ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

மன்னிப்பது தெய்வீகம்தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது, தெய்வ இயல்பு –அலெக்சாண்டர் போப்.

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! நம்மை பக்குவப்படுத்தி மனிதர்களை கடவுளாக மாற்றும் காலம் தொடங்கிவிட்டது. தவக்காலம் தந்தைக்குரிய பாசத்தோடு நம்மை வரவேற்கிறது. இக்காலத்தில் பீடத்திலே நாம் அதிகமாக பூக்கள் வைப்பது கிடையாது. காரணம் ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் இருக்கும் பூவை கடவுளுக்கு அர்ப்பணிக்க அழைக்கிறது. ஆம் அன்புக்குரியவர்களே! கடவுள் முதல் கல்லறை செல்லும் மனிதர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ‘பூ’ மன்னிப்பு என்னும் தெய்வீகப் பூ. அனைவருக்கும் இப் பூ பிடித்திருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இதை பறிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு பெரிய மனிதர் ஒருவர் இவ்வாறக கூறுவார் ‘மன்னிப்பு என்பது எனது அகராதியிலே கிடையாது’ என்று. காரணம் மன்னித்தல் என்பது மிகவும் சிரமாமான காரியம் என்று அவர் புரிந்துகொள்கிறார். ஆனால், வேதங்கள் அனைத்தும் இந்த மன்னிப்பு என்னும் பூவைப் பற்றி அதிகமாக போதிக்கிறது. மனிதன் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டான் என்கிறது விவிலியம். இந்த கடவுள் சாயலின் ஒரு முக்கியமான செயல் மன்னித்தலே ஆகும். ஆக, நம் கடவுள் மன்னிப்பிற்கு ஓர் அடையாளமாகவும், மன்னிக்கும் கடவுளாக இருப்பதால் நாமும் மன்னிக்கும் மனிதர்களாக வாழ்வதே கடவுளின் விருப்பமும் ஆகும்.

பழைய ஏற்ப்பாட்டில் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற சட்டமானது நடைமுறையில் இருந்து வந்தது. ஆயினும் அனைத்தையும் படைத்து பராமரித்து வரும் நமது கடவுள் மன்னிப்பின் அடையாளமாக திகழ்கிறார். தொடக்கநூல் 18:16-33-ல் சோதோம், கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. எனவே அவர்களை அடியோடு அழிக்கப்போவதாக சிந்தித்த நம் கடவுள், அவர்களுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குகிறார். நம்பிக்கையின் தந்தை ஆபிரகாம் ஆண்டவரிடம், “ஆண்டவரே தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று, தீயவனையும் நீதிமானையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று; அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்கவேண்டாமோ? எனவே, அந்நகரத்தில் 50 நீதிமான்களின் பொருட்டு அந்நகரை அழிப்பீரோ? என்று கேட்டதற்கு, ஆண்டவர் 50 நீதிமான்களின் பொருட்டு அந்நகரை அழிக்கமாட்டேன் என்றார். அப்படியே 45, 40, 35, 30, 20 கடைசியாக 10 பேர் என்ற வீதத்தில் கூட அந்நகரை அழிக்கமாட்டேன்” என்று கூறி அவர்கள் செய்த பாவத்தை மன்னித்து விடுகிறார் நமதாண்டவர்.

அவ்வாறே புதிய ஏற்பாட்டிலும்; தனது 3 வருட பணியில் மக்களுக்காகவே, மக்களோடு வாழ்ந்து, நோயாளிகளை குணப்படுத்தி, இறந்தோரை உயிர்ப்பித்து, உண்மையை மட்டும் எடுத்துரைத்த இயேசுவை மக்கள் சாட்டையால் அடித்து, பாரமான சிலுவையைச் சுமக்க வைத்து, ஆடையை களைந்து சிலுவையில் அறைந்து கொன்றனர். அந்த தருணத்திலும் கூட ‘தந்தையே! இவர்களை மன்னியும்; ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கின்றார்கள்’ என்று தனது தந்தையிடம் அவர்களுக்காக பரிந்து பேசி ஜெபித்தார்- மத் 23:34. தன்னை கொடுமையான சாவுக்கு உட்படுத்திய கயவர்களைக் கூட மன்னித்தவர் தான் இயேசு. இவ்வுலகிற்கு முதன் முதலில் மன்னிக்க கற்றுக்கொடுத்தது இயேசு கிறிஸ்துவின் வாழ்வு தான். மேலும், இத்தகைய மன்னிப்பு எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்பதை மத்தேயு நற்செய்தியில் 18: 21-35ல் மன்னிக்க மறுத்த பணியாளன் உவமை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

எனவே, மன்னிப்பு என்பது நமக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களை நமது கருணையினால் பொறுத்துக் கொண்டு மனமுவந்து அவர்களுக்கு உதவி செய்யும் பண்பே ஆகும். இம் மன்னிப்பானது மற்றவர்கள் பால் இரக்கமும், கருணையும் உள்ளவராக நடந்து கொள்ளும் ஆற்றலை நமக்கு அளித்து, அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது. மன்னிப்பு என்பது சுவாசிப்பதை விட அதி முக்கியமானது. மன்னிப்பதால் மன்னிப்பு வழங்குவோரே அதிகம் நன்மை அடைகிறார். மன்னிப்பதால் மட்டுமே வெறுப்பு என்னும் சாத்தான் வெளியேறுகிறான். மன்னிக்கிறவர்களால் வழியாகத் தான் இறையரசு வளரும். மன்னிப்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் மீட்பு பணியில் பங்கேற்கின்றனர். மன்னிக்கிறவர்கள் கூட்டம் பெருக பெருக உலகில் தீமைகள் குறையும். மன்னிக்கும் மனிதர்களால் மட்டுமே மகிழ்ச்சியாக வாழமுடியும். மன்னித்து துவங்கும் எந்தவொரு செயலும் பன்மடங்கு பலன் தரும். மன்னிக்கும் மனிதர்கள் மீது தூய ஆவியானவர் தனது வரங்களைப் பொழிகிறார். எனவே, மன்னிப்பு எனும் இத்தெய்வீகச் செயலினால் மனிதன் பல நன்மைகளை அடைகிறான் என்கிறது தமிழக ஆயர்குழு.

ஒருமுறை மூஜ் நகரத்தை அக்பர் ஆட்சி செய்தபோது போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாய படையினருக்கும் ஏற்பட்ட சண்டையில் போர்த்துக்கீசியர் முகலாயர்களுடைய கப்பல் ஒன்றை கைப்பற்றினர். அந்த கப்பலில் இருந்த எல்லாவற்றையும் கொள்ளையடித்ததுடன் பயணிகள் வைத்திருந்த சமயநூல் ஒன்றை பறித்து, அதை ஒரு நாயின் கழுத்தில் கட்டி, தெருக்களில் ஓட விட்டனர். இதை கேள்விப்பட்ட அக்பரின் அன்னை பேர்த்துக்கீசியர்களுக்கு தக்க பாடம் புகட்ட இன்னொரு சமயநூலை அது போல செய்ய வேண்டி ஆணை பிறப்பித்தர். இதையறிந்த அக்பர் தன் தாயிடம் ‘மதியில்லாத செயலைப் புரிந்த போர்த்துகீசியரைப் போல நாமும் செய்தால் அவர்களைப் போலவே நாமும் மதியில்லாதவர்களாவோம்; அக்கிரமத்திற்கு அக்கிரமத்தால் பதிலளிப்பது அரசனுக்கு அழகல்ல, பெருமையும் அல்ல. எந்த மதத்தை அவமதித்தாலும் அது கடவுளை அவமதிப்பதாகும்’ என்று சொல்லி தவறு செய்தவர்களை மன்னித்து ஆதரித்தவர் தான் அக்பர். எனவே, மன்னிப்பு என்பது நமது அன்றாட வாழ்வின் ஓர் முக்கிய அங்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே வேளையில் மன்னிக்க மறுப்பவர்கள் கொடிய மிருகத்திற்கு சமமானவர்கள். உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் எது? என்ற கேள்விக்கு ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என்று பட்டியலிட்டு விடாதீர்கள். ஏனெனில் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் வீடுதான். இங்கே வார்த்தைகள் தான் கூறிய ஆயுதங்கள். உதாரணமாக ‘உன்னை திருமணம் செய்து கொண்டதிலிருந்து எனக்கு நிம்மதியே போச்சு’ என்ற வார்த்தைகளாலேயே மனிதர்களை குத்தி கிழிக்கின்றனர் என்கிறார் கிருஷ்ண.வரதராஜன்.

ஒரு ஊரில் புதிதாக திருமணம் முடித்த ஒரு தம்பதியினர் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். ஒரு வருடத்திற்குப் பிறகு சிறு சிறு பிரச்சனைகளும், மனக்குழப்பங்களும், சந்தேகங்களும் இருவருக்கும் அதிகரித்தது. இதனால், இரு குடும்பத்தினருக்கும் வாய்ச்சண்டையில் முற்றிய பகையானது இறுதியில் இரு குடும்பங்களும் அடித்துக்கொண்டு காவல் நிலையம் செல்லும் நிலை வரை வந்துவிட்டது. இதற்கு மத்தியில் அந்த தம்பதியினருக்கு ஓர் அழகான குழந்தை பிறந்தது. அப்பொழுது அந்த குழந்தைக்கு யார் உண்மையான பெற்றோர் என்ற வாக்குவாதம் எழுந்தது. 10-மாதம் சுமந்து பெற்றெடுத்த அந்த தாயானவள் கூறினாள் ‘இது அவனுக்கு பிறந்த குழந்தை என்பதால் எனக்கு தேவையில்லை’ என்றாள். அந்த தகப்பனும் ‘அவளுடைய வயிற்றில் பிறந்த குழந்தை எனக்கு தேவையில்லை’ என்றார். இருவருமே குழந்தை வேண்டாம் என்று கூறியதால் அக்குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்ட உத்தரவிட்டார் அந்த நீதிபதி. இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒரு வருடம் கழித்து விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றம் வந்த இந்த தம்பதியினர், முதலில் தங்களது குழந்தையை சென்று சந்தித்து, அக்குழந்தையின் பிறந்தநாள் விழாவை அந்த அனாதை இல்லத்தில் கொண்டாடிவிட்டு, பிறகு நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுக்கொண்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர். வாடாத பூவாக இருந்து மணம் வீசவேண்டிய திருமண வாழ்வில் மன்னிப்பு என்னும் ஒரு பூ இல்லாததால் ஒன்றுமே அறியாத அக்குழந்தை இன்று அனாதையாக்கப்பட்டு விட்டது.

இப்படிப்பட்ட மன்னிக்க மனமில்லாத மனிதர்கள் கொடிய விஷம் குடித்தவர் போல் ஆகின்றனர். மன்னிக்க மறுப்பவர்கள் இறைவன் எனக்கு தேவையில்லை என்றும், அவருடைய பாவ மன்னிப்பு வேண்டாம் என்றும் கூறுகின்றனர். மன்னிக்காதவர்கள், உறவுகள் தேவையில்லை என்கின்றனர். மனிதன் மன்னிக்க மறுக்கும்போது மனித வர்க்கமே பாதிப்பிற்கு உள்ளாகிறது. மன்னிக்க மறுப்பவர்களின் காணிக்கையையும், செபத்தையும் இறைவன் விரும்புவதில்லை. மன்னிக்க மறுப்பவர்களின் தர்மச் செயல்கள் பலன் அளிப்பதில்லை. மன்னிப்பு வழங்கி மன்னிப்பு பெறாத நிலையில் செய்யும் செயலும், தொழிலும் தோல்வியில் தான் முடியும். எனவே, மன்னிப்பு என்னும் பூவை இறைவனிடமிருந்து பெற்று ஒருவர் மற்றவரை மன்னிப்போம். காரணம் ‘நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவர்களை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்’ என்று மத்தேயு நற்செய்தி 18:35-ன் வழியாக இயேசு கூறுகிறார். ஆக, மன்னிப்பு என்பது ஒரு தெய்வீகச் செயல். எனவே, மன்னிப்பு எனும் இத்தெய்வீகச் செயலை இம் மண்ணில் விதைக்க முயற்சிப்போம். அப்பொழுது தான் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நமது வாழ்வும் பயனள்ளதாக அமையும். குறிப்பாக இந்த தவக்காலத்தில் நமது பகைவர்களை பட்டியலிட்டு ஒவ்வொருநாளும் மன்னிக்க முற்ப்படுவோம்.

தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது, தெய்வ இயல்பு - அலெக்சாண்டர் போப்.

[2017-03-01 00:12:27]


எழுத்துருவாக்கம்:

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ், கப்புச்சின்
புர்க்கின ஃபாசோ, மேற்கு ஆப்பிரிக்கா.