ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









நீங்களே கிறிஸ்மஸ்
(எம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளத்தில் இருந்து)



கிறிஸ்து பிறப்பு விழா பொதுவாக அதிக ஆரவாரம் நிறைந்த ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை சிறிது அமைதி நிறைந்ததாக கொண்டாடினால் ஆண்டவரின் அன்பின் குரலை செவிமடுக்கமுடியும். கிறிஸ்து பிறப்பு விழா என்பது நீங்கள் தான், ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் நீங்கள் பிறக்க நினைக்கும் போது கடவுள் உங்கள் ஆன்மாவுக்குள்ளே நுழைய அனுமதியுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற துன்பங்கள் எனும் கடுங்காற்றை எதிர்த்து நிற்கும் போது நீங்களே அந்த கிறிஸ்மஸ் மரங்கள். நல்லொழுக்கம் என்பது வர்ணங்களுக்கு ஒப்பாகும். நல்லொழுக்கம் உங்கள் வாழ்க்கையை அலங்கரிக்கும் போது கிறிஸ்மஸ் அலங்காரங்களும் நீங்களே. மற்றவர்களை அழைத்து அவர்களை ஒன்றுகூட்டி சேர்ந்து வாழும்போது நீங்களே கிறிஸ்மஸ் மணிகளாக ஒலிக்கின்றீர்கள். அடுத்திருப்பவரின் பாதைகளை உங்களின் பரிவு, பொறுமை, மகிழ்ச்சி, தாராளகுணம் இவைகளினால் ஒளியூட்டுகின்றபோது கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகளும் நீங்களே. அமைதிக்காய் ஏங்கும் இந்த உலகிலே அமைதி, அன்பு, நீதி என்பனவற்றை உலகிற்கு உங்கள் திறமைக்கேற்ப இசைக்கும் பொழுது (எடுத்துரைக்கும் போது) கிரிஷ்மாஷ் வான தூதர்களும் நீங்களே. உங்களுக்கு அடுத்திருப்பவரை வழிநடத்தி ஆண்டவன் இயேசுவுடன் ஒன்றிக்க செய்கின்ற பொழுது கிறிஸ்மஸ் விண்மீன்களும் நீங்களே. உங்களிடமிருக்கும் சிறந்தவற்றை மற்றவர்களுக்காக கொடுக்கின்றபொழுது கீழ்த்திசை ஞானிகளும் நீங்களே. உங்களுக்குள்ளே உள்ளார்ந்த அமைதியை நீங்கள் அனுபவிக்கும் போது, கிறிஸ்மஸ் இசையும் நீங்களே. சகல மனிதர்களுடனும் அன்பாக பழகி ஒரு சகோதரனாக, ஒரு சகோதரியாக, ஒரு நண்பனாக/ நண்பியாக திகழும் பொழுது கிறிஸ்மஸ் பரிசுப்பொதிகளும் நீங்களே. கருணை உங்கள் கைகளில் (எழுதப்பட்டு) பொறிக்கப்பட்டு இருக்குமானால் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளும் நீங்களே. நீங்கள் மனஸ்தாபத்துடன் இருந்தாலும் மற்றவர்களை மன்னித்து அவர்களுடன் சமாதானம் செய்கின்ற போது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களும் நீங்களே. உங்களுடன் வாழும் வறியவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் போது கிறிஸ்மஸ் விருந்தும் நீங்களே. கிறிஸ்மஸ் இரவும் நீங்களே. ஆம், இவற்றை எல்லாம் உள்ளத்தில் இருத்தியவர்களாக, பணிவுடன் வாழும்பொழுது, இந்த அமைதியான நள்ளிரவில் விண்ணின் வேந்தன் மாமன்னன் இயேசு உங்கள் உள்ளத்தில் நிச்சயமாக பிறப்பார். இந்த கிறிஸ்து பிறப்பு விழாவும் அர்த்தம் நிறைந்த அன்பின் விழாவாக அமையும், இந்த கிறிஸ்து பிறப்பு நன்னாளிலே இறைமகன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக. அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள். (திருத்தந்தை பிரான்சிஸ்) [2017-12-22 01:23:11]


எழுத்துருவாக்கம்:

Bro. A.Anton Gnanaraj Reval SDB
St. Thomas Theological College
Messina
Sicily
Italy