ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

தவக்காலத்திருப்புமுனைதவக்காலம் என்பது கிறிஸ்தவமக்களுக்கு ஒரு திருப்புமுனையின் பொற்காலம் என பொருள் கொள்ளலாம். ஆம் இது திருச்சபையின் வழியாக நமக்கு கொடுக்கப்படும் ஒரு மாபெரும் நம்பிக்கையின் வளம்நிறைந்த காலம். இறைமகன் இயேசு மனிதனாக பிறந்ததினத்தை கிறிஸ்மஸ் என்று கொண்டாடி நம்மில் ஒருவராக நம்மோடு இணைத்த இறைவனை ஆராதிக்கிறோம். அதே இறைமகன் இயேசு மனிதனாக நாம்படும் வேதனைகளை, பாடுகளை மேற்கொண்டு அதன் வழியாக நம்மில் நம்மோடு அவர் கொண்டுள்ள அன்பை, உறவை உறுதிபடுத்தும் காலமாகவிளங்குவதே இந்த தவக்காலம். உறவை புதுப்பிக்க வருவதே இத்தவக்காலம். இவ்வுறவை புதுப்பித்து கொள்ள மனிதனுக்கும் மனித உருவில் திகழும் இறைவனுக்குமிடையே நடக்கும் உரையாடல், அனுபவங்கள் நம்மை ஒருவிதமான திருப்புமுனைக்கு அழைத்துச்செல்லும் புனிதமானகாலம்.

ஒவ்வொரு வாழ்க்கை சரித்திரத்திலும் திருப்புமுனை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அவை பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி, பல்வேறு இயக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தல், பல கொள்கைகள் உருவாக்குதல், பல சீர்த்திருத்த வழிமுறைகள் அமைத்தல், போராட்டங்கள் என பலவிதமான புரட்சிகளை உருவாக்கி திருப்புமுனையை இவ்வுலகம் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த தவக்கால திருப்புமுனையில் திருவிவிலியத்திலிருந்து ஒரு சிலர் இங்கே நம் கண்பார்வைக்கு கொண்டுவரப்பட்டு, நம்மை திருத்திக்கொள்ள அழைப்பதோடு மட்டுமல்லாமல் இந்த தவக்காலமும் இதை ஆழமாக பயன்படுத்திக்கொள்ள இவ்வாறாக வாய்ப்புக்கள் கொடுக்கிறது.

1. பேதுரு - மனம் நொந்து அழுதார்- தன்னை அறிய திருப்புமுனை -
இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். (மத் 26:75) இந்த தவக்காலத்தில் அதிகமாக நம்மையே அறிந்துக்கொள்ள முற்படுவோம்

2. சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளி- தண்டிக்கப்படுவது முறையே - கடைசி நேர திருப்புமுனை
நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். (லூக்23:43 ) வாழ்வில் இறைவன் பார்வையில் எல்லா நேரத்திலும் இரக்கமுண்டு என்று இந்த தவக்காலத்தில் முயற்சி எடுத்தல்

3. யூதாஸ்- பாவத்தை உணர்ந்துக் கொண்டான்- பாவ செயலை அறிந்து கொள்ள திருப்புமுனை
இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள், அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் என்றார்கள். (மத் 27:3-5) தன்னம்பிக்கையுட்டும் இறைவார்த்தை வழி எனது பாவநிலையை அதிகமாக இந்த தவக்காலத்தில் உணர்ந்து பாவத்தை அகற்றுதல்

4. யோவான்- உடனிருத்தல்- துணையை கொடுத்து ஆசீர்வாத திருப்புமுனை
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், அம்மா, இவரே உம் மகன் என்றார். பின்னர் தம் சீடரிடம், இவரே உம் தாய் ,என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். (யோ19:26-27) கடவுளின் உடனிருப்பை இந்த தவக்காலத்தில் சுழ்நிலைகளின் வழியாக அறிய முற்படல்

5. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு- நேர்மையாளர்- துணிவு பெற திருப்புமுனை

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். (யோ19:38) இறைமகன் இயேசுவை பின்பற்றுவதில் இந்த தவக்காலத்தில் வரும் தடைகளை, சோதனைகளை வென்றிட துணிவுடன் செயல்படல்

6. பெண்சீடர்கள்- துடுக்கான ஆர்வம்- நற்செய்தியை அறிவிக்க திருப்புமுனை
வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.நீங்கள் விரைந்து சென்று, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் என்றார் (மத்28:5-7) பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சதிதிட்டங்களை அழித்திட இந்த தவக்காலத்தில் உருக்கமாக செபித்தல்

7. எம்மாவு சீடர்கள்- புரிந்துகொள்ளாமை- விழிப்புணர்வு பெற திருப்புமுனை
அவர்கள் அவரிடம், எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார் . (லூக் 24:29-31) ஒருவரை ஒருவர் இந்த தவக்காலத்தில் அதிகமாக புரிந்துக்கொண்டு இறைவனை அடையாளம் கண்டுக்கொள்ளுதல்

8. மகதலா மரியா- முழுமையாக அன்பு செய்தல்- உணர்வு,உணர்ச்சி நிறைந்த திருப்புமுனை இயேசு அவரிடம், மரியா என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ரபூனி என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு போதகரே என்பது பொருள். இயேசு அவரிடம்என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம் என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் எனச் சொல் என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, நான் ஆண்டவரைக் கண்டேன் என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார். (யோ20:16-18) உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையாகாமல், இந்த தவக்காலத்தில் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள பழகுதல்

9. தோமா- நம்பிக்கை- ஜயம் தவிர்க்க திருப்புமுனை
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!என்றார். இயேசு அவரிடம், நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார் (யோ20:27-29) நம்பிக்கையுடன் உமது திட்டத்திற்கு இந்த தவக்காலத்தில் என்னையே முழுமையாக அர்ப்பணிக்க முற்படல்

10. சீடர் எழுவருக்குத் தோன்றுதல்- கீழ்ப்படிதல்- கரிசனை வழி திருப்புமுனை
இயேசு அவர்களிடம், பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவர்கள், இல்லை என்றார்கள். அவர், படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகுதொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள் (யோ21:5-8) குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அதிக கரிசனையோடு கவனித்துக்கொள்ள தாராளமான மனதை இந்த தவக்காலத்தில் வளர்த்துக்கொள்ளல்

இந்த திருப்புமுனைகளை நடைமுறைப்படுத்துவது நமது கடமையும், கலையுமாகும். ஒவ்வொருவரின் திருப்புமுனைகளும் இறைவனை முழுமையாக அறிவதிலும், அன்பான உறவுகளை கட்டி எழுப்புவதிலும், இறையாட்சியின் மதிப்பீடுகளை இவ்வுலகில் பரப்புவதாகவும் தான் அமைகிறது. இந்த தவக்காலம் நன்மையின் பக்கமாக மாறுவதற்கு ஏற்ற காலம். வாழ்க்கைப்பயணத்தில் இப்போது ஒரு சரியான திருப்பத்தில் நாம் வழிபாதையை இறைவன் துணையோடு கண்டுப்பிடிக்கும் காலம். ஆகவே எந்த இடத்தில், எந்த மனநிலையில் இருக்கிறோமோ, அங்கிருந்தே இறைவனை நாம் கண்டுக்கொள்ள அழைக்கும் காலம். மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இறைவன் தனிப்பட்ட விதத்தில் இறையனுபவத்தை கொடுத்து வாழ்க்கையை திருத்தி, இறைவன் பக்கமாக திருப்பி கொள்ள சந்தர்ப்பம் கொடுத்தார், அதை அவர்களும் பயன்படுத்திக்கொண்டார்கள். நமக்கும் அந்த சந்தர்ப்பம் தவக்கால முறையில் இதயக்கதவைத்தட்டும் போது நாம் எந்தவிதமான சந்தேகமோ, பதற்றமோ இல்லாமல் துணிவுகரமான தவக்காலத்திற்குள் செல்வோம். இறைவனில் நாம் இணைவோம். ஆமென். [2018-02-27 23:50:51]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே, யேர்மனி