ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும். (லூக்கா 17:5)

விசுவாச ஆண்டின் நிறைவில் பயணம் செய்யும் இவ்வேளையில் எங்கள் விசுவாசத்தை மிகுதியாக்கும் என்பது மிகவும் பொருத்தமான மையக்கருத்து ஆகும். ஆண்டவராகிய இயேசுவிடம் திருத்தூதர்கள் கேட்டதுபோல் இறைவா எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என நாமும் மூவொரு இறைவனிடம் கேட்போம்.

இன்று ஆண்டவராகிய இயேசு நம்மை நோக்கி “நம்பிக்கையற்ற தலைமுறையினரே" என்றா அல்லது "நம்பிக்கையுள்ள தலைமுறையினரே" என்றா சொல்லுவார். சற்று சிந்திப்போம் நாம் நம்பிக்கையற்ற தலைமுறையினரா? அல்லது நம்பிக்கையை கைவிடாது இறைவனுடன் சார்ந்து வாழும் தலைமுறையினரா?. திருத்தூதர் மாற்கு எழுதிய நற்செய்தியில் அதிகாரம் 9 இறைவசனங்கள் 14-29வரை காண்பது தீயஆவி பிடித்திருந்த சிறுவனின் கதை. சிறுவனின் தந்தை இயேசுவின் சீடர்களால் தீய ஆவியை ஓட்ட முடியவில்லை என்று கூரியபோது சொல்லிய வார்த்தைதான் “நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? இயேசு அந்த சிறுவன் தீய ஆவியால் துன்பப்படுவதை கண்டு அவரிடம் எவ்வளவு காலமாய் உள்ளது என்று கேட்கின்றார். சிறுவனின் தந்தை இயேசுவிடம் கேட்பது, உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் என்று கேட்கின்றார். இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் எனறார். உடனே அச்சிறுவனின் தந்தை, நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் என்று கதறுகின்றார். எத்தனையோ ஆண்டுகளாக நாம் கிறிஸ்துவர்களாக இருந்தும் நாம் இந்த சிறுவனின் தந்தையைப் போல்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதற்கு பதிலை திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தி அதிகாரம் 1:32ல் காணலாம் இறைவனின் தூதராகிய கபிரியேல் அன்னை மரியாவிடம் சொல்லுகின்ற வார்த்தை “கடவுளால் இயலாது ஒன்றுமில்லை“ நம்பிக்கை, விசுவாசம் என்ற கொடைகள் இறைவனால் இலவசமாக கொடுக்கப்பட்டது. இறைவனை அறியவும், அவரை அன்பு செய்யவும், அவருடைய நற்பண்புகளைப்பற்றி முழுமையாக அனுபவிக்கவும் உணரவும் எல்லாவற்றிலும் அவரையே முழுமையாக நம்பி அவர் சித்தத்திற்கு அடிபணிந்து வாழ்வதற்கு இக்கொடைகள் நமக்கு தரப்பட்டுள்ளது. இறைவனுடன் மிகநெருங்கிய நட்பு கொள்ளவும் தொடர்புகொள்ளவும் உதவுகின்றன.

எபிரேயர்க்கு எழுதிய திருமுகம் அதிகாரம் 11, இறைவசனம்1 கூறுகின்றது நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி : கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” மேலும் இறைவசனம் 6 கூறுகின்றது “நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில் கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைமாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும்" என்று இறைவார்த்தை கற்பிக்கின்றது. கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள் என்று இறைவார்த்தையில் காண்கின்றோம். இன்று இறைமகன் இயேசு உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருக்க துணையாளரை தந்துள்ளார் ஆகையால் அவருடைய குரலுக்கு செவிமடுத்து அவரது செயல்பாடுகளில் பங்கேற்று வாழும் போது நிச்சயமாக இறைவனை அனுபவிக்க முடியும். திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி அதிகாரம் 17, இறைவசனங்கள் 19-21 வரை வாசிக்கிறோம். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம் . உங்களுக்கு கடு களவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் அம்மலையைப் பார்த்து இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும்மேயன்றி வேறு எதனாலும் வெளியேறாது என்றார். இங்கு இயேசு நமக்கு சுட்டிக்காட்டுவது நம்பிக்கை குறைவைப்பற்றி. திருப்பாடல் 46, இறைவசனம் 10 வாசிக்கிறோம் “அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள் “ இறைவனை உணர்ந்து கொள்ள அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் இறைஉறவிலும், இறைவார்த்தையை அறிவதிலும் அதிக நேரம் செலவிடவேண்டும். திருத்தூதர் பவுல் உரோமையர்க்கு எழுதிய திருமுகம் அதிகாரம் 10. இறைவசனங்கள் 8 முதல் 11 வரை வாசிக்கிறோம், வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில் உன் இதயத்தில் உள்ளது. இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும் என்று நமக்குச் சொல்லுகின்றார். ஏனெனில் இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர், வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில் அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் என்பது மறைநூல் கூற்று என்று நமக்கு தெளிவாக விளக்குகின்றது.

தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டு போகின்ற வேளையில் அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆவல் கொண்டு அவற்றை கற்றுத் தெரிந்து கொள்கின்றோம். அவரது சாயலில் நம்மை படைத்து இரவும் பகலும் கண்ணயராமல் அன்பு செய்து காத்துவரும் இறைவனை அறிய எடுக்கும் முயற்சி என்ன என்பதை சிந்திக்க வேண்டும். கத்தோலிக்க மக்களாகிய நாம் இறைவன் கொடுத்த விசுவாசத்தைவிட்டு மற்ற சபைகளுக்கு ஓடுவதற்கு காரணம் இதுதான். இறைவார்த்தையின் வழியாக இறைவனை அறிய முயற்சி எடுக்காத காரணத்தினாலும் திருச்சபை காட்டுகின்ற வழிகளை பின்பற்ற தவறுவதாலும், திருவருட்சாதனங்களில் நம்பிக்கையுடன் பங்கேற்கத் தவறுவதாலும் ஏற்படுகின்ற விளைவுதான் நாம் இறைவனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை. அன்றாட வாழ்வில் இறைவனுடன் தொடர்பு இருக்க வேண்டும். அவர் வார்த்தையின் வழியாக நம்மில் வாசம் செய்பவர். இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு உலகம் முடியும் மட்டும் இருப்பேன் என்று வாக்கு கொடுத்தவர். உயிருடன் வாழ்பவர். ஆகையால் அவரை அறிய அனுபவிக்க காலம் கடந்து போக அனுமதிக்க வேண்டாம். இன்றே முடிவு எடுப்போம் காலம் நெருங்கிவிட்டது மனம்மாறி நற்செய்தியை நம்புவோம்.

பெருந்திரளான மக்கள் இயேசுவைத் தேடி வந்தார்கள். சிலர் அவர் செய்த புதுமைகளைக் கண்டு அவரை அணுகினர். சிலர் அவரை வரவிருக்கும் மெசியாவாக இருக்கும் என்று நம்பி அவரைக்காண வந்தனர். சிலர் தனது பிணி நீங்கி சுகம் பெற அவரை அணுகி வந்தனர். இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? பார்வையற்ற பர்த்திமேயுவிடம் இவ்வாறு கேட்டு அவருக்கு குணம் அளித்து அவரிடம் இயேசு, “உமது நம்பிக்கை நலமாக்கிற்று“ என்று சொன்னார்.

திருத்தூதர் மாற்கு எழுதிய நற்செய்தி அதிகாரம் 5இல் பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் இயேசுவின் உடையைத் தொட்டாலே போதும் நான் குணம் பெறவேன் என்ற நம்பிக்கையில் இயேசுவின் ஆடையைத் தொட்டபோது இயேசுவிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் உணர்ந்த இயேசு அவர்களிடம் என் மேலுடையைத் தொட்டவர் யார் என்று கேட்டார். அப்பெண்மணி நடுங்கி அஞ்சி இயேசுவிடம் நடந்தது அனைத்தும் சொல்லிய போது இயேசு அவரிடம் சொல்லியது மகளே உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு என்றார்.

இன்றும் இறைமகன் இயேசு நம்மிடம் மகனே! மகளே!! உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று அமைதியுடன் போ! என்று சொல்கின்றார். உயிருள்ள வார்த்தையை நம்பி இறைஅருளைப்பெற்று மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை இறைவனில் காண்போம். உயிருடன் வாழும் இறைவனை ஏன் நாம் அணுகிச் செல்லக்கூடாது? தாயும் தந்தையுமான இறைவன் மட்டும்தான் நமக்கு நிரந்தர சொத்து. பாவிகளிடம் பரிவு காட்டிய இறைவன், இரக்கம் நிறைந்த தந்தை, மன்னிக்கும் தந்தை. நம்மை கைவிடமாட்டார். நாம் செல்லும் இடமெல்லாம் நம்மோடு இருப்பவர். கண்ணின் மணியென காப்பவர். இறைவனை நம்புவோம். ஐரோப்பிய கண்டத்தில் மறைந்து கொண்டிருக்கும் விசுவாசம் தமிழ் இறைமக்களால் மீண்டும் மலர்ந்து கனி தரட்டும். இயேசு தனது சீடர் தோமாவிடம் கூறிய வார்த்தையை சிந்தித்து செயல்படுவோம். இயேசு, அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். பேறுபெற்ற மக்களாக மாறுவோம். "விசுவாசத்தின் விளைநிலமான எங்கள் அன்புத் தாயே! நாங்கள் அனைவரும் நம்பிக்கையில் வளர துணை செய்யும்" என அன்னை மரியாளின் பரிந்துரையையும் வேண்டுவோம்.
[2013-09-09 22:10:28]


எழுத்துருவாக்கம்:

Sr.Jophy
Klooster Sancta Maria
6161 CV Geleen
Nederland