ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









சிலுவையின்றி கிரீடமா...



உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
உள்ளினும் தள்ளாமை நீர்த்து - என்பது வள்ளுவரின் வாக்கு.

அதாவது, ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய மனதில் எண்ணுகின்ற எண்ணங்கள் அனைத்தையும் தன்னுடைய உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும். அவ்வெண்ணம் நடைபெற வில்லையெனில் தன்னுடைய உயர்வான எண்ணத்தை மட்டும் எந்த சூழ்நிலையிலும் கைவிடக் கூடாது என்பார் வள்ளுவப் பெருந்தகை. தற்போதைய போட்டிகள் மிகுந்த வாழ்க்கையில், ஒவ்வொரு நிமிடமும் நாம் பல்வேறு விதமான சிலுவைகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதைத்தான் டார்வின் தனது ஆய்வில் ‘தகவுள்ளவை மட்டும் தான் தப்பி பிழைக்கும்’ என்று கூறுவார். ஆக, மனிதன் தனது இலட்சியங்களையும், குறிக்கோள்களையும் சாதனை புத்தகத்தில் பதிக்க காரணம் அவனது நேர்மறைச் சிந்தனையே ஆகும். இப்படியாக, சரித்தர நாயகர்களின் வாழ்க்கைச் சுவட்டினை புரட்டிப் பார்த்தோமானல் இவர்கள் எட்டிய சிகரங்களை விட விழுந்த பள்ளங்களே அதிகமாக இருக்கும்; செய்த சாதனையை விட அடைந்த வேதனைகளே அதிகமாக இருக்கும். இந்த வேதனை, தோல்வி, பள்ளம் ஆகிய சிலுவைகள் தான் இன்று சாதாரண மனிதர்களை மாமனிதர்களாக உயர்த்தி வருகிறது.

ஆனால், இன்றைய மனிதர்களுக்கு பிடிக்காத வார்த்தையும், விரும்பாத பொருளும் ஒன்று இருக்கிறது என்றால் அது சிலுவையாகத் தான் இருக்க முடியும். ஒருமுறை ஒருவர் என்னிடம் வந்து கழுத்தில் அணிந்து கொள்வதற்கு ஒரு சுருபம் கேட்டார். அப்பொழுது என்னிடம் சிலுவை வடிவில் உள்ள டாலர் மட்டும் தான் இருந்தது. உடனே நானும் அவருக்கு சிலுவை வடிவில் இருந்த அந்த சுருபத்தை கொடுத்தேன். அதற்கு அவர் ‘இது வேண்டாம் வேறு சுருபங்கள் அதாவது மாதா படம் அல்லது புனிதர் உருவம் தாங்கிய டாலர் இருந்தால் கொடுங்கள்’ என்றார். நான், ‘ஏன் சிலுவையை வேண்டாம்’ என்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஏற்கெனவே எனது வீட்டில் சுமக்க முடியாத அளவிற்கு சிலுவைகள் இருக்கின்றன. இப்பொழுது கழுத்தில் அணிந்து கொள்வதற்கும் சிலுவையா? எனக்கு வேண்டவே வேண்டாம் என்றார். ஆம், சிலுவை என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக மட்டுமல்ல இன்றும் ஒரு அவமானத்தின் சின்னமாக விளங்குகிறது. ஆனால், இந்த அவமானத்தின் சின்னமாகிய சிலுவை வழியாகத் தான் இறைமகன் இயேசு உலகிற்கு மீட்பு அளித்தார். அன்று முதல் இன்று வரை சிலுவைகள் மனிதனை பக்குவப்படுத்தி, உயர்ந்த இலட்சியப்பாதைக்கு இட்டுச்செல்கிறது. சிலுவைகள் இல்லாமல் எவரும் சிகரத்தை அடைந்தது கிடையாது. சிகரத்தை எட்டிபிக்க ஒரே வழி சிலுவை தான்.

ஒரு குடும்பத்தில் பெரும் வறுமை, நோயளியாகி விட்ட அப்பா, அம்மா, விபத்தில் ஊனமாகிப் போன தம்பி என்று பல சிலுவைகள். குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் படிப்பை நிறுத்திவிட்டு ஏதாவது வேலை செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ஜோசப் ஜேம்ஸ். எனவே, படிப்பை தொடர முடியாமல் தன்னுடைய பல விதமான ஏக்கங்களை குழிதோண்டி புதைத்து விட்டு பத்தாம் வகுப்பை மட்டும் முடித்துக் கொண்டு ஏதாவது ஒரு வகையில் தனது குடும்பத்தை முன்னேற்ற துடிதுடிக்கிறார். சென்ற இடமெல்லாம் யாரும் வேலை கொடுப்பார் இல்லை. பல நிறுவனங்களில் வேலை தேடியும் கிடைக்காத நிலையில் ஏதாவது சாதனை புரியவேண்டும் என்ற ஆவலில் தனது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி அன்றாடம் முயற்சி செய்கிறார். இப்பொழுது இவரது ஏக்கம் எல்லாம் சாதனைப் புத்தகத்தில் தன்னுடைய பெயர் இடம்பெற வேண்டும் என்பதல்ல் மாறாக சாதனைப் புத்தகத்தின் பல பக்கங்களில் தனது பெயர் இடம் பெறவேண்டும் என முயற்சிக்கிறார். அதற்காக, அவர் ஒவ்வொரு நாளும் தனக்குள்ளே இருந்த திறமையை வைத்து சாதனை புரிந்து விட்டு உடம்பெல்லாம் வலியுடனும், அசதியுடனும் வீட்டிற்கு திரும்பும் போது, நோய்வாய்ப்பட்ட அப்பாவும் அம்மாவும் ஏதாவது பணம் சம்பாதிக்க முடிந்ததா என்று கேட்டு விட்டு, இவரை ஒன்றுக்கும் உதவாத மனிதன் என ஏளனமாக சிரித்துக் கொண்டிருப்பர். இவர் நிகழ்த்திய சாதனைகளை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் வீட்டிலே பேசுவார்கள். பல நாட்களாக முயன்று பின்னோக்கி ஒடுவதில் அப்பொழுது நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் ‘ஒடினாலும் ஒடினாய், பின்னோக்கித் தான் ஓடவேண்டுமா? எல்லோரும் முன்னோக்கி ஒடுவார்கள்; நீ பின்னோக்கி ஒடுகிறாய்; உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று தினம்தோறும் தனது வீட்டில் இருந்தவர்களும், சுற்றியிருந்தவர்களும் கேட்பார்களாம்.

இப்படி பல்வேறு கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் இடையே இவர் மனம் நொந்து விடாமல் அயராது உழைத்து தனது சாதனைகளை கோர்வையாக்க முயன்றார். இப்படியாக, இவர் இன்று வரை படைத்த சாதனைகள் ஏராளம். அவருடைய பட்டியல் இதோ! 1989-ம் ஆண்டு முதன் முதலில் கோவை மருத மலையில் உள்ள ஆயிரம் படிக்கட்டுகளை 46-நிமிடங்களில் பின்னோக்கியவாறு தத்தித் தத்தி சென்று சாதனை, குஜராத்தில் உள்ள தாதர் நகரில் 1.6 கிலோமீட்டர் தூரத்தை உட்கார்ந்த நிலையிலேயே கயிற்றின் உதவியுடன் தாண்டியவர். புது தில்லியில் உள்ள தால் காட்டூரா சாலையை 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7-நிமிடம் 20-விநாடிகளில் பின்னோக்கி ஓடி சாதனை, கோவையில் ஒரு மணி நேரத்தில் 3134 தடவைகள் பஸ்கி செய்து அமெரிக்காவின் அசீட்டா போர்மேன் என்பவரின் ஒருமணி நேரத்தில் 2234 தடவைகள் பஸ்கி செய்ததை முறியடித்த தமிழன் ஆவார். புது தில்லியில் 3 மணி நேரம் 32 நிமிடம் 52 நொடிகள் தொடர்ந்து இடைவிடாமல் பஸ்கி செய்து உலக சாதனை, புதுதில்லியில் தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் டிஸ்கோ டான்ஸ் ஆடி சாதனை; தன்னுடைய முதுகில் 45-கிலோ எடையை சுமந்தபடி ஒரு மைல் தூரம் நடந்து சென்று சாதித்துக் காட்டியவர். மேலும், 50 விஷப் பாம்புகளுடன் கண்ணாடி அறையில் ஆடாமல் அசையாமல் எட்டு மணிநேரம் இருந்து சாதனை, தவளை போல் குதித்து ஒரு மைல் தூரத்தை கடந்து சாதனை; 30 அடி உயரத்திலிருந்து தரையில் எந்த வித உடல் கவசமும் இன்றி குதித்து உடம்பில் அடி எதுவும் படாமல் சாதனை; 2002-ல் கோவை நேரு ஸ்டேடியத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை 6 நிமிடம் 2 விநாடிகளில் பின்னோக்கியபடி நடந்து உலக சாதனை, (இதற்கு முன் அமெரிக்காவைச் சார்ந்த டொனால்டு என்பவர் இதே சாதனையை 6 நிமிடம் 7 விநாடிகளில் கடந்தது குறிப்பிடதக்கது). தன்னை எதிர்நோக்கி வேகமாக வரும் வாகனங்கள் (குறிப்பாக ஓடிக்கொண்டிருக்கும் காரின்) கீழே படுப்பது என்றெல்லாம் சாதனை படைத்தவர். இப்படியாக இதுவரை உலக அளவில் 4 சாதனைகளையும், இந்திய அளவில் 13 சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு உலக சாதனைகள் புரிந்து புக் ஆப் ரெக்காடில் 17 சாதனைகளை பதித்த தமிழன் என்ற பெருமையை தேடித்தந்து இன்று ஈரோடு ரெயில்வே லோகோ செட்டில் மெக்கானிக்காக பணிபுரிகிறார்;. அவர் அன்று சந்தித்த அன்றாட சிலுவைகளாகிய அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் ஒரு பொருட்டாக கருதியிருந்தால் இன்று இவ்வாறாக உயர்ந்திருக்க முடியாது.

இவர் மட்டுமல்ல, இவரைப்போன்ற எத்தனையோ மனிதர்களை இன்று மாமனிதர்களாக மாற்றியது அவர்களின் அன்றாட சிலுவைகள் தான். உதாரணமாக, கௌதம் என்னும் 5வயது சிறுவன் உலக அமைதி வேண்டி கொச்சி முதல் கோவை வரை நடைபயணம் மேற்கொண்டு சாதனை. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அகில் என்னும் 5 வயது சிறுவன் கணிணியில் போட்டோக்களுக்கு டிசைன் செய்தல், வீடுகள் கட்டுவதற்கு ப்ளான்கள் வரைதல், மாய சதுரங்கள் அமைத்தல் மேலும் யு.கே.ஜி. படிக்கும் இச்சிறுவன் வேதியியலின் மூலக்கூறுகளை மனப்பாடமாக எழுதி பள்ளியிலும், மாவட்டதிலும் சாதனை படைத்து வருகிறான். தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த டோமினிக் சேகர் 7 மணி நேரத்தில் 700 நடனத்தை நிறைவேற்றி சாதனை. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சார்லஸ் பிளான்டின் என்பவர் நயாகரா ஆற்றின் குறுக்கே ஒரு கம்பி வழியாக நடந்து தனது 35 வது வயதில் தனது சாதனையை நிகழ்த்தினார். தாமஸ் ஆல்வா எடிசன் தனது அன்றாட சிலுவைகளை தினந்தோறும் சந்தித்து தன்னுடைய 67-வது வயதில் ஃபோனோகிராபை கண்டுபிடித்தார். இவர்கள் அனைவரும் தங்களது அன்றாட சிலுவைகளை சிகரங்களாக்கி அதன் வழியாக் சரித்திரத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த மாமனிதர்கள் வாழ்க்கையில் அவர்கள், எட்டிய சிகரங்களை விட விழுந்த பள்ளங்களே அதிகமாக இருந்தது; செய்த சாதனையை விட அடைந்த வேதனைகளே அதிகம். இதைத்தான் கெலன் கெல்லர் ‘வாழ்க்கை என்றால் அது துணிச்சல் நிறைந்த விடாமுயற்சி என்று தான் பொருள் எனக் கூறுவார்

எனவே, சிலுவைகள் நமக்கு தடைகள் அல்ல மாறாக நம்பிக்கையோடு முன்னேற உதவும் படிக்கற்கள். எப்படி என்றால் ஒரு மலரானது கடுமையான மழை, கொளுத்தும் வெயில் இவற்றிலிருந்து தன்னை காத்துக்கொண்டு, அது உதிர்வதற்குள் தன்னுடைய நறுமணத்தை பரப்புகிறது; ஒரு மெழுகுவர்த்தியானது தன்னை சுற்றி வீசும் காற்றில் கடைசி வரை நிலைத்திருந்து, தான் உருகுவதற்கு முன் இருளை அகற்றி வெளிச்சத்தை தருகிறது. அதைப்போலவே, ஒவ்வொரு மனிதரும் தான் மறைவதற்குள் தனது அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிலுவைகளை துணிச்சல் நிறைந்த விடாமுயற்சியோடு எதிர்கொள்ளும் போது சாபங்களாகிய சிலுவைகள் ஆசீர்வதத்தையும், சாதனை கீரிடங்களையும் நமக்கு பெற்றுதரும். இந்த தவக்காலத்தில் சிலுவையைப் பற்றியும், சிலுவைப்பாதையைப் பற்றியும் அதிகமாக சிந்திக்கும் நாம் நம்முடைய அன்றாட சிலுவைகளை பட்டியலிட்டு அதை சுமக்க முற்படுவேம். சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்ற சென்ன நமதாண்டவர் நம்முடைய சிலுவைகளை சுமக்க உதவி செய்து நம்முடைய சிலுவைகளை கிரிடங்களாக மாற்றி இயேசுவை போல வெற்றிவீரராக வலம் வருவோம்!

சிலுவைகள் தான் நம்முடைய வாழ்வுக்கு கிரிடங்களும், மணிமகுடங்களாகும்.
[2017-03-01 00:12:27]


எழுத்துருவாக்கம்:

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்
புர்க்கின ஃபாசோ, மேற்கு ஆப்பிரிக்கா.