ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









திருப்பாடல்களின் முத்து



மொத்த திருப்பாடல்கள் 150 ல் அனைத்துவிதமான மக்களாலும் அதிகம் செபிக்கப்படும் திருப்பாடல், 23ம் திருப்பாடல். என் ஆயன் ஆண்டவர்... துன்ப வேளையிலும் மகிழ்ச்சி வேளையிலும் அதே உணர்வுடன் பாடத் தகுதியான திருப்பாடல் இது. எனது வாழ்விலும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடிய மிகமிக முக்கியமான செபமும் பாடலும் இதுவே . எனவே இன்றைய நாளில் அந்த திருப்பாடல் வரிகளைக் கொண்டே எனது ஆன்மீக வலத்திற்கான கருத்தினை தொடங்க எண்ணுகிறேன்.. ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை.......

இத்திருப்பாடலானது ஆறே வசனங்களை கொண்டதாக இருந்தாலும் அவை சொல்லும்  கருத்துக்களும் நம்பிக்கை வாக்குறுதிகளும் ஆழமானது அற்புதமானது.  இவை நமக்கு இன்றைய காலகட்டத்தில் வலியுறுத்தும் வாழ்க்கைக்கருத்துக்கள் என்ன? என்பதைக் காண்போம்.  தமிழில் இரண்டு விதமான கூற்றுகள் இலக்கணத்தில் கூறப்படுவதுண்டு. அவை நேர்க்கூற்று அயற்கூற்று. இந்த இரண்டுக் கூற்றின் அடிப்படையிலேயே இந்த திருப்பாடல் அமைந்திருப்பதாக எண்ணுகிறேன்.  இரண்டு பகுதிகளாக இத்திருப்பாடலைப் பிரித்தோமானால் முதல் பகுதி அயற்கூற்றாகவும் இரண்டாம் பகுதி நேர்க்கூற்று வாக்கியமாகவும் அமைந்துள்ளன.

அயற்கூற்று:

        திருப்பாடலின் முதல் பகுதி அயற்கூற்று பகுதி . அதாவது தனக்கும் ஆயனாம் இறைவனுக்கும் இடையே நிகழ்ந்தவற்றை மற்றொருவரிடம் சொல்லி ஆனந்தம் அடைவது போல அமைந்துள்ளது. இளைப்பாறச்செய்கின்றார், நடத்திச்செல்வார், அளிப்பார் என்பன போன்ற வரிகள் இதை நமக்கு தெளிவுபடுத்துகின்றன. இப்பகுதியில் ஆயர், பசும்புல் வெளி, நீர் நிலை, புத்துயிர், நீதி வழி என்பன போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருப்பாடல்களின் ஆசிரியர் யார் என்று தெளிவாக தெரியாத போதிலும் தாவீது அரசர் பாடியிருக்கக் கூடும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. சிறுவயதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, அரசனான பின்பு தனது பழைய வாழ்க்கையை நினைத்து, இறைவனின் பேற்றை எண்ணி மகிழ்ந்து பாடியிருக்கலாம். எனவே தான், ஆடுகளின் மேய்ப்பனாக இருந்த தன்னை, மக்களினங்களின் மேய்ப்பனாக மாற்றிய இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார். அவரது கண் முன் ஆயனின் வாழ்க்கை வந்து போகிறது. எனவே மேய்ப்பனுக்கு உரிய சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். நாமும் அவரது மந்தையைச்சேர்ந்த ஆடுகள் தாம் . ஆயனாம் ஆண்டவர் ஆடுகளாம் நமக்கு தரும் செய்தி என்ன ???

 ஆயன்:

    ஆடுகளின் பாதுகாவலன், எல்லா வித இக்கட்டிலிருந்தும் ஆடுகளைப் பாதுகாப்பவன். என்ன வேலை செய்தாலும் அவனது கவனம் ஆடுகளின் மீதே இருக்கும். ஆடுகளின் ஒவ்வொரு சப்தத்தையும் அவன் அறிவான். ஆயன் இருக்கும் போது ஆடுகளுக்கு எந்த குறையுமில்லை. ஆடுகள் ஆயனின் மீது வைக்கும் அந்த நம்பிக்கையை நாமும் நம் ஆண்டவர் மேல் வைக்க அழைக்கின்றார். ஆடுகளுக்கு ஆயன் பாடம் சொல்வதில்லை மாறாக தன் இயல்பை செயலாக வெளிப்படுத்துகிறார். அதே செயலை நமது வாழ்விலும் செய்கின்றார். ஆடுகள் புரிந்து கொள்கின்றன. நாம் புரிந்து கொள்வது எப்போது? அவர் நம் முன்னே செல்கின்றார் என்ற நம்பிக்கையோடு நம்பயணத்தைத் தொடங்குவோம். 

பசும்புல் வெளி:

     பசுமையான புல் வெளி ஆடுகளின் உணவு. அந்த இடத்தை தன் மனதில் வைத்து தேடிச்செல்வான் ஆயன். அந்த இடத்தைக் கண்டடைவது அவ்வளவு எளிதல்ல. தனக்கு முன் வேறு யாராவது அங்கு பட்டி போட்டிருக்கலாம் அல்லது அந்த இடத்தை சென்றடையக் கூடிய பாதை கரடு முரடானதாக இருக்கலாம். இருப்பினும் ஆயன் சோர்வுறுவதில்லை. அந்த இடத்தை அடையும் வரை ஓடிக் கொண்டே இருப்பார். ஆடுகள் வர மாட்டேன் கால் வலிக்கிறது என்று சோர்வுறுவதில்லை. ஆயனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டே இருக்கும் . மனிதர்கள் நாம் தாம் சிறு துன்பத்திற்கும் சோர்வடைந்து விடுவோம். என்னால் இதற்கு மேல் துன்பத்தை தாங்க முடியாது. ஆண்டவரே இது போதும் . என்னைக் காப்பாற்றும் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிடுவோம். நமக்கென்று இறைவன் வைத்திருக்கும் பசும்புல் வெளியை அடைய சற்று தூரம் செல்ல வேண்டும் என்பதைக் கூட அறியாமல் பாதியிலேயே நின்று விடுகிறோம். விளைவு அருகில் இருக்கும் அரைகுறை புல் தின்று பசியாறும் மந்தமான மந்தாடுகளாகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பசும்புல் வெளியை இறைவன் ஏற்பாடு செய்து இருக்கின்றார். அவன் நன்றாக இருக்கின்றான் நான் தான் துன்புறுகிறேன் என்ற பாகுபாடு பாராது நமக்கான புல்வெளியயைத் தேடி ஓட ஆயனோடு ஆனந்தமாக செல்வோம் மகிழ்க்கியுடனும் நிறைவுடனும் வாழ முயல்வோம்.

[2019-02-19 00:01:32]


எழுத்துருவாக்கம்:

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho
Milan
Italy