரசன்னத்தையும் உணர்ந்து வாழ்க்கையில் எத்தனையோ உள்ளங்கள் அனுபவித்தது உண்மையிலும் உண்மை. கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தினமும் திருப்பலி பதிலுரைப் பாடல்களை சிறப்பான முறையில் தியானித்து இறைஉறவில் இருந்தபோது, நான் அனுபவித்த இறைபிசன்னம், ஆறுதல், மனவலிமை, வாழ்க்கையில் முன்னோக்கிச் பயணிக்கக் கூடிய மனத்திடன், இறைவன் நம்மோடு வாழ்கின்றார் என்ற ஒர் ஆழமான நம்பிக்கை என்னில் வளர்ந்தது, மேலும் இன்றும்  ஆழமாக வளர்ந்து வருவது  உண்மை. திருப்பாடல்களை தியானிக்கும் போது ஒவ்வொரு இறைவார்த்தையும் என் உள்ளத்தின் ஆழத்தில் இறைவனின் தூய ஆவியானவரின் வழிநடத்துதலை என்னால் அனுதினம் உணரமுடிந்தது. இறைவாக்கினர்கள் வழியாவும்,  இறைமகன் வழியாகவும் பேசிய இறைவன் இன்றும் அவருடைய உயிருள்ள வார்த்தையின் வழியாக பேசிக் கொண்டேதான் இருக்கின்றார். அவருடைய உயிருள்ள சப்தத்தைக் கேட்பதற்கு மானிடராகிய நமக்கு நேரம் கிடைப்பது அறிது. அவசர உலகத்தில் பயணம் செய்யும் நாம் இறைவனைத் தேடுவது மிகவும் அவசியம். இறைமகன் இயேசு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிகாலையிலும், இரவு முழுவதிலும், தனிமையான இடத்திற்கு சென்று தந்தையாகிய இறைவனிடம் உரையாடி அனைத்தையும் அவரது திருவுளப்படி நிறைவேற்றினார் அல்லவா. மேலும் தனது சீடர்களிடம் இவ்வாறு கூறுகின்றார்  “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்“ என்று.(மாற்கு 6,31), அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வழுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் என்று மிக அருமையாக அவர்களிடம் கூறுகின்றார். இறைமகன் அவருடைய இறைப்பணி வாழ்வில் எப்பொழுதும் இறைவனுடன் செப உறவில் உறவாடி, அவர் எதிர் கொண்ட  சவால்கள், நற்செயல்கள், அன்பின் அறச்செயல்கள், குணம் அளித்தல், மன்னிப்பு, தீய ஆவிகள் அடிபணிதல், இறந்தோரை உயிர்ப்பித்தல், கண்டித்தல், நற்செயலிற்காக கோபம், போன்ற குணங்களின் வழியாக நற்பெறு பெற்று நமக்கு வழிகாட்டினார்.  இறைமகன் இயேசு தனது வாழ்விலும் திருப்பாடல்களைப் பலமுறைப் பயன்படுத்தியுள்ளார். எனவே திருப்பாடல்கள் வழியாக இறைவனின் சப்தம் எவ்வளவு விலையேறப் பெற்றது என்பதை ஒவ்வொரு திருப்பாடல்களின் வழியாக நம்மால் அறியவும் உணரவும் முடியும்.

திருப்பாடல் 91, இறைவனின் பாதுகாப்பிற்காக நம்பிக்கையுடன் அன்றாட தங்களது வாழ்வில் அதிகாலையில் செபித்தவர்களின் வாழ்க்கையில் எத்தனையோ அற்புதங்களும் அதிசயங்களும் நடந்துள்ளன என்பதும் உண்மை.  ஏனெனில் இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது, நம்பினால் அதன் வல்லமையை உணரமுடியும்.

திருப்பாடல் 1ல் – நற்பேறு பெற்றோர் என்ற தலைப்பு மிகவும் அருமையாக உள்ளது.  நற்பேறு பெற்றவர்கள் யார்?

அ. பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்

ஆ. பாவிகளின் தீயவழி நில்லாதவர்.

இ. இகழ்வாரின் குழவினில் அமராதவர்.

உ. ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்

ஊ. அவரது சட்டத்தை இரவும் பகலும் சிந்திப்பவர்.

எ. நீரோடை நடப்பட்ட மரம்போல் இருப்பார்.

ஏ. பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் மரத்திற்கு ஒப்பாவார்.

ஐ. தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.

நற்பேறு பெறுவதற்கு இறைவன் நம்மிடம் விரும்புவது மேலே தரப்பட்டுள்ள குணங்களை எப்போதும் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் கொண்டிருந்தால் இறைவார்த்தை கூறுவதுபோல் நாம் இறைவனின் ஆசீர் நிறைந்த மகனாக மகளாக வாழமுடியும். நற்பெறு பெற்று நீரோடையில நடப்பட்ட மரம்போல் இருக்க முடியும். விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம்,  நோவா நேர்மையாளராகவும், குற்றமற்றவராகவும், இறைவனோடு நடந்தார். இறைவாக்கினர் மோசே இறைவனின் பார்வையில் தயை பெற்றவர். இறைவனின் நிறை அழகை அவர்முன் கடந்து போக அருள் பெற்றவர். இறைவனின் கையால் மூடி மறைக்கப் பட்டவர். இறைவனின் பின்புறத்தைக் கண்டவர். இவர்கள் அனைவரும் இறைவன் பார்வையில் நற்பேறு பெற்றவர்கள். திருப்பாடல் ஒன்றின் முதல் பகுதியில் வாழ்வுக்கு வழிகாட்டும் இறைவிழுமியங்களை வாழ்வில் பின்பற்ற ஒரு சிறு முயற்சி எடுப்போம்.

இருளும் தீமையும் நிறைந்த சமூகத்திலும் உலகிலும் பயணிக்கின்றோம். வாழ்வு தரும் இறைவிழுமியங்களை வாழ்வில் ஏற்று, இறைவேண்டலின் வழியாக வெற்றி கொண்டு நற்பேறு பெறுவோம்.

[2019-02-23 19:40:23]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy Amalraj
Klooster Sancta Maria
6161 CV Geleen
Netherland